இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அன்பெனும் தீயா நீ 4 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 24-02-2025

Total Views: 128

அத்தியாயம் 4

கதவை அடைத்து சாத்தியவள் அதன்மீதே சாய்ந்து அமர்ந்து அழ ஆரம்பிக்க சற்றுநேரத்தில் மீண்டும் கதவு வேகமாக தட்ட ஒரு நிமிடம் பயந்தவள் என்ன நினைத்தாளோ கன்னத்தில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு ஒரு முடிவு எடுத்தவளாக எழுந்து நேராக சிறிதாக இருந்த அடுப்படிக்குள் நுழைந்து அரிவாள்மணையை கையில் எடுத்துக் கொண்டு வேகமாக கதவிற்கு அருகில் சென்று கதவை பட்டென திறக்க "ஐயோ பெருமானே..."என எதிர்ப்புறமாக வந்த குரலில் அதிர்ந்தவள் அப்படியே மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

"ஏன்டி...என்னடி இது கோலம் பெருமானே.. செத்த நேரம் நாங்க இல்ல அதுக்குள்ள இந்தக் குழந்தையை என்னெல்லாம் பண்ணி வச்சிருக்காங்க..."என அவள் அருகில் சென்றாள் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர்.

பார்த்ததும் தெரிந்து கொள்ளலாம் அவர் ஐயர்வீட்டு பெண்மணி என.

அவள் அருகில் அமர்ந்தவர் "ஐயோ... ஏய்... அன்பு நான் கேள்விப்பட்டது எல்லாம் உண்மையாடி...ஏண்ணா... என்ன அமைதியா நிக்குறேள் குழந்தை அழுதுட்டு இருக்கா நீங்க வேடிக்கை பார்த்துட்டு நிக்குறீங்களே..." என தன் கணவனையும் அழைக்க 

"நான் என்னத்தடி சொல்றது... நாமளும் எத்தன முறை நம்ம வீட்டுல வந்து தங்குன்னு சொல்றோம் கேக்கறாளா இவ இன்னைக்கு இந்த அசிங்கம்லாம் தேவையாடி....?" என கேட்க.

"அதுக்குன்னு இப்படித்தான் பேசுவிளோ செத்த சும்மா இருங்க நீ வாடி..." என கையில் எடுத்து வைத்திருந்த வயர் பையை எடுத்துக் கொண்டு அவளையும் கைத்தாங்கலாக எழுப்பியவர் "குழந்தை எங்கேடி தூங்கிட்டானா...?" என கேட்க.

அவளோ பதில் பேசாது இருந்தாள்.

அவள் முகத்தை துடைத்துவிட்டவர் "முகம் அலம்பிட்டு வந்து சாப்பிடு..." என்க.

"எனக்கு பசிக்கல மாமி..." என்றாள் அவள்.

"ஆயிரம் பிரச்சனை இருக்கட்டும்டி குழந்தே வயித்த காயப்போடாத உனக்காக இல்லனாலும் பையனுக்காக வாழனும்தான இல்ல அப்பன் இல்லாத பையனா அவன் வளர்ற மாதிரி அவன அம்மா இல்லாமையும் வளர்க்க போறியா என்ன...?" என கேட்க.

"மாமி..." என கத்தியேவிட்டாள் அன்பு.

"மாமி சொல்றதுல என்ன தப்புங்கிறேன் உனக்கு நாங்க எத்தனையோ முறை சொல்லியாச்சு தனியா இருக்க வேணாம்னு ஆனா அம்மா அப்பா வாழ்ந்த வீடு இதவிட்டு வரமாட்டேன்னு பிடிவாதமா இருக்க ஆனா இங்க உனக்கு பாதுகாப்பு இல்லன்னு சொன்னா நீ எங்க கேக்கற இது உன் சொந்த வீடா இருந்தா கூட பரவால்ல இப்ப இந்த வீடும் உன் கையவிட்டு போச்சு நீ இங்க இருந்து வரமாட்டேன்னு அடம்பிடிச்சிண்டு இருக்க..." என்க.

அவளோ அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

மாமியோ அவள் கையை பிடித்து "முதல்ல சாப்புடு அப்பறமா பேசிக்கலாம்..." என்க.

"அம்மா..."என்ற குரல் குழறலாக கேட்டது.

"இதோ வந்துட்டேன் தங்கம்..." என்றபடி அவன் அருகில் ஓடினாள்.

அதுவரை அழுது ஓய்ந்து போய் இருந்தவளா இவள் என பெரியவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

மகனை கையோடு தூக்கி வந்தவள் அவர்கள் அருகில் அமர அவனை கையில் வாங்க பங்கஜம் மாமி கைநீட்ட அவனோ அரை தூக்க கலக்கத்திலும் அவள் அன்னையின் கழுத்தை இறுக்கி பிடித்து கொண்டான்.

கொண்டு வந்திருந்த இட்லியை பருப்பு சாம்பாரில் நன்றாக குழைத்து அவனுக்கு ஊட்ட அன்னையை பார்த்தான் அந்த நான்கரை வயது பாலகன்.

அவள் தலை லேசாக ஆட்ட பங்கஜம் மாமியிடம் தன் வாயை திறந்து காட்ட "ஆனாலும் உன் பையன் ரொம்ப மோசம்டி நான் என்னமோ வேத்து மனுஷி மாதிரி உங்கிட்ட கேட்டுட்டு சாப்பிடறான் பாரேன்..."என்க.

"அவன் அப்படியே வளந்துட்டான் மாமி..."என்றாள்.

"உன் ஆம்படையான் நல்லா நெடு நெடுன்னு இருப்பான்னு நினைக்கிறேன் அதான் உன் பையனும் கைக்கால் எல்லாம் நீள நீளமா இருக்கு நல்லா ஓங்கு தாங்கா இருப்பான் போல அதான் நம்ம குட்டி கண்ணனும் பாக்க ஒல்லியா இருந்தாலும் கைக்கால் எலும்பு எல்லாம் நல்லா ஊட்டமாவே இருக்கு நல்லா வளருவான் பாரு குழந்தை உன் ஜாடை கொஞ்சம் கூட இல்ல கலர தவிர..." என்க.

அவரின் வார்த்தையை கேட்டதும் அவள் முகம் கூம்பி போனது.

அன்புவிற்கு கணவனின்  நீளமான திடமான  கைகளில் தினமும் அவன் உடற்பயிற்சி செய்யும் தொங்கியதும் அதை வைத்தே அவளிடம் தினமும் அவன் சரசமாடியதும் நினைவில் வர தானாகவே கண்களில் நீர் சுரந்தது.

அவளின் முகம் வாடியதை கண்ட நீலகண்டன்.

"பங்கஜா...அவ மனசு நோகற மாதிரி பேசாதன்னு எத்தன தடவ சொல்றது புள்ள மூஞ்சி வாடிப்போய்டுச்சு பாரு..." என்றார் நீலகண்டன்.

அன்புவின் தந்தை ரகுராமும் நீலகண்டனும் பால்ய கால நண்பர்கள்.

அன்புவின் பெற்றோர் இறந்து விட கணவனும் கைவிட்ட நிலையில் அன்பு இவர்களின் ஆதரவைத்தான் தேடி வந்தாள்.

மூன்று மாத கருவை தாங்கி வந்தவளை தாங்கி பிடித்தனர் நீலகண்டனும் பங்கஜமும்.

அவர்களுக்கும் ஒரு மகன் உண்டு.

சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்யும் அவர்களது மகன் மதனகோபாலனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னரே திருமணம் ஆன நிலையிலும் குழந்தை இல்லாது இருக்க இப்போதுதான் மாட்டுப்பெண் உண்டான செய்தி கேட்டு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சென்னை சென்றனர்.

இன்று மாலைதான் இருவரும் வந்து இறங்க அக்கம் பக்கத்து வீட்டு பெண்கள் தகவல் தெரிவித்ததும் ஓடி வந்தனர்.

மகனுக்கு ஊட்டியவள் தன் முந்தானையால் அவன் வாயை துடைத்துவிட்டு அவளுக்கு இரண்டு இட்லிகளை போட்டவள் கொஞ்சமாக குழம்பை ஊற்றி உண்ண ஆரம்பித்தாள். 

"சித்து குட்டி...கண்ணா...அம்மா சாப்பிடட்டும் நீ பாட்டி கைக்கு வாடா கண்ணா..." என இருகரம் கூப்பி அவர் அழைக்க முடியாது  என அவள் மார்போடு ஒட்டிக் கொண்டான் சித்து.

அதில் அவளால் உண்ண முடியாது போக அவளோ "விடுங்க மாமி..." என்றவள் அவனை ஒரு கையால் அணைத்து பிடித்தவாறே இன்னொரு கையால் உண்ண ஆரம்பித்தாள்.

பெரியவர்களின் பார்வை அர்த்தமாக பார்த்துக் கொண்டது.

இரண்டு இட்லிகளை உண்டு முடித்தவள் தட்டை எடுத்துக் கொண்டே எழ முற்பட "ஏய் என்னடியம்மா பன்ற நி உக்காரு நான் எடுத்துக்கறேன் மாமா உங்கிட்ட ஏதோ பேசனும்னு சொன்னாரு..." என்க.

அவளோ அவரை கேள்வியாக பார்த்தாள்.

"அது ஒன்னும் இல்ல அன்பு இங்க நடந்தது எல்லாத்தையும் கேள்விப்பட்டேன் எனக்கு ஒரு யோசனை தோணித்து அதான் உங்கிட்டயும் ஒரு வார்த்த கேக்கலாம்னு வந்தேன் ஆனா ஒரு விஷயம் மாமா என்ன பண்ணாலும் உன் நல்லதுக்குத்தான் பண்ணுவேன்னு நீ நம்பனும் உனக்கு விருப்பம் இல்லனா வேணாம்..." என பீடிகையோடு நிறுத்த. 

அவளோ "சொல்லுங்க மாமா..." என்றாள் அவள்.

"உனக்கே தெரியும் மதனோட பொண்டாட்டி பூரணி ரெண்டு வருஷம் கழிச்சு இப்பதான் உண்டாகியிருக்கா டாக்டர் அவள ரொம்ப பத்திரமா இருக்க சொன்னாராம் வேலைலாம் அதிகம் செய்ய கூடாதுன்னு சொல்லி இருக்காராம் அவ கர்ப்பப்பை வீக்கா இருக்காம் மதனும் வேலை வேலைன்னு அலைஞ்சு அவகூட இருக்க மாட்டேன்றான் நீ அவளுக்கு தொணையா மெட்ராசுல கொஞ்ச நாளைக்கு இரேன் மதனும் ரொம்ப சந்தோஷப்படுவான் பூரணி கூட உன்ன ஏன் கூட்டிட்டு வரலன்னு எங்கக்கிட்ட சண்டை போட்டா நீ என்னமா சொல்ற..." என கேட்க.

அவளோ அதிர்ந்து பார்த்தாள் அவர்களை.

அது அவள் வாழ்நாளில் மறக்க நினைக்கும் ஊர் அல்லவா...?

அவள் வாழ்க்கையே புரட்டி போட்ட ஊர் அல்லவா..?? 

அவள் அதிர்ச்சியாக அவர்களை பார்க்க.

மறுத்து பேசிவிடாதே என பெரியவர்கள் கண்களின் வழியே கெஞ்சி கொண்டு இருந்தனர்....



Leave a comment


Comments


Related Post