இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 53 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 13-10-2024

Total Views: 281

அத்தியாயம் 53

அவனை அணைத்துக் கொண்டவள் அழுகையை விடாமல் தொடர ஒருகட்டத்திற்கு மேல் அவனுக்கு சலிப்பானது.

"ம்ம்ப்ச்.... இப்ப எதுக்குடி இப்படி அழுதுட்டு இருக்க... எத்தன நாள் கழிச்சி பாக்கறேன்... இப்படியா அழுது வடிஞ்சிட்டு இருப்ப...?" என்ற அவனின் குரல் அவளுக்கு புதிது.

பின்னே எப்போதும் ஏய் ஏய் என மிரட்டியபடி அவளை பயமுறுத்துபவன் இன்று தனிந்த குரலில் அதிலும் உரிமையாக அன்பொழுக பேசினால் பாவம் அவளுக்கும் ஒருமாதிரிதானே ஆகும். 

அவன் மார்பில் சாய்ந்த வண்ணமே அவனை நிமிர்ந்து பார்த்தவள் தன் வலது புறங்கையால் கண்ணீரை துடைத்துவிட்டு "அவன் எங்கிட்ட ரொம்ப அசிங்கமா நடந்துக்கிட்டான் மாமா.... நான் ரொம்ப பயந்துட்டேன்...." என்க.

அவளின் வார்த்தைகளே சொல்லியது அவளின் பயத்தை .

மெல்ல குரலை செருமிக் கொண்டவன் "இங்கபாருடி.... இவன்லாம் ஒரு ஆளுன்னு நீ இவன பார்த்து பயந்துட்டு இருக்க... கைல கிடைக்கிறத எதாச்சிம் எடுத்து அவன் மண்டையில் போட்டுருந்தினா... நான் சந்தோஷப்பட்ருப்பேன்... ஆனா... நீ பயந்து அழுதுட்டு இல்ல இருக்க... இங்கபாரு காளி.... நாம கும்புடுற காளியம்மாவும் பெண் தெய்வம்தான் ஆம்பளைங்களவிட பொண்ணுங்களுக்குத்தான்டி அதிக வீரம் இருக்கும்.... இந்த உலகத்துல பொண்ணுங்களால முடியாததுன்னு நீ எதை நினைக்கிற.... இனி.... எக்காரணம் கொண்டும் யாருக்கும் பயந்து வாழக்கூடாது... முக்கியமா இந்த மாதிரி ஈனப்பயல பார்த்தா செவுள்லயே ரெண்டு விடு.... தர்மன் சொன்னான் எங்கவூட்டுல உன்னைய எனக்கு எனக்கே தெரியாம பேசி வச்சிருக்காங்கன்னு.... எனக்கு இத்தன நாளா தெரியல.... ஆனா... வூடால இவன் ஏன் இப்படி அலப்பறைய கூட்டுறான்னு தெரியல... எனக்கு என்னமோ உன் அப்பாவும் இந்த பயலோட அப்பாவும் ஏதோ பன்றாங்கன்னு தோணிட்டு இருக்கு.... நீ எதுக்கும் சூதானமா இரு... இந்த முழுப்பரீட்சை முடிஞ்சதும் எங்க ஐயா என்னைய மெட்ராசுக்கு அனுப்பற எண்ணத்துல இருக்காரு.... நானும் கண்டிப்பா நல்ல மார்க் வாங்கி டாக்டருக்கு படிக்கனும்டி.... அதான் என் ஆசை... நான் படிச்சு முடிச்சிட்டு வரவரைக்கும் நீ எனக்காக காத்துட்டு இருக்கனும்டி.... அதே மாதிரி நீயும் உனக்கு பிடிச்சத படி...ஒரு ஆம்பள படிக்கிறது பெரிய விஷயம் இல்லடி.... ஆனா... ஒரு பொண்ணு படிச்சா அந்த வூட்டுல இருக்க குடும்பமே படிச்ச மாதிரி சரியா...." என்க.

"ம்ம்ம்ம்...நீ நல்லபடியா படிச்சுட்டு வா மாமா... நான் உனக்காக காத்துட்டு இருப்பேன்..." என்றாள் நாளையே அவளது வார்த்தைகள் மாறப்போகிறது என தெரியாமல்.

அவனும் "சரி... நீ பத்திரமா இருப்பியா... இல்லனா வா வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்... உங்க வீட்டு ஆளுங்க வந்ததும் வந்துடு..." என்க.

"இல்ல மாமா... நான் வரல..." என்றாள் அவள்.

"நீ பத்திரமா இருந்துப்பதான...?!" என கேட்க

"ம்ம்ம்ம்..." என்றாள் அவள்.

"ம்ம்ம்ம்... என்றவன் சரி... நீ நகரு யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க.." என கூறி முடிக்கும் முன் "காளி..." என்ற சத்தத்தில் இருவரும் பதறி விலகி குரல் வந்த திசையில் பார்க்க அங்கு கைலாசமும் அவரது மனைவி மற்றும் ராசாங்கமும் அவனது மனைவியும் நின்றிருந்தனர்.

கண்களில் அத்தனை கோபம் ஆண்கள் இருவருக்கும்.

வஜ்ரவேலுவின் அன்னையோ அங்கு வலியில் சுருண்டு படுத்து அனத்திக் கொண்டு இருந்தவனை பார்த்து "ஐயோ... வஜ்ரம்...என்ன ஆச்சு...?" என கத்தியபடி ஓட அதன்பிறகே அங்கு வலியின் பிடியில் கதறிக்கொண்டு இருந்தவனை மற்றவர்கள் கவனித்தனர்.

இப்போது ராசாங்கமும் "ஐயோ என்புள்ள..."என்றபடி ஓட அதற்குள் அவர்கள் அருகில் வந்த கைலாசம் சக்கரவர்த்தியை பார்த்து முறைத்துவிட்டு காளியின் கன்னத்தில் ஓங்கி அறைய அவளோ நிலைகுலைந்து சற்று தூரம் நகர்ந்து விழுந்தாள்.

"மாமா..." என்றபடி சக்கரவர்த்தி அவர் சட்டையை பற்ற அவனையும் அவன் கை இருந்த இடத்தையும் பார்த்தவர் அவனை முறைக்க சக்கரவர்த்தியின் கரங்கள் தானாக இறங்கியதே தவிர அவரை முறைப்பதை விடவில்லை அவன்.

மகளின் அருகில் சென்றவர் அவளின் முடியை கொத்தாக பற்றி "நாங்க அந்தப்பக்கம் போனதும் தினமும் இவன கூட்டிட்டு வந்து இப்படித்தான் கூத்தடிக்கிறியாடி..." என கேட்க.

"ஏங்க..." என்றபடி அவரது மனைவியும் "மாமா..." என்றபடி சக்கரவர்த்தியும் கத்தினர்.

"என்னடா.... ஒரேடியா துள்ளுற... ஆள் இல்லாத நேரத்துல என் வீட்டுல உனக்கு என்னடா வேலை.... அங்க இழவுக்கு வந்துட்டு உன் அப்பன் எங்கள மிரட்டிட்டு போறான்... நீ என் வீட்டுக்கு வந்து என் பொண்ணுகூட கூத்தடிச்சிட்டு இருக்க...என்ன இதுவும் உன் அப்பன்காரன் பிளானா...?!' என கேட்க.

விநாயகத்தை தப்பாக பேசவும் சக்கரவர்த்திக்கு கோபம் தாங்காமல் மீண்டும் அவரின் சட்டையை கொத்தாக பிடித்தான் "என் அப்பாவ மரியாதை இல்லமா பேசினா நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்... நீங்க அதிகமா பேசுறீங்க... உங்க பொண்ணு குழந்தை மாதிரி அவள தப்பா பேசறது சரியில்லை.... உங்க வளர்ப்ப நீங்களே கேவலபடுத்திக்கிற மாதிரி இது.... என்றான்.

"நீயும் உன் அப்பனும் ஊருக்கு புத்தி சொல்றதோட நிறுத்திக்குங்க.... எனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல.... என் பொண்ண இதோட மறந்துடு... என்னைக்கா இருந்தாலும் வஜ்ரவேலுதான் என் பொண்ணுக்கு புருஷன்..." என்க.

"ஓ... அப்ப என் அப்பாவுக்கு நீங்க கொடுத்த வாக்கு...?" என அவன் கேட்க.

"அத தூக்கி குப்பைல போடு.... முதல்ல... உன் அப்பா உயிரோட இருக்கானான்னு பாரு..." என்க.

"மாமா..." என்றான் இன்னும் அதிக கோபமாக.

"வாய மூடுடா... உன் அப்பாவ பத்தி உனக்கு தெரியுமாடா.... அவனும் நானும் ஒரே வயசுதான்... அவன்கிட்ட இருக்க பணம் எங்கிட்டயும் இருக்கு... ஆனா... இந்த ஊருக்குள்ள அவனுக்கு இருக்க மரியாதை எனக்கு இல்ல... இது இப்ப உருவான பகை கிடையாதுடா நாப்பது வருஷ பகை..." என்க.

"அப்போ இத்தன நாளா என் அப்பா முன்னாடி...?!" என அவன் நிறுத்த "மச்சான்  மண்ணாங்கட்டின்னு நடிச்சேன்.... வேறவழி...?" என அவன் கேட்க.

உள்ளுக்குள் அதிர்ந்து போனான் சக்கரவர்த்தி.

"உன் அப்பா என்ன என் சொந்த மச்சானா... இல்ல... உன் அம்மாதான் என் அப்பனுக்கு பொறந்தவளா... டேய்... காரியம் ஆகற வரைக்கும் கால பிடிப்பேன்... காரியம் முடிஞ்சா கழுத்தையே அறுப்பேன்.... என் குணம் தெரியாம உன் அப்பன்காரன் இருந்தா.... அதுக்கு நான் என்ன பண்ண முடியும்... இன்னைக்கு துக்க வீட்டுல வச்சு என்னையும் என் மச்சானையும் உன் அப்பன் ரொம்ப பேசிட்டான்... அதுக்கு பதில் குடுக்கனும் இல்ல...?!" என நிறுத்த அவரது பேச்சில் அதிர்ந்து நின்றான் சக்கரவர்த்தி.

"நாங்க தப்பான தொழில் பன்றோமாம்....அதனால... ஊர்ல எல்லோருமே பாதிக்கப்படறாங்களாம்.... உன் அப்பன்காரன் இன்னைக்கு துக்க வீட்டுல எங்க ரெண்டு பேரையும் கூப்ட்டு மெரட்டுறான்..." முழுசா நாங்க என்னெல்லாம் பண்ண போறோம்னு தெரியறதுக்கு முன்னாடி அவன போடனும்...." மச்சான் என ராசாங்கத்தை அழைக்க "எல்லாம் ரெடி மச்சான்..." என்றான் அவன்.

"ஏங்க... என்ன பேசிட்டு இருக்கீங்க...விநாயகம் அண்ணாவ பத்தி... ஏன் இப்படிலாம் பேசிட்டு இருக்கீங்க....இதுலாம் தப்பு... நம்ம பொண்ண அவங்க பையனுக்குன்னு அந்த காளியம்மன் சாட்சியா வாக்கு கொடுத்து இருக்கீங்க.... அது மறந்து போச்சா...? உங்கள பத்தி தெரிஞ்சா அவரு என்ன பண்ணுவாருன்னு தெரியும் இல்ல... வீணா அவர வம்புக்கு இழுக்காதீங்க... இந்த ஊரே உங்கள ஒன்னும் இல்லாம பண்ணிடும்..." என்றார் காளியின் அன்னை.

"வாயமூடுடி எனக்கு தெரியும்... இத்தன வருஷமா மனசுக்குள்ளயே வச்சு புழுங்கிட்டு இருந்தேன்... இப்பத்தான் நேரம் வந்துருக்கு ஒழுங்கா அமைதியா இரு... இல்லனா..? உன்னை கொலை பண்ணக்கூட தயங்க மாட்டேன்.... இத்தன நாள் பூச்சி மாதிரி இருந்தவன் இன்னைக்கு இத்தனை பேச்சு பேசறான்னு யோசிக்கிறியா... என்ன பன்றது பதவிங்கிறது ஒரு போதை அதுக்கு நான் அடிமை... அதே மாதிரி இந்தா இவனுக்கு அந்த காளியம்மன் கோவில்ல இருக்க புதையல் வேணும்... அதுக்காகதான் அவன் இந்த ஊருக்கே வந்தான்... ஏன் உங்க விநாயகம் அண்ணன்கிட்ட போய் சொல்ல போறியா...போ... ஆனா... நீ போறதுக்குள்ள அவன் முடிஞ்சி இருப்பான்... என்ன பாக்கற.... அவன் உயிரோடு இருந்தா நாங்க நினைச்சது நடக்காதுன்னு  தெரிஞ்சு போச்சு.... அதான் அவனுக்கு இன்னைக்கு நாள் குறிச்சிட்டோம்... இந்நேரம் முடிஞ்சி இருக்கும்னு நினைக்கிறேன்.... அசால்டாக கூற.

சக்கரவர்த்திக்கு மயக்கமே வரும் போல இருந்தது.... 





Leave a comment


Comments


Related Post