Total Views: 1344
யுகி செய்தது தவறு தான்.
திருமணம் என்பது அடுத்தவர்களுக்காக செய்துக் கொள்வதில்லை. ஒருவருக்கு ஒருவர் புரிந்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் பிணைத்து வைக்கும் பந்தம் இது. நிலாவின் வாழ்வு சிறக்க வேண்டும் என இவன் வாழ்வை அழித்துக் கொண்டான்.
எப்படியாவது காதலியை நிலா முன் நிறுத்தி அவளை நம்ப வைத்து விட வேண்டும் என்பதை மட்டும் குறியாக வைத்து செயல் பட்டவன், அதில்,தன் வாழ்க்கையே அடங்கி இருக்கிறது, வருபவளின் குணம் தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஒத்து வருமா? அவளுடன் தன் வாழ்வு சிறக்குமா? என்ற எண்ணம் இல்லாமல்,நிலாவின் வாழ்வில் பிரச்சனை உண்டாகக் கூடாது என திருமணம் செய்துக் கொண்டதை என்ன வென்று சொல்வது.
பல வருடம் காதலித்து திருமணம் செய்பவர்களே சரியான புரிதல் இல்லாமல் விவாகரத்திற்கு செல்கிறார்கள், கவிநிலாவைப் பற்றிய எந்த புரிதலுமே யுகிக்கு இல்லை, பிறகு எப்படி அவளுடன் வாழ்வு நல்லபடியாக போகும் என நினைத்தான்.
யுகி நன்கு உறங்கி விட்டான்,கவியோ இன்று எதுவும் நடக்காததுக்கு,அது காரணமாக இருக்குமோ,இதுக்காரணமாக இருக்குமோ என யோசித்து யோசித்தே தூங்காமல் இருந்தாள். எங்கு சுற்றினாலும் ஒருப் புள்ளியில் தான் சிந்தனை வந்து நின்றது, அந்த புள்ளி நிலாவாக இருக்க.
"வீட்டுக்குள்ள வந்துட்டேன்ல இனி எப்படி அவளைத் துரத்தி அடிக்கிறேன்னு பாருங்க,என் புருஷன் பக்கம் கண்ணு போனாலே நாக்கைப் புடுங்கிக்கிற மாதிரி கேக்கறேன், எப்படி இனி நிம்மதியா இருக்கான்னு பார்க்கறேன்" என்று ஒரு முடிவுக்கு வந்தப் பின்பு தான் தூங்கவேப் போனாள்.
அன்று மதியம் வரை வீட்டில் இருந்த நந்தன், நிலாவால் எந்தப் பிரச்சனையும் வராது என்றப் பிறகு தான் வேலைக்கு கிளம்பிப் போனான்.
அந்தக் குழந்தைக் கேஸ் வேறு, அவனை மனிதனாக இருக்க விடாமல் மிருகமாக மாற்றிக் கொண்டிருக்க,அதற்காக அலைந்துக் கொண்டிருந்தான் நந்தன்.
அன்று இரவு வீட்டிற்கு வராமல் ஜெகநாதனின் மகனின் ஊழல்களை தேடி தேடி துப்பரிந்துக் கொண்டிருந்தான்.
"எப்போ அந்த நிலாவைப் பார்த்து பேசுவ உஷா" என உஷாவை பிடுங்கி எடுத்துக்கொண்டீருந்தாள் சரஸ்வதி.
"அவ வெளியே வந்தா தானே பேச முடியும்"
"அவங்க கோவில் திருவிழா பக்கமா வருது,அப்போ அவ வெளியே வருவா அந்த வாய்ப்பை பயன்படுத்தி சொல்லிடு" என சரஸ்வதி அவளது விஷயத்தில் மும்முரமாக இருந்தாள்.
உஷாவிற்கே தெரியாமல் இன்னொரு திட்டம் கூட அவள் வசத்தில் இருந்தது.அதை பயன்படுத்த அவள் தேர்ந்தெடுத்த ஆள் தான் கவிநிலா.
இது இப்போது வரைக்கும் கவிநிலாவிற்கே தெரியாது,ஒருவேளை கவிக்கு சரஸ்வதியின் திட்டம் தெரிந்தால் அவளிற்கு உடன்படவும் வாய்ப்பு இருக்கிறது.
"வெளியே வரட்டும் அப்புறம் பார்க்கலாம்" என்று விட்டாள் உஷா..
இரவு தாமதமாக வந்த வளவன்,அந்நேரம் சென்று யுகியிடம் பேசுவது நாகரிகம் இல்லை என காலையில் நேரமாக யுகியைப் பார்க்கப் போனான்.
"வாங்க மாப்பிள்ளை," மணி தான் முதலில் வளவனைப் பார்த்து வரவேற்றார்.
"யுகி எங்க அத்தை?"
"தோட்டத்துல வாக் போய்ட்டு இருக்கான்".
"ம்ம் உங்களுக்கு கால் எப்படி இருக்கு?".
"ம்ம் நல்லா இருக்கு" என்றதும்,அவன் அங்கு நிற்காமல் யுகியைப் பார்க்கப் போய்விட்டான்.
"யுகி"
"வாடா நல்லவனே"
"நான் நல்லவன் தான், நீ என்ன காரியம் பண்ணி வெச்சுருக்கேனு உனக்கு தெரியுதா..?"
"தெரியாமலா கல்யாணம் பண்ணிருப்பேன்".
"ஓ..அந்தப் பொண்ணு உங்க அத்தை போல இருந்துடுச்சின்னா என்ன பண்ணுவ.?" என ஆதங்கத்தோடு கேட்டு விட்டான்.
ஒரு விஷயம் என்றாலும் வளவனிடம் சொல்லி அதற்கு அறிவுரை கேப்பவன் திருமணம் என்ற பெரிய பந்தத்தில் இவ்வளவு அவசரமாக நுழையும் போது கேக்காமல் விட்டுவிட்டானே.
யுகி திருமணம் செய்தது வளவனிற்கு பெரும் மகிழ்ச்சி தான். ஆனால் அதற்கு அவன் தேர்ந்தெடுத்த ஆளை நினைத்து தான் உள்ளம் யுகியின் வாழ்க்கையை கதிகலங்கியது.
யாருக்காக இந்த அவசர திருமணம் என்று தெரியுமே , தங்கையின் வாழ்வு சிறக்க வேண்டும் என்ற ஆசை உண்டு தான் அதற்காக நண்பனை பழிக் குடுக்க முடியாது இல்லையா. அவனுக்கு யுகிவேறு நிலா வேறு இல்லை.
"நீ உங்க அப்பா மாதிரி இல்லைல, அது மாதிரி அவளும் அவங்க அம்மா மாதிரி இருக்க மாட்டா, அப்புறம் நீ பேசறது என்னோட பொண்டாட்டியை இனி யோசிச்சிப் பேசு அவ கேரக்டரை பத்தி பேசறதுலாம் இது தான் கடைசியா இருக்கனும்" என்க
வளவனுக்கு முகத்தில் அடித்ததுப் போல் இருந்தது யுகியின் வார்த்தைகள் விக்கித்துப் பார்த்தான்.
"வேற ஏதாவது பேசணுமா?"
"இல்ல" என்றவனுக்கு அதற்கு மேல பேச வார்த்தைகள் வரவில்லை. அங்கிருந்து சென்று விட்டான்.
தளர்ந்த நடையுடன் போகும் வளவனைப் பார்க்கும் போது இதயத்தில் ஊசி ஏற்றியது போல் வலித்தது.
வேற என்ன செய்துவிட முடியும். அவனே பலக் குழப்பத்தில் இருக்கிறான்,அவனிடம் அப்படி இருக்குமோ இப்படி இருக்கோமோ என மேலும் குழப்பி விட்டால் பிடிக்குதோ பிடிக்கலையோ மனைவியை யாரிடமும் விட்டுக் கொடுக்க நினைக்கவில்லை யுகி.அவனை நம்பி வந்தவளை அவன் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு வளவன் யுகிடம் பேசுவதை தவிர்த்து விட்டான்.
இரண்டு நாட்கள் சென்று விட்டது. யுகி கவியுடைய வரவேற்பு நல்லபடியாக முடிந்தது. வளவனும் நிலாவும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை, அதற்காக ஒதுங்கி நிற்கவும் இல்லை. அவர்கள் சார்பாக செய்ய வேண்டியதை செய்து விட்டனர்.
அன்றைய நாளில் வளவனும் புதிய தொழிலை தொடங்கிவிட்டான், அதில் வளவனும் யுகியும் தான் பாட்டனர், யுகி தூக்கி எரிந்து பேசினாலும் நண்பனை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் தன்னுடனே வைத்துக் கொண்டான்.
ஒருவாரம் சென்றயிருக்கும் கோவில் திருவிழா வந்தது.
"அம்மு அங்கேப் போகலையா?நீதானே மாவிளக்கு எடுக்கணும்".என்றார் ராஜி நிலாவைப் பார்த்து.
"நான் போகலம்மா. அதான் கவி இருக்காள்ல, அவ எடுப்பா. ஷாலு இந்த மாவை அழுத்திப் பிடி இல்லனா விரிசல் விழுந்துடும்" என்றாள்.
உறவுக் கூட அப்படி தானே அழுத்தி பிடிக்கவில்லை என்றால் விரிசல் விழுந்துவிடும். மீண்டும் அதை சரி செய்ய மாவை உதிர்த்து முதலில் இருந்து பிடிக்க வேண்டும்.
"அம்மு"
"ம்ம்"
"முன்ன மாதிரி உன்னோட முகத்துல சந்தோஷமில்லையே".
எப்படி இருக்கும்?, நிலாவே யுகியிடம் பேசப் போனால், "நீ எதுக்கு என் புருஷன்கிட்ட பேசற? உனக்குன்னு புருஷன் இருக்காங்கள, ஒன்னு பத்தலையோ" என வாய் கூசாமல் கவி நிலாவின் மனதை புண்படுத்தினாள்.
கிருஷ்ணமாளின் பேத்தி வேறு எப்படி இருப்பாள்? நாவை கொடுக்காக மாற்றி கொத்தி புடுங்கினாள். இதைத் தட்டிக் கேக்க வேண்டிய யுகியோ நிலா வந்தாலே முகத்தை திருப்பிக் கொண்டுப் போய்விடுகிறான்.அதனால் கவி பேசும் எதுவும் அவனுக்கு தெரியவில்லை சொல்ல வேண்டிய நிலாவும் சொல்லவில்லை கவியும் அவனுக்கு தெரியாதவாறுப் பார்த்துக்கொண்டாள்.
இல்லை என்றால் இந்நேரம் கவி அவளது தாயின் வீட்டில் தான் இருக்க வேண்டும்.
நந்தன் கோவில் திருவிழாவிற்கு முன்பு அந்தக் குழந்தையின் கேசை முடித்துவிட வேண்டும் என நாயாக இராப்பகல் ஓடிக் கொண்டிருந்ததால் வீட்டில் நடக்கும் அரசியலைக் கவனிக்கவில்லை. மார்த்தி அதுக்கு மேல் ஓடினார். கடைசிக்காலத்தில் வீட்டோடு இருக்க வேண்டும் என ஆசையாக தான் இருக்கிறது. எந்த மகனும் பொறுப்பை எடுத்துக்கொள்ள முன் வர மாட்டிக்கிறார்களே. அவர்கள் முன் வரவில்லை என தொழிலை அப்படியே விட முடியாது என ஓடிக்கிறார் இந்த முதுமையிலும்.
"இன்னைக்கு அண்ணா வீட்டுல இருப்பாருப் போல" என ஷாலினி நிலாவை நோண்ட
"ம்ம்" என்றவளுக்கு 'இவ ஒருத்தி இவ புருஷன் மாதிரியே என் புருசனும் தொங்குவான்னு நினைச்சிட்டா போல..' என சலிப்பாக இருந்தது.
"அங்க வான்னு கூப்பிடலையா?"என ஷாலினி அவள் முகம் பார்க்க.
"கூப்பிட்டாரு. அவரே அங்க இல்ல. அப்புறம் போய் என்ன பண்றேன் இங்கையாவாது நீ இருக்கல"
"கவி என்ன சொன்னா அம்மு?"
"அவளா?, ஒன்னும் சொல்லலையே"
"பெரிய தியாகி மாதிரி பேசாத அம்மு என்ன சொன்னா சொல்லு?".
"எதுவும் சொல்லலடி, எனக்கு தான் அவர் இல்லாம அங்கப் போக போர் அடிக்குது, அதான் அங்கப் போகல.ஏன் நான் இங்க இருக்கறது புடிக்கலையா?"
"லூசு மாதிரி பேசாத. பெரிய மருமகளா உன்னோட உரிமையை எதுக்கு விட்டுக் குடுக்கற?, நீ எல்லாத்தையும் விட்டுக் குடுத்துட்டே இருந்தின்னா கடைசில அண்ணனையும் விட்டுக் குடுக்கற மாதிரி பண்ணிடுவாங்க. போய் நீ மாவிளக்கு எடு" என்றாள்.
அப்போது பார்த்து நந்தனிடம் இருந்து அழைப்பு வந்தது.
"சொல்லுங்க"
"இங்க வா?".
"எதுக்கு?".
"கோவிலுக்கு போகணும்ல"
"நான் வரல நான் அண்ணா,ஷாலுக் கூடப் போய்க்கறேன்"என அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
அவள் பேசியதை ஷாலினி வாயைப் பிளந்துக் கொண்டுப் பார்க்க.
"என்னடி?"
"அண்ணாவை எப்போல இருந்து எதிர்த்து பேச பழகுனடி.?"
"இந்த ஒரு வாரமா பொண்டாட்டி நியாபகமே இல்ல, கேஸ் கேஸ்ன்னு ஓடிட்டு இப்போ மட்டும் கோவிலுக்கு போகணுன்னு சொன்னா சரிங்க தலைவான்னு ஓடிப் போய் காலுல விழணுமா போடி" .என்று சொல்லிக் கொண்டிருக்க, நந்தன் வரும் சத்தம் கேட்டது.
"இந்த காலடி சத்தம் உங்க அண்ணன்னு தானே" என்றவள்,அவசர அவசரமாக அறைக்குள் ஓடி ஒளிந்தவள் கதவை மெதுவாக திறந்து.
"அவர் கேட்டா கடைக்குப் போய்ட்டேனு சொல்லு, மாட்டி விட்ட சங்கை நெறிச்சிடுவேன்" என மிரட்டி விட்டு கதவை மூடிக் கொண்டாள்.
வாசலில் நின்ற நந்தன்
"ஷாலு அவ எங்க?"என்க
"யாரு அம்முவா அண்ணா?"
"வேற யாரைக் கேக்கப் போறேன்?".
"அவ அவ" என்றவள் அறையையும் நந்தனையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, "கடைக்குப் போயிருக்கா அண்ணா" என்றாள்.
போலீஸ்காரனுக்கா கண் ஜாடைக்கான அர்த்தம் சொல்ல வேண்டும்?. அறையின் கதவை தட்டியவன்
"வெளியே வாடி" என்றான் ஓங்கிய குரலில்.
"இவ மாட்டி விட்டுட்டாளா".என்றவாறே வெளியே வந்தாள்.
"வா"
"எங்க?"
"எங்கன்னா வீட்டுக்கு தான்".
நந்தன் குரல் கேட்டு ராஜி ஓடி வந்து வரவேற்றார்.
"வாங்க தம்பி".
"ம்ம்"
"சாப்புடுங்க"
"வேண்டா" என்றவன் "இப்போ வரியா இல்லையாடி?".
"வர முடியாது போடா, ஒரு வாரமா பொண்டாட்டி நியாபகமே இல்லாம ஊரைச் சுத்திட்டு திரிஞ்சில இப்போ மட்டும் என்ன அக்கறை வந்தது? போ நான் வரல", என்றவளின் மூக்கு கோவத்தில் விடைத்தது
அவள் தன்னை தேடியிருக்கிறாள் என்றதுமே நந்தனுக்குள் அவ்வளவு சந்தோசம். இதற்கு தானே இத்தனை வருடங்கள் காத்திருந்தான்.
அவள் வாடா போடா என்று பேசியதில் நந்தன் அடித்துவிடுவானோ என்ற பயத்தில் ராஜியும், ஷாலினியும் பார்த்துக் கொண்டிருக்க.
"கேஸ் முடிஞ்சிடுச்சு ஒன் வீக் பிரீ தான்,உன்னோட தான் இருப்பேன் போதுமா வா.?"
"முடியாது போ, உனக்கு பிரீயான தான் என்னைய கவனிப்பனா உனக்கு எதுக்கு பொண்டாட்டி. போய் கேஸையேக் கட்டிட்டு அழு..'
"அம்மு என்ன பேசற?, எச்சிப் பேச்சி பேசிட்டு இருந்த பல்லைக் கழட்டிருவேன்". என ராஜி மிரட்ட,நந்தன் அவரைத் திரும்பி பார்க்கவும் கப்பென்று வாயை மூடிக் கொண்டார்.
"ரூமுக்குள்ள வந்து சண்டையைப் போடுடி".
"நான் வரலைன்னு சொல்லிட்டேன்".
"நீ சொல்லிக்கோ" என்றவன் அவளைத் தூக்கிக் கொண்டு அவர்கள் வீட்டிற்குச் சென்று விட்டான்.