இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி பாகம் 2-34 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 14-01-2025

Total Views: 183

அத்தியாயம் 34

இந்தரும் சுந்தரும் பேசியதை கேட்டப்படி அருவி அவளது அறையில் இருந்தும் வாசு அவனது அறையில் இருந்தும் இருவரும் கேட்டது வர்ஷினியால உனக்கு எதும் பிரச்சனையா என்ற வார்த்தையைதான்.

அருவிக்கு அவளைப்பற்றி பெரிதாக தெரியவில்லை ஆனால் சுந்தருக்கு அவளது ஜாதகமே கையில் இருந்தது.

அவனும் மறக்காது சக்கரவர்த்திக்கு அவளை பற்றிய தகவல்களை அனுப்பி இருந்தான்.

வர்ஷினியின் பெயரைக் கேட்டதும் இந்தரின் முகம் மாறியதை நன்றாகவே கவனித்தான் வாசு.

வர்ஷினியும் தானும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறதை கூறியதும் சுந்தர் அவனை அடிக்க பாய்ந்ததும் அதை கேட்ட அருவிக்கு ஏற்கனவே இருந்த மனவுளைச்சல் இரண்டு நாளாக சரிவர உண்ணாது இருந்தது என அனைத்தும் சேர்ந்து மயக்கத்தை வரவழைத்தது.

அவள் மயங்கி சரியவும் "அருவி...." என திகம்பரன் ஓடி வந்து அவளை தாங்கும் அவனை தள்ளிவிட்டு அருவியை கையில் தாங்கி இருந்தான் சுந்தர்.

அதை கண்டும் அவ்விடம் விட்டு அகலாமல் நின்றிருந்த இந்தரை கண்களால் எரித்தவன் "நீ என்ன மனுஷன்டா உன்ன காதலிச்சத தவிர அவ வேற என்ன செஞ்சா...?" என கேட்டான்.

அருவி விழவும் வாசுவும் ஓடி வந்தவன் தண்ணீர் கொண்டு வந்து அவள் முகத்தில் தெளித்தான்.

மெல்ல கண்விழித்தவளுக்கு தன் அருகில் இருந்த முகங்களை விட அவளது மன்னவனின் முகமே கண்ணுக்கு தெரிந்தது.

தான் மயங்கி விழுந்தும் அவன் அசராது நிற்பது கண்டு உள்ளம் துடித்துப் போனவள் எதும் பேசாமல் சுற்றி இருந்தவர்களின் முகங்களை பார்க்க அனைவரின் முகமும் அவளை கவலையுடன் கண்டது.

"எனக்கு ஒன்னும் இல்லண்ணா..." என்றவள் "அவருக்கு எப்ப நான் டைவர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணனும்னு கேட்டு சொல்லுங்கண்ணா நான் போட்டு கொடுத்துடறேன்...." என்றாள்.

அவன் முன் அழக்கூடாது என முயன்று அழுகையை உள்ளிழுத்தவள் "வாசுவையும் சுசிலாவையும் கூட்டிட்டு போங்கண்ணா..." என்க.

"அப்போ நீ...?" என கேட்டான் சுந்தர்.

"என்னை நான் பார்த்துக்கிறேன்... எனக்கு ஒன்னும் இல்ல... நான் ஊருக்கே போய்டுறேன்... அங்க ஏதாச்சும் வேலை கிடைக்கும்..."என்க.

"ஓ நல்லதா போச்சு...அங்க போனாதான இதோ இந்த திகம்பரன் கூட ஜாலியா சேர்ந்து ஊர் சுத்தலாம்... அதுக்கு இங்க இருந்தா நான் தடையா இருப்பேன் இல்ல... நல்ல முடிவு..."என்க.

அவன் கூறி முடிக்குமுன் அவன் சட்டையை பற்றி இருந்தான் திகம்பரன்.

பரசுராமும் அவன் அருகில் நின்றவன் "நீயெல்லாம் என்னடா படிச்சு கிழிச்ச... கட்டின பொண்டாட்டிய சந்தேகப்படறவன் நல்ல ஆம்பளையே இல்ல... இத்தன நாளா அவக்கூட குடும்பம் நடத்தி இருக்கியே... இன்னுமா அவளப்பத்தி உனக்கு தெரியில...."  என கேட்க.

"கைய எடுறா... என்னமோ... அவள பத்தி சொன்னதும் உனக்கு பொத்துக்கிட்டு வருது... உங்க ரெண்டு பேருக்குள்ளயும் எதும் இல்லாமதான் நீ  ஊருக்குள்ள அவ பின்னாடி சுத்திட்டு இருந்தியா... என்னமோ ரொம்ப யோக்கியன் மாதிரி பேசுறீங்க... நீதான் ஒன்னாம் நம்பர் பொறுக்கியாச்சே..." என்றான் இந்தர்.

"ஆமாடா நான் பொறுக்கிதான் ஆனா கட்டின பொண்டாட்டிக்கு துரோகம் பன்றவனும் கிடையாது...அவள அழ வச்சுட்டு சந்தோஷப்படறவனும் கிடையாது.... கட்டின பொண்டாட்டிய ஒழுங்கா பாத்துக்க வக்கு இல்ல... என்னமோ பேச வந்துட்ட..." என்றான் அவனும் விடாமல்.

"ஓ கதை அப்படி போகுதோ... என்னடி நல்லவ உத்தமி மாதிரி நடிச்சு ஊரையே ஏமாத்தி வச்சிருக்க போல.. ஐயா எப்படி வரிஞ்சு கட்டிக்கிட்டு வராரு பார்த்தியா..." என்க.

"மாமா போதும் இனிமேலும் நீங்க பேசறத தாங்கற மனநிலையில நான் இல்ல இப்ப உங்களுக்கு என்ன வேணும்..." என கேட்க.

"குட் இது நல்ல கேள்வி எனக்கு உங்கிட்ட இருந்து டைவர்ஸ் வேணும்... மீயுச்சுவலா... இந்த டைவர்ஸ்க்கு...அப்பறம் நீ எந்த பிரச்சனையும் பண்ண கூடாது..." என்க.

அவனை அடிபட்ட பார்வை பார்த்தவள் அழுகையில் துடிக்கும் உதடுகளை அழுந்த கடித்துக் கொண்டு "சரி நான் உங்களுக்கு விவாகரத்து கொடுத்துடறேன்..." என்க.

"அருவி வேணாம் அவசரப்பட்டு முடிவு எடுக்காத, அப்பாவ அமைதியா இருக்க சொல்லிட்டு இப்ப நீயே அவசரப்பட்டு முடிவு எடுக்காத அப்பாகிட்ட பேசலாம் இரு..." என வாசு கூற.

தூக்கம் கலைந்து வந்த சுசிலாவுக்கு அங்கு ஆண்கள் மட்டும் கூடி நிற்க அருவி கீழே அமர்ந்து இருந்த கோலம் மனதை உலுக்க "அருவி... ஏட்டி.. என்னடி ஆச்சு..ஏன் இப்டி உக்காந்து இருக்கவ...?" என அவளிடம் ஓட சுசிலா என அழைத்தான் சுந்தர்.

அவளோ அவளை தாங்கியபடி சுந்தரை பார்க்க "அவ கர்ப்பமா இருக்கா..."என்றான் கண்களில் அதை கூறும் போதே அத்தனை வலி.

அதை கேட்டதும் அங்கிருந்த அத்தனை பேரிடமும் அதிர்ச்சி.

இந்தரின் கண்களோ விரிந்தது.

அவன் வெகுநாட்களாக எதிர்பார்த்த தருணம் அல்லவா...

அருவி அதை கேட்டு இன்னும் குலுங்கி அழ அவளை நெஞ்சோடு அணைத்து இருந்தாள் சுசிலா. 

அவளின் அழுகையை ஒருவித கையாலாகத்தனத்துடன் பார்த்து இருந்தனர்.

பரசுராம் கூட இவளுக்கு இத்தனை துன்பங்களை அந்த கடவுள் கொடுத்து இருக்க வேண்டாம் என எண்ணினான்.

திகம்பரனோ அவள் அழுகையை கையை அழுந்த மூடி தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு பார்த்தான்.

வாசுவோ "சுந்தர் கிளம்பு முதல்ல அவள இங்க இருந்து கூட்டிட்டு போலாம்..." என்க.

"ஆமா... ஆமா...உடனே கூட்டிட்டு போங்க இல்லனா லேட் ஆகிடும்... கருவ கலைக்க முடியாது... கலைச்சாதான அந்த திகம்பரன் கூடவோ இல்ல இந்த வாசு கூடவோ அவ கும்மாளம் அடிக்க முடியும்...." என எகத்தாளமாக பேச அவன் பேசி முடிக்குமுன் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தாள் சுசிலா.

அவன் முன் அவள் ருத்ரகாளியாய் நின்ற தோற்றம் கண்டு இந்தரே ஒருநிமிடம் அதிர்ந்துதான் போனான்.

"என்னடி என்னையவே அடிக்க செய்யுறியா..." என்றவன் கை அவளை அடிக்க ஓங்கும் முன் வாசு அவனை தடுத்து இருந்தான்.

"நான் உன்ன மாதிரி கிடையாது...நான் கட்டிக்கிட்டவள யார் முன்னாடியும் அவமானப்படுத்தவோ இல்ல அசிங்கப்படுத்தவோ இல்ல மத்தவங்க அவள அசிங்கமா பேசறத பாத்துட்டோ இல்ல அவ அழுறத வேடிக்கை பார்த்துட்டோ இருக்க மாட்டேன்.... இனி எம்பொண்டாட்டி மேல உன் விரல் நுனி பட்டாலும் கையையே சேர்த்து வெட்டிடுவேன்..." என்க.

அவனையே பார்த்து இருந்தான் இந்தர்

"வாசு இனி பேச ஒன்னும் இல்ல... அருவிய அழைச்சிட்டு போய் சக்கரவர்த்தி அப்பாகிட்ட ஒப்படைச்சிடலாம்.... இனி அவரு முடிவு எடுத்துப்பாரு..." என்ற சுந்தர் "சுசிலா, அருவிய கூட்டிட்டு போய் ட்ரஸ் மாத்தி விடு கிளம்பலாம்...." என்க.

"ஒருநிமிஷம்..." என்ற இந்தர் வேகமாக மாடியேறினான் உள்ளே சென்றவன் அன்று வாங்கி வைத்து இருந்த டைவர்ஸ் பேப்பரை எடுத்து வந்தான்.

அனைவரும் அவனது செயலில் நொந்துதான் போயினர்.

"ச்சே இவன்லாம் மனுஷபிறவியே இல்ல..." என நினைத்த சுந்தர் "அவ உன் குழந்தையை சுமக்கிறாடா இப்போ கூடவா உன் மனசு இளகல..." என கேட்க.

"உனக்கு இது தேவையில்லாத விஷயம்...." என்றவன் கீழே அமர்ந்து இருந்த அவள் முன் அந்த பேப்பரை தூக்கி போட்டான்.

"இதுல கையெழுத்து போட்டுட்டு நீ எங்க வேணா போ..."  என்க.

அதை எடுத்து பார்த்தவளுக்கு கண்களில் குளம் கட்டியது.

அவன் தூக்கி போட்ட பேனாவை எடுக்காது சுந்தரின் பாக்கெட்டில் இருந்து பேனாவை எடுத்தவள் எதையும் யோசியாமல் யார் சொல்வதையும் கேளாமல் மளமளவென்று இருந்த அத்தனை பேப்பரிலும் கையெழுத்து போட்டுக் கொடுத்தவள் அவன் முகத்தை கூட காணாது சோபாவில் பேப்பரை வைத்தவள் யாரையும் எதிர்பாராது அவ்விடம் விட்டு அகல.

மழையடித்து ஓய்ந்தது போல இருந்தது அவ்விடம்.

நடந்தவற்றில் அதிர்ந்து நின்றிருந்தவர்களில் முதலில் சுதாரித்தது வாசுதான் "சுந்தர் வா போலாம்..." என்க.

சுசிலாவும் அவர்களின் பின்னால் ஓடினாள்.

வீடே மயான அமைதியாக இருக்க எது நடக்க கூடாது என இருந்தானோ அது அவன் கண்ணு முன்னால் நடந்ததை ஜீரணிக்க முடியாமல் கீழே மடங்கி அமர்ந்து வெடித்து அழ ஆரம்பித்தான் இந்தர்..... 



Leave a comment


Comments


Related Post