Total Views: 226
அத்தியாயம் 4
கண்மூடி அமர்ந்து இருந்த அந்த காவிநிற ஆடை அணிந்தவரின் முன்னால் கைக்கூப்பியபடி நின்றிருந்தனர் அருணாவும் பத்மினியும்.
சற்றுநேரம் கழித்து கண்விழித்தவர் இருவரையும் அமைதியாக பார்த்தார்.
அவர் முகமே அத்தனை சாந்தமாக இருந்தது.
யாராக இருந்தாலும் அவர் முகத்தை பார்த்தால் கை எடுத்து கும்பிடவே தோன்றும் இதழோரம் சிறிய புன்னகை தழும்ப இருந்தவர் அருணாவையே ஆழ்ந்து பார்த்தார்.
"ஈசன் மகன பாக்க வந்தியா தாயி....?" என தனது சாந்த குரலால் கேட்க.
அருணாவின் தலை தானாக அசைந்தது.
"என்ன சொன்னான்... உனக்கு நான் துணை இருப்பேன்னு சொன்னானா...?" என கேட்க.
அருணாவோ அமைதியாக நிற்க.
"அவன நம்பாத தாயி... உனக்கு இனிமேல்தான் பல சோதனைகள வச்சிருக்கான்..." என்க.
"எனக்கு புரியல சாமி..." என்றார் அவர்.
"உனக்கு புரியலயா தாயி...?" என மீண்டும் கேட்க.
இல்ல எனும் விதமாக தலையசைத்தார் அருணா.
"அங்கு உக்காந்து இருக்காங்களே... அந்த புள்ளைங்க உன் புள்ளைங்களா தாயி...?" என கேட்க.
"ஆமா சாமி... இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு... அவங்க நாலுபேரும் நிறைய கஷ்டத்த அனுபவிச்சிட்டாங்க... இப்போதான் அதெல்லாம் மறந்து கல்யாணம் பண்ணி இருக்காங்க.... அவங்க வாழ்க்கை இனியாவது நல்லா இருக்கனும் சாமி.... நீங்கதான் ஆசிர்வதிக்கனும்...." என கேட்க.
அருணாவையும் பத்மினியையும் மாறி மாறி பார்த்தவர் "விஷத்த கூடவே வச்சிருக்கியே தாயி... அது உன் குடும்பத்த அழிக்க இல்ல காத்துட்டு இருக்கு...?!" என்க.
பத்மினிக்கோ தூக்கிவாரிப்போட்டது.
"சாமி என்ன சொல்றீங்க...?" என கேட்க.
அவருக்கு அவரைத்தான் சாமியார் சொல்லிவிட்டாரோ என்ற பயம்.
பத்மினியை பார்த்தவர் "உன் மகன் இதுவரைக்கும் பட்டது எல்லாம் பெரிய துன்பம் இல்லத்தாயி... இனி படப்போறதுதான் உண்மையான துன்பம்...."என்க.
அவருக்கு இதயத்தில் பக்கென ஆனது.
"சாமி எங்களுக்கு ஒன்னும் புரியல... தெளிவா சொல்லுங்க...." என பத்மினி கேட்க.
அருணாவை பார்த்தவர் "உன் மன்னவன் வாக்கு தெய்வவாக்கு தாயி... ஆனா.... நீ பெத்த உன் வாரிசு கொடிய விஷம் தாயி..." என்க.
அருணாவிற்கே முதலில் புரியவில்லை புரிந்த பின் அவருக்கு இதயம் வேகமாக துடிக்க நெஞ்சில் கைவைத்து கொண்டவர் "சாமி...என் பையன அப்படி சொல்லாதீங்க... அவன் சுத்த தங்கம்..." என்க.
"ஆமா தாயி தங்கம்தான் கொஞ்சம் கலப்படமான தங்கம்... உன் குடும்பத்து ஆளுங்கள ஜாக்கிரதையா பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு தாயி... இனி எல்லாம் உன்கைலதான் இருக்கு..." என்க.
"சாமி... அவன் இந்த ஊருல பிரபலமான இதய டாக்டர்... அவனால எத்தனையோ பேர் உயிர் பிழைச்சு இருக்காங்க... எத்தனையோ இல்லாதவங்களுக்கு உதவி செஞ்சிட்டு இருக்கான்... அவனால பிழைச்சவங்களுக்கு அவன் கடவுள் மாதிரி அவனப்போய் விஷம்னு சொல்லிட்டீங்களே..." என்க.
"என்னத்தாயி பன்றது... உன் பையன் பன்றது எல்லாத்தையும் அப்படியே நம்பாத தாயி... உன் வீட்டுக்கு விளக்கேத்த வந்தவ... தெய்வ கடாட்சம் நிறைஞ்சவ அவள பத்திரமா பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு தாயி... இனி உன் குடும்பம் மொத்தத்துக்கும் காவல் தெய்வம் நீதான் தாயி... சூதானமா இரு... உன் கழுத்து புருஷனா உன் வயித்து புருஷனான்னு உனக்கு ஒரு நிலமை வரும் தாயி... சூதானமா முடிவெடு..." என்க.
ஐயோ என்றானது அவர்களுக்கு.
அருணாவும் பத்மினியும் பின்னால் திரும்பி பார்க்க அங்கு வாசுவும் இந்தரும் சுந்தரும் ஏதோ பேசி சிரித்தபடி இருக்க அருவியும் சுசிலாவும் ஏதோ கதை பேசியபடி இருந்தனர்.
தர்மனும் சக்கரவர்த்தியும் தீவிரமாக ஏதோ பேசியபடி இருக்க.
இந்தரின் முகத்தைத்தான் பார்த்தார்.
அவன் பேச்சு ஆண்களிடம் இருந்தாலும் அவன் கண்கள் அடிக்கடி வஞ்சியவளை கண்டு அவளை சிவக்க வைத்துக் கொண்டு இருந்தது.
எந்த கோணத்திலும் அவன் தவறானவன் என அவர்களால் அறிய முடியவில்லை.
இதுவரை அவனை பற்றி இவ்வாறெல்லாம் அருணா கேள்விப்பட்டது இல்லை.
அவனை புகழ்ந்து கேட்டுதான் பழக்கம்.
அதுவும் அவனால் பயனடைந்தவர்கள் அவனை கடவுளாகவே எண்ணி இவரிடம் வாழ்த்திவிட்டு செல்வர்.
"முருகா... இப்ப நான் என்ன செய்வேன்..." என அவர் தடுமாறி நின்றார்.
பத்மினிக்கும் என்ன கூறுவது என தெரியவில்லை.
இந்தர் அவரது ஆசை மகன்.
என்னதான் வாசு அவர் பெற்ற பையனாக இருந்தாலும் இந்தர்தான் முதன்முதலில் அவரை அம்மா என அழைத்தவன் அதுதானோ என்னவோ பத்மினி அவன்பால் அதிக அன்பை பொழிவார்.
இன்றும் அவருக்கு அவன் சின்ன குழந்தைதான் அப்படி இருக்கையில் இது எப்படி சாத்தியம் என அவரும் எண்ணி குழம்பி போனார்.
"உன் மன்னவனும் உன் வீட்டுக்கு விளக்கேத்த வந்த அந்த குலவிளக்கும் ஜாக்கிரதை தாயி... இந்தா...." என எதையோ கையில் கொடுக்க அது திருநீறு.
"அந்த வேலன்மேல பாரத்த போட்டு போ தாயி...ஆனா... எந்த நேரமும் கவனம் தாயி... அவனே உனக்கு ஒரு வழியும் காட்டுவான் இனிதான் நீ தைரியமா இருக்கனும்..." என்க.
அருணாவிற்கு கண்கள் கலங்க ஆரம்பிக்க "இது அழறதுக்கான நேரம் இல்ல தாயி... புத்திசாலித்தனமா யோசுச்சு முடிவெடுக்கற நேரம்... போ தாயி இனிதான் உன் போராட்டம் ஆரம்பம்..." என்க.
"சாமி நீங்க ஏதேதோ சொல்றீங்க...எனக்கு சிலது புரியல.. ஆனா நான் முழுசா நம்பற இந்த முருகன் என்ன கைவிட மாட்டான்னு நான் நம்பறேன்...எனக்கு அவன்மேல முழு நம்பிக்கை இருக்கு... எனக்கு பணத்துக்கு பஞ்சம் இல்ல... என் குடும்ப நிம்மதி ரொம்ப முக்கியம் அதுக்காக என் உயிரே போனாலும் பரவால்ல..." என்க.
"அதுவும் ஒருநாள் நடக்கும் தாயி..." என்றார் அவர்.
அருணா பக்கென அதிர்ந்து அவரை பார்க்க.
"உன் உயிரே போற மாதிரி கூட ஒரு சூழல் வரலாம்... நீ எதுக்கும் தயாரா இருத்தாயி... உன் மனசுல இருக்க பாரத்த எல்லாம் அந்த ஈசன் மவன்கிட்ட இறக்கி வச்சிட்டு போ தாயி...." என்க.
"என்ன இந்த மனுஷன் இந்த குழப்பு குழப்புறாரு..." என பத்மினி நினைத்தார்.
அருணாவிற்கோ அவர் கூறிய வார்த்தையின் அர்த்தம் புரிந்து இளநகை ஒன்று இதழோரம் உதித்தது.
"என் பசங்க வாழ்க்கை நல்லா இருந்தா போதும் சாமி... அதுக்காக என் உயிரே போனாலும் நான் கவலைப்பட போறது இல்ல..." என கூற.
"அதுக்கு உன் வீட்டுக்கு விளக்கு ஏத்த வந்தவ விடறாளா பாருத்தாயி..." என்க.
இப்போது அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது.
மீண்டும் அங்கு அமர்ந்து மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருப்பவர்களை பார்த்துவிட்டு "இதுக்கு என்ன சாமி பரிகாரம்...?" என பத்மினி கேட்க.
"ஆண்டவன் முடிச்சிக்கு பரிகாரம் உண்டு தாயி... ஆனா.... உன் வீட்டு வாரிசு போட்ட முடிச்சிக்கு அவன்தான் பரிகாரம் தாயி..." என்க.
"சாமி அவன் உயிருக்கு ஏதாச்சும்..." என அருணா இழுக்க.
"உன் மருமகளுக்கு மாங்கல்ய பலம் உண்டு தாயி...." என அவர் முடித்துவிட்டு அவர் மீண்டும் கண்களை மூடிக்கொள்ள.
இருவரும் அவரை மீண்டும் வணங்கிவிட்டு அவ்விடம் விட்டு அகன்று அமர்ந்து இருந்தவர்களை நோக்கி வரவும் இந்தர் போனை எடுத்துக்கொண்டு சற்று நகர்ந்து செல்லவும் சரியாக இருந்தது.
அருகில் வர வர அவனின் முகத்தையே அருணா பார்த்துக் கொண்டு வந்தார்.
"அக்கா..." என அழைக்க.
"சொல்லு பத்மா..." என்றார் அவர்.
"நிஜமா இந்தர் ஏதாச்சும் தப்பு பன்றான்னு நீங்க நினைக்ககுறீங்களா...?" என கேட்க.
"இதுவரை இல்ல பத்மா... ஆனா.. இப்ப மனசு குழப்பமா இருக்கு... ஏன்னா... அவன் அருவி மேல ரொம்ப கோபமா இருத்தான்... அது எங்க ரெண்டு பேருக்கும் நல்லாவே தெரியும்... எப்படி திடீர்னு மாறினான்னு தெரியல... இல்ல அவங்களுக்குள்ள எல்லாம் சரியாச்சானும் தெரியல... ஆனா... இந்த சாமி சொல்றது அப்படியே நடக்கும்னு இங்க வரவங்க பேசி நான் கேட்டுருக்கேன்... அவ்வளவு சீக்கிரமா யாருக்கும் வாக்கு சொல்ல மாட்டாரு... அப்படியே சொன்னாலும் அது பலிக்காம போகாதுன்னு நான் கேள்விப்பட்டு இருக்கேன்... பத்மா அதான் இப்ப எனக்கு மனசுக்கு சங்கட்டமா இருக்கு..." என்க.
"இப்ப என்ன பன்றது... மாமாட்ட இதுப்பத்தி சொல்லிடலாமா...?" என கேட்க.
"முதல்ல இந்தர கவனிக்கலாம் பத்மா... நீ கொஞ்ச நாளைக்கு இங்கயே இரு..." என்க.
"அது உங்க கொழுந்தன்....?" என இழுக்க.
"அவர்ட்ட நான் பேசறேன்..." என்றார் அருணா.
"அப்ப சரிக்கா... நமக்கு முதல்ல நம்ம புள்ளைங்க வாழ்க்கை முக்கியம்... மத்தது எல்லாம் அப்பறம்..." என பத்மினி கூற.
"ம்ம்ம்ம்..." என அவர்கள் அருகில் வந்தவர்கள் இந்தரை தாண்டித்தான் வரவேண்டும் அப்போது அவனை கடந்து அவர்கள் வரும்போது இந்தர் யாரிடமோ கோபமாக பேசுவது தெரிந்தது,அந்த மாதிரியான ஒரு முகபாவத்தை இதுவரை அருணா கண்டதில்லை அவனிடம்.. இப்போது இந்தர் அவர் கண்களுக்கு வித்தியாசமாக தெரிந்தான்.....