இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை =100 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 06-08-2024

Total Views: 1570

அப்போது தான் நந்தனின் காதலை நிலாவும் புரிந்துக் கொள்வாள். பல இடங்களில் விளக்கங்கள் தேவைப்படவில்லை என்றாலும் சில இடங்களில் விளக்கங்கள் மிகவும் முக்கியமான ஒன்றாக தான் இருக்கிறது, அதை அகந்தைப் பார்க்காமல் கொடுத்துவிட்டாலே வாழ்வு மகிழ்வாக அமைந்துவிடும்.

‘நான் எதுக்கு விளக்கம் சொல்லணும் இவ்வளவு வருசம் வாழ்றியே இதுதான் என்னைய புரிஞ்சிகிட்டதா?’ என்ற அகந்தை அங்கு தலைத் தூக்கினால் வாழ்க்கை போராட்டமாக தான் அமையும். 

சிறு வயதில் நிலாவை அடிக்கும் போது நந்தன் மகிழ்ச்சி அடைந்தது அனைத்தும் உண்மை தான், அதில்  காதல் இருந்ததில்லை.அன்பு இருந்ததில்லை ஏன் அக்கறைக் கூட இருந்ததில்லை.  எதோ சோத்துக்கு வழியில்லாத கூட்டம்,  வாழ வழியில்லாமல் தங்களை நம்பி வந்திருக்கிறது என்பது போல தான்  கிருஷ்ணம்மாள் பேசுவார் அதை கேட்டு கேட்டு மனதில் பதிய வைத்துக்கொண்டான்.

அவனிடம் எப்போது காதல் தோன்றியது என்று கேட்டால் கண்டிப்பாக அவனுக்கும் தெரியாது என்று தான் சொல்லுவான்.

யுகி, வளவன், ஷாலினி, நிலா நால்வரும் ஒன்றாக சுற்றும் போது,தகுதி தராதாரம் பார்த்து அவர்களை ஒதுக்கி வைத்துவிடுவான். அப்படி தான் கிருஷ்ணம்மாள் சொல்லிக் கொடுத்து வளர்த்தினார்.

“நந்து, நீ நம்ப ஜாதி பசங்க கூட மட்டும் தான் சேரணும், அவங்க கூட மட்டும் தான் விளையாடனும்,அவங்கக் கூட தான் சாப்பிடணும், அவங்கக் கூட நட்பு வெச்சிக்கணும்” என  ஒவ்வொரு முறையும் அவன் மனதில் பிரிவை பற்றி  பதியம் போடுவது போல் ஆழப் புதைத்தார்.,

அவர்கள் ஜாதியை  மட்டும் தான் கவுருவமாகவும், உயர் ஜாதியாகவும் பார்த்தனர்.

ஒருநாள் ஆசையாக நந்தன் ஐஸ் வாங்கி சாப்பிட, அதை தட்டி விட்ட கிருஷ்ணம்மாள்.

“அந்த ஐஸ்காரன் அந்த  கீழ் தெருவுக்குலாம் போய் சுத்திட்டு வருவான், அதை வாங்கி சாப்பிடறியே” என்று கடிந்தார்.

தள்ளுவண்டியில் விற்றுக் கொண்டு வருபவனிடம் வாங்கி திங்கக் கூடாது அந்த தெருவுக்கு போனாலே தீட்டு, அவர்களைத் தொட்டாலே தீட்டு என்பது போல் குழந்தை மனதில் பதிந்துவிட்டது.

இந்த சமூகம் என்ன கற்றுக் கொடுக்கிறதோ அதை தானே குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்.

நந்தன் இப்படி ஆனதற்கு ஒரு காரணம் கிருஷ்ணம்மாள் என்றால், இன்னொரு காரணம் முழுக்க முழுக்க மணிமேகலை தான்.

தாயானப்பட்டவள் பத்துக் குழந்தை பெற்றாலும், அனைத்தையும் ஒரே மாதிரி தான் பார்க்க வேண்டும்.இரண்டாவது குழந்தை பிறந்ததும் முதல் குழந்தைக்கான முக்கியத்துவம்  தாயிடம் குறையும் போது அதுக்கான அங்கீகாரம் எங்கு கிடைக்கிறதோ அங்குப் போய் ஒட்டிக் கொள்கிறது.

யுகி பிறந்ததும் நந்தனைக் கவனிக்க முடியவில்லை என மணிமேகலை கிருஷ்ணம்மாளிடம் கொடுக்க, அவர் அவருக்கு தகுந்த மாதிரி நந்தனை வடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அப்போது அவனுக்கு இரண்டு வயதிற்கும் அவ்வளவு தானே இரண்டு வயது குழந்தை தாயின் மடியை தானே தேடும், அது மணிமேகலையிடம் கிடைக்கவில்லை. கிருஷ்ணம்மாளிடம் தான் கிடைத்தது.

அடிக்க வந்தான் என பேசாமல் இருந்துவிட்டால் தாயின் கடமை முடிந்து விடுமா?.

அவன் எதிர்த்து பேசினாலும், அடித்து பேசினாலும் அவன் தலையில்லையே நாலு கொட்டு கொட்டி ‘இப்படி தான் இருக்கனும்,இப்படி செய்யணும்’ என கற்றுக் கொடுப்பது தாயின் கடமை தானே.

குழந்தைப் பருவத்தில் மறுக்கப்படும் அன்புக் கூட பெரிதாக பாதிக்காது,விவரம் தெரிந்த வயதில் மறுக்கப்படும் அன்பு அதீத வலியைக் கொடுக்கும்.

மூன்று பிள்ளைகள் வளரும் வீட்டில் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் தாய் மடி கிடைத்தால், மற்ற குழந்தை அந்த மடிக்கு ஏங்காதா?,

கணவனின் அன்பு தனக்கு கிடைக்கவில்லை என்றதும் அதைப் போராடி பெற தெரியாமல், ‘கொடுத்தா கொடுக்கட்டும் இல்லனா போகட்டும்’ என்று இருந்ததுப் போல் மகனின் அன்பையும் நினைத்துவிட்டார் போலும்..

நந்தனை மணிமேகலை ஒவ்வொரு முறை ஒதுக்கும் போதும் அவன் மனதால் பயங்கரமாக அடி வாங்கினான்.

தெரிந்து நடந்ததோ இல்லை தெரியாமல் நடந்ததோ இதில் அதிகம்  பாதிக்கப்பட்டது நந்தன் தானே.

சத்தமாக சிரித்தால் கவருவம் போய்விடும் நம்ப ஜாதி பசங்க இப்படி சிரிக்க மாட்டாங்க, இப்படி நடக்க மாட்டாங்க, இப்படி துணி உடுத்தமாட்டாங்க, இப்படி தான்  இருக்கனும்,இவர்களிடம் தான் பேசணும், இவ்வளவு தான் சிரிக்கணும், கீழ் ஜாதியை சேர்ந்தவர்கள் தன்னை விட வயதில் பெரியவராக இருந்தாலும் வாடா போடா என்று தான் சொல்ல வேண்டும். மரியாதைக் கொடுக்கக்கூடாது என அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் விதித்து அடுத்த தலைமுறைக்கு  ஒரு ஜாதிவெறியனை உருவாக்கிக் கொண்டிருந்தார் கிருஷ்ணம்மாள்.

அவரைச் சொல்லியும் குற்றமில்லை. அவர் வளர்ந்த சமூகம் அப்படி இருந்திருக்கிறது அவரது பெற்றோர்கள் இதைச் சொல்லி தானே அவரையும் வளர்த்திருப்பார்கள். இப்போது இருக்கும் தலைமுறைக்கு தான் பெற்றவர்கள்  தங்கள் வளர்ந்த முறையில் இருந்து வெளியே வந்து அனைவரும் சமம் எனச் சொல்லித் தர வேண்டும். தொழில்நுட்பம் ஆர்ட்டிபிசியல் இன்டெலெஜென்ஸ் என முன்னேறி என்னப் பயன். இன்னும் ஜாதிகள் ஒழிந்தப்பாடில்லையே.

“ஜாதிகள் இல்லையடிப் பாப்பா” என பாரதியார்  சொன்னால் போதுமா பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டாமா?. எத்தனை போராட்டத் தலைவர்கள் வந்தாலும் விதையை விதைத்து வளர்க்கும் பெற்றோர்கள் சொல்லி வளர்க்காமல் இங்கு எதுவும் மாறப் போறதில்லை. 

அன்று நிலாவின் மண்டையை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கல்லை எரிந்தான் அது அவள் மண்டையில் பட்டு ரத்தம் வரும் போது நிலா துடித்த துடிப்பு  கதறிய கதறல் அவனை நிலைக் குலையச் செய்தது என்றால் மிகையாகாது.

நந்தனின் மனம் அடியாக அடித்துக் கொண்டது என்னவோ உண்மை.

“ஐயோ பாப்பா மண்டையில் ரத்தம் வருதே”  என அவன் உள்ளம் பதறிக் கொண்டிருக்க, மணிமேகலை வந்து அடிக்கவும் அந்த நேரத்தில் அவனுள் எழுந்த மாற்றத்தை எப்படி வெளிக்காட்டுவது என தெரியாமல் தாயிடம் கத்திவிட்டான்.

அவன் செய்தது தவறு தான். நிலாவை அடித்ததாக இருக்கட்டும், மணியை பேசியதாக இருக்கட்டும், இரண்டுமே தவறு தான். அதை அவனுக்கு எடுத்து சொல்லிப் புரிய வைத்திருக்க வேண்டாமா..?அதற்கான எந்த முயற்சியையும் மணி எடுக்கவில்லையே..அவன் சொல்லிவிட்டான் என ஒரு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு பல வருடம்  எந்த தாயாவது பேசாமல் இருப்பாரா?,  ஒரு ஆசிரியராகப் பல மாணவர்களின் மனதை தினம் தினம் படிப்பவர், அவர் மகனின் மனதை படிக்கத் தவறியது ஏனோ?.

அகந்தையின் மறு உருவமாக வளர்க்கப்பட்டவனுக்கு வளைந்து போகத் தெரியவில்லை. ‘நீ பேசலையா, போ நானும் பேசல, உனக்கு நான் முக்கியமில்லையா அப்போ எனக்கும் நீ முக்கியமில்லை’, என்பதோடு இருந்துக் கொண்டான்.

மணிமேகலை ஒவ்வொரு முறை யுகியையும், ஷாலினியையும் கொஞ்சும் போது நந்தன் எத்தனை முறை ஏக்கமாகப் பார்த்திருக்கிறான்.

அவர்களிடம் தாயைப் போல் நடந்து கொள்ளாமல் ஒரு தோழியைப் போல் சிரித்துப் பேசி சந்தோஷமாக இருப்பார், அதில் நந்தனையும் சேர்த்திருந்தால் அவனும் இந்த அளவிற்கு அகந்தைப் பிடித்தவனாக வளர்ந்து நிற்க மாட்டான்.

குழந்தையின் தவறு பெற்றோர்களிடம் இருந்து தானே ஆரம்பம் ஆகிறது. மணி தன் பையன் தானே என இறங்கி போய் பேசியிருக்கலாம்.

நந்தனின் ஏக்கம், கோவம் அனைத்தும் நிலாவிடம் கோவமாக வெளிப்படும், அவன் ‘அம்மா பேசாமல் போனதுக்கு காரணம் இவள் தானே’ என அவளைப் போட்டு அடிப்பான். சீண்டுவான், கிள்ளுவான்.

அவள் அழுகையில் ஆனந்தம் கண்டான் என்று சொன்னால் மிகையாகாது.

கிரிக்கெட் விளையாடியப் போது நந்தன் நிலாவை வேண்டாம் என்றப் பிறகும் கூட அவள் விளையாட வந்தது எரிச்சலைக் கொடுத்தது. அதனால் உண்டான கோவத்தை நிலாவின் nமீதுக் காட்டினான். அப்படி இருந்தும் அவனை பாம்பு கடித்துவிட்டது என பொய்யாகச் சொன்னதிற்கு அவன் கையைப் பிடித்துக் கொண்டு அவள் அழுத அழுகை நந்தனிற்கு அவ்வளவு ஒரு ஆனந்தத்தைக் கொடுத்தது.எனக்காக அவள் அழுகுகிறாள் அதுவே பேரானந்தம் தானே.

அவள் தந்தை இறந்து விட்டார் என்று சொல்லாமல் விட்டு அடி வாங்கிய போது அவனுக்காக வந்து நின்றவள் அவள் மட்டும் தான்,

அம்மா, தம்பி, தங்கை என யாருமே வராதப் போது, நிலா வந்தது, நந்தன் மனதை குளிர்விக்க தான் செய்தது. அவனை அறியாமலே ‘யார் வேணா என்னைய விட்டுப் போங்கடா எனக்காக இவ இருக்கா. எனக்கான ஒருத்தி இவ’  மனதில் ஆழப் பதிய வைத்துக் கொண்டான்.

அந்த இடத்திலையே ஜாதி மதம் தகுதி தராதரம் அனைத்தும் உடைந்து விட்டது.

பொங்கல் அன்று வீட்டிற்கு வந்த நிலாவின் உடையைப் பார்த்து நண்பர்கள் ஏதாவது சொல்வதற்கு முன், தானே சொல்லி அனுப்பிவிட வேண்டும் என்று முரடனாக பேச.. அது எங்கோ போய் முடிந்தது.

தான் ஒன்று செய்தால் இது தான் நடக்கும் என யோசித்து செய்யும் அளவிற்கு பக்குவப்பட்ட வயதில்லையே அந்த பிரச்சனையில் யுகியும் பேசாமல் போக..

‘எவ்வளவோ பார்த்துட்டோம் இதைப் பார்க்க மாட்டோமா?’ என மனதை இறுக்கிக் கொண்டான், யாரிடமும் யாருக்காகவும் இளகாத மனம் நிலாவிடம் இளகியது.

அவனும்,  ‘சாம்பில் பார்க்கறேன்,  இந்த தடவை மாட்டி விட்டுடுவா பாரு’ என்ன ஒவ்வொரு முறையும் நிலாவை டார்ச்சர் செய்யும் போது,அவள் அழுவாளே தவிர யாரிடமும் சொல்ல மாட்டாள். இந்த சின்ன சின்ன விஷயங்கள் தான் நந்தனை நிலாப் பக்கம் ஈர்த்தது.

வெண்ணிலா ஐஸ்கீரிம் பிரச்சனை வந்தப் போது யுகி முதலில் எனக்கு வெண்ணிலா தான் வேண்டும் என்று சொல்லி எடுத்தும் விட்டான்.

அதெப்படி அவ பெயர் இருக்கறதை அவன் எடுக்கலாம் என்ற கோவம், அதை சிரித்துக் கொண்டு பார்த்த நிலாவின் மீது கோவம். அவனிடம் மட்டும் சிரிக்கும் நிலாவை வெறுத்தான்.

‘என்னைக் கண்டு ஓடி ஒளியரா அதுவே அவன்னா யுகி யுகின்னு செல்லம் கொஞ்ச வேண்டியது’ என்ற கோவம் அதனால் தான் வெண்ணிலா ஐஸ்கிரீமே பிடிக்காது என்று பணத்தை எடுத்துச் சென்று அதே வெண்ணிலா ஐஸ்கிரீமை வாங்கி தின்றான்.

இப்படி தான் அவனின் வெளிப்பாடுகள் இருந்தது.. அன்பையும் கோவமாக காட்டினால் தான் ஜாதி பெருமை பேச முடியும் என தப்பாக சொல்லிக் கொடுத்துவிட்டார் கிருஷ்ணம்மாள் அது தான் உண்மை போல என நந்தனும் அவ்வாறே நடந்துக் கொண்டான்.

நிலா பருவம் எய்தப் போது வலியோடு அவன் மீது வாந்தி எடுத்துவிட்டு திட்டவானோ என பயந்து முழித்தப் போதெல்லாம், அவன் அகந்தைக் கொண்ட மனது  ஒருப் பக்கம் பெருமையாக எண்ணினாலும்,

இன்னொருப் பக்கம் ‘ஏய் ஏண்டி என்னையக் கண்டு பயப்படற, முதல்ல எல்லோர்கிட்டையும் பேசற மாதிரி இயல்பா என்கிட்டயும் இருடி’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது.

ஒருவேளை நிலா நந்தனிடம் இயல்பாக இருந்திருந்தால் அவனை ஈர்த்திருக்க மாட்டாளோ? என்னவோ?. எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கும் என்பது போல் திமிர்க் கொண்டவனை பூந்தளிர்  ஈர்க்கச் செய்தாள்.சுண்டி இழுக்கவும் செய்தாள்.

அதற்கு பெயர் காதல் என்று தெரியாது,இதுதான் காதல் என்று 
தெரிந்ததிருந்தால், உஷா காதல் சொன்னப் போதே மறுப்பு சொல்லிருப்பான்.

கல்லூரிக்குச் சென்ற காலங்களில் தான் நந்தன் நிலாவை மிகவும் தேடினான். நிலா பிறந்த நாளில் இருந்து சண்டை என்றாலும், சச்சரவு என்றாலும்,  தினமும் அவள் பூ முகத்தைப் பார்த்து விடுவானே,  அடிப்பதற்காகவாது அவளைத் தேடி போனவன் தானே, கல்லூரிக்கு வந்ததில் இருந்து பார்க்க முடியாமல் தவித்தான். அவன் இல்லாமல் நிலா இங்கு சந்தோசமாக இருந்தாள் என தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பானோ.

விடுமுறை தினங்களில் அவளைக் காணவே ஆவலாக வருவான், அவனுக்கு பயந்து நிலா ஊருக்கு போய் ஒளியவும் , ‘ஓடி ஒளியறவளை தேடிப் போற அளவுக்கு நான் என்ன அவ்வளவு மட்டமாகப் போய்ட்டனா?எங்க தகுதி என்ன? தராதரம் என்ன?தாராபுரம் என்ன? அவளே அப்படி ஓடி ஒளியும் போது நான் என்ன குறைஞ்சவனா? அவளை தேடிப் போக?’, என நிலாவை தேடிய மனதை அடக்கிக் கொண்டான்.

முகிலன் நிலாவைப் பார்த்ததையே தாங்க முடியவில்லை, இதில் அவளை கை தாங்களாகப் பிடிக்க வேறு செய்யவும், தான் மிளகாய் பொடியை கண்ணில் தூவிவிட்டான்.. அவன் வியாவிற்கு அவன் தான் பாதுகாப்பு. அப்படி தான் அவன் மனதில் பதிய வைத்துக் கொண்டான்.அவனைத் தாண்டி தான் யாராக இருந்தாலும் செல்ல வேண்டும். இதற்கு விதிவிலக்காக இருந்த யுகி, வளவன் இருவரையும் நிலாவிற்காக மட்டுமே வெறுத்தான்.

உஷாவின் காதலை ஏற்றுக்கொள்ளும் வரைக்கும் தெரியவில்லை. தன்னிடம் இருக்கும் நோட் புக்கைப் போல தான் உஷாவையும் ஒரு பொருளாக நினைத்தான். நிலாவைப் பார்க்க வேண்டும் என மனம் துடிப்பதுப் போல, உஷா கல்லூரிக்கு வரவில்லை என்றால் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே எழுந்ததில்லை.

பேக்கரியில் நிலாவை வேறு ஒரு பையனுடன் பார்த்ததும் நந்தனின் அரக்க குணம் விழித்துக் கொண்டது.

இதுநாள் வரைக்கும் குடும்ப நபர்களுடன் மட்டுமே நிலாவைப் பார்த்துப் பழகியவனுக்கு அந்நிய ஆணுடன் நிலாவைப் பார்க்கவும் எங்கு தன் பொருளை இன்னொருவன் தூக்கிப் போய்விடுவானோ என்றப்  பயம். ஏற்கனவே அவளை நெருங்க முடியாதவாறு வளவன் யுகி இருவரும் அரணாக நின்று காவல் காக்க.

“என்னைப் பத்தி யோசிக்கிற,என்னக்கா இருக்கறவ அவ ஒருத்தி தான், நான் அவளை யாருக்காகவும் விட்டுக் குடுக்க மாட்டேன்” என்ற வெறியில் தான் அப்படி நடந்துக் கொண்டான்.

அதன்விளைவு நிலா குடும்பம் பெங்களூருவிற்கு இடம் பெயர்ந்துவிட்டது.



Leave a comment


Comments


Related Post