இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -108 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 15-08-2024

Total Views: 1410

“குட்டி உன்னோட விஜய் தப்பு பண்ணிட்டேன் என்னைய மன்னிச்சுடுடி” என குழந்தையாக அவள் காலைப் பட்டும் படாமல் பிடித்துக் கொண்டான்.

இதை நிலா கேட்டிருந்தால் எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பாள். அந்த பாக்கியத்தை வழங்க மறுத்துவிட்டான் நந்தன்.

விட்டால் நிலாவின் கால் மாட்டிலையே படுத்திருப்பான், அவள் எழுவது போல் அசைவு தெரியவும் சட்டென்று எழுந்து வெளியே சென்று விட்டான்.

கீழேப் போனவன்.

“நான் வந்தது யாருக்கும் தெரிய வேண்டாம்” என ராஜியிடம் சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்

அவன் சற்று முன்னர் அவன் கண்கள் கண்ணீர் சிந்தியது என சூடம் அடித்து சத்தியம் செய்து சொல்லிருந்தாலும் ராஜி நம்பிருக்க மாட்டார்.

அப்போது சென்றவன் தான் அன்று இரவு வரையிலும் வீடு வந்து சேரவில்லை.

நந்தன் வந்து சென்ற அரைமணி நேரம் கழித்து எழுந்த நிலா. அறையில் எதோ வாசம் அடிக்கவும் மூக்கை சுருக்கினாள்.

“இது அவர் வாசம் தானே?. காலையில எந்திரிக்கும் போதும் இந்த வாசம் தான் வந்துச்சி.இப்போவும் வருது.இங்க வந்துருப்பாரோ..அவர் எதுக்கு இங்க வராரு, அவர் நினைப்பாவே இருக்கவும் தோணிருக்கும் என கேள்வியும் அவளே கேட்டு பதிலும் அவளே சொல்லிக் கொண்டாள்.

எழுந்து நடந்துப் பார்த்தாள்

நடக்கும் இடத்தில் காயமில்லாததால் அங்கும் இங்கும் நடந்தாள், அதற்குள் யுகியிடம் இருந்து நான்கு அழைப்பு வந்துவிட்டது.

“இவன் ஒருத்தன் எனக்கு தலை வலிச்சாலும் ஆயிரம் தடவை போன் போட்டு கேப்பான், இப்போ காலே வெந்துப் போய் கிடக்குது சும்மா இருப்பானா?” என்று கோவமாக சொன்னாலும் உள்ளுக்குள் அவன் அன்பில் நெகிழ்ந்தவாறே அழைப்பை ஏற்று காதில் வைக்க.

“தூங்கி எழுந்துட்டியா?”

“எழுந்தா தானேடா போன் எடுக்க முடியும்.”

“ம்ம் இப்போ வலி எப்படி இருக்கு?”

“பரவாயில்ல.”

“வரியா இங்க , பார்க்கணும் போல இருக்கு”.

“நீ மாத்திரை போட்டியா?”

“போட்டுட்டேன்”.

“ம்ம்” என்றவளுக்கு நந்தன் வர வேண்டாம் என்றதையும் மீறி எப்படி போவது என தயக்கமாக இருக்க.

“என்ன பூனை யோசிக்கற,வரலையா நான் நடக்கற வரைக்கும் எதைப் பத்தியும் யோசிக்காம வா ப்ளீஸ்”

“இதுக்கு எதுக்குடா ப்ளீஸ்லா சொல்ற, வரேன் வை”

“ம்ம் பார்த்து பொறுமையா வா” என்றவன் அழைப்பைத் துண்டித்ததும்.

“ஆயா....... “என்று கத்தினான்.

“என்ன ராசா..?”

“எனக்கு கேசரி சாப்பிடணும் போல இருக்கு நெய் அதிகம் ஊத்தி செய்”.

“டேய் உங்க அம்மா செஞ்சா தானே உனக்கு புடிக்கும்” 

“அவங்க தான் கால் அடிபட்டு உக்கார்ந்து இருக்காங்கள, இன்னைக்கு ஒரு நாள் நீ செய், எப்படி இருந்தாலும் திங்கறேன் போ” என்று அவசரப்படுத்தினான்.

உடம்பு முடியாத பையன் என்பதால் கிருஷ்ணமாளும் எதுவும் சொல்லவில்லை. அவன் சொன்னதை செய்யப் போய்விட்டார்.

இரவு ஏழு மணி இருக்கும் போது நிலா மெதுவாக நடந்து நந்தன் வீட்டிற்குச் சென்றாள்.

“வா பூனை இப்போ எப்படி இருக்கு? ஆயா அந்த கேசரியைக் கொண்டு வா”.

“படுபாவி பையன் இவனுக்கு சாப்பிட கேட்டுட்டு, அவ வந்ததும் அப்படியே மாறிட்டான். இவளுக்காக தான் செய்ய சொல்லிருப்பான்” என முனைவிக் கொண்டே கேசரியை எடுத்துக் கொண்டு வந்து நிலாவின் கையில் திணித்து விட்டு சென்றார்.

“எதுக்குடா இது?”.

“சாப்புடு.. இந்த மாதிரி டைம்ல உனக்கு புடிச்சது சாப்பிட்டா வலி பெருசா தெரியாதுன்னு நீ தான் புடிச்சதை சாப்பிடுவியே”

“அனுபவம் பேசுதோ”. என்றவள் கேசரியை எடுத்து வாயில் வைக்க.

உண்மையாகவே ருசியாக இருந்தது.

“நல்லா இருக்குடா”

“ஆயா தான் செஞ்சிது எனக்கு ஒரு வாய் வை”.

“ம்ம்” என அவள் சாப்பிட்ட ஸ்பூனிலையே அவனுக்கும் கொடுக்கப் போக.

அதைப் பார்த்த கிருஷ்ணம்மாள்.

“ஏய் ஏய் அறிவு இருக்காடி உனக்கு?, நீ தின்ன ஸ்பூன்ல அவனுக்கு குடுக்கற?” என அவள் நீட்டிய ஸ்பூனைப் பறித்து விட்டார்.

இதுநாள் வரையிலும் அப்படி யோசித்து சாப்பிட்டதில்லை. இருவரும்,  மாற்றி மாற்றி ஒருவர் சாப்பிட்ட கையோடு மற்றொருவருக்கு ஊட்டிக் கொள்வார்கள்.ஒரே தட்டில் சாப்பிட்டுக் கொள்வார்கள். அந்த நினைவில் தான் இன்றும் கொடுத்துவிட்டாள்.கிருஷ்ணம்மாள் சொன்னதும் நிலாவின் முகம் வாடிவிட.

“ஆயா உனக்கு தான் அறிவு இல்ல. நாங்க என்ன புதுசாவா இப்படி சாப்பிடறோம். இப்போ வந்து சொல்ற?”.

“இவ்வளவு நாள் அவளுக்கு கல்யாணம் ஆகல, ஒன்னு மண்ணா பழகுனீங்க, இப்போ தான் அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சுல அவ தின்ன தட்டுல நீ தின்னா பார்க்கறவன் தப்பா பேச மாட்டான்.அவ தட்டுல அவ புருஷன் தான் திங்கனும்.”

“யார் என்ன நினைச்சா எங்களுக்கு என்ன?. நாங்க இப்படி தான் இருப்போம்”.என்றாலும் உள்ளுக்குள் நொறுங்கிப் போய்விட்டான் 

ஒரு திருமண பந்தம் இருவரையும் பிரித்து தனி தனியாக நிறுத்தி விட்டது.

அவனுக்கு என ஒருத்தியும்,அவளுக்கு என ஒருவனும் இருக்கிறார்கள், இனி அவர்களுடன் தான் வாழ்க்கை நகரப் போகிறது என்று நிதர்சனம் உறைக்க. இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“விடுடா யார் வந்தாலும் நம்ப இப்படி தான் இருப்போம்” என அவனை சமாதானம் செய்ய சொன்னாலும்,யுகி நோட்டில் எழுதி வைத்திருந்தது தான் நியாபகம் வந்தது.

“எப்போ இவன்கிட்ட கேக்கறது.நடக்க ஆரம்பிக்கட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்.பாவம் அவனே கஷ்டத்துல இருக்கும்போது இதைக் கேட்டு இன்னும் கஷ்டப்படுத்திடக் கூடாது” என நினைத்தவள் கேசரியை அப்படியே வைத்துவிட்டு தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

அவள் சாப்பிடவில்லை என்றதும் யுகியும் சாப்பிடவில்லை.

“ஷாலு எங்கடா.?”

“அவ உங்கவீட்டுல தானே இருப்பா”

“நான் கீழே வரும்போது அம்மா மட்டும் தான் இருந்தாங்க.”

“அப்போ அம்மா ரூமில இருப்பாளா இருக்கும்” என்றவன். “பூனை” என்றான் மெதுவாக.

“ம்ம்”

“வீட்டுக்கு வந்ததும் ஏதோ கேக்கணும்னு சொன்னியே?”.

“கேக்கணும் தான் கொஞ்சம் நாள் போகட்டும் அப்புறம் கேக்கறேன்.”

“ஏன் இப்போ என்ன?”.

“இப்போ கேக்கறதை விட அப்புறம் கேக்கறது பெட்டெரா இருக்கும்ன்னு நினைக்கறேன்”.

“ம்ம்”

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே வேலை விசயமாக வெளியூர் சென்றிருந்த மார்த்தி வந்து விட்டார்.
நிலாவைப் பார்த்ததும்

“கால் எப்படிம்மா இருக்கு ஹாஸ்பிடல் போலாமா?”

“உங்களுக்கு யார் மாமா சொன்னா.?”

“ஷாலு போன் பண்ணிருந்தாம்மா,”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா நல்லா இருக்கு. டிரஸ் மோதக் கூடாதுன்னு நானே கார்டன் வெச்சி கட்டிக்கிட்டேன்” என்று காயத்தைக் காட்டினாள்.

“வாம்மா எதுக்கும் ஹாஸ்பிடல் போய் ஒரு ஊசிப் போட்டுட்டு வருவோம்”.

“அதெல்லாம் வேண்டா மாமா. நாளைக்கு நார்மல் ஆகிடும் பாருங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நந்தனின் ஜீப் சத்தம் கேட்டது

இந்த இரண்டு நாட்களாக விட்டுப் போன பயம் திரும்ப வந்து ஒட்டிக் கொண்டது. தன்னைப் பார்த்ததும் அடிப்பானோ திட்டுவானோ என பயந்தவள். பின் வாசல் வழியாக வெளியேப் போக முயல,அவளது கையைப் பிடித்துக்கொண்டான் யுகி.

“விடு யுகி அவர் வராருப் போல என்னய்யப் பார்த்தா திட்டுவாரு”.

“அவன் பொண்டாட்டியா இங்க இருந்தா தான் திட்டுவான், என்னோட பூனையை திட்ட அவன் யாரு.? உக்காரு போலாம்”.

“பார்க்கணும்னு சொன்ன வந்தேன்,பார்த்துட்டில, அனுப்பி வைடா ப்ளீஸ்”

“ப்ளீஸ் போடாத மண்டையை உடைச்சிருவேன். அவன் திட்டுனா பேசிக்கலாம் உக்காரு” என அவளை இழுத்து அருகில் அமர வைத்துவிட்டான்.

இனி நிலா இங்கு வர மாட்டாள் என்ற எண்ணத்தில் வீட்டுக்குப் போகவே விருப்பம் இல்லாமல் இருந்தவன் இப்போதான் கிளம்பி வந்தான்.

உள்ளே வந்ததும் அவளது வாசனையைக் கண்டுக் கொண்டவனின் கண்கள் அகல விரிந்தது. இதழ் கூட துடிக்க, அதை அனைத்தையும் அடக்கித் தன்னை வெளிக் காட்டிக் கொள்ளாமல் உள்ளேச் சென்றான்.

நிலா அங்கு தான் இருக்கிறாள் என தெரிந்தும் அவள் பக்கம் திரும்பாமல், மற்றொரு இருக்கையில் அமர்ந்திருந்து மார்த்தியிடம், “அப்பா எப்போ வந்தீங்க?.போன விஷயம் நல்லபடியா முடிஞ்சிதா”  என அவரிடம் நலம் விசாரித்தான்.

அவன் தன்னைப் தவிர்க்கப் பார்க்கிறான் என்றதும் நிலாவின் முகம் சற்று வாடியது.

அதனால் உண்டான கோவத்தில் “விடு யுகி வீட்டுக்குப் போகணும்”,என்றாள் பிடிவாதமாக.

அவள் எண்ணம் புரிந்த நந்தனுக்கு அவனையும் மீறி இதழும் மீசையும் துடிக்க,  அதை நீவி அடக்கிக் கொண்டவனின் மனமோ. “இப்படியே அடக்கி அடக்கி சாக அடிக்கப் போறா.. பாரு”. என சொல்ல 
“அவளுக்காக செத்தா தான் என்ன?”என்று தோன்றியது.

“டேய் அண்ணா” என்றான் யுகி.

“ம்ம்”

“அவளோட காலுல பால் ஊத்துனதுல நடக்காம முடியாம கஷ்டப்படறா, அவளைக் கொண்டுப் போய் வீட்டுல விட்டுட்டு வா”.

“வர தெரிஞ்சவீங்களுக்கு போகத் தெரியாதா...?” என நிலாவை கண்கள் இடுங்கப் பார்த்தான். அவளை தூக்கிச் செல்ல கசக்குமா என்ன?.

“உன்னைய கேட்டனாடா தேவையில்லாத வேலையைப் பார்க்காத” என்று யுகியிடம் கத்தியவளால்,அழுகையை அடக்க முடியவில்லை அவளை மீறி கண்ணீர் கன்னம் தொட்டு விட்டது.

அதைப் பார்த்தவன் “வர சொல்லு” என்க.

“ஒன்னும் தேவையில்ல” என்றாள் வெடுகென்று.

“ஓகே “என்றவன் தோள் குலுக்களுடன் அங்கிருந்து நகரப் போக.

அவன் அருகில் இன்னும் சிறிது நேரம் இருக்க கிடைத்த வாய்ப்பை இழக்க விரும்பாமல், “ஆஆஆஆ”  என்றாள்.

‘என்னாச்சி பூனை.? “

“காலு நெருப்பா எரியுது, நீ வரச் சொன்னியேன்னு தான் கஷ்டப்பட்டு வந்தேன்” . என முகம் கசங்க ஓரக்கண்ணால் நந்தனைப் பார்த்துக்கொண்டே சொன்னாள்..

மாடிப் படி ஏறிக் கொண்டிருந்தவனின் கால்கள் அவள் சொன்னதைக் கேட்டு ஆணி அடித்ததுப் போல் அப்படியே நின்று விட்டது.

“நந்து கொண்டு போய் விட்டுட்டு வாப்பா”.என மார்த்தியும் சொல்ல.

“நீங்க போய் அம்மாவைப் பாருங்க, நான் போறேன்” என்றவன் அவள் அருகில் வர.

“மவனே சிக்குனியா.. வா இன்னைக்கு உன்னைய அப்பளமா பொறிச்சி எடுக்கறேன்” என நினைத்தவள்.

அவன் தூக்கக் கையை நீட்டினாள்.

“நடந்து வர சொல்லுடா”

“நடக்க முடிஞ்சா உங்களை எதுக்கு கூட அனுப்புறாங்க” என்றவள் “தூக்கிட்டுப் போங்க”  என்றாள்.

எதோ பிடிக்காததுப் போல் முகத்தை வைத்துக் கொண்டவன்,அவளை தூக்கிக் கொண்டு பின்னால் போகப் போக.

“காருக்குப் போங்க விஜய் ப்ளீஸ் உங்கக் கூட வெளியேப் போகணும்னு ஆசையா இருக்கு” என்றாள் கெஞ்சலுடன்.

அவன் குனிந்து உடையைப் பார்க்க.

அவன் எண்ண ஓட்டத்தைப் புரிந்துக் கொண்டவள்,

“ஓபன் பிளேஸ்க்கு போக வேண்டாம் கார்க்குள்ளையே இருக்கேன் ரொம்ப தூரம் போவோம்” என்று கெஞ்ச..

அவன் எதுவும் பேசாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டே காருக்குப் போனான்.

கார் கதவை வேலைச் செய்பவர் ஓடி வந்து திறந்து விட,அவளை முன்னாடி அமர வைத்துவிட்டு காரை உயிர்பித்தான்.

கார் சிறிது தூரம் போனதும்.

“சாரிங்க காலையில வேணும்னு பண்ணல. கை நழுவி தான் விழுந்துடுச்சி”  என்றாள் மெதுவாக.

அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.



Leave a comment


Comments


Related Post