Total Views: 226
(இந்த கதையில் வருவது சில உண்மைகளை மையப்படுத்தி எனது கற்பனையில் எழுதியது. தனிபட்ட எந்த நபரையும் கிராமங்களையும் நான் குறிப்பிடவில்லை )
இருள் சூழ காத்திருக்கும் அந்தி சாயும் நேரம் தன் மிதிவண்டியை வேகமாக அழுத்தி அந்த ஊர் எல்லையை அடைந்தார் போஸ்ட் மாஸ்டர். அதன் பிறகே அவருக்கு நிம்மதி மூச்சு வந்தது.
"நல்ல வேளை இருட்டுறதுக்குள்ள ஊர் எல்லைய விட்டு வெளிய வந்தாச்சு!" என்று வாய்விட்டே புலம்பியவர் திரும்பி நின்று தான் வந்த பாதையை பார்த்தார்.
ஊரே அமைதியாக இருந்தது. மாலை ஆறு மணி தான் ஆக இருந்தது. இருப்பினும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி போய் இருந்தது.
அப்பொழுது தான் கவனித்தார் பையில் இருந்த கடிதத்தை. "அடடா! இந்த கடுதாசிய குடுக்க மறந்துட்டோமே!"
"காலையில கொடுக்கலாம்னா அந்த வாயாடி நேத்தே ஏன் கொடுக்கலனு வாய்க்கா சண்டைக்கு வருவாளே! என்ன பண்றது? வேகமா போய் குடுத்துட்டு வந்துருவமா?"
"அய்யையோ! இருட்டிருமே! பயமா இருக்கே... கடவுளே என்ன பண்ணுவேன்?” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
அவரின் கண்ணில் பட்டான் அந்த வாலிபன். அவரை தாண்டி ஊரின் எல்லைக்குள் வேகமாக சென்றுக் கொண்டிருந்தவனை இடை நிறுத்தினார்.
அவனோ பயத்தில் வெளவெளத்துப் போய், "யோவ் விடுயா! இருட்டுறதுக்குள்ள வீட்டுக்குள்ள போகனும்" என்று கத்தினான்.
"தம்பி! தம்பி! இந்த லெட்டர எப்படியாவது நான் சொல்றவங்ககிட்ட கொடுத்துருப்பா!"
அவனோ அவர் கையில் இருந்து தன் கையை விடுவிப்பதிலே குறியாக இருந்தான். லெட்டரை வாங்காமல் விடமாட்டார் என்பதை புரிந்துக் கொண்டவன் "சரி குடுங்க! யார்கிட்ட குடுக்கனும்?" என்றான்.
அவர் விவரம் சொல்லவும் அதை வாங்கிக் கொண்டு ஊருக்குள் ஓடி மறைந்தான்.
அவன் ஓடியதும் போஸ்ட் மாஸ்டரும் நொடியும் தாமதிக்காமல் வெளி ஊருக்கு செல்லும் தன் பாதையை நோக்கி சென்றுவிட்டார்.
புலர்ந்தும் புலரா அதிகாலை வேளை அந்த கிராமமே இரவு இருந்ததற்கு எதிர்மாறாக மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.
அதிகாலையிலே மக்கள் தங்கள் பணிகளுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர். விவசாயம் தான் அவ்வூரின் பிரதான தொழில்.
காணும் திசை எங்கும் பச்சை பசேலேன்று காணப்படும். சிறிய சிறிய வீடுகள் குறுகிய சந்துகள் வளைந்து நெளிந்த பாதை என அழகிய கிராமம்.
பெண்கள் அக்காலை வேளையில் தங்கள் வீட்டின் வாயிலில் அழகழகாக கோலமிட்டுக் கொண்டிருந்தனர்.
அதிகாலை பறவைகள் சத்தம், வாயிலில் தண்ணீர் தெளிக்கும் பொழுது ஏற்படும் நீரின் சலசலப்பு, நீர் பட்டதால் அம்மண்ணிலிருந்து வெளிவரும் வாசம் என ரம்மியமான காலை பொழுதை கலைக்கவே கேட்டது அவளின் குரல்.
"தள்ளுங்க..... தள்ளுங்க ....." என்று கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்களுக்கு இடையே புகுந்து ஓடினாள் அவள்.
கோலம் இட்ட பெண்கள் அரக்கபறக்க எழுந்து ஒதுங்கி நின்றனர். சில நடுத்தர வயது பெண்கள் 'பொண்ணா இவ!' என்று திட்ட சில இளவயது பெண்கள் சிரிப்புடன் அவளைப் பார்த்தனர்.
தான் கட்டியிருந்த தாவணியை தூக்கி இடுப்பில் சொருகி கொழுசு ஒலி சலசலக்க தன் மருதாணி இட்ட காலால் கோலங்களை மிதித்திடாமல் தாண்டி தாண்டி சென்று கொண்டிருந்தாள்.
அந்த குறுகிய தெருவின் முடிவை அடையும் பொழுது வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி அவளின் ஓட்டத்தை நிறுத்தும் விதமாக
"அடியே மதுவந்தி! இவ்வளவு வெல்லனையா எங்கன ஓடுற?"
"ம்! கனி மாமாவ பார்க்க!"
"அடியாத்தி! மாமன பாக்க தான் இந்த ஓட்டம் ஓடுறியா?"
"ஏய் கிழவி! உங்கிட்ட வெட்டி பேச்சு பேச எனக்கு நேரமில்லை நான் வந்து உங்கிட்ட பேசுறேன்" என்று கத்திக் கொண்டே சிட்டாக பறந்துவிட்டாள்.
அந்த ஊரின் அரண்மனை ஒத்த பெரிய மாடி வீட்டின் முன் வந்து நின்றவள்
"மாமா.... மாமா...." என்று கத்த ஆரம்பித்தாள்.
உள்ளே இருந்து எட்டி பார்த்தார் அந்த வீட்டின் தலைவி சித்ரா.
"என்னடி இவ்வளவு வெல்லன வந்து சேவலுக்கு பதிலா நீ கூவிட்டு இருக்குற?"
"ம்... என்ன அத்தை நக்கலா!"
"உங்கிட்ட நக்கல் பண்ண முடியுமா ஆத்தா!"
"ஆ... அந்த பயம் இருக்கட்டும்!"
"அடிகழுத!" என அவர் அவளை அடிக்க முன் வர அவளோ அவருக்கு போக்கு காட்டி ஏமாற்றி வீட்டிற்குள் நுழைந்துவிட்டாள்.
சிறு சிரிப்புடன் அவளை பின் தொடர்ந்து உள்ளே சென்றார் சித்ரா. உள்ளே நுழைந்தவரிடம் "மாமா எங்க அத்தை?" என்று கேட்டு மீண்டும் பரபரத்தாள்.
"அட பொறுடி முதல உக்காரு காபி கொண்டு வரேன்"
அவரது பேச்சைக் கேட்காமல் அவளது மாமனின் அறை நோக்கி ஓடினாள்.
"மாமா..... மாமா.... "
அறை முழுவதும் தேடியவள் அவனை காணாமல் கீழ் இறங்கி வந்தாள்.
"அத்தை! மாமா எங்க? எவ்ளோ நேரமா தேடுறேன் பதில் சொல்றீங்களா நீங்க? "
"என்ன எங்கடி சொல்லவிட்ட!"
"சரி இப்போ சொல்லுங்க"
"அவன் காலையிலேயே வயலுக்கு போய்ட்டான். சரி சாப்பாடு செஞ்சுட்டேன் வாங்கிட்டு போடி" என்று கூறி சமையல் அறையில் நுழைந்து கொண்டே திரும்ப அவளை காணவில்லை.
அவள் தான் அவர் வயல் என்று ஆரம்பிக்கும் பொழுதே இடத்தை காலி செய்துவிட்டாளே!
அழகிய வயல் வெளியின் மேட்டில் நின்று கொண்டு அருகில் இருப்பவருடன் பேசிக் கொண்டிருந்தான் அவன் கனியின்பன்.
அவனுடன் பேசிக் கொண்டிருந்தவர் அவனது பேச்சைக் கேட்காமல் அவனது பின்புறம் பார்வையை செலுத்தியிருந்தார்.
தான் கேட்ட கேள்விக்கு பதில் வாரமல் போக அவரது முகம் பார்க்க அப்பொழுது தான் கவனித்தான் அவரது கவனம் தன்னிடம் இல்லை என்பதை. அவரின் பார்வை செல்லும் திசையை பார்க்க அவனது முறை பெண் மதுவந்தி வரப்பில் ஓடிவந்து கொண்டிருந்தாள்.
"என்னத்துக்கு இவ இப்படி ஓடி வாரா"
"மா...மா.... மா..மா.... "
"என்னடி? ம்ப்ச்! முதல மூச்சு வாங்கி முடி அதுக்கப்புறம் சொல்லு"
தன் கையில் இருந்த லெட்டரை அவன் முன் ஆட்டிக் காண்பித்தாள்.
அதை பார்த்ததும் ஓரளவு யூகித்துவிட்டான். இருப்பினும் தன் மனதில் இருப்பதையே சொல்ல வேண்டும் என ஆயிரம் முறை வேண்டிக் கொண்டே அவளது முகத்தை கூர்ந்து பார்த்தான்.
"மா.. மா... நா...ம எதிர்.. பார்த்த லெ..ட்டர்.. "என்று மூச்சு வாங்கி கொண்டே கூற
"என்ன! ஹே.. ஹூ" என்று கத்திக் கொண்டே அவளை தூக்கிச் சுற்றினான்.
அருகில் இருந்தவர் வாயை பிளந்துவிட்டார்.
‘சின்னையா, சின்னம்மாகிட்ட மட்டும் தான் நல்ல பேசுறாரு சிரிக்குறாரு. இந்த மாதிரி சமயத்துல இவர் சிரிக்கிறத பார்த்தா தான் உண்டு’ என்று தனக்குள் பேசிக் கொண்டவர் அவர்களை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரம் உலகின் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தளம். இதை காதல் நகரம் என்று கூட சொல்லலாம்.
ஈபில் டவரை ஒட்டிய நதி தான் செயின் ரிவர். அழகான அமைதியான நதி.
போட்(Boat) சவாரிக்கான டிக்கெட் கவுண்டரில் நின்று தனக்கான டிக்கெட்டை வாங்கி கொண்டிருந்தாள் அவள்.
டிக்கெட்டை கையில் பெற்றவுடன் வேக நடையுடன் போட்டை நோக்கிச் சென்றாள்.
அவளின் பின்னோடு வந்தவனோ "கௌதமி நில்லு! நானும் வரேன்!" என்று கத்திக் கொண்டே ஓடிவந்தான்.
அவள் அவன் பேச்சிற்கு செவி சாய்க்காமல் சென்று கொண்டே இருக்க சலிப்புடன் டிக்கெட் கவுண்டர்க்கு சென்று தனக்கான டிக்கெட்டை வாங்கி கொண்டு அவனும் போட்டை நோக்கி சென்றான்.
உள்ளே சென்று அவளை தேடினான். தரை தளம் முழுவதும் தேடியும் கிடைக்காததால் மேல் தளத்திற்கு சென்றான். பார்வையை நாலாபுறமும் சுழற்றினான்.
"பிரணவ்!" என அவள் குரல் காதில் வந்து பாய குரல் வந்த திசையில் திரும்பி அவள் இருக்கும் இடம் நோக்கி முறைத்துக் கொண்டே சென்றான்.
தொடரும்..