Total Views: 1554
அரைமணி நேரப் போராட்டத்திற்கு பிறகு யுகி மெதுவாக கண் விழித்தான்.
அவன் பார்வை நிலாவை தான் வருடியது.
“யுகி..”
“பூ... பூனை” என திக்கி திணறிப் பேச..
“யுகிம்மா ...” என்றவள் அவன் கண் விழித்து சந்தோசத்தில் கதறி விட்டாள்.
“யுகி அவங்க வெளியே இருப்பாங்க, உங்களுக்கு சில டெஸ்ட் எடுக்கணும் கோவாப்பிரேட் பண்ணுங்க,”
“அவளும் இங்கையே இருக்கட்டுமே?”
“அவங்க எங்கயும் போக மாட்டாங்க யுகி, வெளிய தான் இருப்பாங்க” என மருத்துவர் பேசி சமாதானம் செய்து நிலாவை வெளியே அனுப்பிவிட்டார்கள்.
உள்ளேப் போனவள் அரைமணி நேரம் கழித்து வெளியே வரவும்.
“யுகி கண் முழிச்சிட்டானா நிலாம்மா?” என்றார் மார்த்தி.
அனைவரும் அவள் முகத்தை அவளாக பார்த்திருக்க.
“ம்ம்ம்” என்றாள் ஒன்றை சொல்லி யாரிடமும் பேசவில்லை, இன்னும் கூட மனதை அழுத்திக் கொண்டு தான் இருக்கிறாள் அவளால் தான் யுகிக்கு இப்படியாகிவிட்டது.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு மருத்துவர் உள்ளே இருந்து வர எல்லோரும் முன் வந்து நிற்கின்றனர். அவர் என்ன சொல்லப் போகிறாரோ என பதைபதைப்பு அனைவரின் முகத்திலும் இருந்தது.
“எல்லா டெஸ்ட்டும் எடுத்துட்டோம் இப்போதைக்கு ரெண்டு நாள் ஐசியூல இருக்கட்டும், அப்புறம் ரூமுக்கு மாத்திடுவாங்க.அப்போ பார்த்துக்கலாம் இப்போ ஐஞ்சு நிமிஷம் மட்டும் பார்த்துட்டு வந்துடுங்க” என கூறிவிட்டு சென்றுவிட்டார்.
அவர் போனதும் அனைவரும் உள்ளே செல்ல, நிலா உள்ளேப் போகாமல் வெளியவே அமர்ந்துவிட்டாள்.
யுகி பேச முடியாமல் தவிக்கும் போது இதயத்தை ரம்பம் கொண்டு அறுப்பது போல் வலித்தது.
உள்ளே சென்றவர்களிடம் மணி
யுகி என அவன் அருகில் அழுதவாறே செல்ல.. அவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
'உயிரோட இருக்கும் போது எதும் பண்ண மாட்டாங்க சாக போறேனதும் அழுகை தன்னால வருது.'.என மனம் அவர்களுக்கு எதிராக போராடியது.
வளவன், ஷாலினி மார்த்தி மூவரிடம் மட்டும் ஓரிரு வார்த்தைகள் பேசி அனுப்பி வைத்தான்.
நந்தன், கிருஷ்ணம்மாள், மணி மூவரிடமும் பேசவே இல்லை.
நந்தனும் பேச முயலவில்லை.
வந்தான், நின்றான்,சென்றான் என்பது போல் உள்ளே வந்தவன் எதுவும் பேசாமலையே வெளியேறிவிட்டான்.
ஒரு மாதம் ஓடியே விட்டது. யுகியுடன் ஒருவர் மாத்தி ஒருவர் ஷிப்ட் போட்டு தங்கிக் கொண்டார்.
நிலா மட்டும் நிரந்தரமாக தங்கிக் கொண்டாள் அவளைப் போக சொன்னாலும் போக மாட்டேன் என்றுவிட்டாள்.
இன்று நிலாவுடன் நந்தன் தான் தங்க வேண்டும்.. அவன் சாப்பாடு வாங்கப் போயிருந்தான்.
இந்த ஒரு மாதத்தில் நிலாவிற்கும் நந்தனுக்கும் இடையே பயங்கரமாக முட்டிக் கொண்டது.
இரண்டு நாளில் யுகியை அறைக்கு மாற்றி விட்டார்கள்.. மருத்துவமனையில் இருந்ததால் ஒரு மாதிரி இருக்க,அனைவரும் குளித்துவிட்டு யுகிக்கும் நிலாவிற்கும் உணவு எடுத்து வரச் சென்றுவிட்டனர்.
வளவனிற்கு பிஸ்னஸ் விசயமாக தொடர் அழைப்பு வந்த வண்ணமாக இருக்க, நந்தனே அவனைப் போகச் சொல்லிவிட்டான்.
இப்போது யுகி சிறிது பேச ஆரம்பித்தான்.
நிலாவும் நந்தனும் மட்டும் தான் இருந்தனர்.
நந்தனுக்கு அழைப்பு வர,அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே போக நிலா சோகச் சித்திரமாக அமர்ந்திருந்தாள்.
"பூனை"
“ம்ம்ம்”
“ஏன் ஒரு மாதிரி இருக்க.நான்தான் நல்லா இருக்கேன்ல..?”
“அவங்க வெட்டும் போது வலிச்சுதாடா.?”
“வலிக்காம இருக்குமா பூனை..?”
“உனக்கு இப்படி ஆகறதுக்கு நான்தானே காரணம் உன்னைய மட்டும் வர சொல்லாம இருந்திருந்தா, நீயும் வந்துருக்க மாட்ட, அவங்களும் உன்னைய வெட்ட மாட்டாங்க.. வலிச்சுதா யுகி.”
“அவங்க வெட்டுனப்ப வலிச்சதை விட.. அவங்க சொன்ன ஒரு வார்த்தை தான் அதிகம் வலிச்சுது”.
“என்ன சொன்னாங்க..?” என்றாள் மனதாங்கலுடன்
“அது ஒன்னுமில்ல அந்த ஜூசை எது தாகமா இருக்கு”.
நிலா பழச்சாறை எடுத்தவள்.. “அவங்க என்ன சொன்னாங்கன்னு சொல்லு, இல்லனா ஜூசை தர மாட்டேன்”.
“பூனை தவிச்ச வாய்க்கு தண்ணி தரணும்..”
%என்கிட்ட மட்டும் வாய் பேசு அவங்க வெட்ட வந்தா குத்த வெச்சி உக்கார்ந்து இன்னும் கொஞ்சம் வெட்டிட்டுப் போங்கன்னு காட்டிடு இரு.. அவங்க வெட்டும் போது வலிச்சதுலடா இதுவே கழுத்துலையோ நெஞ்சுலையோ பட்டுருந்தா என்ன ஆகியிருக்கும்? எல்லாம் என்னால தானே” என அழுக..
“மறுபடியும் மறுபடியும் எதுக்கு அதையே சொல்ற..அப்படிலாம் எதுவுமில்லை , இப்போவது ஜூசை குடு பூனை.”
“இந்தா” என அவன் அருகில் கொண்டு போனவள்.. மீண்டும் அந்த புராணத்தை ஆரம்பித்துவிட்டாள்.
அந்த நேரம் கதவை திறந்துக் கொண்டு நந்தன் உள்ளே வந்தான். அவன் முகத்தில் புன்னகை இருக்க.. அதைப் பார்த்ததும் யுகிக்கு கோவம் வந்துவிட்டது.
“நீ ஒன்னும் காரணமில்ல ஒரு தப்பும் பண்ணாத நீயே இந்த அளவுக்கு கவலைப்படற, தப்பு செஞ்சவன் எதுமே செய்யாததுப் போல நெஞ்சை நிமித்திட்டு சுத்திட்டு இருக்கான்”.
"யாரை சொல்ற?"
“வேற யாரு உன் புருஷன் தான். இவன் தான், நான் இப்படி படுத்துக் கெடக்க காரணம்.”
“யுகி என்ன சொல்ற?”
“ஏன் நம்பலையா..? இவன் தான் என்னைய கொல்ல சொன்னான்னு சொல்றேன்”
“இல்லை அப்படிலாம் அவர் பண்ண மாட்டார் யுகி தப்பா சொல்லாத”
“ஓ அப்போ நான் பொய் சொல்றனா.. வெட்டுனவங்க நான் செத்துட்டேன்னு நினைச்சி இதை தான் சொன்னாங்க, நந்தன் சார் சொன்ன மாதிரி வெட்டிட்டோம் ஆளுங்க வர மாதிரி இருக்கு வாங்கடா ஓடிடலாம்னு, நான் கடைசியா கேட்டதும் இந்த வார்த்தை. தான்” என்றான் கோவமாக.
நந்தனை நம்பி அவன் அப்படி செய்திருக்க மாட்டான் என்று சொல்லும் நிலா ,யுகி சொன்னதை நம்பவில்லையே என்று..
“அவர் எதுக்கு அப்படி பண்ணனும்?”.
“உனக்கு இன்னும் புரியலையா? உனக்கும் அவனுக்கும் இடையில நான் வந்துடுவேன்னு தான் என்னைய ஆள் வெச்சி கொல்லப் பார்த்தது .யோசிச்சிப் பாரு புரியும்”. என்றான்.
நிலாவின் முகம் குழப்பத்தை தத்தெடுக்க, பழையது அனைத்தும் கண் முன் வந்தது.
அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக வளவனையும்,யுகியையும் ஏதாவது செய்துவிடுவேன் என மிரட்டி தான் திருமணம் செய்துகொண்டான்,அவ்வவ்வப் போது யுகியுடன் பேசும்போது மிரட்டி இருக்கிறான். கடைசியாக சண்டை வரும்போது அதையே தான் சொன்னான், அடுத்த நாளே யுகிக்கு இப்படி நடந்திருக்க முடியுமா இருக்குமோ என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.
ஒன்றும் ஒன்றும் இரண்டு தானே
நந்தன் எதுமே பேசவில்லை நிலா பேசப் போகும் வார்த்தைக்காக காத்திருந்தான்.
பல யோசனைக்குப் பிறகு அவன் முகத்தைப் பார்த்தாள்.
அவளது பார்வையே நந்தனை குற்றம் சாற்றியது.
ஒரு பார்வையில் இறக்க முடியுமா என்றால், மனதளவில் மரணித்து விட்டான் நந்தன். ஒரு நிமிடம் அவளது பார்வையில் கலங்கி நின்றவன் அடுத்த நிமிடம் தன்னை சமன் செய்து கொண்டான்.
பார்வை அவள் சொல்ல வரும் செய்தியை உணர்த்தி விட்டாலும்,அவள் வாயில் இருந்து வரும் வார்த்தைக்காக காத்திருந்தான்.
எழுந்து நின்ற நிலா, “எதுக்குங்க இப்படி பண்றீங்க..? ஏதாவது பண்ணிடுவேன் பண்ணிடுவேன்னு சொல்லும் போதெல்லாம் என்னைய கல்யாணம் பண்ணிக்க தான் அப்படி சொல்றிங்கன்னு நினைச்சேனே,இப்படி உண்மையாவே கூடப் பொறந்தவனை கொல்ல நினைப்பிங்கன்னு நினைக்கல. ச்சீ நீங்கலாம் ஜென்மமா.உங்களைப் போய் காதலிச்சேன் பாரு, என்னைய சொல்லணும், என்றதும் நந்தனுக்கு வலித்ததோ இல்லையோ யுகிக்கு வலித்தது.
அவளும் காதலித்திருக்கிறாள் என்று சொல்லும் போது ஒரு தலையாக காதலித்தவனுக்கு வலிக்க தானே வலித்தது.
நந்தனுக்கு பெரிதாக வலிக்கவில்லை அவள் பார்வையே இப்படி தான் பேசப் போகிறாள் என உணர்த்தும் போதே உள்ளுக்குள் மரணித்துவிட்டான் பிறகு வாய் வார்த்தைகள் போர் தொடுத்து என்ன பயன்?
தொடரும்.
இந்த பாகத்தோட முடிச்சிடலாம்ன்னு தான் நினைச்சேன் முடியலையே இன்னும் நிறைய இருக்கு. நந்தன் காதலை சொல்லணும், எப்போ காதலிச்சான்னு சொல்லணும் யுகிக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் நிறைய கடமை இன்னும் பாக்கி இருப்பதால் அடுத்த பாகமும் நான்தான் வருவேன்னு நந்தன் அடம்பிடிக்கிறான்.