Total Views: 1400
அறைக்குப் போய் மூச்சு வாங்கியவள். கதவை அடைத்து விட்டு படுக்கையில் படுத்தப் பின்பு தான் இவ்வளவு நேரம் அடக்கி வைத்த கவலையும் அழுகையும் வெள்ளமாக உடைபெடுக்க ஆர்ப்பரித்து நின்றன.
கோவத்தில் இருவருமே பேசிவிட்டனர். வீட்டை விட்டு போக வேண்டும் என எண்ணி இங்கு வரவில்லை. அந்த சூழ்நிலையில் அங்கிருந்தால் மேலும் சண்டை வலுக்கும் என்று தான் இங்கு வந்தாள். ஆனால் வீட்டிற்கே வராமல் நந்தன் ஓடும் போது தான் மட்டும் அங்க இருக்கப் பிடிக்கவில்லை.
இப்போது கோவம் சற்று தணிந்திருக்க அவள் பேசியதையும், செய்ததையும் யோசித்துப் பார்த்தாள்.
‘எப்படி அவரை எதிர்த்து பேச தைரியம் வந்துச்சு? அதும் அடிக்க வேற செஞ்சிருக்கேன், இதுக்கு எத்தனை நாள் வெச்சி செய்வாரோ தெரியலையே?’.
“அப்போ அவர் பேசுனது மட்டும் சரியா?” என மனசாட்சி கேள்வி கேக்க.
“தப்பு தான் ஆனா அவர் இடத்துல நான் இருந்திருந்தாலும் அதை தானே கேட்டிருப்பேன்.”
“அப்போ அவனை மன்னிச்சிட்ட..”
“அப்படி சொல்லல கண்ணுல பார்க்க எல்லாமே உண்மையாகிடாதுல, நான் உஷாவை வெச்சி தப்பா நினைச்சது போல அவர் யுகியை தப்பா நினைச்சிருக்காரு ரெண்டுபேரும் மனசு விட்டு பேசிருந்தா இந்த சண்டை வந்துருக்காதுல.”
“நீ இந்த அளவுக்கு அவனுக்கு முட்டு குடுப்பேன்னு நினைக்கல”. காரித் துப்ப..
“இல்லை ரெண்டுப் பேரும் எங்கையோ தப்பு பண்றோம் அது எங்கைன்னு கண்டுபிடிக்கணும்” என நினைத்துக் கொண்டாள்.
நிலாவிற்கு நேர் எதிராக இருந்தான் நந்தன்
யாரைப் பற்றியும் கவலையில்லை, என்னும் போது நிலாவைப் பற்றி மட்டும் கவலை தோன்றுமா..?
ரோகன் தந்தையின் பழைய விஷயங்களை தோன்றிக் கொண்டிருந்தான்
“திரு..”
“சார்.”
“உன்னோட டிரான்ஸ்பர் ஆடர். உன்னைய ஒரிசாவுக்கு மாத்திருக்காங்க . இந்தா” அதற்கான கவரை அவனிடம் நீட்டினான்.
“சார் நான்தான் எவிடென்சை சரியான நேரத்துக்கு சமிட் பண்ணிட்டேனே சார்.”
“யாரு இல்லைன்னு சொன்னா?”
“அப்புறம் எதுக்கு சார் டிராஸ்ன்பர் பண்ணாங்க.”
“இந்த கேஸை எடுக்கும் போதே..இந்த கேஸ்ல இன்வால்வ் ஆகற எல்லோருக்குமே டிராஸ்ன்பருக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்”.
“அதான் எதுக்குன்னு புரியலையே சார்.”
“கேஸ்ல அப்பன் பையன் இரண்டு பேரும் உள்ளப் போயிருந்தா எந்த பிரச்சனையும் இல்லை, நம்மளால பையனை மட்டும் தான் உள்ளே தள்ள முடிஞ்சிது.”
“ம்ம்”
“அப்பன் கண்டிப்பா இந்த கேஸ்ல இன்வால்வ் ஆன ஒவ்வொருத்தரையும் தேடி தேடி கருவருப்பான். அதுக்கு நம்ம இடம் கொடுக்க முடியாது, ஒரு ஆறுமாசம் அங்க ஒர்க் பண்ணு, திரும்ப இங்கையே வர மாதிரி ஏற்பாடு பண்ணிடறேன்” என்றவன் ஒருவரையும் விடாமல் அனைவருக்கும் டிரான்ஸ்பர் ஆடரைக் கொடுத்தான்.
அதில் நிலாவிடம் நந்தனைப் பற்றி சொன்ன ஏட்டுவும் ஒருவர்.
“திரு சார்.”
“சொல்லுங்க ஏட்டு.”
“இவரு சாதாரண அசிஸ்டண்ட் கமிஷனர் தானே, இவருக்கு எப்படி இவ்வளவு பவர் வந்துச்சி?”.
“அவரோட மாமா இப்போ இருக்குற சட்டத்துறை அமைச்சர் சங்கர்ன்னு உங்களுக்கு தெரியாதா?”
“அப்படியா?” என அவர் வாய்யை பிளக்க.
“ஈ உள்ள டிராவல் ஆகிட்டு வருது வாயை கிளோஸ் பண்ணுங்க ஏட்டு, இங்க டிபார்ட்மெண்ட்ல மட்டும் இல்லை வெளி உலகத்துக்குன்னு யாருக்குமே தெரியாது,நீங்க சொல்லி வெச்சி என் பொழப்புல மண்ணை அள்ளிப் போட்டுட்டாதீங்க.”
“ம்ம்”என்றவர் சொல்லாமல் இருப்பாரா?.
இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க, நந்தன் அனைவரையும் கூர்ந்து கவனித்தவன்.
“எல்லோரும் இந்த ப்ராஜெக்ட்ல நல்லா ஒர்க் பண்ணீங்க , அதனால இன்னிக்கு நைட் என்னோட ட்ரீட், 8 மணிக்கு ஹோட்டல் சோழா வந்துடுங்க” என்றவன், ‘அவ்வளவு தான் பேச்சு வார்த்தை முடிந்தது எல்லோரும் கிளம்புங்க கிளம்புங்க’ என்பது போல் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.
எப்படியாவது சூர்யராஜியின் அடி ஆழம் வரைக்கும் போகணும் எப்படி போறது? என யோசனையில் இருந்தவனை கமிஷ்னரின் வருகை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.
“நந்தா?”
“ம்ம் சொல்லுங்க சார்”.
“என்ன பண்ணிட்டு இருக்க..?”
“சும்மா சூர்யராஜை எப்படி போட்டு தள்ளறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்”.
“நல்லா யோசி அதுக்குள்ள இங்க ஒருத்தி உனக்கு குழித் தோண்டிடுவா போல”
“சரஸ்வதியை சொல்றிங்களா?”.
“தெரியுமா?”
“என்னைய சுத்தி என்ன நடக்குதுன்னு கூட தெரிஞ்சிக்காம இருப்பனா..?”
“மத்தக் கதையிலைலா ஒன்னு ரெண்டு வில்லன்ங்க தான் இருப்பாங்க, உன் கதையில் தான்டா ஏகப்பட்ட வில்லன்ங்க இருக்காங்க”
“நானே பெரிய வில்லன் தான்”
“அதான் சொல்ல வந்தேன், நீயே பெரிய வில்லன் பாவம் அவங்களுக்கு அது தெரியாம ஓடி புடிச்சி விளையாண்டுட்டு இருக்காங்க.”
“இந்த ஏட்டு ஐயப்பன். அந்த சூர்யராஜோட ஆளுப்போல.. அவன்கிட்ட பேசுனதை நானே ரெண்டு மூனு தடவைப் பார்த்துட்டேன்”.
“அவர் எடுப்பார் கைப்பிள்ளை சார் காசுக் குடுத்து யாரு பக்கம் இழுத்தாலும் சாய்வார்.”
“எல்லோரையும் இடம் மாத்திட்ட,அடுத்து என்ன பண்ணப் போற..?
“அதான் யோசிச்சிட்டு இருக்கேன் பையன்னுக்கு எதிரா கிடைச்ச ஆதாரம் அப்பனுக்கு எதிரா கிடைச்சிருக்கலாம்” என நெற்றியை தடவியவன். “நைட் பார்ட்டிக்கு வந்துடுங்க” என்றான் புன்னகையுடன்.
“வேண்டாடா என்னய கவுக்க நிறைய ஆளுங்க எப்போ எப்போன்னு இருக்காங்க, ஒரு வீடியோ லீக் ஆனாலும் போதும் சாய்ச்சிப்புடுவாங்க எனக்குன்னு இன்னொரு நாள் வை கண்டிப்பா வரேன்”.
“ம்ம் “ என்றவன் தலையைப் பிடித்துக் கொண்டு மேஜையில் படுத்து விட்டான்.
இப்போதும் கூட சூர்யராஜ் வண்டாக மூளையை குடைந்தாரே தவிர,நிலாவிடம் சண்டைப் போட்டுவிட்டோம் என்ற எண்ணமே வரவில்லை.
இரவு அனைவருக்கும் விருந்து வைத்து விட்டு நந்தன் வீட்டிற்கு வருவதற்கே இரவு இரண்டு மணியாகி விட்டது
அறைக்கு வந்தவன் நிலா அறையில் இல்லை என்றதும், மறந்து போன அனைத்தும் கண் முன் நிழல் போல் தோன்றியது.
“இவளை.....” என பல்லைக் கடித்தவன் அடித்த இடத்தில் கை வைத்து தடவியவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“என்னமா பேசிட்டுப் போறா நாயி. கை நீட்டுற அளவுக்கு ஆள் வளந்துட்டா”. என்றவன் கோவம் எல்லாம் சுத்தமாக இல்லை. காலையில் அவளிடம் பேசிக் கொள்ளலாம் என படுத்து விட்டான்.
காலை அதி பயங்கரமாக விடியும் என கனவா கண்டான்.
யுகி தன்னுடைய வேலையை முடித்துவிட்டு ரிசைன் லெட்டறை கொடுத்தான்
“பார் வை?” என்றார் மேனேஜர்
“சொந்தமா பிஸ்னஸ் பண்ண போறேன் சார்.ப்ளீஸ் அக்ஸப்ட் மை ரிசைன் லெட்டர்”.
“ஓகே லீவ் இட்” என்று அனுப்பி வைத்துவிட்டார்.
அன்று இரவு தன்னுடைய பூனையைக் காணப் போகிறோம் என்ற ஆவலில் மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு கிளம்பி விட்டான் யுகி .
என்னதான் அவள் நந்தனின் மனைவியாக இருந்தாலும், எப்போதும் அவனது பூனை தானே, காதல் என்ற உணர்வு வருவதற்கு முன்பும் அதே அன்பு குறையாமல் தானே பார்த்துக் கொண்டான். இடையில் வந்த காதல் இடையிலையே போய்விட்டது அதற்காக தன் தூய அன்பை விட்டுக் கொடுக்க முடியாது. என்பதில் உறுதியாக இருக்க, ஆசையாக கிளம்பினான்.
அவன் ஆசை நிறைவேறும் முன் அவன் உயிரை சூறையாடிவிடுவார்கள் என்று அறிந்திருந்தால் என்ன செய்திருப்பானோ? “
இரவு கிளம்பி அதிகாலையில் ரயில் நிலைத்திற்கு வந்தவன், நிலாவிற்கு சப்ரைஸ் தருகிறேன் என யாருக்குமே அவன் வருவதை சொல்லவில்லை.
வெளியே சென்று டாக்ஸி பிடிக்க நின்றான்.
திரு அப்போது தான் பார்ட்டி முடித்து ஒரிசா கிளம்ப ரயில் நிலையத்திற்கு வந்தான்.
டாக்ஸி எதுவும் கிடைக்காததால் அதற்காக காத்திருந்த யுகியின் மீது ஒருவன் மோத...
“ஏய் பார்த்து போ” என விலகி நிற்கப் பார்த்தவனின் கழுத்தை நோக்கி அருவாளை வீசினான் ஒருவன். யுகி சுதாரித்து விலகுவதற்குள் அவன் தோள்ப்பட்டில் வெட்டுப் பட்டு விட்டது.
தன்னை யார் கொல்ல போகிறார்கள்?, அவன் மீது வீசிய அருவாள் தன் மீது பட்டுவிட்டது போல என்று தான் யுகி நினைத்தான், அடுத்து அவன் சுதாரிப்பதற்குள் சரமாறியாக வெட்டு விழுந்துக் கொண்டே இருக்க கையை முகத்துக்கு குறுக்கே மறைத்தவாறு கீழே தரையில் குத்துக் காலிட்டு அமர்ந்துவிட்டான்,
சுற்றி இருப்பவர்கள் ஓடி வருவதற்குள் யுகியை உருகுலைத்து விட்டனர்.
“ஏலேய் நந்தன் சார் சொன்ன மாதிரி வெட்டி புட்டோம், ஆளுங்க வாராக வாலே,” என்று ஒருவன் கத்த சுத்தி இருந்த அடியாட்களுடன் அவனுடன் சேர்ந்து ஓடிவிட்டனர்.
யுகி மயக்கத்திற்கு போகும் முன் அவன் கேட்ட வார்த்தை அது தான். நந்தன் தான் தன்னை வெட்ட சொன்னது என்றதும் உடலில் இருந்த கொஞ்ச நஞ்ச சக்தியும் வற்றிப் போனது. மயக்க நிலையிலும் மனம் மறுகியது.
“ஏண்டா அண்ணா என்மேல உனக்கு கொஞ்சம் கூடவா பாசம் இல்லாம போயிடுச்சி, உனக்காக தானடா என் பூனை விட்டுக் குடுத்துட்டு அவளை விட்டுட்டுப் போனேன் இப்போ அவளைப் பார்க்காமலே செத்துடுவேன் போல” என அவன் ஆவி துடித்தது.
இறக்கப் போகிறோம் என்ற நிலையில் கூட பெற்றவர்களோ கூடப் பிறந்தவர்களோ நினைவில் வரவில்லை, அவனது பூனை தான் வந்தாள்.
சுற்றி இருப்பவர்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் யுகியைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர்.
ரயில் நிலையத்தில் இருந்த திருவிற்கு இந்த விஷயம் போக ரயிலை விட்டுவிட்டு இங்கு ஓடி வந்தவன் பார்த்ததோ நந்தனின் தம்பியை தான்.
“இவர் நந்தன் தம்பி தானே” என யோசித்தவனுக்கு உடல் பதறியது. கூட வேலை செய்தவர்களுக்கே எதுவும் ஆகிவிடக்கூடாது என்று ஊரை விட்டு அனுப்பி வைத்த நந்தன் தன் சொந்த தம்பியின் நிலைப் பார்த்தால் என்ன ஆவனோ என தோன்ற நந்தனுக்கு அழைத்து விட்டான்.
“அம்மாஆஆஆஆஆஆ.....” என நிலா வீடே அதிரக் கத்திக் கொண்டே எழுந்து அமர்ந்தவள்,பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து வேக வேகமாக குடித்தாள்.
சத்தம் கேட்டு ராஜி மாடிக்கு ஓடி வந்தவர்..
“என்ன ஆச்சிடி?” என்க.
“அம்மா அம்மா..”
“ஒன்னுமில்லம்மா ஏதாவது கெட்டக் கனவா இருக்கும்..”
“இல்லம்மா யுகியை யுகியை”
“அதெல்லாம் ஒன்னுமில்ல அவன் நல்லா இருப்பான்.”
“அவனை யாரோ கொல்லற மாதிரி கனவு கண்டேன்ம்மா...விடியற்காலையில கண்ட கனவு பலிக்கும்ன்னு சொல்லுவாங்கல அவனுக்கு ஏதாவது ஆகிடுமோ.” என அலறி துடித்தாள்.
கனவு அந்த அளவிற்கு பயங்கரமாக வந்திருந்தது.
“அதெல்லாம் பலிக்காது அமைதியா படு” என்றவர் அவள் அருகிலையே படுத்து தட்டிக் கொடுக்க.
“கடவுளே கடவுளே கடவுளே அவனுக்கு எதும் ஆகிடக் கூடாது. சாமி சாமி” என வேண்டிக் கொண்டே இருந்தவள்,அப்படியே கண்ணயர்ந்துவிட்டாள்.