Total Views: 1430
யுகியின் விஷயம் திருவின் மூலம் நந்தனுக்கு வந்து சேர்ந்தது..
தூக்கத்தில் இருந்தவனின் அலைபேசி அலற. எடுத்து காதில் வைத்தவன்.
“ம்ம்” என்றான் தூக்கக் கலக்கத்தில்.
“சார் நான் திரு பேசறேன்”.
“சொல்லு.”
“ஒரிசா போக ட்ரெயின் ஏற வந்த இடத்துல உங்க தம்பியை யாரோ நாலுப் பேரு வெட்டிப் போட்டுடாங்க இப்போதான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போறேன்” என்றான்
“என்ன?” என்றவன் பட்டென்று தூக்கத்தில் இருந்து எழுந்து அமர
“சரியா பார்த்தியா அவன் தானா?”
“ஆமா சார், உங்க தம்பியை எனக்கு தெரியாதா?” என்று அங்கு திரு சொல்லிக் கொண்டிருக்க நந்தன் அதற்குள் கார் சாவியை கையில் எடுத்தவன்.
“ஓ மை காட் யார் யாருக்கோ பாதுகாப்பு குடுத்துட்டு இவனை விட்டுட்டேனே” என 😭 அடித்துக் கொண்டவன்.
“அவன் பெங்களூருல இருந்தான் அதான் யாரும் நெருங்க மாட்டாங்கன்னு நினைச்சேன்
இப்போ எப்படி இருக்கான்?”.
“சார் ஹி இஸ் வெரி வெரி டேஞ்சர்.. கண்ணு மண்ணு தெரியாம வெட்டிருக்காங்க.. கழுத்துலையும் முகத்துலையும் காயம் படாம கை வெச்சி மறைச்சதால கை கால் முதுகுன்னு எல்லா இடத்துலையும் வெட்டு விழுந்துருக்கு” என்றான்.
அதைக் கேட்டதும் நந்தன் உடல் குலுங்கி விட்டது. உள்ளுக்குள் தன்னால் தானே என்று உடைந்து போனவன்.
“உயிருக்கு” என்ற வார்த்தை வருவதற்குள் தடுமாறிப் போய்விட்டான்.
“அது டாக்டர் தான் சார் சொல்லணும்” என்றவன் மருத்துவமனை பெயர் சொல்ல.
மின்னல் வேகத்தில் காரை செலுத்தியவன் அடுத்த ஐந்தாவது நிமிடம் மருத்துவமனையில் இருந்தான்.
அவ்வளவு தைரியமான நந்தனையே யுகியின் நிலை அசைத்துப் பார்த்திருக்க, இதை எப்படி குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொல்லுவது? அதும் நிலாவிடம் சொல்ல முடியுமா? என்றவன் கையை ஓங்கி ஓங்கி சுவற்றில் குத்தினான்.
நந்தன் போலீஸில் சேர்ந்ததில் இருந்தே அவர்கள் குடும்பத்திற்கு என்று யாரும் அறியாமல் பாதுகாப்பை ஏற்படுத்தி வைத்திருப்பான், எல்லோரின் அலைபேசியிலும் ஜிபிஆர் எஸ் பொறுத்தி, அவர்களை யாரும் அண்டாதவாறு அடைக்காத்தான்.
அப்படி இருந்தும் நந்தன் ஒரு இடத்தில் சறுக்க, யுகி நிலை இப்படியாகிவிட்டது.
அதை நந்தனால் தாங்க முடியவில்லை உடலும் உள்ளமும் ஒன்றாக உதறியது.
“என்னைய அடிச்சிக்கலாமேடா நான்தானே அவங்களை நோண்டுனேன்., இவனை எதுக்குடா அடிச்சான்ங்க.”
“சார் ப்ளீஸ் காம் டவுன்.”.என்று நந்தனை நிலை நிறுத்த முயற்சி செய்தான் திரு
“உன்னய இந்த நிலைமைக்கு கொண்டு வந்த ஒருத்தனையும் விட மாட்டேன்டா.. நீ கண் தொறக்கறதுக்கு முன்னாடி அவங்களை கொன்னுட்டு வரேன்! என
வேகமாக கிளம்பியவனை இழுத்துப் பிடித்த திரு,
“சார் பொறுமையா இருங்க. உங்களோட இழப்பு பெருசு தான்”,
“டேய் கையை எடு”
“சார்”
“எடுன்னு சொன்னேன்..! அவன் கண்ணில் தெரிந்த தீ ஜுவளை எரிய
திரு பட்டென்று கையை எடுத்து விட்டான்.
“எப்படி அவன் பையன் உயிரோட இருக்கான்னு பார்த்துடறேன்..?”என்றவன் யார் யாருக்கோ அழைத்துப் பேசினான்.
யுகியைப் பார்க்க பார்க்க மேலும் வெறியானதே தவிர அவனின் கோவம் சிறிதுக் கூட அடங்கவில்லை,
யுகியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நின்று சிகிச்சை அளித்துக் கொண்டிருக்க.
“சார்”
“ம்ம்”
“வீட்டுக்கு சொல்லணும்ல” என தயக்கமாக திரு சொல்ல.
‘வேற வழி சொல்லி தானே ஆக வேண்டும்.’ ஒரு மருத்துவர் வெளியே வந்து இதுதான் நிலவரம் என்று சொல்லிவிட்டால் அந்த நம்பிக்கையில் வீட்டில் சொல்லலாம்,இப்போது எப்படி சொல்வது? நந்தனுக்குள் ஏகப் பட்ட தடுமாற்றம்.. அழவில்லை தான் ஆனால் அதற்கும் சேர்த்து மனம் நைந்து போனது தம்பியை இப்படி பார்க்கும் போது.
சிறு வயதில் சண்டைப் போட்டுக்கொண்டு பேசாமல் இருந்தனர். அதற்காக தம்பியின் மீது பாசம் இல்லாமல் போய்விடுமா?.
அலைபேசியைப் பிடித்திருந்த நந்தனின் கை நடுக்கத்தில் ஆட..
“சார் நீங்க நிதானமா இல்லை.. போனைக் குடுங்க நானே வீட்டுல சொல்லிடறேன்” என்றான்
அவன் சொன்னால் தான் சரியாக இருக்கும் என நினைத்தானோ என்னவோ. “இல்ல நானே சொல்லிக்கறேன்” என்று விட்டு மார்த்திக்கு அழைத்தான்.
காலையில வீட்டுல இருந்துட்டு எதுக்கு இவன் கூப்பிடறான் என வெளியே எட்டிப் பார்க்க நந்தன் கார் அங்கு இல்லாமல் போகவும், சட்டென்று அழைப்பை ஏற்று “சொல்லு நந்து” .என்றார்.
மகன் அவ்வளவு எளிதில் அழைக்க மாட்டேன் இன்று அழைத்திருக்கவும் மனம் பதறியது யாருக்கு என்னவோ என்று.
“அப்பா.. “ அந்த குரலில் தான் எத்தனையா வலி..
“கண்ணு என்றா ஆச்சு..?”+இதுநாள் வரைக்கும் இப்படி ஒரு குரலை நந்தனிடம் கேட்டதேயில்லை.
“அப்பா யுகியை வெட்டிங்கப்பா” என்றவனின் குரல் உடைந்து வர.. அதைக் கேட்டதும் மார்த்தியின் கையில் இருந்த போன் கீழே நழுவியது.
மார்த்தி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு பொத்தென்று கீழே விழ.. அருகில் இருந்த கிருஷ்ணம்மாள் என்னவோ எதோ என கத்தி வீட்டையே அலற விட்டுவிட்டார்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் ஹாலில் அனைவரும் கூடிவிட்டனர்.
“என்னாச்சிப்பா.. என்னங்க.. மாமா சொல்லுங்க என்னாச்சி என்று ஆளுக்கு ஆள் கேக்க.. மார்த்தியால் பதில் சொல்ல முடியவில்லை. அலைபேசியை மட்டும் காட்டினார்.
அவரால் பேச முடியவில்லை என்று புரிய, வளவன் அலைபேசியை எடுத்துப் பார்க்க அதில் நந்தன் தான் கடைசியாக அழைத்திருந்தான்.
அவனுக்கே திரும்ப அழைத்தான்.
“ஹெலோ”
“மாமாவுக்கு கூப்பிட்டிருந்தியா?”
“ம்ம்”
“என்ன சொன்ன மனுஷன் இங்க பேச்சு மூச்சில்லாம கிடைக்கறாரு.”
“அது..”
நந்தனிடம் தடுமாற்றமா? வளவனுக்கு ஒன்றும் புரியவில்லை ஆச்சரியமாக இருக்க “எதுக்கு தடுமாறுற..?என்ன பிரச்சனை? “ அவனின் தடுமாற்றம் வளவனை கலங்கச் செய்தது.
“யுகியை வெட்டிடாங்க”.
“ஏய்.... என்ன சொல்ற..? அவன் பெங்களூருல தானே இருக்கான் அங்க எப்படி.?”
“இன்னைக்கு தான் வீட்டுக்கு வர வந்துருக்கான்,இங்க ரயில்வே ஸ்டேஷன்ல தான் வெச்சி போட்டுடாங்க.”
“யாரு?”
தெரிந்தும் “தெரியயல” என்று பொய் சொன்னான்.
கேட்டதும் வளவனுக்கு உயிரே போனது போல் வலிக், இதயத்தை யாரோ துடிக்க துடிக்க பிடுங்கி வெளியே எறிந்தது போல் இருந்தது.சட்டென்று நிலா தான் கண் முன் வந்து போனாள்.
“எந்த ஹாஸ்பிடல்?”என்றவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.
ஹாஸ்பிடல் என்றதும் வீட்டில் இருப்பவர்கள் யாருக்கோ என்னவோ என பதற.. ஷாலினி வளவனை உலுக்கி எடுத்தாள்.
“யாருக்கு என்னங்க ஆச்சி? ஏன் யாரும் சொல்ல மாட்டிக்கிறீங்க?” என பதற..
“அவங்களுக்கு பொறுமையா சொல்லி கூட்டிட்டு வா. அப்புறம் அவ.”
“அவளை என்னால ஹேண்டில் பண்ண முடியாது.நீயே வந்துக்கோ...”
“நானா?” என்றவனுக்கும் வளவன் நிலை தான்.
“என்னால முடியாது நந்து.”
“நான் வரேன்”.
“ம்ம்” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு.விசியத்தை மெதுவாக வீட்டில் இருப்பவர்களுக்கு சொல்ல. பெண்கள் மூவரும் கதறி விட்டனர்.
இப்படியே அழுதுட்டே இருந்தா எப்போ அவனைப் போய் பார்க்கறது? மாமாவை வேற ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகணும், நீங்க வேணா அப்புறம் வாங்க நான் முன்னாடி போறேன்” என வளவன் கோவமாக கத்த,அடுத்த நொடி அனைவரும் காரில் இருந்தனர்.
மார்த்தியை தூக்கி காரில் படுக்க வைத்தவன் காரை எடுக்க, வளவனால் வண்டியின் ஸ்டேரிங்கைப் பிடிக்க முடியவில்லை அந்த அளவிற்கு பதட்டமாகவும், நடுக்கமாகவும் இருக்க.. வண்டியை விட்டு இறங்கிவிட்டான்
“என்னாச்சுங்க?”
“என்னால வண்டி எடுக்க முடியாது?”
“நான் எடுக்கறேன் தள்ளுங்க” என
ஷாலினி வளவனை நகர்த்த,
“என்னாலையே முடியல உன்னால எப்படி?”
“முடியும் பார்த்துக்கலாம்” என்றவள் தைரியமாக வண்டியை எடுத்துவிட்டாள்.
“நிலாவுக்கு சொல்லலையே தங்கம் அவளுக்கு தெரிஞ்சா உயிரையே வுட்டுட்டுவாளே, யார் கண்ணுப் பட்டுச்சோ பையனை நாசம் பண்ணிட்டாங்க” என கிருஷ்ணம்மாள் அழுது கண்ணீர் வடித்தார்.
“அவளை நந்தன் வந்து கூட்டிட்டு வருவான், என்னால அவகிட்ட பேச முடியாது. அவளை அவனால மட்டும் தான் ஹேண்டில் பண்ண முடியும். என்ன அத்தை நீங்க எதுமே பேச மாட்டிக்கிறீங்க” என்று வளவன் மணிமேகலைப் பார்த்தான் அவனுக்கே இவ்வளவு வலிக்கும் போது பெற்றவருக்கு எப்படி இருக்கும்.?.
“நான் தான் என் பையன் கொன்னுட்டேன், அவனை இங்க இருந்து அனுப்பியிருக்கக் கூடாது” என முதல் தடவை வாயை திறக்க
அப்டிலாம் இல்லை இவ்வளவு அவசரமா அவனை யாரு வரச் சொன்னது அம்மு மாதிரி யாருக்கும் எந்த கெட்டதும் நினைக்காதவன் அவனை கொல்ல நினைக்கற அளவுக்கு யாரு எதிரின்னு தெரியலையே என புலம்பியவாறே வந்தான்.
ஷாலினியின் கையில் கார் பறந்துக் கொண்டிருந்தது.
ஆண்களை விட பெண்களுக்கு மன வலிமை அதிகம் அதனால் தான் ஆண் துவண்டு விழும்போது தூக்கிவிடும் ஏணியாக பெண் தாங்குகிறாள். அவளுக்குள் ஆயிரம் கவலைகள் வேதனைகள் இருந்தாலும் அனைத்தையும் மறைத்துக் கொண்டு ஓடி ஓடி உழைத்து தந்தை இல்லாத குடும்பத்தை தூக்கியும் நிறுத்துகிறாள்.
மருத்துவமனையை அடைந்ததும் வளவன் கார் கதவை திறந்துக் கொண்டு வேகமாக ஓட, அவனுக்கு பின் அனைவரும் வந்தனர்.
மார்த்தியை ஸ்ட்ரெக்ஜர் வைத்து தள்ளிக்கொண்டுப் போய் மருத்துவம் பார்த்தனர் மருத்துவர்கள், அதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தான் நந்தன்.
“நந்து” என கத்திக் கொண்டே ஓடி வந்தவன், நந்தனை இறுக அணைத்து அழுதுவிட்டான்.
வளவன் அழுகிறான் நந்தன் அழவில்லை அது மட்டும் தான் வித்தியாசம். மற்றபடி இருவரும் ஒரே நிலையில் தான் இருந்தனர்.
“டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க நந்து?”.
“இன்னும் எதும் சொல்லல்ல. நான் வந்ததுல இருந்து உள்ளே தான் இருக்காங்க” என்றவனின் குரல் முற்றிலும் உடைந்துவிட்டது.
அவர்களை சுற்றி பெண்கள் அழ.. “சார் இது ஐசியூ இங்க அழுதா மத்த பேஸண்சையும் பாதிக்கும் ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க சார்” என்றார் செவிலியர் ஒருவர் தன்மையாக.
“அழாதீங்க அவன் வந்துடுவான்.”
“வருவான் ஆனா திரும்ப பழையபடி நடமாடணும்ல” என்றவன் சிறு கண்ணாடி துவாரத்தின் வழியாக யுகியைப் பார்க்க இன்னுமே மருத்துவர்கள் வெட்டுப்பட்ட இடங்களில் தையல் போட்டுக்கொண்டிருந்தனர்.
அவர்கள் தையல் போடும் வேகத்தைப் பார்த்தால் கண்டிப்பாக யுகி திரும்ப வந்துவிடுவான் என்ற நம்பிக்கை வந்தது.
காலையில் எழுந்த நிலா யுகி வருகிறேன் என்றதால் அவனுக்கு அழைத்துப் பார்த்தாள்.
அலைபேசி அணைக்கப்பட்டிருக்க “என்ன இவன் போன் சுவிட்ச் ஆப்ன்னு வருது. சுவிட்ச் ஆப்லாம் பண்ண மாட்டானே” என்றவள் காலையில் கண்ட கனவு வேறு மனதை பாரமாக்க உடனே வளவனை தேடிப் போனாள்.
பின் வழியாக போனவள், கதவு அடைத்திருக்கவும் சுற்றி முன் பக்கம் வர, கிருஷ்ணசாமியைப் பார்த்துக் கொள்பவர் தான் இருந்தார்.
“அண்ணா எங்க யாரையும் காணா..?”
“தெரியல நிலா, நான் வரும் போது, வளவன் தம்பி தான் கால் பண்ணி சாவி இங்க இருக்கு தாத்தாவைப் பார்த்துக்கோங்கன்னு சொன்னுச்சி.”
“ஓ என்கிட்ட எதுவும் சொல்லலையே.. இப்படி எல்லோரும் கிளம்பி போற அளவுக்கு என்ன வேலையா இருக்கும்?”
“தெரியல சாமி.”
வீட்டில் யாரும் இல்லாததும் யுகியின் போன் அணைக்கப்பட்டிருப்பதும் நிலாவிற்கு எதுவோ தவறாகப்பட.. உடனே வளவன் எண்ணிற்கு அழைத்தாள்.
அவன் நிலாவின் எண்ணைப் பார்த்ததும் எடுக்கவில்லை.. அவன் எடுக்கவில்லை என்றதும் வீட்டில் இருந்த அனைவருக்கும் மாறி மாறி அழைத்தவள், யாருமே எடுக்காமல் போகவும் சந்தேகம் வலுத்தது.
“கடவுளே கடவுளே யாருக்கும் எதுவும் ஆகிடக்கூடாது. யுகி வேற தனியா அவ்வளவு தூரத்துல இருந்து வரான். இவர் வேற நேத்து மதியம் போனது எப்போ வந்தாரு போனாருன்னு தெரியல. கடவுளே காப்பாத்து” என அவசர வேண்டுதலைப் போட்டுவிட்டு.நந்ததனுடன் சண்டை என்பதையும் மறந்து அவனுக்கு அழைத்துவிட்டாள்.
“நந்து..”
“ம்ம்”
“அம்மு போன் பண்ணிட்டே இருக்கா?”
“எடுத்து பேசு” என்று சொல்ல அவனுக்கும் அழைப்பு வந்துவிட்டது.
“நீயே பேசிடு.”என வளவன் சோர்ந்து போய் நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.
“ஹெலோ”.
“ஏங்க?”
“ம்ம்”
“உங்களுக்கு ஒன்னுமில்லையே?”
“இல்ல”
“வீட்டுல வேற யாருமில்லையா? மனசு வேற அடிச்சிட்டே இருந்துச்சி,யாருக்கு என்னவோன்னு போன் பண்ணா யாரும் எடுக்கல, அந்த எருமை யுகிக்கும் கால் போக மாட்டேங்குது, உங்களுக்கு ஒன்னுமில்லன்னா அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமா வீட்டுல எல்லோரும் எங்க போனாங்கன்னு தெரியும்மா உங்களுக்கு?”.
“ம்ம்”
“தெரியுமா சொல்லுங்க?”.
“நீ ரெடியாகி இரு வந்து கூட்டிட்டுப் போறேன்”.
“எங்கைன்னு சொல்லலையே”
“வந்தா தெரிஞ்சிடப் போகுது”. என்றவன் மூச்சை இழுத்துப் பிடித்து பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டான்
இந்த நாலு வார்த்தை பேசுவதற்குள் நாக்கு தள்ளி விட்டது..
“நான் போய் அவளை அழைச்சிட்டு வந்துடறேன்” என பொதுவாக சொல்லிவிட்டு காருக்குப் போனவனால், காரை எடுக்கவே முடியாமல் தடுமாறினான்.நிலாவிடம் எப்படி சொல்வது என தெரியவில்லை.
அவள் அழுவதை பார்க்க ஆசைப்பட்ட காலம் ஒன்று இப்போது அப்படி இல்லை. அவள் கண்களில் கண்ணீர் வந்தாலே அவன் இதயத்தில் கத்தி சொருகியது போல் வலிக்கிறது. யுகியின் நிலை தெரிந்தால் என்ன ஆர்ப்பாட்டம் செய்வாளோ நினைக்கும் போதே கதி கலங்கியது.