Total Views: 1423
அவன் மீதிருந்த கோவம் எங்கப் போனது?, அவன் தொட்டதும் உடல் பாகாக உருகுகிறது.அவன் மீது பயம் இருக்கிறது தான் ஆனால் முன்பு போல் இருக்கிறதா என்றால் அதுவும் கேள்வி குறி தான். எல்லாமே மாறி இருந்தது.
புதிதாக உருவாகி இருக்கும் பிரச்சனை உஷாவை என்ன செய்வது என்று தான் அவளுக்கு தெரியவில்லை.மனம் அவன் பக்கம் காந்தமாக இழுக்க, இன்னும் அவன் வாயால் எந்த தெளிவும் பெறாத விசயத்தை வைத்து அவன் பக்கம் சாயவும் பயமாக இருக்க.நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்டாள் நிலா.
“அவர் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, கண்டிப்பா அவரே ஒருநாள் எல்லாத்தையும் சொல்லுவாரு பார்ப்போம்” என துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வெளியே வந்தவளுக்கு, அவன் இன்னும் அறையை விட்டுப் போகாமல் இருக்கவும் சட்டென்று குளியறைக்குள் புகுந்து கதவை மூடிக் கொண்டாள்..
“நீங்க வெளியே போகலையா?”
“நான் எதுக்கு போகணும்?”
“நான் டிரஸ் மாத்தணும்”.
“மாத்திக்கோ”
“நீங்க இருக்கும் போது எப்படி.?” என்றாள் தயக்கத்துடன்
“நான் பார்க்க வேண்டியது தானே எல்லாமே”
“என்னத்தை.....?” என வேகமாக நிலாவின் குரல் வர.
“ஓவரா பன்றாளே.. இங்கப் பாருடி”
“நீங்க போனாதான் நான் பார்ப்பேன்.”
“முழுசா பார்க்கற அன்னிக்கு உனக்கு இருக்குடி?”என முனவிக் கொண்டே வெளியேச் சென்றுவிட்டான்.
அவன் போய்விட்டான் என்பதை உறுதி செய்துக் கொண்டப் பின்பு தான் வெளியே வந்தாள்.
வேக வேகமாக ரவிக்கையையும் பாவாடையையும் அணிந்துக் கொண்டு, மேலே நைட்டியை எடுத்துப் போட்டவள்.. புடவையை எடுத்துக் கொண்டு பக்கத்து அறைக்கு ஓடினாள்.
“அத்தை நான் வந்துட்டேன் வாங்க.”
“ஏம்மா நான் போன் பண்ணி ஒருமணி நேரமாகுது. ஏற்கனவே இங்க ஆயா பயங்கர சத்தம் போட்டுட்டு இருக்கு ,இதுல நான் உனக்கு சேலைக் கட்டிவிட்டேன்னு தெரிஞ்சா இன்னும் சத்தம் அதிகமாக வரும் நிலா, உனக்கு தெரிஞ்சதை கட்டிட்டு வா, கீழே வந்ததும் நான் சரிப் பண்ணி விடறேன்”.
“அத்தை பொசுக்குன்னு இப்படி சொன்னா நான் என்ன பண்ண?. எனக்கு எதை எங்க சொருகனும் கூட தெரியாது.”
“இவ்வளவு வருசம் என்னடி பண்ணுன? ஷாலினியும் உன்னோட வளர்ந்தவ தானே, அவ எப்படி அழகா புடவை கட்டுறாள,”
“உங்க பொண்ணு எப்போடா கல்யாணம் ஆகும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தா, அதனால ஒவ்வொன்னையும் தேடி தேடி கத்துக்கிட்டா, நான் அப்படியா?, இரண்டு வாரத்துக்கு முன்னாடி வரைக்கும் ஜாலியா சுத்திட்டு இருந்தவளைப் புடிச்சி கல்யாணம் பண்ணி வெச்சிட்டு, புடவை கட்ட தெரியாதா? ஜாக்கெட் போடத் தெரியாதான்னு கேள்வி கேக்கறீங்க?”
“அடியே ஜாக்கெட்டும் போடத் தெரியாதுன்னு சொல்லிடாதடி. வெளியே சிரிச்சிடுவாங்க.”
“அதெல்லாம் தெரியும். நீங்க ஓவரா கலாய்க்காம வந்து புடவையைக் கட்டி விடுங்க.”
“இங்க உறவுக்காரங்க எல்லோரும் இருக்காங்கடி நீயேக் கட்டிட்டு வா” என அழைப்பைத் துண்டித்து விட்டார்.
“இந்த அத்தையோட ஒரே அக்கப்போரா போயிடுச்சி யார் என்ன சொன்னாலும் பராவாயில்ல போய் சுடிதார் போட்டுட்டுப் போக வேண்டியது தான்”, என்றவள் திரும்ப அவளது அறைக்கேப் போனாள்.
குளிக்க உடை எடுத்துக் கொண்டிருந்த நந்தன் நிலா நைட்டியோடு வந்து நிற்கவும். “என்னடி இன்னும் நீ கிளம்பலையா வெளியே ஆயா சத்தம் காதை கிழிக்குது, சீக்கிரம் போ” என்று குளிக்கப் போனவன், அவள் அப்படியே நிற்பதைப் பார்த்து “என்ன?” என்றான்.
“சேலைக் கட்டிட்டு தான் அத்தை கீழே வரணும்னு சொல்றாங்க”
“கட்டு”
“எனக்கு கட்.. கட்டத் தெரியாது”
“ஐ ....எனக்கு ஒரு வாய்ப்பை கடவுள் உருவாக்கி கொடுத்துட்டாரு போல..” என சிறு குழந்தைப் போல் மனம் துள்ளிக் குதித்தவாறே . அவளை நெருங்க, அவள் விலகிச் சென்று சுவற்றோடு ஒட்டி நின்றாள்.
“இப்போதான் காட்ட மாட்டேன்னு ஓடுன” என்றவாறே அவளது கையில் இருந்த புடவையை வாங்கினான்.
“நான் சுடிதாரேப் போட்டுக்கறேன்” .
“ஆயா கத்தும்”
“அதான் நீங்க இருக்கீங்களே” என வேகமாக வந்துவிட்டது வார்த்தைகள் அவன் துணையாக இருக்கும் போது யாருக்குப் பயப்படப் போகிறாள்..
அந்த வார்த்தை நந்தனை குளிர்விக்க.இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை விட மனம் இல்லாமல்
“என் பொண்டாட்டியை யாராவது ஏதாவது சொன்னா நான் கேப்பேன் தான். அதுக்கா சேலைக் கட்டக் கூடாதுன்னு இல்லை, எனக்கு கட்டத் தெரியும் வா”
“உங்களுக்கு எப்படி.?”
“பியூச்சருக்கு தேவைப்படும்னு கத்து வெச்சுக்க வேண்டியது தான். எல்லோரும் உன்னைய மாதிரியா இருப்பாங்க”. என்றவன் கை அவளது கன்னத்தைத் தொட.
“இன் இன்னொரு நாளு கட் கட்டி விடுங்களே.இப்போ நேரமாகிடுச்சு” என்றாள் அவன் தொடுகைக்கு உருக தயாராக இருக்கும் உடலை மறைத்துக் கொண்டு.
“ம்ம் சரி போய் சுடிப் போடு அதுக்குள்ள குளிச்சிட்டு வரேன்” என அவளை விட்டு நகர்ந்தவன்
“இன்னொரு கொத்து சொல்லுங்கன்னு கேட்டு வாங்கி திங்க தெரியுது, சேலைக் கட்ட மட்டும் தெரியாது” என அவளை வாரவும் மறக்கவில்லை.
நந்தன் குளித்துவிட்டு வருவதற்குள்,சுடிதார் அணிந்து, தலைமுடியை தளிரப் பின்னி நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து தயாரானவள் கழுத்தில் குட்டி செயின் ஒன்றை அணிந்துக் கொண்டிருந்தாள்.
மஞ்சளும் பச்சையும் கலந்த சுடிதாரில் கிளிப் போல் அழகாக இருந்தவளை அள்ளி அணைக்க கைகள் இரண்டும் பரப்பரத்தது. அதுக்கு வழி இல்லையென்றாலும் ஒரு முத்தத்ததுக்காகவாது வழி இருக்குமா? என குளித்துவிட்டு வந்த நந்தன் அவள் அருகில் செல்ல அதற்குள் மணியிடம் இருந்து அழைப்பு வந்துவிட்டது.
“அத்தை”
“இன்னும் என்னமா பண்ற?”
“கிளப்பிட்டேன் இதோ வரேன்”
“சேலை தானேக் கட்டிருக்க”
“இல்ல அத்தை”
“போச்சா!”
“நாளைக்குள்ள கட்ட பழகிக்கறேன் அத்தை, இன்னைக்கு விட்டுடுங்களேன்” என பாவமாக சொன்னவளை அதட்டவும் முடியவில்லை மணியால்.கல்யாணம் ஆன முதல் நாளே வீடு களோபரமாகும் என அவர் கனவாக் கண்டார்.
“சரி சீக்கிரம் வா”
“அவர் கிளம்பிட்டு இருக்காரு சேர்ந்து வரட்டுமா.?”
அவள் ஏன் அப்படி கேட்டாள் என நந்தனுக்கு தெரியும், ஆனால் மணிக்கோ, ‘ஒரே நாளில் நிலா இப்படி மாறிவிட்டாளே’ என ஒருப் பக்கம் சந்தோசமாக இருக்க, இன்னொருப் பக்கம் மகனின் குணத்தை நினைத்துப் பயமாக இருந்தது.
“சேர்ந்தே வாங்க” என அழைப்பைத் துண்டித்துவிட்டார்.
நந்தனுக்கு பயந்து அடுத்தவர்கள் பின்னால் ஒளிந்த காலம் மாறி,அடுத்தவர்களுக்கு பயந்து நந்தன் பின்னால் மறையும் காலம் வரும் என யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்.
அவளைப் பாத்துக்கொண்டே கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்தவன்.
“எனக்கு வேலை இருக்கு இப்போதைக்கு கீழேப் போற எண்ணமில்ல நீ போ”.என்றான்
“நான் மட்டுமா?”
“இதுக்குன்னு பத்துப்பேரையா கூட அனுப்ப முடியும் போடி” என்றவன் ஒரு பைலை எடுத்துக் கொண்டு படுக்கையில் அமர்ந்து விட்டான்.
“இவன் கூடப் போனா ஆயா பேச்சுல இருந்து தப்பிச்சிக்கலாம்னு பார்த்தா இவனும் காலை வாரிவிட்டுட்டான் ச்சை” என கையை பிசைந்துக் கொண்டு அவன் முகம் பார்த்து நின்றவள்.அவன் வருவது போல் தெரியவில்லை என்றதும் வேறு வழியின்றி கீழே இறங்கிச் சென்றாள்.
“வாம்மா.. தாயே உனக்கு இப்போ தான் விடிஞ்சிதா?”, என திரும்பியவர் அவள் சுடிதாரில் வந்திருப்பதைப் பார்த்து அவளின் அருகில் சென்று பல்லைக் கடித்தார்.
“என்னடி டிரஸ் இது?, சேலை ஏண்டி கட்டல? வந்த சொந்ததுக்கு முன்னாடி எங்களை அவமானப்படுத்தணும்னு முடிவு பண்ணி ஒவ்வொன்னையும் பண்றியா?”
“ஓ அப்படி ஒரு ட்ரிக் இருக்கா இப்படி செஞ்சும் இந்த கிழவியைப் பழி வாங்கிருக்கலாம், எனக்கு தெரியாம போய்டுச்சே, இப்போ மட்டும் என்ன இனி பண்ணிட வேண்டியது தான்” என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவள்
“எனக்கு சேலைக் கட்டத் தெரியாது ஆயா”. என்றாள்
“விளங்குச்சி, புள்ள வளர்த்துருக்காப் பாரு உன்னோட அம்மாக்காரி , பெரியவீங்கள மதிக்க தெரியல நேரங்காலமா எந்திரிக்க தெரியல, ஒரு சேலைக் கட்டத் தெரியல, என்ன புள்ளையோ , இவளா ஒரு பொண்ணு கட்டிட்டு வந்துருக்கான் பாரு” என கிருஷ்ணம்மாள் பல்லைக் கடித்துக் கொண்டு பேச. ராஜியைப் பற்றி பேசவும் கோவம் வந்துவிட்டது நிலாவிற்கு.
“என்னய்யப் பத்திப் பேசுங்க, எங்க அம்மாவைப் பத்தி பேசுனீங்க அப்புறம் அவ்வளவு தான்”.
“என்னடி பண்ணுவ. வகையும் தொகையுமா வளர்ந்த என்னோட பேத்தியே அடக்க ஒடுக்கமா குடும்ப பொண்ணா எல்லா வேலையும் பன்றா பஞ்சத்துல அடிபட்ட பரதேசி நாய்க்கு பவுசைப் பாரு, எல்லாம் என் பேரனை வளைச்சிப் போட்டுட்ட திமிரு. அந்த கொழுப்புல தானடி ஆடற, இனி என் முன்னால உன் குரல் ஒசந்துச்சி குர வலையை பிச்சி எறிஞ்சிடுவேன்” என அவளுக்கு மட்டும் கேக்கும் குரலில் சொன்னார்.
தன்னைப் பாருத்து பயந்து நடங்கியவள்,இன்று தன்னையே எதிர்த்து பேசவும், தாங்க முடியவில்லை கிருஷ்ணம்மாளால். பழைய நிலாவாக அவரின் காலுக்கு கீழ் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். காலம் மாறுகிறது.. காலம் மாறினால் அனைத்தும் மாறும் என புரியவில்லை அவருக்கு.
இரவு பகல் மாறி மாறி வருவது போல் மேலே இருப்பவர்கள் ஒருநாள் கீழே வரும் நிலையும் உருவாகும் அதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.
“என்ன ஆயா அவளை மிரட்டிட்டு இருக்க?” என அவர்கள் பின்னால் இருந்து நந்தன் கேக்க.. இவ்வளவு நேரம் முகத்தில் ருத்தரதாண்டாவம் ஆடிய கோவம் அனைத்தும் அடங்கி சாந்தமானவர்.
“அது ஒன்னுமில்லை ராசா. சொந்தக்காரங்க வந்துருக்கும் போது இப்படி குழாயை மாட்டிட்டு வந்து நின்னா அவங்க தப்பா பேச மாட்டாங்க, அதான் சொல்லிட்டு இருந்தேன்” என்றார்
‘உன்னை நான் அறிவேன்’ என்பது போல் பார்த்தவன், “அவளுக்கு எதுப் போடப் புடிக்குதோ அதையேப் போட்டுக்கட்டும் யாரும் எதுவும் சொல்ல வேண்டாம், ஏய் போய் காபி எடுத்துட்டு வாடி” என அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.
சமையலறைக்கு வந்தவளின் கண்கள் கலங்கி இருந்தது. “எப்படிலாம் பேசிட்டாங்க பஞ்சத்துல அடிபட்ட பரதேசிங்களா நாங்க?. தெரியுதுல நாங்க அப்படி தான்னு, அப்புறம் எதுக்கு பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்தாங்க?, இவங்களுக்கு தகுந்த இடத்துல பொண்ணு எடுத்துருக்க வேண்டியது தானே. நானா இங்க தான் மருமகளா வருவேன்னு அடம்பிடிச்சேன்” என கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்ப மணி அவளைப் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
“அத்தை.”
“அவங்களை இன்னைக்கு நேத்தாப் பார்க்கற, உன்னை முதல்ல கையில வாங்குனதே அத்தை தான். அவங்க பேசுனாங்கன்னு கண்ணுல தண்ணி விட்டுட்டு நிக்கற. “
“அதுக்குன்னு என்ன வேணாலும் பேசுவாங்களா..?உங்க பொண்ணும் நானும் ஒன்னு இல்லை தான். இன்னைக்கு எழலைன்னு சொல்றாங்களே இரண்டு நாளா நான் தூங்கவே இல்லையே அதை யோசிச்சிப் பார்த்தாங்களா?. எனக்கு என்ன அத்தை வயசாகுது? வயசுக்கு மீறின பாரத்தை எல்லோரும் என்மேல தூக்கி வெச்சா என்னால தூக்கி சுமக்க முடியலத்தை” என அவரைக் கட்டிக் கொண்டு அழுக ஆரம்பித்துவிட்டாள்.
வெளியே சிரிக்கிறாள் என்பதற்காக அவளுக்குள் வழியில்லை என்று அர்த்தமில்லை.
தாயும் தமையனும் பேசவில்லை, நண்பனின் விலகல் மரணவலியைக் கொடுக்கிறது. நம்பி கைப் பிடித்தவன் வாழ்க்கை முழுக்க வருவானா என்று தெரியாத இழிவான நிலை. யாரும் தன் பக்கம் இல்லையே என்ற மனக் குமறல். அனைத்தும் சேர்ந்து நிலாவை சோர்வாக்கியிருக்க. மணியிடம் கதறி விட்டாள்.
“எல்லா நாளும் இப்படி இருக்காது நிலா,
வாழ்க்கை மாறும் கண்டிப்பா, அந்த நம்பிக்கையில கடக்கப் பழகிக்கோ” என்றவர், இரண்டு டம்ளாரில் காபியை ஊற்றி அவள் கையில் கொடுத்து “கண்ணைத் துடைச்சிட்டு போ” என்றார்.
நிலாவும், தன்னை சரிச் செய்துக் கொண்டு நந்தனுக்கு காபியைக் கொண்டுப் போய் கொடுத்தாள்.
“பத்து மணிக்கு காபி குடிக்கிற நிலைமைக்கு கொண்டு வந்துட்டா, போக போக கண்ணுல சோத்தப் பார்க்க முடியுமோ, இல்லையான்னு தெரியல” என அதற்கும் கிருஷ்ணம்மாள் பேச.
நந்தன் நிலாவைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே காபி எடுத்துக் கொண்டான்.
இன்னொரு காபியை எடுத்துக் கொண்டு அவன் அருகில் அமர்ந்தால், அதற்கும் பேசும் என சமையலறை பாக்க நகரப் போனவளை,நந்தனின் குரல் நிறுத்தியது.
“இந்தக் காபியை யார் போட்டது?”
“அத்தை”
“நான் உன்னைய தான் போட்டு எடுத்துட்டு வர சொன்னேன்”.
“அது நாளையில இருந்து... “ என்று சொல்லும் போதே..காபியை அவள் தட்டில் வைத்தவன், “அப்போ நானும் நாளைக்கே காபிக் குடிச்சிக்கறேன்” என்றான்.
“ஏண்டி உனக்கு காபிக் கூடவா போடத் தெரியாது. உழைக்கற ஆம்பிள வயிறார தின்னா தானே சந்தோசமா உழைக்க முடியும். உன்றகிட்ட இருந்தா ஒரு வாய் சோத்துக்கு பஞ்சமாகிப் போய்டும் போலையே . நீயலாம் குடும்பத்துக்கு லாயிக்கே இல்ல” என்று பேச.
நிலா, நந்தனை அனைவருக்கும் முன்பே முறைத்தாள்.
அவனோ ‘உன் முறைப்பு என்னைய ஒன்னும் செய்து விடாது’ என்பது போல் செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருக்க.. பொங்கல் வைப்பதைப் பற்றி பேசச் சென்ற மார்த்தாண்டம் உள்ளே வந்தார்.
“அம்மா நிலா”
“சொல்லுங்க மாமா”
“எனக்கு ஒரு கப் காபிக் கொண்டு வாம்மா.”
“நான் போட்டது வேணுமா,மாமா இல்லை உங்க வைப் போட்டுருந்தாலும் பரவாயில்லையா?”
“யார் போட்டா என்ன குடும்மா”
“ம்ம் இந்தாங்க” என அவரிடம் காபியை நீட்ட , அவரோ அதை எடுத்துக் கொண்டு. “நாளைக்கு காலையில கோவில பொங்கல் வைக்கறதுக்கு சொல்லிருக்கேன்ம்மா”
“நான் நைட்டே ரெடியாகி உக்கார்ந்துடறேன் மாமா” என்றாள் வேகமாக
அதில் நந்தன் சிரித்துவிட கிருஷ்ணமாளுக்கு கூட சிரிப்பு எட்டிப் பார்த்தது.
நிலா எதற்காக அப்படி கூறுகிறாள் என்று தெரியாமல் “காலையிலைக்கு எதுக்கும்மா நைட்டே ரெடியாகற. இங்க இருந்து ஆறு மணிக்கு கிளம்பினா போதும்மா”
“அதுவே உன்ற மருமவளுக்கு நைட்டு தான்” என கிருஷ்ணம்மாள் நொடித்துக் கொண்டு வெளியே சென்று உறவுகளுடன் பேச ஆரம்பித்து விட்டார்.
“என்னம்மா”
“அது இன்னுமில்ல மாமா ஒரு பெரிச்சாலி ரொம்ப துள்ளிட்டு இருக்கு ஒருநாள் இல்ல ஒருநாள் ம”ண்டையில போட்டு சாகடிக்கப் போறேன் என மார்த்தாண்டத்திடம் பேச்சும் நந்தனிடம் பார்வையும் வைத்து சொல்லிவிட்டு வேகமாக சமையலறைக்குப் போய்விட்டாள்.
“என்னாச்சி? அவனுக்கு நீதான் காபி போடணுமாமா?”
“ம்ம் குடுங்க நானே போடறேன், என்னமோ எனக்கு எதுமே செய்ய தெரியாத மாதிரி பேசறாங்க” என்றவள் பாத்திரத்தை நங்கென்று அடுப்பில் வைக்க.
“ஐயோ பாத்திரம் போச்சி..”
“போனா என்ன உங்க புள்ளைய புடிச்சி வாங்கிப் போடுங்க.”என்றவள் பாலைக் காச்சி கோப்பையை ஊற்றி நந்தன் எந்த அளவில் காபிப் பொடி, சக்கரைப் போட்டுக் கொள்வான் என்று தெரிந்திருந்ததால் அவனுக்கு தங்குந்ததுப் போல் போட்டாள்.
“எப்பபடி?”.
“என்ன எப்படிடி?”
“எல்லாத்தையும் கரைட்டா போடற.”
“பொறந்ததுல இருந்து பார்க்கறேன் இடையில் எட்டு வருசத்துப் பக்கம் காணாம போட்டா, எல்லாம் மறந்தாப் போய்டும்?” என்றவள். “உங்க பையன் என்னைய அந்த அளவுக்கு ட்ரைன் பண்ணி வெச்சிருக்கார்” என்றவரே காபியை எடுத்துக் கொண்டு நந்தனிடம் போனாள்.
அவள் வந்து நின்றதுமே அவளைப் பார்க்காமலே கையை நீட்டினான்.
அவன் கையில் கோப்பையை வைத்தவள், அவன் ரசித்துக் குடிப்பதைப் பார்க்க ஓரமாக நின்றுக் கொண்டாள்..
காபியை ஒரு மிடறு விழுங்கியவனின் கண்களில் மின்னல் தோன்றி மறைய, அதைப் பார்த்த திருப்தியில் உள்ளேச் சென்றாள் நிலா.
“நந்து”
“சொல்லுங்கப்பா”
“நிலா வீட்டுக்குப் போய் ஷாலினியையும் மாப்பிள்ளையையும் மறுவீடுக்கு அழைச்சிட்டு வரணும்.”
“போய்ட்டு வாங்க”
“அது”.
“இன்னும் என்ன?”
“நீங்களும் அங்கப் போகணும்”.
“அப்பா.. இங்க இருக்கற வீட்டுக்கு ஓவர் அலப்பறை பண்ணாதீங்க.. நாளைக்கு நான் வேலைக்குப் போகணும்,எனக்கு இங்க இருந்தா தான் சரி வரும்” என்றான் பட்டென்று.
அப்போது யுகி வேகமாக உள்ளே வந்தவன் யாரிடமும் பேசாமல் அவன் அறைக்குள் போக சமையலறையின் வாசலில் நின்ற நிலா அவனைப் பார்த்துவிட்டாள்.
“அத்தை இவன் நைட் வீட்டுக்கு வரலையா..?”
“உங்க வீட்டுல இருந்தான்” என்று சொல்லிக் கொண்டே காய்கறியை வெட்டிக்கொண்டிருக்க.
“அங்க என்ன பண்ணான்.?”
“அவனுக்கு இங்க வர பிடிக்கலையா”
“ஏன்?”
“ஏன்னு உனக்கு தெரியாதா?”
“அத்தை..”என்றவளுக்கு உள்ளம் பதறியது. தன்னைப் பார்க்க ஓடி வந்த யுகியா இப்படி மாறி விட்டான். அவன்மேல கோவமிருந்தா என்னால பேசாம இருக்க முடியலையே அவனால எப்படி இப்படிலாம் பண்ண முடியுது?” என யோசிக்க.
“சீக்கிரம் மாறிடுவான் விடு”.என்று அவர் சொல்லிகொண்டிருக்கும் போதே யுகி பையுடன் வெளியே வர. நிலாவும் கூடத்திற்கு வந்துவிட்டாள்.
“பையோட எங்கடா கிளம்பிட்ட?” என அவன் முகத்தை ஆசையாகப் பார்த்தாள்.
அவளிடம் அவன் சாதாரணமாக பேசிப் பலநாள் ஆகிறதே இன்றாவது பேசுவான் என்ற ஆசையில் பார்க்க,அவனோ அவளை திரும்பிக் கூடப் பார்க்காமல்
“அப்பா நான் பெங்களூரு போறேன்” என்றான் மார்த்தியிடம்
“நீதான் அங்க வேலையை விட்டுட்டு, மாப்பிள்ளைக் கூட சேர்ந்து பிஸ்னஸ் பன்றேன்னு சொன்ன”
“அது அப்போ”
“இப்போ என்னாச்சி?”
“எனக்கு இங்க இருக்க பிடிக்கல”
“ஏன் யுகி இப்படிலாம் பேசற? அங்கேப் போய் என்ன பண்ணுவ.?நாங்களும் இப்போ அங்க இல்லை. சரியா நேரத்துக்கு சாப்பிட மாட்ட, தூங்க மாட்ட, இங்கையே இரு, அதான் மாமா பிஸ்னஸ் இருக்குல்ல அண்ணா கூட சேர்ந்து பார்க்கலைன்னாலும் மாமா கூட சேர்ந்து பார்க்கலாம்ல” என நிலா சொல்ல, நந்தன் பற்களை கடித்தான்.
அவனே, ‘எப்பிடிடா இவனை இங்கிருந்து துரத்துவது’ என நேரம் பார்த்துக் கொண்டிருக்க இவள் அதில் ஒரு லோடு மண்ணை அள்ளிப் போட்டாள் எப்படி?.
“யாரோட அக்கறையும் எனக்கு தேவையில்லை”.
“அக்கறைப் படக்கூடாதுன்னு சொல்ல உனக்கு ரைட்ஸ் இல்லை.. பேக்கைக் குடு” என அவனிடம் இருந்து பையை பிடிங்கினாள், அவனோ கோவமாக பேக்கை அவன் பக்கம் இழுத்தவன்,
“மரியாதையா விட்டுரு இல்லனா கேவலமா பேசிடுவேன், நீ இருக்கற வீட்டுல இருக்கக் கூடாதுன்னு தான் இங்க இருந்து போய் தொலையனும்னு நினைக்கிறேன். ஏன் என் உயிரை வாங்குற?” என்றான்.
யுகி பேசியதில் நிலாவின் முகம் சட்டென்று கசங்கிவிட,அதைப் பார்க்க முடியாமல் திரும்பிக் கொண்டான்.
இப்படி பேசவில்லை என்றால் அவன் அங்கிருந்து போக முடியாது, அருகில் இருந்து அவள் படும் கஷ்டத்தைப் பார்க்க முடியாமல் தான் இங்கிருந்து ஓடுகிறான்.
“அப்பா ஓவரா பேசுனா பல்லைத் தட்டிடுவேன்னு சொல்லி வைங்க.,என் பொண்டாட்டியைப் பேச இவன் யாரு?”
“ச்சி இவனைலா நான் மனுசனாவே நினைக்கறதில்ல” என்றவன் “அப்பா நான் போகணும்” என்றான் மீண்டும்.
“தம்பி நாளைக்கு”
“நாளைக்கு வரைக்கும் இருக்க முடியாது”.
“சரி போ” என்று விட்டார் மார்த்தி
அவருக்கும் தெரியும் யுகி எந்த அளவிற்கு உள்ளுக்குள் போராடுகிறான் என்று அவன் ஆசையை தான் மதிக்கவில்லை உணர்வுகளையாவது மதித்து அனுப்பி வைக்க வேண்டும் என்று தான் போக சொன்னது.