Total Views: 387
அத்தியாயம் 45
வாழ்க்கை அதுபோல சென்று கொண்டிருந்தது சக்கரவர்த்திக்கும் தர்மனுக்கும் காளியம்மாவிற்கும்.
மனதினுள் காளியம்மாவின் மேல் ஆசை இருந்தாலும் அதை வாய் வழியே ஒருநாளும் கூறியதில்லை சக்கரவர்த்தி.
தர்மனும் அறிவார் எனினும் அதை தன் சகோதரனிடம் கேட்டதில்லை.
காளியம்மாவின் கதையும் அதேதான்.
அத்தை மகன் என்ற முறையில் இருவர் மேலும் அன்பு உண்டு எனினும் சக்கரவர்த்தியின் மேல் ஒரு பிரத்யேக அன்பு இருக்கத்தான் செய்தது அவருக்கு.
நாட்கள் அதுபோல நகர ஒருநாள் விநாயகத்தின் வீட்டின் வாசலில் வந்து நின்றார் காளியம்மாவின் தந்தை.
"வாங்க மச்சான்... ஏன் வாசல்லயே இருக்கீங்க.... உள்ள வரலாம் இல்ல...?" என விநாயகம் கேட்க.
"அது ஒன்றுமில்லைங்க மச்சான்... களத்துமேட்டுக்கு போகனும்... போற வழியில... அப்படியே.. உங்கள பார்த்து ஒரு விஷயம் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்..." என்க.
"குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வர சொல்றேன்..." என்றவர் "அன்னம்..." என அழைக்க "வேணாம் மச்சான்... நடவுக்கு ஆள் வந்து காத்துட்டு இருப்பாங்க... நான் போகனும்...அது ஊர்ல இருந்து என் தங்கச்சியும் அவ புருஷன் புள்ளையும் நம்ம ஊருக்கு குடி வந்துடலாம்னு இருக்காங்க... நீங்க சரின்னா அவங்கள வர சொல்லிடுவேன்... என்க.
"ஏன் அவங்க இப்ப இருக்க ஊருல என்ன பிரச்சனை...?" என விநாயகம் கேட்க.
பதில் கூற தடுமாறினார் அவர்.
விநாயகத்திற்கு தெரியும் அவரின் தங்கை கணவன் அத்தனை நல்லவன் இல்லை என்பது.
அந்த ஊரில் ஏதேனும் தவறு செய்திருப்பான் என அவரால் நன்றாகவே நம்ப முடிந்தது.
"இல்ல மச்சான் அவங்க பையனுக்கு நேரம் ஏதோ சரியில்லையாம்...கொஞ்ச நாளைக்கு தூரத்துல இருந்தா பரவால்லன்னு ஜாதகத்துல சொன்னாங்களாம்... அதான் கொஞ்ச நாளைக்கு நம்ப ஊருல இருக்கட்டும்னு நினைச்சேன்... எனக்கும் வயல் வேலைய தனியா செய்ய முடியல...கூடமாட துணைக்கு ஒரு ஆள் இருந்தா பரவால்லன்னு தோணுது... ஊருல எந்த விஷயமானாலும் நீங்கதான் மனசு வைக்கிறீங்க அதான் உங்கக்கிட்ட ஒருவார்த்தை சொல்லிட்டு அப்பறம் வர சொல்லலாம்னு நினைச்சேன்...." என்க.
"நான் மட்டும் எப்படி முடிவு எடுக்கறது மச்சான்... ஊர்லயும் பெரியவங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்..." என்க.
"சரிங்க மச்சான்.. அதுவும் நல்லதுதான்...அப்ப.. நான் கிளம்பறேன்..."என விடைபெற கோவிலுக்கு கிளம்பிய அன்னம் "அடடே வாங்கண்ணா..." என அழைத்து கொண்டு இருக்கும்போதே "வரேம்மா.. நேரம் ஆச்சு...." என முகம் கொடுக்காமல் அவர் செல்ல "என்னங்க ஆச்சு... ஏன் இப்படி நின்னு பதில் கூட சொல்லாம போறாரு...?" என அன்னம் கேட்க.
"வயக்காட்டுல இன்னைக்கு நடவுக்கு ஆளுங்க வராங்களாம் அதான்..." என விநாயகம் கூற.
"ஏன் ஒருவார்த்தை நின்னு பேசிட்டு போறதால அவருக்கு என்ன கெட்டு போய்டுமாம்...." என அன்னம் கேட்க
"அது இருக்கட்டும்... உனக்கு இதே வேலையா... ஏன்... இன்னைக்கு ஒருநாள் உன் அம்மாவ போய் பார்க்காம இருந்தா.. ஆகாதா... உனக்கு...?" என அவர் கேட்டார்.
"அது என்ன அப்படி சொல்லிட்டீங்க... நான் போய் பூஜை போட்டு... என் கையால கட்டின பூவ மாலையா போட்டாத்தான்... என் அம்மா ஏத்துப்பா..." என்றார் அன்னம்.
தினமும் அந்த ஊரில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு அன்னம் வீட்டு தோட்டத்தில் மலரும் பூக்களே அலங்கரிக்கும் தன் கையால் தொடுத்து போடுவதில் அன்னத்திற்கு அதீத உண்மை இன்பம் அது தெரிந்ததாலயே விநாயகம் அவரை எதுவும் சொல்வதில்லை,இதில் சிலசமயம் காளியம்மாவும் சேர்ந்துகொள்வதால் இருவரும் நன்றாக ஊர்க்கதை பேசிவிட்டு வீடு வரும் நேரம் பெரும்பாலும் உணவு உண்ணும் நேரம் தாண்டி இருக்கும் சிலநேரம் அன்னையிடம் தர்மன் கோபித்து கொள்வதுண்டு "அந்த வாயாடியிடம் சேராதம்மா... உன்னையும் கெடுத்துடுவா..." என்பதாக இருக்கும் அவரது குற்றச்சாட்டு "விடுடா.. இங்க இருக்கற வரைக்கும் வருவா... ஒருத்தன் வீட்டுக்கு போனபிறகு கூட எங்க வரப்போறா..." என்பதாக அவர் கூறுவது கேட்டு "அவ எங்க வேற வீட்டுக்கு போகப்போறா... இங்கனதான் கடைசி வரைக்கும் குப்ப கொட்டுவா...." என தர்மன் வாய்க்குள்ளயே முணுமுணுப்பார்.
ஏனெனில் சக்கரவர்த்தியின் உள்ளம் காளியம்மாவின்மேல் படிந்துவிட்டது என தர்மன் தெளிவாக அறிந்த விஷயம்.
"இன்னைக்கு உன் கூட்டாளி வரமாட்டா போல... அவ வயல்ல நடவு இருக்கு... எப்பவுமே அவதான் முதல்ல நட்டு நடவு ஆரம்பிக்கறது... இதுல மட்டும் உன் அண்ணன்காரன் தெளிவா இருக்கான்..." என்றார்.
"அவர குறை சொல்லலான உங்களுக்கு தூக்கம் வராது... நான் கிளம்பறேன்..." என அவர் பூஜைதட்டை எடுத்துக் கொண்டு கிளம்ப "இருட்டி.. எதுல கிளம்பறவ...?" என அவர் கேட்க.
"ஏன்... நீங்க புல்லட்டு வண்டி வச்சிருக்கீறீரு இல்ல... அதுலதான்..." என அவர் கன்னத்தில் இடித்துக் கொண்டு கிளம்ப.
"அடியே... இருட்டி.. நான் பஞ்சாயத்து வரைக்கும் போகனும்... நானே கொண்டு வந்து விடறேன்...." என்க.
"க்கும்... எதுல உங்க மாட்டுவண்டியிலயாக்கும்..." என அவர் நொடித்துக் கொள்ள.
"ஊருக்குத்தான் நான் பெரிய மனுஷன்...வீட்டுக்குள்ள நீயும் உன் பசங்களும் என்ன ஒரு ஆளாவே பாக்கறது இல்ல..." என அவர் குறைபட்டுக் கொள்ள "என்னஞ்சே அப்படி சொல்லிப்புட்டீரு... நாங்க உம்ம அப்படியா மருவாத கொறவா நடத்தறோம்...?" என அன்னம் கூற.
அதில் சிரித்தவர் "சும்மா சொன்னேன்டி... இரு வரேன்... ரெண்டு பேரும் சேர்ந்தே போலாம்..." என்றவர் தன் மாட்டுவண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.
ஊரில் இருந்து ஒரு அரைகிலோமீட்டர் தாண்டி இருக்கும் அந்த கோவில் அந்த சுத்துவட்டாரத்தில் மிகவும் பிரபலம்.
அந்த ஊரையே காக்கும் காளியம்மன்தான் அவள், அவளிடம் அனுமதி பெற்ற பிறகே அந்த ஊரில் நடக்கும் நல்ல விஷயங்கள் நடக்கும்,அதையும் தாண்டி அந்த கோவிலுக்குள் வேறு ஒரு ரகசியமும் இருக்கிறது அது விநாயகமும் இன்னும் சில நம்பிக்கையான சிலரே அறிந்த ஒரு விஷயம் எனவே அந்த ஊர் மிகவும் கட்டுக்கோப்பாக இருக்க காரணம்.
வண்டியில் ஏறி அமர்ந்தவர் "ஏங்க... இந்த காளி வர மாட்டான்னு சொல்றீங்களா...?" என கேட்க.
"ஆமான்டி..." என்றவர் மாட்டை விரட்டி கொண்டே ஏதோ யோசனையில் இருந்தார்.
"என்ன யோசனைல இருக்கிறீரு...?"என அன்னம் கேட்க.
"இல்லட்டி... உன் அண்ணங்காரன் வந்துட்டு போனானே... என்ன விஷயம்னு தெரியுமோ...?"என கேட்க.
"சொல்லும் கேக்கறேன்..." என்றார் அவர்.
"அதான்... அவன் தங்கச்சி குடும்பம் இருக்கே...?" என கேட்க.
"ஆமா... அந்த ராசாங்கம் வஞ்சி குடும்பத்தையா சொல்றீரு...?" என கேட்க.
"ம்ம்ம்ம்... ஆமா அவங்கதான் அவங்க ஊருல பொழப்பு ஒன்னும் சரியில்லயாம்... அதனால நம்ம ஊருக்கு பஞ்சம் பொழைக்க வர அனுமதி கேட்டுட்டு போறான் உன் அண்ணன்..." என்க.
"என்ன சொல்றீரு... அவங்க ஒரு மாதிரின்னு கேள்விப்பட்டு இருக்கேன்...?" என்க.
"ம்ம்ம்ம்... தெரியும்தான்... ஆனா.?? அவன் பையன் வஜ்ரவேலுக்கு நம்ம சக்கர வயசுதான்.... அவனுக்கு ஜாதகத்துல நேரம் சரியில்லன்னு சொன்னாங்களாம்??? கொஞ்ச நாளைக்கு இடம் மாத்தி இருக்க சொன்னாங்களாம்... அதான் நம்ம ஊரு தெரிஞ்ச ஊருன்னு வரேன்னு கேட்டுருக்கான்போல உன் அண்ணன்காரன்கிட்ட..." என்க.
"ஏங்க அவுக சாராயம், குடி, பொம்பளன்னு ஒரு மாதிரியா திரிவாகன்னு அங்கங்க விசேஷத்துக்கு போகயல காதுல கேட்டுருக்கேன்.... நம்ம ஊருல எல்லா சாதியும் அண்ணன் தம்பியா பழகறோம்... அவுக வந்து இங்க ஏதேச்சும் ஒரண்டைய இழுத்துவிட்டுர போறாங்க..." என்க.
"ம்ம்ம்ம்... நானும் அந்த யோசனைலதாட்டி இருக்கேன்... பாப்போம்... பெரியவக நாலுபேர்கிட்ட கேட்போம்... அவுக சம்மதமும் இதுல முக்கியம் இல்ல...?!" என கூற.
"ம்ம்ம்ம்... அதுவும் சரிதான்... என்றவர் ஏங்க இந்த சக்கர பயலும் காளியும் எப்பவும் அடிச்சிட்டு திரியுதுக... இதுகளுக்கு கல்யாணம் பேசி வச்சிருக்கீறீரு... இது தெரிஞ்சா வானத்துக்கும் பூமிக்குமா குதிக்க போறாங்க..." என்க.
"இப்ப அடிச்சிட்டு இருக்க பிள்ளைகதான் பின்னாடி ஒத்துமையா வாழும்... நீ வேணா பாரு...." என்க.
"எனக்கு என்னமோ அவன்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுருக்கலாம்னு தோணுது..." என்க.
"அவன் என்புள்ள என் பேச்ச மீற மாட்டான்..." என்க.
"என்னமோ பண்ணுங்க..." என்றவரின் பேச்சு ஏதேதோ பேசியபடி கோவிலை நோக்கி செல்ல தூரத்தில் இருந்து அதை பார்த்துக்கொண்டு இருந்தனர் காளியின் தந்தையும் வஜ்ரவேலுவின் தந்தையான ராசாங்கமும் அவர்களின் கண்களில் எத்தனை வன்மம்.
"என்ன மச்சான் சொன்னான் அந்த விநாயகம்...?" என ராசாங்கம் கேட்க.
"அவன் என்ன சொல்லுவான்... ஊருல நாலுபேருகிட்ட கேட்டுட்டுதான் சொல்லுவானாம்...." என இவர் கூற.
"அவன் என்ன சொல்றது அவன்லாம் ஒரு ஆளுன்னு அவன்கிட்ட போய் பேசிட்டு வர..." என ராசாங்கம் கூற.
"அமைதியா இரு... நம்ம காரியம் முடியற வரைக்கும் அவன் கால புடிச்சிதான் ஆகனும்... அவசரப்பட்டு கால வாரிட்டா... அது நமக்குதான் பிரச்சனையா முடியும்..." என காளியின் தந்தை கூற "ம்ம்ம்ம்... நீ சொல்றதும் சரிதான்..." என போகும் அவர்களையே வன்மமாக இருவரும் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
இங்கு சக்கரவர்த்தியும் வஜ்ரவேலுவும் ஒருவரை அடித்துக்கொண்டு உருண்டு புரண்டு கொண்டு இருந்தனர்.