Total Views: 147
அத்தியாயம் 41
"அருவி...ஏய் நில்லுடி... எங்க இப்படி வேகமா போறவ..?" என்றபடி அவள் பின்னால் வந்துகொண்டு இருந்தனர் வாசுவும் சுசிலாவும்.
நின்று திரும்பி பார்த்தவளுக்கு கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.
பின்னே அருவியின் பின்னால் அனுமார் வாலைப்போல வாசுவும் சுசிலாவும் வர அவர்கள் பின்னால் மெல்ல காரை ஓட்டியபடி சுந்தரும் அவனுக்கு பின்னால் திகம்பரனும் பரசுராமும் மெல்ல நடந்து வர அவளோ "எதுக்கு இப்படி லைன்கட்டி வரானுங்க..." என நினைத்தபடி நிற்க.
"அப்பாடா... நின்னுட்டியாடி.. ஆமா... வயித்துல புள்ளைய வச்சுட்டு... எதுக்கு இப்படி வேகமா நடந்து போற...?" என வாசு கேட்க.
"நான் எங்கடா வேகமா நடக்கறேன்... நீ யானைக்குட்டி சைசாகிட்டா அதுக்கு நான் பொறுப்பாடா..."என அவள் திரும்ப கேட்க.
"ஏய் நீதானேடி.. இந்தர் காட்டின பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டு வேகமா வெளிய வந்த அதான் நாங்களும் வந்தோம்..." என்க.
"ஏய்...இப்ப நான் உன் அண்ணன் பொண்டாட்டிடா.. கொஞ்சம் மரியாதையா பேசு..." என்க.
"ஆமா... அவன பத்தி பேசாத... நானே அவன அண்ணனா ஏத்துக்கல... நீ இப்ப இதான் முக்கியம்னு பேசிட்டு இருக்க..." என்க.
"வாசு... என்ன பேச்சு இது என்ன இருந்தாலும் அவரு உன் அண்ணாடா..." என்க.
"முதல்ல நீ என்னய மரியாதையா பேசுடி..." என்றான் அவன்.
"இப்ப இந்த நைட்டு நேரத்துல நடு ரோட்டுல இந்த விவாதம் தேவையா..?" என அவர்களுக்கு அருகில் வந்த சுந்தர் கேட்க.
"வேற என்ன பண்ண சொல்ற... ஜான்சி ராணி வெளிய வந்துட்டா நாமளும் பின்னாடியே வந்துதானே ஆகனும்..." என வாசு கூற.
"கொஞ்சம் அமைதியா பேசுங்க அவகிட்ட எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுகிட்டே இருக்க வேண்டியது..." என சுசிலா கூற.
"இவ ஒருத்தி..." என்றவன் "இப்ப எதுக்குடி ஊர்வலம் போய்ட்டு இருக்க வா வந்து வண்டியில ஏறு.. நாம முதல்ல சுந்தர் வீட்டுக்கு போகலாம் அப்பறம் என்ன பன்றதுன்னு யோசிக்கலாம்..உனக்கு இங்க இருக்க முடியலனா சொல்லு நாம நாளைக்கே ஊருக்கே போய்டலாம்..."என வாசு கூற.
"ஊருக்கா...ஊருக்கு எதுக்கு..?" என அருவி கேட்டாள்.
அதற்குள் திகம்பரனும் பரசுராமும் அவர்கள் அருகில் வந்திருந்தனர்.
அவர்களை பார்த்து முறைத்த அருவி "ஊருவிட்டு ஊரு வந்தா வந்த வேலைய பார்த்துட்டு அமைதியா இருக்கறது இல்ல கண்ட இடத்துல சுத்திட்டு வந்து நிக்கறது..."என ஜாடையாக திட்ட.
சுசிலாவிற்கு புரிந்தது அவள் யாரை திட்டுகிறாள் என.
ஆனால் வாசுவும் சுந்தரும் முழிக்க சுசிலாவின் சிரிப்பு வந்தது அவர்கள் முழித்துக் கொண்டு நின்ற தோற்றத்தை கண்டு.
திகம்பரன் கூட முதலில் திகைத்து அவள் தங்களைத்தான் கூறுகிறாள் என புரிந்தவனுக்கு இதழ்களில் லேசாக புன்னகை அரும்பியது.
பரசுராமுக்கும் அவள் தங்களைத்தான் கூறுகிறாள் என தெளிவாக புரிய ஆரம்பிக்க அவனும் சற்று இயல்பாக சிரித்தான்.
"நீ என்னடி சொல்ற ஊருக்கு வரலயா அப்ப இங்கயே இருக்க போறியா...?" என வாசு கேட்க.
"நடுரோட்டுல எப்படிடா இருக்க முடியும்.. நான் என் புருஷன் வீட்டுல இருப்பேன்..." என்க.
அனைவருக்கும் அதிர்ச்சி.
"உனக்கு கிறுக்கு ஏதாச்சும் பிடிச்சு இருக்காடி... இப்பதான் மாமா காட்டின பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டு அவருக்கும் உனக்கும் எந்த சம்மந்தம்மும் இல்லன்னு வந்த இப்ப திரும்ப அந்த வீட்டுக்கே போறேன்னு சொல்றவ..." என சுசிலா கேட்க.
சுந்தரும் "ஆமா அருவி... சுசிலா சொல்றது சரிதான் அவன் இப்படி இருப்பான்னு நான் கொஞ்சம் கூட நினைச்சே பாக்கல என்னாலயே தாங்கிக்க முடியல உன்னால எப்படி தாங்கிக்க முடியும் இனி உனக்கு அவன் வேணாம் அருவி..." என சுந்தரும் கூற.
அவனை அதிர்ச்சியாக பார்த்தவள் "என்ன சொல்றீங்க நீங்க..?" என கேட்டாள்.
"இப்ப இந்த நடுரோட்டுல எதுக்கு ஆர்க்யூமென்ட் முதல்ல இங்க இருந்து கிளம்பலாம் இருட்டு நேரத்துல புள்ளத்தாச்சி புள்ளைய நடுரோட்டுல நிக்க வச்சிட்டு பேசனுமா..?" என சுசிலா அருவியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சுசிலா கூற.
"எல்லாம் சரிதான் போலிஸ் இங்க அடிக்கடி ரோந்துக்கு வருவாங்க நாலு ஆம்பள பசங்களோட ரெண்டு பொண்ணுங்க நின்னா என்ன பேசுவாங்க..." என வாசு கூற.
"அவங்க கேக்கறாங்களோ இல்லையோ நீயே காட்டி கொடுத்துடுவ...." என சுந்தர் கூறினான்.
"பின்ன என்னடா இந்த ராத்திரி நேரத்துல இவங்க ரெண்டு பேரையும் தனியா நிக்க வச்சுட்டு பேசினா போறவரவங்க எல்லாம் ஒருமாதிரி பாக்க மாட்டாங்களாடா..."என அவன் கேட்க.
"இப்ப என்னதான் பண்ண சொல்றீங்க ரெண்டு பேரும்..." என கேட்டாள் சுசிலா.
"இங்க பக்கத்துல ஒரு பார்க் இருக்கு இல்ல மணி இப்ப ஒம்போதுதான் ஆகுது அங்க போலாமா..." என வாசு கேட்க.
"இல்ல அது இந்நேரம் மூடி இருப்பாங்க.. என்ற சுந்தரிடம் இங்க நான் தினமும் போற அம்மன் கோவில் இருக்கு இல்ல அங்க போலாம் அங்க இந்த நேரத்துக்கு மூடியிருக்க மாட்டாங்க..." என அருவி கூற சரியென்றவர்கள் ஒருமனதாக அங்கு செல்லலாம் என்ற முடிவை எடுத்தவர்கள் மெல்ல நடந்து கொண்டு பேசியபடி சென்றனர்.
"இப்ப எதுக்கு கரகாட்டக்காரன் படத்துல வர ஊர்வலம் மாதிரி கூட்டிட்டு போய்ட்டு இருக்கீங்க..." என அருவி கேட்க.
"எல்லாமே உன்னாலதான் இப்ப நீ சுந்தர் வீட்டுக்கு போலாம்னு சொல்லியிருந்தா நேரா அங்க போயிருக்கலாம் நீதான் திரும்ப உன் புருஷன்கிட்டயே போறேன்னு சொல்றியே.."என வாசு கூறினான்.
"உங்க யாருக்குமே மாமா தப்பு பண்ணியிருக்க மாட்டாருன்னு தோணலையா..." என கேட்க.
"நீ என்ன பேசிட்டு இருக்க அவன் உன்ன வேணாம்னு சொல்லிட்டு இருக்கான் அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்க..." என வாசு கேட்க.
"வாசு உனக்கு உண்மையாவே மாமா மேல பாசம் இருக்கா இல்ல சும்மா மாமா மேல பாசம் இருக்க மாதிரி நடிச்சிட்டு இருக்கியா...?" என கேட்க.
"என்னடி இப்படி கேட்டுட்ட அவன்னா எனக்கு உசுருடி...." என்க.
"அப்ப உன் பொண்டாட்டி..." என அவள் கேட்க.
"அவளும்தான்..." என்றான் அவன்.
சுசிலாவோ "இப்ப இது ரொம்ப முக்கியம்டி நீ ஏதோ பேச வந்தியே அது என்னென்னு சொல்லு..." என்க.
"உன் பொண்டாட்டி சாமர்த்தியமா பேச்ச மாத்தறளாம்டா..." என்றாள் அருவி அவள் பங்கிற்கு.
"ஏய் அவ கேக்கறதுல என்னடி தப்பு நீ ஏதோ பொடி வச்சு பேசறேன்னு தெரியுது என்னென்னு சொல்லு..." என்க.
"உனக்கு உண்மையான அன்பு மாமா மேல இருந்து இருந்தா மாமாவுக்கு ஏதோ பிரச்சனைன்னு நினைச்சு இருப்ப வாசு இப்படி அவர விட்டுட்டு போக நினைக்க மாட்ட..." என்க.
சுந்தருக்கும் அவளது வார்த்தை சுருக்கென தைத்தது.
அனைவரும் அமைதியாக சுசிலாதான் முதலில் பேசினாள்.
"ஆமா... அருவி சொல்றது சரிதான்... ஏன் சின்னய்யா... மாமா இதுவரைக்கும் உங்களய என்னைக்காவது திட்டி பேசி இருப்பாரா... இல்ல பெரியவங்களதான் பிரிச்சு பார்த்து பேசி இருப்பாரா... அதும் அத்தையதான் அம்மா அம்மான்னு சுத்திட்டு இருப்பாரு... ஊருக்கு வந்தா பத்மா அத்தை மடியில கதை பேசி நாமளே எத்தனை நாள் பார்த்து இருப்போம்... இப்ப திடீர்னு நம்ம எல்லோரையும் எடுத்து எறிஞ்சு பேசறாருன்னா... அதுக்கு பின்னாடி பெருசா ஏதாச்சும் காரணம் இருக்குன்னு ஏன் உங்க யாருக்கும் தோணாம போச்சு... அது அவரால சரி பண்ண முடியாத பிரச்சனையா கூட இருக்கலாம் இல்லையா..." என சுசிலா கேட்க.
வாசு ஓடி வந்து அவளை கட்டிக் கொண்டான்...