இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி பாகம் 2-6 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 27-11-2024

Total Views: 215

அத்தியாயம் 6

அனைவரும் கோவிலை விட்டு வெளியே வந்தனர்.

இந்தர் ஒரு காரும் சுந்தர் ஒரு காரும் எடுத்துக்கொண்டு வந்து அவர்களுக்காக காத்திருக்க வெளியே வந்தவர்கள் சுந்தர் காரில் பெரியவர்களும் இந்தர் காரில் அருவி சுசிலா வாசு என நால்வரும் ஏறிக்கொண்டனர்.

காரை கிளப்பிய சுந்தரிடம் "சுந்தர், வண்டிய நிறுத்து..." என கூற.

"ஏம்மா...?" என அவன் கேட்டான்.

"நான் இந்தர் கூட வரேன்... நீங்க இந்த கார்லயே வாங்க..." என்க.

"இப்ப உனக்கு என்ன பிரச்சனை...ஏன் இந்த வண்டியில வந்தா என்ன...?" என சக்கரவர்த்தி கேட்க.

"ஒன்னும் இல்ல... ஏன் நான் அவன்கூட வரக்கூடாதா....?" என வெடுக்கென கேட்க.

முதன்முதலாக அவரின் அந்த செயலை கண்ட சக்கரவர்த்திக்கு உள்ளுக்குள் வருத்தமாக இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் "சுந்தர் கார எடு..." என்க.

அருணாவோ கீழே இறங்கினார்.

அவர் மனம் நிலையாக இல்லை.

முதன்முதலில் தன்னை தனியாக விட்டு சென்ற மனைவியை பார்த்தவர் எதுவும் பேசாமல் அமைதியாக அருணா அவரது கண்களை சந்திக்காமல் வண்டியைவிட்டு இறங்கியவர் இந்தரின் வண்டியை நோக்கி சென்றார்.

போகும் அவரையே யோசனையாக பார்த்து கொண்டு இருந்தார் சக்கரவர்த்தி.

"மாமா...." என பத்மினி அழைக்க "ஏன் பத்மா... உன் அக்காவுக்கு என்ன ஆச்சு... அந்த சாமியார பார்த்துட்டு வந்ததுல இருந்து ஒரு மாதிரியா இருக்கா... அதுக்குத்தான் சொன்னேன் தேவையில்லாத வேலை செய்யாதீங்கன்னு... யாரு கேக்கறா என் பேச்ச... ஒருநாளைக்கு அந்த சாமியாருக்கு இருக்கு...." என்க.

"மாமா, அப்பனும் பையனும் இந்த விஷயத்துல மட்டும் ஒரே மாதிரியே இருக்கீங்க... அவனும் அப்படித்தான் அவங்க அம்மா முகத்தை பார்த்ததும் அந்த சாமியாருக்கிட்ட சண்டைக்கு கிளம்பினான்... நாங்கதான் சமாதானபடுத்தி அழைச்சிட்டு வந்தோம்...இப்ப நீங்களும் அந்த சாமியாரா ஒரு வழி பண்றேன்னு சொல்றீங்க...." என்க.

"அதவிடு என்ன சொன்னாரு... ஏன் இவ இப்டி மந்திரிச்சுவிட்ட கோழி மாதிரி சுத்திட்டே இருக்கா...." என கேட்க.

"அது... இந்தருக்கு கொஞ்சம் டைம் சரியில்லைன்னு சொன்னாரு... அதான் அக்கா இப்படி இருக்காங்க...." என்க.

"ஓ அப்படியா.... அதுதான் சொன்னாரா... இல்ல... வேற ஏதாச்சும் சொன்னாரா... இவ நடவடிக்கையே இன்னைக்கு சரியில்லையே...?" என்க.

"வே... வேற... ஒன்னும் சொல்லல மாமா...." என அவர் தடுமாறுவதிலேயே ஏதோ பெரிய விஷயம் இருப்பதாக தோன்றியது மேற்கொண்டு தோண்டாமல் சரி  எனும் விதமாக இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார் சக்கரவர்த்தி.

இந்தரின் காருக்கு வந்து வெளியே நின்று கதவை தட்டிய அருணாவை பார்த்து முதலில் வாசு அதிர்ந்தாலும் பின் காரின் கண்ணாடியை இறக்கி "என்னம்மா...?" என கேக்க.

"நீ பின்னாடி உக்காரு... இல்லன்னா... சுந்தர் கூட வாப்பா... நான் இவன்கூட வரேன்..." என்க.

காரில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சி என்றால் இந்தருக்கோ இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

"என்ன ஆச்சு இந்த அம்மாவுக்கு..." என நினைத்தவன் பின் இருக்கையில் இருந்த மனைவியை திரும்பி பார்க்க அவளும் அருணாவைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

இன்று அத்தையின் முகமும் சரியில்லை அவரது நடவடிக்கைகளும் காலையில் கோவிலுக்கு கிளம்பும் போது இருந்த ஒரு மகிழ்ச்சி இப்போது அவர் முகத்தில் இல்லையே என நினைத்தவள் நடப்பவற்றை வேடிக்கை மட்டுமே பார்த்தாள்.

வாசு யோசனையாக இறங்கியவன் "சரிம்மா... நீங்க இங்க உக்காருங்க... நான் அந்த வண்டிக்கு போறேன்..." என்றவன் காரில் இருந்து இறங்கி சுசிலாவிற்கு ஒரு தலையசைப்பை கொடுத்துவிட்டு இந்தரிடமும் ஒரு தலையசைப்பை கொடுத்துவிட்டு நகர இந்தரின் அருகில் அமர்ந்தவர் போலாம்பா என்க.

அவரை வித்தியாசமாக  பார்த்துக் கொண்டே வண்டியை கிளப்பினான்.

சற்றுதூரம் சென்றதும் அவன் தோளில் சாய்ந்து கொள்ள அவனுக்கு ஏதோ சரியில்லை என்றே தோன்றியது.

"அம்மா.. உங்களுக்கு ஒன்னும் இல்லதான ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க...?" என கேட்க.

"நான் நல்லாத்தான் இருக்கேன்பா... கொஞ்சம் டயர்ட்டா இருக்கு அவ்ளோதான்..." என்க.

"ஹாஸ்பிடல் போலாமா அத்தை...?" என அருவி கேட்க.

"இல்லம்மா... வீட்டுக்கு போலாம்... இன்னைக்கு நிறைய வேலை இருக்கு..." என்க.

அந்த நிறைய வேலை என்ன மணமக்களுக்கு நன்றாகவே தெரிய அருவி முகம் வெட்கத்தில் சிவக்க இந்தரின் முகமோ யோசனையில் இருந்தது.

அடிக்கடி அவன் கண்ணாடி வழியாக பின் இருக்கையில் அமர்ந்து இருக்கும் அவள் முகத்தையே ஆராய்ந்தபடி இருந்தான்.

முதலில் அவள் சுசிலாவுடன் பேசிக்கொண்டு வந்ததில் அவள் கவனிக்கவில்லை.

யாரோ அவளை உற்று பார்ப்பது போல தோன்ற சுற்றிலும் பார்வையை சுழலவிட்டவளின் பார்வை இந்தரின் பக்கம் திரும்பியது.


அவளும் தன்னை கவனிக்கிறாள் என அறிந்தவன் கண்ணாடி வழியாக அவளை பார்த்து கண்ணடிக்க.

அவளோ வெட்கத்தில் சிவந்து போனாள்.

கன்னம் ஓரமாக சிவந்து போன அவளின் முகத்தையே அவன் பார்த்து கொண்டு இருந்தான்.

அவன் மனதில் என்ன ஓடுகிறது என்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியம்.

வீடும் வந்து சேர்ந்தது.

முதலில் இந்தரின் கார் வர அதைத் தொடர்ந்து சுந்தரின் காரும் வந்தது.


வீட்டிற்கு வந்தவர்களுக்கு ஜானகி ஆரத்தி எடுத்து வரவேற்க.

அனைவரும் உள்ளே செல்ல சுசிலாவும் அருவியும் பூஜையறையில் விளக்கேற்றிய பின் இரு ஜோடிகளும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.

சக்கரவர்த்தியின் காலில் விழ முரண்டு பிடித்தவனை இழுத்து வந்து காலில் விழ செய்தாள் அருவி.

அவளை பார்த்து முறைத்தவன் முகத்தை திருப்பி கொள்ள அவனின் கோபத்தை ரசித்த பெண்ணவள் யாரும் அறியாமல் அவன் கரத்தை அழுத்தி பிடிக்க இப்போது அவளின் செயலை அவன் பறித்துக் கொண்டான்.

அவன் இறுக்கி பிடித்ததில் அவள் கரங்கள் சிவந்து வலியெடுக்க "மாமா வலிக்குது..."என அவனுக்கு மட்டும் கேக்கும் குரலில் கூற.

அவனோ அவனது கரத்தை அவளது கரத்தில் இருந்து விடுவித்து கொண்டான்.


அவளுக்கு அவனது செயல் சற்று ஒருவிதமான கஷ்டத்தை கொடுக்கத்தான் செய்தது.

ஏனோ அவன் அவளிடம் இருந்து முற்றிலும் விலகியது போன்ற ஒரு பிம்பத்தை கொடுக்க அந்த சிறு பிரிவே அவளுக்கு வலியை கொடுத்தது. 

பின் இருஜோடிகளையும் ஒரு பெரிய சோபாவில் அருகருகே  அமர வைத்தனர்.

 ஜானகி அவர்களுக்கு பாலும் பழமும் கொண்டு வந்து கொடுத்தார்.

அதை உண்டு முடித்தவர்களிடம் அவரவர் அறையில் ஓய்வெடுக்க கூறினார் அருணா.

"அருணா..." என சக்கரவர்த்தியின் குரலில் திரும்பி தன் கணவனை பார்க்க "பொண்ணுங்க ரெண்டு பேரையும் கெஸ்ட் ரூம்ல கொஞ்ச நேரம் தூங்க சொல்லு... அவனுங்க ரெண்டு பேரையும் அவனுங்க அறைக்கே போக சொல்லு..." என்றவர் சுந்தரிடம் திரும்பி "டேய்... நீ உன் அப்பாவுக்கு போன் பண்ணி இங்க வர சொல்லு..." என்க.

"இல்லப்பா... நானே போய் பார்த்துட்டு அப்படியே ஹாஸ்பிடல் போய் தலைய காமிச்சிட்டு வரேன்... அந்த டீன் என்ன பேச போறாரோ தெரியல...?" என்க.

"இல்ல... நீ எங்கயும் போக வேணாம்... உன் அப்பாவுக்கு போன் போட்டு குடு... நானே வர சொல்றேன்..." என்க.

சரி என்றவன் போன் போட்டு குடுக்க அதை வாங்கி பேசியவர் இங்கு வர சொல்ல சுந்தரின் தந்தையும் சரி என சம்மதித்தார்.

"சரி இந்தா நீ போய் ரெஸ்ட் எடு..." என்க.

"ம்ம்ம்ம்..." என்றவன் "வாங்கடா..." என அழைக்கும் நேரம் "அம்மா... எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு... நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்..." என்க.

"என்ன சொன்னாலும் கேக்க மாட்டானாமா உன் பையன்... ஏன் அப்படி என்ன முக்கியமான வேலையாம்...?" என கேட்க.

"அம்மா..." என பற்களை கடித்தவன் "இங்கதான் பக்கத்துலதான் போய்ட்டு வரப்போறேன்... ஏன் இப்படி ஜெயில் கைதி மாதிரி ட்ரீட் பண்ணிட்டு இருக்காரு... நான் என்ன சின்ன பையனா...?" என கேட்க.

"அப்பா உன் நல்லதுக்குதான கண்ணா சொல்றாரு...." என அவன் கன்னம் வருடினார் அருணா.

அவரின் கையை தன் கன்னத்தோடு சேர்த்து பிடித்தவன் "என் பொண்டாட்டிக்கு ஆசையா நான் எதுவும் வாங்கி கொடுக்க கூடாதா... அதுக்கு கூட நான் இவர்ட்ட கேட்டுட்டுதான் போகனுமா....?" என கேட்க.

அங்கு நின்றிருந்த அத்தனை பேர் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி தாண்டவமாடியது.

"ஏன் வாசுவும்தான்... புதுசா கல்யாணம் ஆனவன் அவனையும் கூட்டிட்டு போலாம் இல்ல..." என்க.

இந்தரோ வாசுவை பார்த்தான்.

அவன் பார்வையை உணர்ந்த வாசு "அவன் கூப்ட்டான்பா நான்தான் வரலன்னு சொல்லிட்டேன்..." என்க.

"என்னவோ பண்ணுங்க... இப்போல்லாம் என் பேச்சுக்கு மரியாதையே இல்ல..." என்றவர் "தர்மா வா..." என அழைத்தபடி முன்னே செல்ல அவர் பின்னால் சென்றார் தர்மன்.

"இந்த பலியாடு இன்னும் எத்தன நாளைக்கு இப்படியே இருக்கும்...?" என சுந்தர் கேட்க.

"என்னடா சொன்ன.." வாசு கேட்க இருவரும் சண்டை போட்டுக்கொண்டு இருக்க அந்த கேப்பை பயன்படுத்தி "அம்மா நான் உடனே வந்துடுவேன்..." என அவரின் கன்னத்தில் அருவியை பார்த்துக்கொண்டே முத்தமிட அவள்தான் அவன் பார்வையில் சிவந்து போனாள்.

அவளோ அவனுடனான எதிர்கால வாழ்க்கையை எண்ணி கனவுலகில் மிதக்க அவனோ அவளை இந்த திருமண பந்தத்தில் இருந்து பிரிக்க செய்ய வேண்டிய அத்தனை வேலையையும் அச்சுப்பிசகாமல் செய்து வைத்தான்.....

வருவான் 


Leave a comment


Comments


Related Post