இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -93 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 27-07-2024

Total Views: 1394

அவள் போனதும் படுக்கையில் டப்பென்று விழுந்தான். “ஒரு பொம்பள என்னைய அடிக்கிறதா எப்படி அடிக்கலாம் அதுவும் என்னைய கண்டு பயந்து நடுங்கறவ எப்படி என்னைய அடிக்கலாம்” என்பதெல்லாம் தோன்றவில்லை, பழைய நந்தனாக இருந்திருந்தால் கண்டிப்பாக இப்படி தான் யோசித்திருப்பான், ஆனால் இது புதிய நந்தன் ஆச்சே, நிலாவை மட்டும் ஆராதிக்கும் நந்தன். 

அவள் தைரியமாக பேசியதையும், வார்த்தைக்கு வார்த்தை டா போட்டதையும், அடித்ததையும் தான் நினைத்துக் கொண்டிருந்தான். 

இருவரும் என்ன பேசினார்கள் பிரச்சனை எங்க ஆரம்பித்தது என்று கேட்டால் இருவருக்குமே தெரியாது. எங்கோ தொடங்கி எங்கோ போய் எதிலோ வந்து முடிந்திருந்தது. 

அறையை விட்டு வெளியே வந்த நிலா யாரும் அறியாமல் அவளது வீட்டிற்குச் சென்று விட்டாள். 

“ஷாலு% 

“சொல்லும்மா₹ 

“மேலே பெரியவனைக் கூப்பிட போனவளையும் காணல,அவனையும் காணல,போய் பாத்துட்டு வா. வந்ததுல இருந்து சொந்தக்காரங்க கேட்டுட்டே இருக்காங்க.” 

“அடிக் கூறுக் கெட்டவளே நேத்து தான் கல்யாணமாகி இருக்கு அவளைப் போய் பார்க்க சொல்ற? வரப்ப வரட்டும் வுடு” என்றார் கிருஷ்ணம்மாள். 

“அவங்க இன்னும் சாப்பிடலையே அத்தை,அதும் இல்லாம வரவீங்க கேட்டுட்டே இருக்காங்க.என்ன பதில் சொல்றது?” 

“கேட்டா என்ன? பையன் இப்போதான் அலைஞ்சி திரிஞ்சி வூடு வந்து சேர்ந்துருக்கான், அவனைப் போய் தொந்தரவு பண்ண சொல்ற..?” 

“சரிங்க அத்தை.” 

“சோறை எடுத்து வெச்சிட்டு எப்போவோ வந்து சாப்புட்டுக்கட்டும்” என்றார். 

காலையில் நிலாவின் முகத்தில் தெரிந்த வெட்கத்திலும் பொலிவிலும் மாமியார் சொல்வது போல தான் இருக்கும் என விட்டுவிட்டார் மணிமேகலை. 

அறையில் இருந்த நந்தன். வெகுநேரம் குறுக்கும் நெடுக்கும் நடந்தவன். கண்ணாடியில் அவன் முகத்தைப் பார்த்தான்.. 

நிலாவின் கை மென்மையாக இருந்ததால் நந்தனின் கன்னத்தில் எந்த தடத்தையும் ஏற்படுத்தவில்லை. 
அவள் அடித்த இடத்தை தடவிப் பார்த்தான் கண்கள் அனலாக சிவந்து கிடந்தது. 

அறைக்குள்ளேயே இருந்தால் அவள் பேசியதே நினைவுக்கு வரும் என வெளியே வந்தவன், யாரிடமும் சொல்லாமல் காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான். 

நிலாவோ அவளது அறைக்குள் படுத்து அழுது கொண்டிருந்தாள். 

யுகி எழுதியிருந்ததைப் பற்றி நிலாவிற்கு கவலையோ எண்ணமோ எதுமேயில்லை. “எங்கள் இருவரையும் சேர்த்து எப்படி சந்தேகப்படலாம் இவன் ஒழுங்கா.. அந்த உஷாக் கூட கூத்து அடிக்கிறவன் எங்களை பேச என்ன தகுதி இருக்கு? என நினைத்து மாய்ந்து போனாள். 

நந்தன் போனதும் நிலாவைத் தேடி வந்த ஷாலினி அவள் அறையில் இல்லை என்றதும் அவள் எண்ணிற்கு அழைத்தாள் 

நான்கு முறை அழைத்து எடுக்காதவள், ஐந்தாம் முறை அழைத்தபின்பு தான் எடுத்தாள். 

“நிலா எங்கடி இருக்க?” 

"ஏன் ஷாலு?" 

“அண்ணன் எங்கயோ போய்ட்டாரு,உன்னைய ரூமுல தேடுனா நீயும் இல்ல, அதான் போன் பண்றேன் ரெண்டு பேருக்குல்லையும் ஏதாவது பிரச்சனையா?” 

“ஏன் அப்படி கேக்கற?” 

"ரூமுள்ள கண்ணாடி உடைஞ்சி கிடைக்குது." 

“நான் இங்க வீட்டுல இருக்கேன் என்னோட டிரஸ் எடுக்காம வந்துட்டேன் அதை எடுக்க வந்தேன், உன் அண்ணன் தெரியாம தட்டி விட்டுருப்பாரு நான் வந்துடறேன்” என்றாள். எப்படியோ திக்காமல் திணறாமல் பேசிவிட்டாள்.

“சரி சீக்கிரம் வா,” என்ற ஷாலினிக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை. நிலா திக்காமல் திணறாமல் பேசியிருக்கலாம் ஆனால் அவள் குரலில் சுரத்தையே இல்லை ஏதோ ஒன்று ஷாலினிக்கு உறுத்தியது.

நிலா வேக வேகமாக   முகம் கழுவி  பவுடர் போட்டுக் கொண்டவள், உடையை  நீவி தன்னை  சரி செய்துக் கொண்டு, நந்தன் இல்லை என்றதும் அவர்கள் வீட்டிற்குச் சென்றாள்.

அவர்களுக்குள் நடந்த பிரச்சனை யாருக்கும் தெரியக் கூடாது  என்று தான் இந்த அவசரம்.

யாரும் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லி அவர்களை எதிர்த்து தானே நந்தனை திருமணம் செய்துக் கொண்டாள், இரண்டே நாளில் அது முடிவுக்கு வந்து விட்டது  என்று தெரிந்தால் கேவலமாக நினைக்க மாட்டார்களா? தான் இருக்கும் நிலை தெரிந்தால் தன் அண்ணன் தான்  ஷாலினியுடன் சந்தோசமாக வாழ்வானா?  என சுற்றுப்புறத்தை  கருத்தில்  கொண்டு  தனக்கும் நந்தனுக்கும் இடையே இருந்த பிரச்சனையை மறைக்க நினைத்தாள்.

புகையையும் கருவையும்   எப்படி மறைத்து வைக்க முடியாதோ?அதேபோல் பிரச்சனைகளையும் மறைக்க முடியாது,யாராவது ஒருவர் மோப்பம் புடித்துவிடுவார்கள் என நிலாவிற்கு தெரியவில்லை.

நைட் தனது வீட்டிற்கு போக  என்ன காரணம் சொல்ல வேண்டும் என இப்போதே யோசித்து வைத்துவிட்டு தான் மீண்டும் அங்குப் போனாள்.

“வா நிலா எங்க போன?”

“அதான் சொன்னேனே அண்ணி , துணி எடுக்கப் போனேன் தலைக்கு ஊத்துற மாதிரி தெரிஞ்சிது. விசேஷ வீட்டுல   இருக்க ஒரு மாதிரி இருந்துச்சி அதான் அங்கேப் போய்ட்டு வந்தேன். என்றவளின் முகத்தை ஆராய்ந்தாள் ஷாலினி.

அது எப்போதும் போல் தான் இருந்தது எந்த வித மாற்றமும் தெரியவில்லை.

“நீ சொல்றது உண்மைன்னா  ரொம்ப சந்தோசம்” என்றவள் முன்னால் நடக்க, பயந்த மனதை மறைத்துக் கொண்டே  பின்னாலையே நடந்தாள் நிலா.

அதன்பிறகு சாப்பாடு பரிமாறுவது, சாப்பிடுகிறேன் என பெயர் பண்ணி எதையோ  கிளறிவிட்டு எழுவது, என தன் கவலையை அதற்குள் மறைக்க முயற்சி  செய்தாள்.  மறக்க முடியவில்லை என்றாலும் அடுத்தவர் முன்பு மறைக்க முடிந்தது.

விருந்து முடிந்து சொந்தங்கள் கிளம்பவே மாலை ஆறு ஆகிவிட்டது, அப்போது வரைக்கும் கூட நந்தன் வரவில்லை,  எதையும் காட்டாமல் இருக்க நிலா தான் சிரமப்பட்டுப் போனாள்.

எல்லோரும் அவளிடம் வந்து தானே நந்தன் எங்குப் போனான் என்று கேட்டனர்.என்ன பதில் சொல்லுவாள்?.

இரவு வரை நந்தன் வருவான் வருவான் என எதிர்பார்த்து  எல்லோருமே காத்திருக்க, அவன் வரவில்லை என்றதும்.

“இதுக்கு மேல் காத்தியிருக்க நான் என்ன அவனோட காவிய மனைவியா?, எங்கையோ போய் ஊரை சுத்திட்டு வரட்டும்,என்று நினைத்தவள்.

“அத்தை நான் தலைக்கு ஊத்திட்டேன் அம்மா வீட்டுல போய் மூனு நாள் இருந்துட்டு வரட்டுமா? அப்புறம் இங்க வந்துடறேன் அவர்கிட்ட சொல்லிட்டேன் அவர் சரின்னு சொன்னாரு” என எல்லோரும் இருக்கும் போது பழியை தூக்கி நந்தன் மீது போட்டுவிட்டாள்.

“அதென்ன பழக்கம்  புருஷன் இல்லாம அங்கப் போறது? இதுக்கு தான் வூடு பக்கத்துல இருக்கவளை கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு சொல்றது பொசுக்கு பொசுக்குன்னு அம்மா வீட்டுக்கு போறது.”

“எனக்கு அப்படினா ஷாலினிக்கும் அப்படி தானே. சும்மா வாய் இருக்குனு பேசாதீங்க இந்த மூனு நாளும் உங்க பேரனுக்கு நான் ஆக மாட்டேன் தானே, அப்பறம் நான் எங்க இருந்தா என்ன?” என்றாள் பட்டென்று

இவ்வளவு நாளும் பேசாத பேச்சுகளை இனி தான் பேசுவாள்  என அவர்கள் அறிந்திருக்க மாட்டார்களே.

“என்னடி வாய் ஓவரா போகுது?. என் பேரன்கிட்ட சொன்னா நிரந்தரமா நீ உன்ற அம்மாவ வீட்டுல தான் இருக்கனும் நியாபகம் வெச்சிக்கோ”. 

“அப்படி தான் பேசுவேன், என்னய பேசுனீங்கன்னா நானும் பேசுவேன் இவ்வளவு நாள் நான் யாரோ, அதனால பேசுனீங்க, நான் அமைதியா போனேன், இப்போ இந்த வீட்டு மருமக ஆகியும் என்னைய பத்தி நாலுப் பேருகிட்ட கேவலமா பேசுனா அழுதுட்டு சும்மா போக நான் ஒன்னும் பழைய நிலா கிடையாது” என இடம் அதிர கத்தினாள். 

அவள் பேசுவதை யாருமே தடுக்கவில்லை. வளவன் வேறு கன்னத்தில் கைக் கொடுத்து குதுகலமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் 

அவன் முதுகில் அடி வைத்த ஷாலினி “என்னங்க பண்றீங்க..ஐயா பார்த்தா அதுக்கும் பேசும் கையை எடுங்க.” 

“அம்முவைப் பத்தி தெரியாம தலையைக் குடுத்தா இப்படி தான் மூக்கு அறுபட்டு கிடக்கணும். என் தங்கச்சி பொழைச்சிக்குவா எனக்கு நம்பிக்கை வந்துடுச்சி” என்றான் மீசை முடி காதில் உரச, அது உண்டாக்கிய கூச்சத்தில் நெளிந்தாள் ஷாலினி. 

“அம்மா நீ வாயை வெச்சிட்டு சும்மா இருந்தனாலே பலப் பிரச்சனை சரியாகிடும். உன்னால தான் இந்த வீட்டுல பிரச்சனையே வருது” என்ற மார்த்தி, “காலையில இருந்து நாயா ஓடிருக்கேன், கொஞ்சமாவது ரெஸ்ட் கொடுப்போம்னு நினைக்காம கூட்டி வெச்சி பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்க” என கிருஷ்ணம்மாளை திட்டியவர். “போய் படுங்க போங்க நீ அங்க போறனா போ நிலாம்மா” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். 

ஷாலினிக்கு நிலா சொன்ன காரணம் ஏற்புடையதாக இருக்கவில்லை.. 

“தலைக்கு ஊத்திட்டா என்ன இவ்வளவு பெரிய வீட்டுல படுக்க இடமில்லையா? அதுவும் அண்ணா ரூம் அவ்வளவு பெருசு , ஒரு குடும்பமே தங்கலாம் இவங்க ரெண்டுபேரால தங்க முடியாதா என்ன?” என கண்கள் சுருக்கி நிலாவைப் பார்க்க.. 

யாரும் தன்னைக் கேள்வி கேட்பதற்குள் ஓடிவிட வேண்டும் என நிலா நிற்காமல் ஓடிவிட்டாள்.



Leave a comment


Comments


Related Post