Total Views: 1454
அகந்தை அழிந்ததடி பூந்தளிரே –(பாகம் -4)
நந்தன் இருவரையும் பார்த்து இளக்காரமாக சிரித்தான்.
“எப்படி எப்படி உன்னய நான் கொல்லப் பார்த்தனா? , இந்த நந்தன் கொல்ற அளவுக்கு நீ முதல்ல ஒர்த்தா?,ம்ம்” என ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து கேட்டான்.
“புள்ள பூச்சிய போட நாலுப் பேரை அனுப்பற அளவுக்கு நான் கோழையா என்ன? போடணும்னு நினைச்சிருந்தா ஒரு நிமிஷம் ஆகாது எனக்கு,நேருக்கு நேரா கழுத்தை அறுத்துப் போட்டுட்டு போயிட்டே இருப்பேன்” ,என்றவன் அங்கிருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து அலைபேசியை ஆட்டினான், அதில் ஒரு வீடியோ ஓடிக் கொண்டிருந்தது.
சூர்யராஜ் கைக் கால்கள் கட்டப்பட்டு, வார்த்தைகளில் கூட வடிக்க முடியாத அளவிற்கு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருக்க. அவர் ஐயோ அம்மா வலிக்குதே என கதறிக் கொண்டிருந்தார்.
“நான்தான் உன்னோட தம்பியை கொல்ல ஆள் அனுப்பினேன், தப்பு தான் என் பையனை கொன்னு மேல அனுப்பி வெச்ச மாதிரி, என்னையும் அனுப்பி வெச்சிடு வலி தாங்க முடியல,”என அழுக..நிலாவிற்கு பாவமாகப் போய் விட்டது.
இந்த அளவிற்கு கொடுமையை வேடிக்கைப் பார்க்கும் அளவிற்கு நிலாவிற்கு இறுகிய மனமில்லை.
“அவரை விட்டுடுங்க...நீங்க அது” ஏதோ பேச வந்தவளை கை நீட்டி தடுத்தவன்.
“அவனையும் விட்டுடறேன் உன்னையும் விட்டுடறேன், யார் வேணா என்னைய சந்தேகப்பட்டுட்டு போகட்டும்டி நீ எப்படிடி சந்தேகப்படலாம்?. என்னோட ஒரு நாள்ன்னாலும் உயிரா உடலா வாழ்ந்துருக்க தானே ,அதுகூட நம்பிக்கையைக் கொடுக்கலையா? எந்த இடத்துல உன்னையக் காயப்படுத்துனேன்” என்றவனுக்கு அந்த ஒருநாள் கூடல் கண் முன் வந்தது.
அந்த நேரத்தில் தெரியாமல் கூட அவளைக் காயப்படுத்திடக் கூடாது என எந்த அளவிற்கு மென்மையாக கையாண்டான். கைதிகளை அடித்து உரம் ஏறி இருக்கும் கையும் உடலும் பூந்தளிர் போன்றிருக்கும் தன்னவளைப் பாதித்திடக் கூடாது என பார்த்து பார்த்து மென்மையாக கூடினான்.
அப்போதே தெரியவேண்டாம் அவள் மீது எந்த அளவிற்கு உயிராய் இருக்கிறான் என்று.
காதல் சொல்லி புரியும் என்பதை விட செயலால் கண்டு உணர்வது தானே உண்மையான காதல். வெறும் வார்த்தைகள் கொடுக்கும் நம்பிக்கைகள் கூட, தன்னுடைய செயல்கள் கொடுக்கவில்லையே என நினைக்கும் போதும் இதயம் கூறுப்போட்டது.
வலிகளை வெளியேக் காட்டாமல் எச்சிலை கூட்டி விழுங்கியவன்..
“உன்னைய மிரட்டுனது நீ சொன்ன மாதிரி உன்னய கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு தான். இவனை கொன்னு எனக்கு எந்த புரோஜனமுமில்ல?” என்றவன்,
“இனி நீயே நந்தன் நந்தன்னு சொன்னாலும் ஹா நீதான் நந்தன் சொல்லமாட்டியே விஜய் விஜய்ன்னு வந்தாலும் எனக்கு நீ வேண்டாம்டி . போய்டு” என்றான்..
நிலா தந்தை இறந்தப் போது நந்தன் செய்தத் தவறை மறைத்து, அவன் செய்யவில்லை தான் தான் செய்தேன் என்று சொல்லிய நிலாவை அவ்வளவு பிடித்தது.
இன்று செய்யாத தவறை செய்தேன் என குற்றம் சாட்டும் போதும் இதயத்தை கூறுப்போடுவது போல் வலிக்கிறது.
நந்தனின் கூற்றில் நிலா விழிப் பிதுங்கி நின்றாள். யுகி என்று வரும்போது அவளால் யாரையும் நம்ப முடியவில்லை.
யுகி பொய் சொல்ல மாட்டான், வளவன் நிலாவைப் பார்த்தும் அவர்களுடன் இருந்தும் வளர்ந்தவனுக்கு பொய் சொல்வதோ, பகட்டு காட்டுவதோ, ஜாதிக்கு கொடிப் பிடிப்பதோ சுத்தமாக பிடிக்காது.
அதனால் தானே யுகி சொன்னதை நம்பினாள். நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போல் அவரவருக்கு ஒரு நியாயம் இருக்கத் தான் செய்யும்.
அடுத்து யுகியின் அருகில் போனவன்.
“நான் கெட்டவன் தான், அதுக்காக தம்பியைக் கொல்ற அளவுக்கு நான் இன்னும் கெட்டவனா மாறல.. அறியாத வயசுல எனக்கு பயந்து இவ உன் பின்னாடி ஒளியும் போது எனக்கு உன்மேல பயங்கர கோவம் வரும்,
அதனால தான் அன்னிக்கு உன்னோட சண்டைப் போட்டு , இப்போ வரைக்கும் கூடப் பேசாம இருக்கேன்.அதுக்காக உன் மேல பாசம் இல்லைன்னு அர்த்தமில்ல.நீங்க யாரும் என்கிட்ட ஒட்டல, நானும் நீங்க யாரும் வேண்டாம்னு தள்ளி நின்னுகிட்டேன் அவ்வளவு தான்” என அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டு அங்கியிருந்து சென்று விட்டான்.
அன்றைய நாளில் இருந்து நந்தன் நிலாவிடம் பேசுவதே இல்லை, அவளும் ஆயிரம் சாரி கேட்டுவிட்டாள், எதற்கும் மசிய மாட்டேன் என நந்தன் சுற்றிக் கொண்டியிருக்க, இருவருக்கும் இடையே பனிப் போர் நடந்தது.
பேசாத யுகிடமே நந்தன் பேச ஆரம்பித்து விட்டான், ஆனால் நிலாவிடம் பேசவில்லை.
“பூனை நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க தானே.”
“அப்படி தான் நினைக்கிறேன்டா, இன்னும் ஒரு வாரம் இருந்து உடம்பை சரிப் பண்ணிட்டு போலாம்னு நான் சொன்னா நீ எங்க கேக்கற.?”
“நான் காய்ச்சலுக்கு கூட ஹாஸ்பிடல் பக்கம் போக மாட்டேன்னு உனக்கு தெரியும் தானே,, இந்த சும்மல் வாமிட் வர மாதிரி இருக்கு பூனை.”
“சரி அங்கப் போய் ஏதாவது இஸ்யூ ஆச்சின்னா டாக்டரை வர சொல்லுவோம்”.
“ஒரு மாசம் ஆனதுக்கு அப்புறமும் என்ன ஆகப்போகுது?”
“சொல்ல முடியாதுடா நீ நடக்க ஆரம்பிச்சப்பிறகு ஏதாவது வலி குடுக்கலாம்ல” .
“பாப்போம்”.
“வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம் உன்கிட்ட ஒன்னு கேக்கணும். எனக்கு உண்மையான பதில் மட்டும் சொல்லணும்” என்று நிலா அவனை ஆழ்ந்துப் பார்க்க.
யுகி பேச வருவதற்குள் நந்தன் உள்ளே வர யுகி அமைதியாகிவிட்டான்
ஆனாலும் அவன் மனம் அடித்துக் கொண்டது
என்னவா இருக்கும் நான் இவளை லவ் பண்ணது தெரிஞ்சிருக்குமோ. அது தெரிஞ்ச ரெண்டுப் பேரும் இவகிட்ட கண்டிப்பா சொல்லமாட்டாங்க வேற என்னவா இருக்கும் என மண்டையை போட்டு உருட்டத் தொடங்கிவிட்டான்.
உள்ளே வந்த நந்தன் சாப்பாட்டை மேஜையின் மீது வைத்தவன். யுகியை தூக்கிக் கொண்டு குளியலறைக்குச் சென்று வந்தான்.
“என்னால நடக்க முடியுது”
“ம்ம்”
“நானே போயிக்கறேன்”
“நான் இல்லாதப்ப போய்க்கோ” என்றவன்,மீண்டும் அவனை படுக்கையில் அமர வைத்து, மணி செய்துக் கொடுத்த சத்தான உணவை யுகிக்கு கொடுத்தான்.
இது மாதிரி ஒரு நிகழ்வு நடக்கும் என்று நிலா எதிர்பார்க்கவேயில்லை.
நந்தன் இல்லாதப் போது யுகியிடம் கூட கிண்டல் செய்வாள்.
“என்னடா உன்னோட அண்ணன் இத்தனை வருஷம் பேசாம இருந்ததுக்கும் சேர்த்து வெச்சி செய்யறாங்க போல..உன்னைய கீழையே விடாம தாங்கறாரு” என்பாள்.
மார்த்தி இருந்தாலும், வளவன் இருந்தாலும், நந்தன் செய்ததை தான் செய்வார்கள், அவர்கள் செய்வது இயல்பு, நந்தன் செய்வது அப்படி இல்லாததால் மொத்தக் குடும்பமுமே வாய் மேல் விரல் வைத்து ஆச்சரியமாகப் பார்த்தது.
அவன் வாங்கி வந்த பார்சலை நிலாவின் பக்கம் நகர்த்தி வைத்தான்.
“ஏன் தின்னுன்னு சொன்னா வாய்ல இருக்க முத்து கொட்டிட்டும் போல..”என முணுமுணுக்க அது கேட்டாலும் அவள் இருக்கும் பக்கம் திரும்பவில்லை.
‘அவளது கண்ணைப் பார்த்தால் தான் சார் அப்படியே மயங்கிவிடுவாரே பிறகு எப்படி கோவத்தை இழுத்துப் பிடிப்பது..?’
நந்தன் மீது இருக்கும் பயமெல்லாம் நிலாவிற்கு இப்போது இல்லை. அவனை தன்னிடம் எப்படியாவது பேச வைத்து விட வேண்டும் என அவளும் வேண்டாத வேலையெல்லாம் பார்த்து வைக்கிறாள்.
கால் மேல் கால்ப் போட்டு அமர்ந்திருந்தவனைப் பார்க்கும் போது நிலாவிற்கு உணர்வு வெள்ளம் உடைபெடுக்க தான் செய்தது. அந்த ஒருநாள் கூடல் வேறு உடலை ஊசியாக குத்தி நரம்புகளில் வீணை மீட்டி இசைக்க..யுகி அறியாமல் நந்தனின் அருகில் தள்ளி அமர்ந்தாள்.
“டாக்டர் நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்ன்னு சொன்னாங்க,” பொதுவாக சொன்னான் நந்தன்.
யுகி படுக்கையில் அமர்ந்திருக்க, அவனுக்கு நந்தன் தெரிவான், நந்தனின் பின்னால் நிலா அமர்ந்திருந்ததால் அவள் என்ன செய்தாலும் தெரியாது, அந்த தைரியத்தில் விரலை மெதுவாக எடுத்துச் சென்று நந்தனின் முதுகை கிள்ளினாள்
“ஸ்ஸ்ஆஆஆஆ..” எதிர்பாரா தாக்குதலில் நந்தன் கத்திவிட.
“என்னாச்சு” என்றான் யுகி.
“கொசு கடிச்சிடுச்சு, இந்த கொசு தொல்லை தாங்க முடியல, முதல்ல அடிச்சி தூக்கணும்” என நிலாவை முறைத்தான்.
“பூனை சாப்பிடலையா..நீ?”
“ஹா சாப்பிடணும் யுகி.”
“சீக்கிரம் சாப்பிட்டு படு, எனக்கு தூக்கம் வருது” என்றான்.
மாத்திரை போடுவதால் யுகிக்கு கண் தூக்கத்தில் சுழற்றியது.
“இரு படுக்க வைக்கிறேன்”. என நந்தன் எந்திரிக்க
“வேண்டா நானே படுத்துப்பேன்”.
“வீட்டுக்குப் போனதும் நீயே பண்ணிக்கோ,யாரு வேண்டாம்னு சொன்னது?” என்ற நந்தன் யுகியை மெதுவாகப் படுக்கையில் சாய்த்து போர்வையைப் போர்த்திவிட்டான்.
காயங்கள் ஆறிக் கொண்டே வந்தது சில இடங்களில் அருவாளின் வேகத்தில் எலும்புகள் பாதிக்கப்பட்டியிருக்க நடக்கவோ சாப்பிடவோ தான் கஷ்டமாக இருந்தது யுகிக்கு.
நந்தன் நிலாவை “நீ சாப்பிடறியா? லைட்டை ஆப் பண்ணவா?”’ என்பது போல் பார்த்தான்.
“நீ பேசாம நான் சாப்பிட மாட்டேன்” என அவளும் புடிவாதமாக நிற்க, போர்வையை கீழே விரித்துப் போட்டவன், விளக்கை அணைத்துவிட்டு படுத்துவிட்டான்.
“ஐயையோ இவன் பேசணும்னு சாப்பிடாம வேற இருந்துட்டேனே இப்போ வயிறு வேற பசிக்குதே என்ன பண்றது? உனக்கு இது தேவையா நிலா? நமக்குலா சோறு தான் முக்கியம்ன்னு உனக்கு தெரியாதா? எதுக்கு வீம்பு புடிச்ச?” என அவளுக்கு அவளே திட்டிக் கொண்டாள்.
ஐந்து நிமிடம் கழித்து விளக்கைப் போட்டுவிட்டு மீண்டும் படுத்தான்.
பகல் முழுவதும் ஓடிய அலுப்பு வேறு உடலை அமுக்க.. கண்கள் தூக்கத்திற்கு கெஞ்சியது. அவள் சாப்பிடாமல் இருக்கும் போது எப்படி தூங்குவது என கண்களை மட்டும் மூடிப் படுத்திருந்தான்.
சிறிது நேரம் கழித்து நிலா சாப்புடுகிறாள் என உணவு வாசத்தை வைத்தேக் கண்டுக் கொண்டவனுக்கு உதட்டின் ஓரம் துடித்தது.
“ஏங்க?” குனுங்கியது அவனது மாடப்புறா
அவன் பக்கம் எந்த வித ரியாக்சனும் வரவில்லை என்றதும். ‘தூங்கிட்டாரோ’ என அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு ஓடி வந்தாள்.
அவன் அருகில் படுத்தால் ஏதாவது சொல்லுவானோ என்றும் இருந்தது. அதே சமயம் அவன் அருகாமை வேண்டும் என்றும் போல் மனம் உந்த ஒரு ஆர்வத்தில் அவன் அருகில் படுத்துவிட்டாள்.
பத்தடி தூரமிருந்தாலும் மனைவியின் வாசத்தை கண்டறிபவன், பக்கத்தில் இருக்கும் போது அறியாமல் இருப்பானா? அவனது நாடி நரம்புகள் அனைத்தும் விழித்துக் கொண்டது.
எந்த அளவிற்கு போகிறாள் என பார்க்க ஆசை, அமைதியாக இருந்தான்.
அவன் முன் கையை நீட்டி ஆட்டி ஆட்டிப் பார்த்தாள். ‘உண்மையாவே தூக்கிட்டாரோ இதுவும் நல்லதுக்கு தான்’ என அவன் மார்பில் லேசா முகம் புதைத்தாள்..
நேரம் ஆக ஆக அதுவே அழுத்தமாக மாறி அவனுள் புகுந்துக் கொள்பவள் போல் தலையை அழுத்த..
நந்தனின் இதழ் விரிந்து கிடந்தது. எத்தனை நாள் ஏங்கி இருப்பான். இதுப்போன்ற நாட்களுக்காக, அது இன்று நடக்கும் போது மனம் காற்றில் பறக்க அதனுடன் சேர்ந்து கோவமும் காற்றில் பறந்து விட்டது.
எப்போதும் காதலிப்பதை விட காதலிக்கப்படுவது தான் பேரானந்தம். அதை அனுபவிக்க நினைத்தவனுக்கு கோவம் எல்லாம் எம்மாத்திரம். வருடக்கணக்கில் தாயிடமும்,தம்பியிடமும் பேசாமல் இருக்க முடிந்த நந்தனால், நிலாவிடம் அப்படி இருக்க முடியவில்லையே.. அவனின் அகந்தை அழிந்தது இந்த பூந்தளிரிடம் மட்டும் தான்.
பூவாக மேலே மனைவி படுத்திருக்கும் போது அவனது உணர்வுகள் எழும்பாமல் இருக்குமா என்ன?.
ஹார்மோன்கள் அனைத்தும் அதன் வேலையை சிறப்பாக செய்தது.கைகள் வேறு அள்ளி அணைக்க சொல்லிப் பரப்பரக்க, மனதை அடக்கி அது அடங்குவதற்குள் விடிந்தே விட்டது.
காலையில் ஐந்து மணிக்கு யுகிக்கு ரத்த அழுத்தம் பார்ப்பதற்காக செவிலியர் வருவார், அது நியாபகம் வர நிலாவை ஒதுக்கிப் படுக்க வைத்துவிட்டு இவன் சோபாவில் சென்றுப் படுத்துக் கொண்டான்.
இவ்வளவு நேரம் மேலே படுத்திருந்தவளைத் கண் மூடாமல் பார்த்து ரசித்தவன், இப்போது சோபாவில் படுத்துக்கொண்டு வசதியாக ரசித்தான்
அவளின் பால் முகம் மனதில் எத்தனை கவலை இருந்தாலும் மறக்க அடித்துவிடும் ஆயுதம் அவனுக்கு. இந்த முகத்தை இந்த எட்டு வருடத்தில் பார்க்க தவமிருந்திருப்பான்.
இந்தக் காதல் எங்கே தொடங்கியது.
ஜாதி, பிரிவு, தகுதி தராதரம் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து வளர்க்கப்பட்டவன் எப்போது அதை எல்லாம் மறந்து நிலாவை காதலிக்க ஆரம்பித்தான்.
அவன் மனதில் சிறு வயதில் இருந்தே ஆழத் திணிக்கப்பட்ட ஒன்றில் இருந்து வெளியே வருவது அவ்வளவு எளிதல்ல, அப்படி இருக்கும் போது அதில் இருந்து வெளியே வந்து நிலாவைக் காதலிக்கும் அளவிற்கு மனம் மாறிவிட்டானா.? இல்லை அவன் காதல் அவனை மாற்றி விட்டதா?
அவனே சொன்னால் தான் தெரியும்