இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காலங்கள் தாண்டி காத்திருப்பேன் 2 அனைத்து பாகங்கள் படிக்க
By மிதாலி விஜி Published on 05-12-2024

Total Views: 125

அத்தியாயம்  2


தன்னை முறைத்து பார்த்துக் கொண்டிருந்த பிரணவ்வை அவள் கண்டு கொள்வதாக இல்லை.

"ஏய்! நான் முறச்சு பாக்குறேன்ல எதாவது ரெஸ்பான்ஸ் பண்றியா?"

அவளிடம் மீண்டும் மௌனம்.

"ம்ப்ச்! இப்போ என்ன ஆச்சுனு இப்படி உக்காந்து இருக்க? மாமாகிட்ட பேசினதுல இருந்து உன்னோட முகமே சரி இல்ல"

அவன் புறம் திரும்பியவள் அவனை சோகமாக பார்த்துவிட்டு அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.

அவள் சோகமாகவோ குழப்பமாகவோ இருக்கும் போது மட்டுமே இவ்வாறு நடந்துக் கொள்வாள்.

அதனால் தன் கோபத்தை கைவிட்டுவிட்டு அமைதி ஆகினான்.

அமைதி சற்று நேரத்திற்கு நீடித்துக் கொண்டே இருந்தது. போட்டும் அமைதியாக அந்த செயின் நதியில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்கு பின் தன் மௌனம் கலைந்தாள்.

"அப்பா இந்தியா வர சொல்றாரு பிரணவ்!"

இந்தியா என்றதும் உற்சாகமான பிரணவ்,  "வாவ்! அப்போ நீயும் இந்தியா போறியா?"

"வெயிட்...  வெயிட்...  நீயுமானா? அப்போ நீ இந்தியா போறியா?"

"ஆமா கௌதமி நான் சொல்ல மறந்துட்டேன்.  இன்னைக்கு நைட் பிளைட்"

"என்ன திடீர்னு?"

"ரொம்ப நாளா பிளான் பண்ணியது தான்"

"சரி எங்க அப்பா கேட்டா எனக்கு நிறைய வேலை இருக்கு இப்போதைக்கு வரமுடியாதுனு சொல்லிரு"

"இந்தியாக்கு போறேன் சொன்னேன்.  வீட்டுக்கு போறேனு சொல்லலையே!"

"அப்போ எங்கடா போற?"

"சொல்ல முடியாது போடி!" என்று அவளிடம் பழிப்பு காட்டிவிட்டு அவளை விட்டு எழுந்து ஓடினான்.

போட் நின்றிருப்பதை அப்பொழுது தான் கவனித்தாள். உடனே தானும் கத்திக் கொண்டே அவள் பின் ஓடினான்.

"பிரணவ்! சொல்லிட்டு போடா!"

மதுவந்தி, "மாமா! கீழ விழுந்துற போறேன் இறக்கி விடு."

அவளை இறக்கி விட்டவன் அவளது கையில் இருந்த லெட்டரை பறித்துக் கொண்டு கரை ஓரம் இருந்த மரத்தை நோக்கி ஓடினான்.

"ஏய்! மாமா நில்லு!" என்று இவளும் பின்னேயே ஓட அவர்களை பார்த்துக் கொண்டிருந்த நபரும் சிரித்துக் கொண்டே அந்த இடத்தை காலி செய்தார்.

மரத்தின் அடியில் அமர்ந்தவன் வேகமாக லெட்டரை பிரிக்க ஆரம்பித்தான்.

அவன் பின் ஓடி வந்தவளும் அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

"மாமா! எனக்கும் காட்டு!"

இருவருக்கும் பொதுவில் வைத்து அதை படிக்க ஆரம்பித்தனர்.

'என் ஆருயிர் செல்லங்களுக்கு

எப்படி இருக்கிங்க? நான் நல்லா இருக்கேன். ஒரு சந்தோசமான விஷயம் சொல்ல போறேன்.

போன முறை எழுதுன கடிதத்துல அடுத்த முறை கடிதம் எழுதுனா என்னோட வருகை முக்கிய பதிவா இருக்கும்னு நான் சொல்லியிருந்தேன்.

முகத்துக்கு முன்ன கொண்டுவந்த லெட்டர பின்னாடி கொண்டு போடா! அந்த வாயாடி எட்டிக்கிட்டு பாக்குறா பாரு!'      என எழுதி இருக்க திரும்பி பார்த்தான் கனி.  மது எட்டி வந்துதான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"மாமா! லெட்டர உம்முகத்துக்கு நேரா வச்சா எனக்கு எப்படி தெரியும்?" என்று கேட்டாள்.

கலகலவென சிரித்தவனின் கையில் இருந்த லெட்டரை வாங்கி படித்தவள் அதில் எழுதி இருந்ததை பார்த்து அவளும் வாய்விட்டு சிரித்தாள்.

பின் இருவரும் சிரித்து முடித்து மீண்டும் படிக்க ஆரம்பித்தனர்.

'என்ன இரண்டு பேரும் சிரிச்சு முடுச்சாச்சா? சரி....  சரி...  கேளுங்க மச்சிஸ் நான் ஊருக்கு வரேன்.

இந்த லெட்டர் உங்க கைக்கு கிடைச்சு சரியா இரண்டாவது நாள் உங்க முன்னாடி இருப்பேன்.

சரி சீக்கிரம் போய் எனக்கு புடுச்சது எல்லா ரெடி பண்ணுங்க...  சீக்கிரம்! பாய்! நேர்ல சந்திப்போம். '
என்பதோடு அந்த லெட்டர் முடிவடைந்து இருந்தது.

அதை படித்து முடித்த பிறகு இருவரின் முகத்திலும் அப்படி ஒரு சந்தோசம். லெட்டரில் குறிப்பிட்டு இருந்தது போல் பிடித்த வகைகளை தயார் செய்ய கிளம்பினர்.

பாரிஸில் இருந்து இந்தியா புறப்படும் விமானத்தினுள் அமர்ந்திருந்தான் பிரணவ்.

அவனது முகம் இறுகிபோய் இருந்தது.

"இப்போ  எதுக்குடா மூஞ்ச தூக்கி வச்சு உட்காந்து இருக்க?" என்று கேட்டாள் அருகில் அமர்ந்து இருந்த கௌதமி.

"பின்ன மார்னிங்ல இருந்து கேக்குறேன் என்ன பிரச்சனைனு எதாவது சொல்றியா?"

"ஓ! அதுக்குதான் குரங்கு மாதிரி மூஞ்ச தூக்கி வச்சுருந்தியா?" என்று கேட்டவள் காலை தனது தந்தை மோகனிடம் இருந்து வந்த அழைப்பை பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.

கௌதமி, "அப்பா! பிளீஸ் என்னால இப்ப வரமுடியாது!"

மோகன், "அதுதான் ஏன்னு கேக்குறேன்? பாப்பா எனக்கு அப்புறம் நீ தான் எல்லாத்தையும் பாத்துக்கன்னும். அது தான் என்னோட ஆசை!"

"என்னால உங்களோட அரசியல் வாரிசா இருக்க முடியாது. என்ன அந்த உலகத்துக்குள்ள இழுக்காதிங்க பிளீஸ்!"

"பாப்பா! நான் சொல்றத கேளு!"

"அப்பா! இதுக்கு மேல என்ன கம்பல் பண்ணுனா அப்புறம் யாரும் தேடி வர முடியாத தூரத்துக்கு போயிடுவேன்"

"பாப்பா! என்னடா இப்படி பேசுற?"

மேற்கொண்டு அவரை பேச விடாமல் காலை கட் செய்து மொபைலை சுவிட்ச் ஆப் செய்தாள்.

இவை அனைத்தையும் சொல்லி முடித்ததும் பிரணவ்வின் முகம் நோக்கினாள்.

அவனோ குழப்பமாக அவளை ஏறிட்டான்.

"என்னாச்சுடா?  என்ன யோசிக்குற?"

"இல்ல எலக்சனுக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கே! மாமா எதுக்காக இப்பவே உன்ன கூப்பிடனும்?"

"இப்போவே அவரோட சேர்ந்து கட்சி விஷயமா அலையனுமாம் அப்ப தான் மக்கள் மனசுல என்னோட முகம் பதிவாகுமாம்"

"ஓ!"

"என்ன ஓ? இதோ பாரு! எங்க அம்மாவோ உங்க அம்மாவோ உன்ன பிரைன் வாஷ் பண்ண டிரை பண்ணுவாங்க சிக்கிறாத!"

"ம்.. ம்... "

"சரி....  நீ  இன்னும் நம்ம எங்க போறோம்னு சொல்லவே இல்லையே?"

"அது...  என்னோட பிரண்ட்ஸ் பாக்க போறோம். ஆனா உனக்கு அவங்கள தெரியாது! "

"யாருடா அது?  எனக்கு தெரியாம உனக்கு பிரண்ட்ஸ்!"

"சொல்றேன்! சொல்றேன்!" என்று அவனது நண்பர்களை பற்றி சொல்ல ஆரம்பித்தான்.

ஆறு மணிக்கெல்லாம் ஆள் நடமாட்டம் இன்றி அடங்கி போனது அந்த கிராமம்.

ஒரு வீட்டின் உள் இருந்த சிறுவன் ஒருவன் தன் கையில் உள்ள பந்தை வீட்டின் உள் சுவற்றில் அடித்து விளையாடிக் கொண்டிருந்தான். 

அப்பொழுது அவனது அதிக விசையினால் பந்து சுவற்றில் வேகமாக மோதி வீட்டை விட்டு வெளியே விழுந்தது.

கதவு பூட்டியே இருந்தது. ஆனால் ஒரு சிறுவன் சென்று வரக்கூடிய அளவு இருந்த அந்த வீட்டின் சன்னல் திறந்து இருந்ததில் அதன் வழியாக வெளியே சென்று விட சிறுவனும் சன்னல் அருகில் சென்று பார்த்தான்.

பின் திரும்பி வீட்டின் உள் பார்க்க தந்தை அறையில் படுத்து இருந்தார். தாய் சமையல் அறையில் இருந்தார். மெதுவாக சன்னலின் வழியாக வெளியே சென்றான் அவன்.

பந்து சற்றுத் தொலைவில் சென்று விழுந்திருக்க ஓடிச் சென்று குனிந்து எடுத்தான்.  பந்து எடுத்து நிமிர்ந்தவனின் முன் கொழுசு அணிந்த கால்கள் தெரிந்தது.

நன்றாக நிமிர்ந்து பார்த்தான் அழகிய பெண் ஒருத்தி நின்றிருந்தாள். அவளை பார்த்து அவன் சிரிக்க அவளும் அவன் உயரத்திற்கு கீழே குனிந்து "இந்த நேரத்தில வெளிய வரக் கூடாது தங்கம்" என்றாள்.

"ஆனா...  அக்கா..  என்னோட பந்து... " என்று சொல்லிக் கொண்டே இருந்தவன் அவள் பின்புறம் பார்வையை திருப்பி பார்த்துவிட்டு மீண்டும் அவளை பார்த்தான்.

இதுபோல் மாறி மாறி பார்க்க அந்த பெண் முகத்தில் பதட்டம் குடி கொண்டது.


"தம்பி சீக்கிரம் வீட்டுக்குள்ள போ!"

"அக்கா! அங்க உங்கள மாதிரியே ஒருத்தவங்க இருக்காங்க"

"உள்ள போனு சொல்றேன்ல போ!" என்று ஆக்ரோசமாக கத்த பயந்து போன சிறுவன் வீட்டை நோக்கி ஓடினான்.

"நந்து! சாப்பிட வா!"  என்று அந்த சிறுவனின் தாய் அவனை அழைத்தபடி சமையல் அறையில் இருந்து வெளிவந்தார்.

அங்கே சுவரின் ஓரம் நின்று இருந்த சிறுவனை பார்த்து அதிர்ச்சி ஆனார்.

"டேய்! இப்போ எதுக்குடா வேற டிரஸ் மாத்துன?" அந்த சிறுவனோ பதில் சொல்லாமல் அவரையே பார்த்துக் கொண்டிருக்க "பதில் சொல்லுடா! எத்தனை டிரஸ் மாத்துவ?" என்று கேட்டார் அப்பொழுது சன்னலின் புறம் சத்தம் கேட்கவும் அங்கே திரும்பி பார்க்க சன்னலின் வழியாக அந்த சிறுவன் உள் நுழைய முயன்று கொண்டிருந்தான்.

அதைப் பார்த்து பயங்கர அதிர்ச்சிக்கு உள்ளாகினார் அந்த பெண்மணி.

ஏற்கனவே பயத்தில் இருந்த சிறுவனோ தாயிடம் ஓடிச் சென்று கால்களை கட்டிக் கொண்டான்.  தன்னை கட்டிபிடித்துக் கொண்டிருந்த மகனை ஒரு கையால் பற்றிக் கொண்டே சுவரை நோக்கி பார்வையை திருப்பினாள்.

அங்கே இருந்த சிறுவன் இன்னமும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். எங்கே தான் கத்தினால் மகன் பயந்து விடுவானோ என்று பயந்த பெண்மணி சத்தமிடாமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க அந்த சிறுவனின் உருவம் மெது மெதுவாக மறைந்தது.

வேகமாக ஓடிச் சென்று சன்னலை சாற்றியவள் மகனை தூக்கிக் கொண்டு கணவன் படுத்து இருந்த அறை நோக்கிச் சென்றாள். குழந்தையை கணவனின் அருகில் விட்டவள் வேகமாக அறை கதவை சாற்றினாள்.

தாயை பார்த்துக் கொண்டிருந்த மகனோ,"எதுக்குமா கதவ சாத்துறீங்க?" என்று கேட்டான்.

அவளோ பதில் அளிக்காமல் எதையோ எண்ணி பயந்தவாறே நின்றிருந்தாள்.


தொடரும்



Leave a comment


Comments


Related Post