இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -89 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 24-07-2024

Total Views: 1385

நிலாவின் கையில் இருந்த காபியை வாங்கி கிருஷ்ணம்மாளிடம் நீட்டியவர், “இதை நான் தான் அத்தை போட்டேன் குடிங்க”  என்று அங்கிருந்து நிலாவுடன் நகர்ந்து விட்டார்.

“நிலாம்மா அவங்க வயசானவீங்க கண்டதையும் பேசுவாங்க,நீ எதையும் நினைச்சிக்காதம்மா” அங்கு மாமியாரை சமாதானம் செய்துவிட்டு இங்கு மருமகளை சமாதானம் செய்ய வந்தார்.

“அதுக்கும் ஒரு அளவுக்கு இருக்கு அத்தை, நான் ஒன்னும் புத்தரோ இயேசுவோ இல்ல சாதாரண மனுஷி தான். இந்த குலம் இந்த கோத்திரம்ன்னு தெரிஞ்சி தானே கல்யாணம் பண்ணி வெச்சிங்க, புடிக்கலைன்னா அப்போவே வேண்டாம்னு சொல்லனும், கல்யாணம் பண்ணிட்டு வந்ததுக்கு அப்பறம் என் கையில சாப்பிடறதும் விஷத்தை சாப்பிடறதும் ஒன்னுன்னு சொன்னா..  கூட்டிட்டு வந்து அவமானப் படுத்துற மாதிரி இருக்கு.வீட்டுல நம்ப மட்டும் இருக்கும் போது சொன்னாலே கஷ்டமா இருக்கும், இப்போ வீட்டுல சொந்தப் பந்தம் நிறைஞ்சி இருக்கு அவங்களுக்கு முன்னாடி சொன்னா அவங்க எப்படி அத்தை என்னய மதிப்பாங்க?. எல்லோருக்கும் முன்னாடி என்னைய விட்டுக் குடுக்கற மாதிரி தானே” என்றாள் நீளமாக.

பூனை பம்புவது எல்லாம் புலியிடம்(நந்தனிடம்) மட்டும் தான், மற்றவர்களிடம் பாச்சா பலிக்காது..

“நிலா என்னமா?”  என்ற மணியும் சோர்ந்து போய்விட்டார். யாருக்கு என்று பேசுவார் ஒரு பக்கம் மாமியா,ர் இன்னொரு பக்கம் மருமகள். இருவரையுமே விட்டுக் குடுக்க முடியாது.

“இனி பேசாம பார்த்துக்கறேன் நிலாம்மா”.

“நீங்க எதுக்கு இடையில வரீங்க அத்தை, எனக்கும் பேச முடியாம,அவங்களுக்கும் பேச முடியாம உங்களுக்கு தான் சங்கடமா இருக்கும்,நீங்க கொஞ்சம் தள்ளி நின்னீங்கன்னா போதும்,  மீதியை நான் பார்த்துப்பேன்” என்றவள், “பேசி  பேசி தொண்டை காயுது காபி குடுங்க” என அவரிடம் கேட்டு வாங்கிக் கொண்டு சோபாவில் போய் அமர்ந்தாள்..

“என்ன மணி காலையிலையே சத்தமா இருக்கு” என கறியை வெட்டி எடுத்து வந்த மார்த்தி, “இதுல குடலும் ரத்தமும் இருக்கு காலையில இட்லிக்கு வெச்சிடுங்க,”

“இது போதுமா?” என்பது போல் அவர் பார்க்க

“இதுவே போதும்டி. சீக்கிரம் செஞ்சிப்புடு இல்லனா இதை தின்னுட்டு மதியம் யாரும் சோறு திங்க மாட்டாங்க. அப்புறம் அத்தனையும் நின்னுப்புடும்.”

“சரிங்க” என்பது போல் அவர் தலையை ஆட்ட.

“வாயைத் தொறந்து பேசுனா என்ன முத்தாக் கொட்டிப் போகும் எங்கம்மா பேசியே கொல்லுது, நீ பேசாம கொல்லுற நிலாம்மா நீ எப்படி.?”

“கவலைப்படாதீங்க மாமா பேசியும் பேசாம கொன்னுடறேன்”. என்றாள் புன்னகையுடன்.

“அடிசக்கைன்னா  என்னைய படுத்துறதுக்கு பதிலா உன்ற புருஷனை படுத்தி எடு தாயி,அதுக்கு வேணா நம்ப பார்ட்டனர்ஷிப் போட்டுக்கலாம்.”

“பாருடா மாமா அவரோட செல்லப்புள்ளய கொடுமப்படுத்த சொல்றாரு.”

“நீ கொடுமை படுத்தலைன்னா அவன் நம்ப எல்லார்த்தையும் பாடாப் படுத்திடுவான்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நந்தன் உள்ளே வந்துவிட்டான்.

இன்று நிறைய வேலை இருந்ததால் அருகிலையே நடப்பயிற்சி முடித்து விட்டு வந்துவிட்டான்.

“என்னப்பா என்னைய  கலாய்க்க கூட்டணி சேருறீங்க போல..”

“அப்படிலாம் இல்லப்பா”  என்றவர் காபிக் குடித்துக் கொண்டிருந்த நிலாவின் பக்கத்தில் வந்து அமர. நிலாவும்  காபி குடிக்கும் ஆர்வத்தில் அவர் அமர்ந்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

குழம்பு வைக்க வெங்காயம் உரிப்பதற்காக அறையில் இருந்து வந்த கிருஷ்ணம்மாள் இதைப் பார்த்துவிட்டு . பொங்கிவிட்டார். அவர் கண்ணுக்கு நிலா அமர்ந்திருந்தது மட்டும் தான் தெரிந்தது. அங்கு நந்தன் நிற்பதோ உறவினர் இருப்பதோ எதுவுமே தெரியவில்லை.

“எவ்வளவு தைரியம் இருந்தா என்ற பையன் பக்கத்துல  அவனுக்கு சமமா உக்கார்ந்து இருப்ப.. வூட்டுலகுள்ள வர தகுதி இல்லாத எச்சைக்கல நாயை குளிப்பாட்டு நடு வீட்டுக்குள்ள விட்டதுக்கு, நல்ல செய்முறை செஞ்சிடுச்சி.. எந்திரிடி முதல்ல.. ஒரு மாமனார்ன்னு மட்டு மறுவாதி இல்லாம, அவன் பக்கத்துல சமமா உக்கார்ந்து இருக்க?! என நிலாவின் கையைப் பிடித்து இழுத்து வேகமாக விட. விழப்போனவளை நந்தனின் கை தாங்கிப் பிடித்துக் கொண்டது.

அப்போது தான் நந்தன் அங்கு இருப்பதையேப் பார்த்தார் கிருஷ்ணம்மாள்.

அவன் இல்லை என்ற தைரியத்தில் தானே இவ்வளவும் பேசினார்.

“ஆயா”  அழுத்தமாக வந்தது  வார்த்தைகள்.

“ராசா?”.

“என்ன வார்த்தை பேசிட்டு இருக்கன்னு தெரியுதா உனக்கு.? அவ என்னோட பொண்டாட்டி, அவள பேசுனா என்னைய பேசுன மாதிரி, கல்யாணத்துக்கு முன்னாடி நீ என்ன வேணா பேசியிருக்கலாம். இதுக்கு அப்புறம் அவளை எதாவது பேசுன மரியாதை இருக்காது பாத்துக்கோ. வயசான காலத்துல  ஒழுங்கா இருக்கப்பாரு இல்லனா உன்ற புள்ளை வீட்டுக்குப் போய்டு, இங்க இருந்து இருக்கறவங்க உயிரை வாங்காத” என்றவன், “ஏண்டி உனக்கு வாய் இல்லையா. திருப்பி பேசறதுக்கு என்ன? யார்  என்ன பேசுனாலும் மரம் மாதிரி நிக்கறது, இதுக்கு தான் பெத்துப் போட்டுச்சா உங்க அம்மா” என்று அவளையும் பேசிவிட்டு தான் அறைக்குச் சென்றான்.

அப்போது தான் காபிக் குடிக்க வெளியே வந்த ஷாலினி.

“அப்புறம் நிலா பெரிய தலையோட சப்போர்ட்டே  உனக்கு இருக்கு,இனி இந்த வீட்டோட ராஜ்ஜியமே உன் கையில தான்” என கிண்டல் செய்ய.. கிருஷ்ணம்மாள் சுற்றி இருப்பவர்களை முறைத்துவிட்டு சென்று விட்டார்.

நந்தன் பேசவில்லை என்றால் நிலாவே பேசியிருப்பாள். அவன் பேசவும்  அமைதியாக நின்றுக் கொண்டவளுக்கு அவன் அவளுக்காக பேசுகிறான் என்பதே ஆகாயத்தில் பறப்பது போன்று இருந்தது.

பறக்க வைப்பவன் கீழே தள்ளி  மிதிக்கவும் செய்வான் என்பதை மறந்துவிட்டாள்.

ராஜியும் வந்துவிட ஒவ்வொருத்தரும், ஒவ்வொரு வேலையை செய்ததால் காலை எட்டு மணிக்கே இட்லியும் குடல் கறியும் தயாராகி இருந்தது.

குளித்து விட்டு வந்த நந்தனின் பார்வை நிலாவைத் தேட  அதைக் கவனித்துக் கொண்டே சூப்பைக் குடித்துக் கொண்டிருந்தான் வளவன்.

யாரிடம் கேப்பது  என்று தெரியாமல் சுற்றி சுற்றிப் பார்க்க.வளவன் மட்டும் தான் அங்கிருந்தான்.

“அம்முவும் ஷாலுவும் வெளியே பந்தி பரிமாறிட்டு இருக்காங்க”  என நந்தன் கேக்காமலையே வளவன் பதில் சொல்ல.. அதை காதில் வாங்கியும் வாங்காமலும் வெளியேச் சென்றான்.

“வியா”

“ஹா இதோ வந்துடேங்க..” என ஓடி வந்து அவன் அருகில் நிற்க.

“எதுக்கு இவ்வளவு வேகம்?”

“நீங்க கூப்பிட்டிங்கள” என தலையை குனிந்தவாறே சொன்னாள்.

“நமக்கு சாப்பாட்டை டைன்னிங் டேபிள்க்கு கொண்டு வந்துடு.. சீக்கிரம் சாப்புட்டு கிளம்பு டைம் ஆகிடுச்சு.”

“எங்க?”

“எங்கவா நேத்து சொன்னது நியாபகம் இல்லையா?”

“ஹா மறந்துட்டேன்,ஐஞ்சு நிமிசத்துல வந்துடறேங்க”

“ம்ம் சீக்கிரம்” என்று உள்ளே சென்று விட்டான்.

அவனுக்குள்  ஒரு தடுமாற்றம் இருந்துக் கொண்டே இருந்தது. ரோகனுக்கு எதிராக தீர்ப்பு சொல்ல வேண்டும் என்றால்,விவேக் திரட்டிய ஆதாரங்கள் கிடைக்க வேண்டும் ,இல்லையென்றால் அவனுக்கு எதிராக நிலா சாட்சி சொல்ல வேண்டும். நிலாவை சாட்சி சொல்ல வைக்க அவனுக்கு சுத்தமாக விருப்பமில்லை. இந்த வாய்ப்பை விட்டுவிட்டால் ரோகனை மீண்டும் கைதி செய்வதே கடினம்  என்ன செய்வது என்ற குழப்பத்திலையே  நீதிமன்றம் கிளம்பிக் கொண்டிருந்தான்.

“அத்தை இதுல  இட்லி வைங்க”

“யாருக்கு?”

“அவருக்கும் எனக்கும்”

“இங்க வந்து சாப்பிட சொல்லு நிலா”

“அவர் அங்கையே சாப்புட்டுக்கறேன் சொன்னாரு” என்றவாறு   தட்டில் உணவை வைத்து எடுத்துக் கொண்டு நகர பந்தியில் கிருஷ்ணம்மாள்  சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்ததும் காலையில் பேசியது நினைவுக்கு வ,ர சட்டென்று ஒரு கரண்டி கறியை அள்ளி அவர் இலையில் வைத்து விட்டாள் நிலா.

“என்ன ஆயா? என்கிட்ட சோறு வாங்கி திங்கறதும் விஷத்தை திங்கறதும் ஒன்னுன்னு சொன்னிங்கல,இப்போ தின்னுங்க பாப்போம்.. “என நக்கலாக சிரித்தவள்.

“நீங்க என்ன சொன்னாலும் சரின்னு போறதுக்கு நான் பழைய நிலா இல்லை. இப்போ இருக்கற நிலா பத்தா திருப்பி தருவா.. அதை நியாபகத்துல வெச்சிட்டு எதா இருந்தாலும் பேசுங்க சரியா?” என்றவள்.. உணவை எடுத்துக் கொண்டு உள்ளேச் சென்று விட்டாள்.

நிலா பேச பேச பல்லைக் கண்டிப்பதை தவிர வேற எதுவும் செய்ய முடியவில்லை கிருஷ்ணம்மாளால்.

உள்ளே வந்த நிலா வளவனைப் பார்த்ததும்

“அண்ணா சாப்பிட போலையா?” என்றாள்.

“பசிக்கல அம்மு இப்போதான் சூப்பு குடிச்சேன்”.

“ம்ம் இதுல சாப்பாடு இருக்கு வா சாப்பிடு.”

“வேண்டா அவருக்கு எடுத்துட்டு வந்துருப்ப போல, குடு  ஷாலு கொண்டு வருவா நான் சாப்புட்டுக்கறேன்” என்று தொலைக்காட்சியைப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.

தனது அறையில் இருந்து நந்தன் கீழே இறங்கி வந்தான்,கருப்பு நிற சட்டையை இன் பண்ணி  கண்ணில் கூலருடன் வந்தவனை விழியகற்றாமல் பார்த்தாள் நிலா.

அவள் பார்வையைப் புரிந்துக் கொண்ட வளவனுக்கு பெரும்மூச்சு தான் தோன்றியது.

“வியா ரெடியா?” எனக் கேட்டுக்கொண்டே கண்ணாடியை கழட்டி சட்டையில் சொருகியவன். “நான் சாப்புட்டுக்கறேன் நீ ஓடிப் போய் ரெடியாகிட்டு வா’

“இல்லங்க நான் பரிமாறிட்டு” என இழுக்க

அவளை நிமிர்ந்து  அழுத்தமாக ஒருப் பார்வைப் பார்த்தான்.

அதில் உடனே “போறேன்ங்க” என  ஓடிவிட்டாள்.

“எப்படி பார்வையிலையே மிரட்டுறான் பாரு இவனலாம் கல்யாணம் பண்ணலைன்னு யாரு அழுதா?” என முனவிக் கொண்டே டிவி பார்த்துக்கொண்டிருக்க

“நீ அழுகக் கூடாதுன்னு தான் கல்யாணம் பண்ணிட்டேன்” என்று அவன் அருகில் அமர்ந்தான் நந்தன்.

சட்டென்று வளவன் எழுந்து நிற்க

“ஓவர் மரியாதை வேண்டா உக்காரு உக்காரு,  கால் மேல கால் போட்டே என் முன்னாடி உக்கார்ந்துட்டே இதுக்கு என்ன?” என்று சோபாவில் சமணம் போட்டு அமர்ந்து சாப்பிட்டவன்

“நியூஸ் வை!  என்க

‘நீயே பாரு’ என்பது போல் ரிமோட்டை அவனிடம் கொடுத்து விட்டு வளவன்  தள்ளி அமர்ந்துக் கொண்டான்.

செய்தியை வைத்து அதை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினான்.

நிறைய செய்திகள் வாசிக்கப்பட  அதில் ஒன்றாக முன்னாள் அமைச்சர் செய்தியும் இருந்தது.

இன்று முன்னால் அமைச்சர் சூரியராஜின் மகனான ரோகனின் கொலை கேஸ் நீதிமன்றத்திற்கு வருகிறது. என மேற்கொண்டு செய்திகள் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்க வளவன் நந்தனைப் பார்த்தான்.

“என்ன சைட் அடிக்கிறீயா?”

“ச்சை என்னைய பார்த்தா அந்த மாதிரி தெரியுதா?.இந்த கேஸ் தானே நீ எடுத்துருக்க?”

“யார் சொன்னா?”

“இந்த கேஸ் எடுத்ததால தான் கல்யாணத்துக்கு கூட லேட்டா வந்தின்னு சொன்னாங்க”

“அப்போ அப்டியா தான் இருக்கு”

“திமிரு புடிச்சவன் ஆமான்னு சொல்றானா பாரு”. என நினைத்தவன்.”இன்னைக்கு கேஸ் கோர்ட்க்கு வருதுன்னு சொல்றாங்க”

“அப்படி தானே சொன்னாங்க அப்புறம் எதுக்கு கேக்கற?”

“நீ போகணுமா? “

“நீங்கன்னு மரியாதையா பேசு.”

“ஒ” என மூச்சை இழுத்து விட்டவன். “இன்னைக்கு கேஸ் இருக்கு அப்போ விருந்துக்கு இருக்க மாட்டீங்க”

“அதுக்கு என்ன இப்போ”

“மரியாதை குடுத்து மரியாதை வாங்கணும் தெரியாதா?” என வளவனும் ஏட்டிக்கு போட்டியாக நிற்க

அவனை திரும்பி பார்த்தவன் , எதும் சொல்லாமல் தட்டை ஜிங்கில் போட்டுவிட்டு கையை கழுவி விட்டு வந்தவன்

“மரியாதை குடுக்க முடியாது என்னடா பண்ணுவ?”

“என்கிட்டயும் எதிர்பார்க்காத”

“நீயா குடுப்ப” என்று நக்கலாக சிரித்தான்.




Leave a comment


Comments


Related Post