Total Views: 1397
இதற்கு விரைவில் தீர்வு காணவில்லை என்றால் பெரும் பிரச்சனையில் வந்து முடியும் என்று மட்டும் புரிந்துக் கொண்டான்.
வீட்டிற்குப் போனதும் யுகியைத் தூக்கி சோபாவில் அமர வைத்த நந்தன் . அவன் அருகில் அமர்ந்து செய்திதாளைப் பிரித்துப் படித்தான்.
பால் வாங்கி வந்த நிலா சோபாவில் இருந்த நந்தனைப் பார்த்துவிட்டு பாலை காய்ச்சிக் கொண்டிருந்தாள்.
அவனை சீண்ட வேண்டும் போல் இருந்தது. தன் சீண்டலுக்கு பதில் சொல்லாமல் ஓடும் அவனைப் பார்க்க அவ்வளவு ஆனந்தமாக இருந்தது.
மணியும், நிலாவும் தான் அடுப்பின் அருகில் நின்றிருந்தனர்.
பாலைக் காய்ச்சி எடுத்து அடுப்பு மேடையில் வைக்கப் போனவள் கை தவறி கீழேப் போட்டு விட்டாள்.அது மணியின் காலில் கொட்டி விட்டது.
“ஆஆஆஆஆஆஆஆஆஆஆ... “மணியின் சத்தம் அந்த வீட்டையே அதிரச் செய்ய...
தாயின் குரல் கேட்டதும் ஹாலில் இருந்த நந்தன் வேகமாக ஓடி வந்தவன்
“என்னாச்சி..?” என்று பதறிக் கொண்டே கேக்க, மணி காலைப் பிடித்து நிற்பதையும், நிலா பயந்தவாறு சுவரோடு ஒன்றி இருப்பதையும் பார்த்தவன்.
என்ன என்றுக் கூட கேக்காமல் நிலாவை அறைந்திருந்தான்.
“உன்னைய யாரு இங்க வரச் சொன்னது?, வேலை செய்யறேன்னு பெருசா வந்துட்டா, போடி வெளியே. இனி வூட்டுப் பக்கம் வந்த மரியாதை இருக்காது. அவங்களுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும் அப்புறம் இருக்கு உனக்கு” என்றவன் மணியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினான்.
நந்தனின் மிகப்பெரிய பலவீனம் பாசம் தான். கிடைக்காத அன்பிற்கு அவனிடம் இந்த அளவிற்கு மதிப்பு இருக்கிறது என்று தெரிந்தால் எல்லோரும் அவனை ஈ மிப்பது போல் மிச்சி விடுவார்கள்.
தாயும் மகனும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் மணிக்கு சிறு தலைவலியில் முகம் சுருக்கினாலும் அதைக் கண்டுக் கொள்வான் நந்தன்.அவன் நினைத்திருந்தால் அனைத்தையும் உடைத்துக் கொண்டு அவர்களிடம் பேசியிருக்கலாம், ஏனோ விலகியே இருந்துக் கொண்டான்.
அடிவாங்கிய நிலா அதிர்ந்து அப்படியே நின்று விட்டாள். அவன் அடித்ததை விட பேசிய வார்த்தைகள் தான் அதிகம் வலியைக் கொடுத்தது.
சத்தம் கேட்டு ஷாலினி, வளவன், கிருஷ்ணம்மாள் என எல்லோரும் ஓடி வர. அதற்குள் வண்டிக்கேப் போய்விட்டான் நந்தன்
“ஒன்னுமில்லப்பா.. ஆயில்மெண்ட் போட்டா சரியாகிடும். இதுக்கு எதுக்கு ஹாஸ்பிடல். “ என்ற மணிக்கு வலியையும் மீறி சந்தோசத்தில் ஆனந்த கண்ணீர் வந்தது.
பாதி பால் தான் அவர் மீது பட்டிருந்தது, சூடாக படவும் அவரால் வலி தாங்க முடியவில்லை உடனே கத்திவிட்டார்.
பூனை என்னாச்சி நீயாவது சொல்லு என யுகி கத்திக் கொண்டிருக்க வளவன் நிலாவை அழைத்துக் கொண்டு வந்து யுகியின் அருகில் அமர வைத்திருந்தான்.
“என்னடம்மா?” என வளவன் மென்மையாக கேட்டான்.
“பால் எடுத்து வைக்கும் போது கை தவறிடுச்சிண்ணா”
“உனக்கு ஒன்னுமில்லையே”.யுகியும் வளவனும் ஒரு சேரக் கேட்டனர்.
“அத்தை காலுல” என்றவளால் பேச முடியவில்லை. தெரிந்தே செய்யவில்லை என்றாலும் தவறு தானே.
“உனக்கு என்னாச்சி? நீயும் அங்க தானே இருந்த,உன் காலுல படலையா” என்ற யுகி ஷாலினிக்கு கண்ணைக் காட்ட அவளோ நிலாவின் காலில் இருந்த பேண்டை தூக்கிப் பார்த்தாள்.
அவள் காலிலும் பால் கொட்டி இருந்தது,இவ்வளவு நேரம் பார்க்காமல் இருந்ததால் தோள் உறிந்து கொப்பளம் வேறு போட்டிருந்தது.
“என்னடி இது உனக்கும் காயமாகியிருக்கு அண்ணாகிட்ட சொல்லிருக்க வேண்டியது தானே”.என்றவள் “வா ஹாஸ்பிடல் போலாம் ஏங்க உங்க காரை எடுங்க” என்றாள்.
“இல்லை வேண்டாம் அதெல்லாம் சரியா போய்டும், இங்க்கு இல்லனா மாவு எடுத்துட்டு வா ஷாலு அதைப் போட்டுக்கறேன்.”
“அறிவு இல்லையா உனக்கு, அவன் கத்தும் போது உனக்கும் தான் காயம் பட்டுருக்குன்னு சொல்லி ஹாஸ்பிடல் போறதுக்கு என்ன?” என யுகி வேற சண்டைப் போட..
அழக் கூடாது என அடக்கி வைத்தாலும் நந்தனின் வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டே இருக்க. அவளையும் மீறி கண்ணீர் துளிகள் கன்னம் தொட்டது.
“கேட்டதுக்கு பதில் சொல்லாம எதுக்கு அழற..?”
“அவர் அத்தைக்காக துடிச்சத்தைப் பார்க்கும் போது எதுமே பேசத் தோணல” என்றாள் மெதுவாக.
அப்போது தான் அங்கிருந்த அனைவருமே அதை உணர்ந்தனர்.இவ்வளவு நாளும் பேசாதவன் இன்று அவருக்கு ஒன்று என்றதும் எப்படி துடித்து விட்டான்.
“அவருக்கு அத்தை மேல மட்டும் இல்ல உங்க எல்லோர் மேலையும் கொள்ள பாசமிருக்கு. அதை காட்டத் தெரியல. அன்னைக்கு யுகிக்காகவும் சரி, இன்னைக்கு அத்தைக்காகவும் சரி அவர் துடிச்சதுல பொய் இல்லை” என்றாள் மெதுவாக.
“இப்போ யாரு பொய்ன்னு சொன்னா,ஒன்னு ஹாஸ்பிடல் கிளம்பி போ இல்லனா மருந்து போடு இப்படியே விட்டின்னா கால் முழுக்க கொப்புளிச்சுடும்” என்றார் கிருஷ்ணம்மாள்.
“சாரி நான் அப்படி கேர்லஸா இருந்துருக்கக் கூடாது”.
“நடந்து முடிஞ்சிருச்சு இனி பேசி என்ன பண்ண..? போய் மருந்து போடு”.
“அண்ணா என்னய நம்ப வீட்டுக்கு கூட்டிட்டுப் போறியா?”
“ம்ம் வா” என கை தாங்களாக அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றவன். தீ காயங்களுக்கு இடும் தலும்பு மருந்தை நிலாவின் காலில் போட்டுவிட்டான்
“ராஜி என்னாச்சி?” என துளைத்து எடுக்க அவரிடம் நடந்ததை கூறினான்.
மணிக்கு மருத்துவம் பார்த்துவிட்டு திரும்ப வந்துக் கொண்டிருந்தனர் நந்தனும் மணிமேகலையும்.
இவ்வளவு நாளும் தூர இருந்தே பார்த்து பழகியவர்,இன்று அருகில் இருந்த நந்தனை கண்களாலும் மனதாலும் நிரப்பிக் கொண்டார் .
“நந்து”
“ம்ம்”
“எதுக்குப்பா இவ்வளவு கோவம்?”
“அவ உங்க கால் மேல பாலை ஊத்திட்டு ஓரமாக போய் நின்னுட்டு இருக்கா..” என்றவனுக்கும் கோவம் இன்னும் மட்டுப்படவே இல்லை.
மணிமேகலையை விட்டு தள்ளி இருந்தான் தான் இத்தனை வருடம் அவரும் பேசவில்லை இவனும் பேசவில்லை பிடிக்கலையா பேசாம இருந்துக்கோங்க என்று விலகிக் கொண்டான்.
ஆனால் அவர் மீது உயிரையே வைத்துருக்கிறான். விலகி செல்லும் ஒன்றின் மீது தான் ஈர்ப்பு வரும் என்பது நந்தன் விஷயத்தில் உண்மை.
நிலாவை அடித்து மண்டையை உடைத்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் மணியை தவறாக பேசிவிட்டான்
சிறு வயதில் இருந்த நந்தனுக்கு அப்போது தெரியவில்லை. வளர வளர தான் அவன் செய்த தவறு உறைக்க தொடங்கியது.
இருந்தாலும் தானாக சென்று பேச தான் மனம் இறங்கவில்லை. அதே நிலாவின் விஷயத்தை வைத்து தான் மணி மீண்டும் நந்தனிடம் பேசினார்.
வேற ஏதாவது விஷயத்திற்கு பேசியிருந்தால் கண்டிப்பா பேசிருப்பான், அவனே திட்டம் போட்டு எப்படி அவளை தூக்குவது என்ற எண்ணத்தில் செய்துக் கொண்டிருக்கும் போது அவளை தன்னிடம் இருந்து காப்பாற்றுவது போல் பேசினால் எப்படி பேசுவான்.
தாயா? காதலா? என்றதும் தாயிடம் பேசிக்கொள்ளலாம் காதலை இழந்தால் என்ன செய்வது. அவள் இன்றி அவனால் இருக்க முடியுமா? அதனால் தான் நிலாவின் பக்கம் நின்று தாயை ஒதுக்கி வைத்தான்..
“நந்து அவளுக்கும் கால்ல பால் கொட்டியிருக்குப்பா” . என்றார் நழிந்த குரலில்.
“என்ன.....?” என்று அதிர்ந்தவன் காரை ஓரமாக நிறுத்தியே விட.
கோவத்தில் மதி இழந்து நின்றவனை அவனுக்கு அவனே திட்டிக் கொண்டான்.
“அதிகம் பட்டுடுச்சா..”
“என்னைய விட அவளுக்கு தான் அதிகம் பட்டுருக்கும் நான் பயத்துல கத்திட்டேன்”, என்றவர் மகனின் அழைப்புறுதலை பார்த்து நிம்மதியடைந்தது.
“சீக்கிரம் சேர்ந்துடுவாங்க” என எண்ணிக் கொண்டார் பாவம் அவருக்கு என்ன தெரியும் இவனின் நாடகத்தைப் பற்றி.
“அவளுக்கு காயமாகிருக்குன்னு தெரியாம அடிச்சிட்டேனே” என்று எண்ணியவனுக்கு இப்பதே அவனளவனைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.முகத்தில் அதைக் காட்டவில்லை. எப்போதும் போல் இறுகியே இருந்தான்.
மார்த்தி வேலை விசயமாக வெளியேப் போயிருக்க அவருக்கும் அழைத்துச் சொல்லிவிட்டான்.
“தம்பி பால் தானே ஊத்துச்சி இதுக்கு எதுகைவு அவர்கிட்ட சொல்லணும்”.
“அவர்கிட்ட தான் சொல்லனும்” என அழுத்தமாக சொன்னான்.
கார் நேராக வீட்டின் வாசலில் நிற்க,அவர்கள் வந்ததும் ஷாலினி ஓடி வந்து அம்மாவைப் பார்த்தாள்.
“எப்படிம்மா இருக்கு?”
“கொப்பளம் போடாம இருக்க, ஆயில்மெண்ட் குடுத்துக்காங்க செபிட்க் ஆகக் கூடாதுன்னு ஊசிப் போட்டுருக்காங்க” என்றவரின் முகம் வெகுநாட்கள் கழித்து மலர்ந்து இருந்தது.
அவ்வளவு வலியைத் தாண்டியும் முகம் மலர்ந்திருப்பதைப் பார்த்த ஷாலினிக்கு புரிந்தது தாய் மூத்த மகனின் அன்பிற்கு எந்த அளவிற்கு ஏங்கியிருக்கிறார் என்று.
“நிலாவுக்கு எப்படி இருக்கு?”
அவளுக்கும் காயம் தான், கணுகால் எல்லாம் கொப்பளிச்சிடுச்சி, ஹாஸ்பிடல் கூப்பிட்டா வர மாட்டேன்னு சொல்லிட்டா ஆயில்மெண்ட் தடவி அங்க அவ ரூமுல படுக்க வெச்சிருக்கோம்” என்றவள் நந்தனைப் பார்க்க அவன் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இங்கு தான் இருப்பாள் என நினைத்து நந்தன் உள்ளே நுழைய. நிலாவோ அவளது வீட்டிற்கு சென்றிருக்கவும் முகம் மேலும் இறுகி விட்டது.
யாரிடமும் கேக்கவும் பிடிக்கவில்லை,தலையைப் பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்துவிட்டான்.
அவன் செய்தது தவறு என புரிகிறது. இறங்கி வந்து பழகாதவனுக்கு இந்த தருணம் அவளிடம் இறங்கி போய் மன்னிப்பு கேக்க தோன்றவுமுல்லை அதைக் காட்டிலும் வரவுமில்லை.
“அண்ணா காபி குடுக்கிறிங்களா கொண்டு வரவா?” என்றாள் ஷாலினி.
“இல்ல வேண்டாம் எனக்கு வெளியே வேலை இருக்கு”, என்றவன் குளித்துவிட்டு சாப்பிடாமல் கூட கிளம்பிவிட்டான்.
நேராக அவனுடைய அலுவலகம் சென்றவன், வேலையில் கவனத்தை செலுத்தி தன்னவளின் நினைவில் இருந்து வெளி வரலாம் என நினைத்தான்,அதற்கு இரண்டு கைதிகள் மரண அடி வாங்கியது தான் மிச்சம்.
தனது அறையில் படுத்திருந்த நிலாவிற்கு நந்தன் அடித்தது எதும் பெரிதாக வலிக்கவில்லை அவளை வர வேண்டாம் என்று சொல்லிவிட்டானே என்ற வலி மட்டும் தான்.
இத்தனை வருடம் தன்னால் பேசாமல் இருந்தவர்கள் இன்று பேசிக் கொண்டதில் அளவு கடந்த சந்தோசம் உண்டானது.
காலில் பால் கொட்டியதில் வலித்தாலும். தன்னவனை நினைத்துக்கொண்டே படுத்திருந்தாள்.
மதியம் டிவி பார்த்துக்கொண்டிருந்த ராஜியின் அலைபேசி அலறியது.
“ஹெலோ.”
“நான் நந்தன் பேசறேன்.”
“சொல்லுங்க தம்பி.”
“அவ என்ன பண்ணிட்டு இருக்கா..?”
“கால்ல பால் கொட்டுனதுல கொப்பளம் போட்டுருக்கு அதான் மருந்து தடவிவிட்டேன்.ரொம்ப வலிக்குதுன்னு சொன்னான்னு வளவன் தான் பெயின் கில்லர் மாத்திரைக் குடுக்கச் சொன்னான் குடுத்து தூங்க வெச்சிருக்கேன்,” என்றார்.
“ம்ம் நான் போன் பண்ணது அவளுக்கு தெரியவேண்டாம்” என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு புயல் போல் கிளம்பிவிட்டான்.
அவள் தூங்கும் போது தான் பார்க்க முடியும். அவளின் காதலின் எல்லையைப் பார்க்கும் வரைக்கும் அவளை நெருங்குவதில்லை என்ற முடிவில் இருக்கிறான்.
காரைக் கொண்டு வந்து வேகமாக நிறுத்தியவன் அதே வேகத்துடன் உள்ளே நுழைந்தான்.
“எங்க இருக்கா?”
“மேலே ரூமில”
“கால அடிபட்டவளை எதுக்கு மேல போக விட்டீங்க, ஏதாவது தேவைன்னா புண்ணு காலை வெச்சிட்டு ஏறி ஏறி இறங்க முடியுமா?” என ராஜியிடம் காய்ந்தவன். மாடி ஏறி விட்டான்.
நிலா தான் வளவனிடம் அடம்பிடித்து மேலேக் கொண்டு வந்து விடச் சொன்னாள். அங்கிருந்தாவது நந்தனின் அசைவுகளைப் பார்த்துக்கொள்ளலாம் என்று.
நந்தன் மெதுவாக உள்ளே செல்ல நிலா தூங்கிக் கொண்டிருக்க, அவள் பாதம் அருகே அமர்ந்து விட்டான்.
பால் பட்ட இடத்தில் ஆடைப் பட்டு உரசிவிடக்கூடாது என சுடிதார் பேண்டை சற்று மேலே தூக்கிவிடப் பட்டிருக்க நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
அவள் உறங்குகிறாள் என அறிந்துக் கொண்டு தானே கள்வன் அங்கு வந்ததே.
நேற்று முத்தமிட்ட பட்டுப் போன்ற மென்மையான பாதம் இன்று காயத்தில் முக்குளித்திருக்க அவன் வாங்கிக் கொடுத்த கொலுசு காயத்தில் பட்டு உரசிக் கொண்டிருந்தது.
ஆடையை தூக்கி விட்டவள்,நினைத்திருந்தால் கொலுசையும் கழட்டி வைத்திருக்கலாம்.அவ்வாறு அவள் செய்யாதது ஏனோ நந்தனின் மனதை பிசைந்தது.
காயத்தில் முத்தமிட்டவன். “சாரிடி.. அம்மா கத்தவும் என்னால எதையும் யோசிக்கமுடியல” என்றவனின் கண்ணீர் துளிகள் அவள் காயத்தில் பட்டு தெரித்தது.
“ஆஆ” என மெல்லிய முனகல் நிலாவிடம் இருந்து வந்தது.
என்னது நந்தன் அழுகிறானா..!!!!மனதளவில் பலக் காயங்கள் பட்டப் போதுக் கூட திமிராக நெஞ்சை நிமிர்த்தி நின்றவன், தினமும் கைதிகளை அடித்து உதைத்து கண்ணீர் வர வைப்பவன், யுகி வெட்டுப்பட்டு கிடந்தப் போதுக் கூட மனதளவில் மறித்துப் போனானே தவிர கண்கள் கலங்கவில்லை.
எதற்காகவும் கலங்கி நிற்காத நந்தன் இன்று நிலாவின் சிறுக் காயத்திற்கும் அவன் செய்த தவறுக்கும் கலங்கி நிற்கிறான்.