இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -117 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 30-08-2024

Total Views: 1505

"விடுடா விடுடா" என நிலா அவன் முதுகிலையே அடித்துக் கொண்டே வீட்டிற்குச் செல்ல..

கூடத்தில் இறக்கிவிட்டவன்.

"அம்மா அம்மா" என வீடே அதிரக் கத்தினான்.

"சொல்லு தம்பி" என அவர் அவசரமாக ஓடிவர.

"மாவிளக்கு யாரு எடுக்கறா?".

"நிலா" என அவர் ஆரம்பிக்கும் போதே,  "கவிக்கு இப்போதானே கல்யாணம் ஆகிருக்கு, அவ எடுக்கட்டும்" என்றார் கிருஷ்ணம்மாள்.

'நிலா இந்த முதல் மருமகள் என்ற பதவியும் வேண்டா, பொறுப்பும் வேண்டா, ஆளை விடுங்கடா சாமி'என்ற ரீதியில் நின்றாள்.

"அப்போ எங்களுக்கு கல்யாணம் ஆகி,என்ன பத்து வருசமா ஆகிடுச்சு?" என்றான்

"அதில்ல ராசா.. என்ன இருந்தாலும் உங்களுக்கு கல்யாணம் ஆகி மாசம் ஆகிடுச்சுல, அவங்களுக்கு இப்போ தானே ஆச்சி"  என மென்று முழுங்க.

"எதுக்கு அம்மாயி மென்னு முழுங்குற?. இங்க பாருங்க மச்சான் அவ பெரிய மருமகளாவே இருந்தாலும்,அவ ஜாதி வேற, நம்ப ஜாதி வேற, நான் இருக்கும் போது அவ மாவிளக்கு எடுத்தா ஊரு என்ன பேசும்?. அதான் அவளை வேண்டாம்னு அம்மாயி சொல்றாங்க" என்றாள் பட்டென்று கவி..

"நான் எங்கடி அப்படிலாம் சொன்னேன்? இவ வேற தேரை இழுத்து தெருவுல விட்டுட்டுப் போறாளே, இவன் வேற ஆடுவானே" என கிருஷ்ணம்மாள் கையைப் பிசைய.

"ஏங்க யாரு மாவிளக்கு எடுத்தா என்ன? ரெண்டுபேரும் இந்த வீட்டு மருமக தானே, சும்மா வாங்க" என அவன் கையைப் பிடித்து இழுக்க. அவன் இன்ச்க் கூட நகரவில்லை அவன் முருக்கேறிய கையே எந்த அளவிற்கு கோவமாக இருக்கிறான் என சொல்லாமல் சொல்லியது...

நந்தன் நாலு வார்த்தை பேசினாலும் நாக்கைப் புடுங்கிக்கிற மாதிரி பேசுவான், இப்போது வேற கோவமாக இருக்க அவன் கோவத்தை அடக்க தன்னால் தான் முடியும் என்று எண்ணியவள்.

"ப்ளீஸ் விஜய் என்னால எந்த பிரச்சனையும் வேண்டா வாங்க போலாம்" என்றாள் மெதுவாக. அது அவனுக்கு மட்டும் தான் கேட்டிற்கும்.

அவளை திரும்பி முறைத்தவன். "என்னம்மா சொன்ன இன்னொரு தடவை சொல்லு"  என்று சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டவன்

"ம்ம் சொல்லும்மா" என்றான் மீண்டும் அழுத்தமாக.

"இன்னைக்கு எவன் எவன் சாகப் போறானோ?, என நிலா பதட்டத்துடன் நின்றாள், அவள் கையைப் பிடித்து இழுத்து அருகில் அமர வைத்தவன்.

"இன்னும் நீ சொல்லலலையா. யுகி...... " என்று வீடே அதிரக் கத்தினான்.

அப்போது தான் ஒரு மீட்டிங்கை முடித்து விட்டு யுகி வெளியே வர, நந்தன் குரல் கேட்கவும் என்னவோ ஏதோ என்று முன்னாள் வர மார்த்தாண்டமும் வந்து நின்றார்.

மார்த்தாண்டம் வரவும்,நிலா எழுந்துக்கொள்ளப் பார்க்க அவள் கையைப் பிடித்து அமர வைத்தவன்

"யுகி" என்றான்.

"சொல்லு"

"உன் பொண்டாட்டி என்னமோ சொல்லுதே? என்ன விஷயம

"என்னடி சொன்ன?"

"உண்மையைச் சொன்னேன் நான் எதுக்குப் பயப்படணும்?", என்றவள் அவள் பேசியதை சற்று மாற்றிக் கூறினாள்.

அன்றே யுகி சொன்னான் நிலாவிற்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்று, அவன் வார்த்தையையும் மீறி இன்று கவி இப்படி பேசி வைத்திருக்க, பல்லைக் கடித்துக்கொண்டு அவளை முறைத்தான்.

"எதுக்கு கவி இப்படிலாம் பேசிட்டு இருக்க?. எல்லாம் தெரிஞ்சி தான் இந்த வீட்டுக்குப் பொண்ணு எடுத்துருக்கோம், அதையே வெச்சி குத்தி குத்திக் காட்டுட்டே இருப்பிங்களா?. இங்க ஜாதியும் இல்ல, ஒன்னும் இல்ல. மார்த்தாண்டன் குடும்பம் அவங்க பசங்க அவ்வளவு தான் இனி ஒரு தடவை இப்படி பேசாத, அப்படி பேசற மாதிரி இருந்தா உன் ஜாதி மட்டும் இருக்கற இடத்துல போய் இருந்துக்கோ" என்றார் மார்த்தாண்டம்.

"நாங்க எதுக்கு போகணும்  அவங்க  தானே ஜாதி மாறி இருக்காங்க.அவங்களை போக சொல்லுங்க" என்றாள் பட்டென்று.

"கவி.. வாயை மூடறியா? இல்லையா? என யுகிக் கூட அடக்கப் பார்த்தான். அவன் விலகல் வேறு மேலும் எரிச்சலைக் கொடுக்க கவி  முகத்தை திருப்பிக் கொண்டாள்..

"சரி நாங்க கோட்டரஸ்ல தங்கிக்கறோம்". என்று நந்தன் எழ..

அவனை முறைத்த நிலா

"இதைப் பிரச்சனை ஆக்காத்தீங்க எனக்கு மாவிளக்கு எடுக்கணுங்கற ஆசையே இல்ல. யாரோ எடுக்கட்டும்". என அங்கிருந்து நகரப் போனவளை இழுத்துப் பிடித்தவன்

"நான் பேசிட்டு இருக்கேன்ல இரு"என்றான் அழுத்தமாக.

"என்ன நந்து இப்படி சொல்ற?, அவ ஏதோ பேசிட்டா இனி பேசாம பார்த்துக்கறோம், நீ இல்லாம எப்பிடிடா?" என்ற மார்த்திக்கு குரல் கம்மியது.

"நீங்க மட்டும் தானே சொல்றிங்க சொல்ல வேண்டிய யாரும் சொல்லலையே,கல்யாணம் ஆன அன்னிக்கே சொல்லிட்டேன், என் பொண்டாட்டி என்னோட சேர்த்தின்னு அவளைப் பேசுனா என்னைய பேசுன மாதிரி தான். அப்போ என்னையும் ஜாதி வேறையின்னு தள்ளி வெச்சிடுங்க" என்றவன் "கிளம்பு கோட்ரஸ் போலாம்" என்றான் உறுதியாக.

"இனி அப்படி பேச மாட்டா நந்து நான் பார்த்துக்கறேன் இப்போ பேசுனதுக்கு மன்னிப்பு கேளுடி?" என யுகி சொல்ல 

கவி விரைப்பாக நின்றவள். "நான் தப்பா பேசல. மன்னிப்புலாம் கேக்க முடியாது" என்று சென்று விட்டாள்.

ஒவ்வொருவரும் அடுத்து என்ன நடக்குமோ? என பயத்துடன் நந்தனைப் பார்க்க. "அவனோ.நோம்பி முடிஞ்சதும் நாங்க அங்கப் போய்டுவோம்" என உறுதியாக சொல்லிவிட்டு, அவன் அறைக்குப் போய்விட்டான் நிலாவிற்கு தான் மண்டை குடைச்சலாக இருந்தது.

'ஒரு நோம்பி நொடின்னாக் கூட நிம்மதியா இருக்க முடியாதுப் போல'. என்று எண்ணிகொண்டவள்.

"அத்தை அவங்களையே மாவிளக்கு எடுக்கச் சொல்லுங்க, நான் ஷாலுக் கூடப் போய்கறேன்"  என யாரையும் பார்க்காமல் மணியிடம் சொல்லிவிட்டு அவள் வீட்டிற்குச் சென்று விட்டாள்.

நிலா கோவமாக வருவதைப் பார்த்த ராஜி மீண்டும் நந்தனிடம் சண்டைப் போட்டுவிட்டு வந்துவிட்டால் போல என நினைத்து 

"ஏண்டி மறுபடியும் வந்த..?" என்றார்.

"ஏன் வரக்கூடாதா? வரக்கூடாதுன்னா சொல்லிடு,எங்கையாவது போய்டறேன், சும்மா ஆளு ஆளுக்கு தாயக்கட்ட மாதிரி என்னையப் போட்டு உருட்டறது" என்றவள் அறைக்குப் போய்விட்டாள்.

அடுத்த ஐநதாவது நிமிடம் நந்தனிடம் இருந்து அழைப்பு வந்தது.

நிலா கட் பண்ணி விட.அவன் தொடர்ந்து அழைக்கவும் எடுத்து,"உன்னைய யாரு அப்படி பேசச் சொன்னா? எல்லோரும் நான்தான் சொல்லிக் கொடுத்துட்டேன்னு என்னைய பேசுவாங்க,  இந்தப் பிரச்சனையை கம்முனு விடுன்னு சொன்னேன்ல,இதுல இங்க இருந்து கோட்ரஸ்ப் போகப்போறானா, , போறதுனா நீ மட்டும் போ, நானால வர மாட்டேன் பார்த்துக்கோ"  என்று கோவமாக கத்த.

"கோவிலுக்கு கிளம்பு குட்டி, அங்க இருந்து கூப்புட்டுட்டே இருக்காங்க" என்றான் சாதாரணமாக.

"நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்? நீ என்ன பேசிட்டு இருக்க.?"

"இப்போ வரியா? இல்லையா?"

"உன்னோட வர மாட்டேன் போ.."

"சரி நான் முன்னாடி கிளம்பறேன்,  நீ ஷாலுக் கூட வந்துடு".

"போடா வர மாட்டேன் "என்றாள் தைரியமாக.

"நீ வருவ" என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டான்.

"நான் என்ன சொல்றேன், இவன் என்ன சொல்லிட்டு இருக்கான்? நோம்பி முடிஞ்சதும் கூட்டிட்டுப் போய்டுவானோ, பயமா இருக்கே," இவனோட தனியாக என்னும் போது சந்தோசமாக இருந்தாலும், யுகி பேசவில்லை என்றாலும் அவன் முகத்தைப் பார்த்துகொண்டு இங்கையே இருக்கலாம் என நினைத்திருக்க, அதிலும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டான்.

நிலா சோர்வாக கோவிலுக்கு கிளம்பினாள்.

"என்ன ஷாலு இவ இப்படி பேசிட்டுப் போறா.?"

"அங்க என்ன நடந்துச்சோ தெரியலையே அத்தை. இருங்க அம்மாகிட்ட கேப்போம்" என்றவள் மணிக்கு அழைத்து கேட்டாள்.

"அதை ஏண்டி கேக்கற? இந்த கவி அப்படியே உங்க அத்தை மாதிரியே இருக்காடி".

"என்னம்மா சொல்ற புரியற மாதிரி சொல்லு?" என்கவும்

நடந்த அனைத்தையும் கொட்டி விட்டார் மணி.

"அப்போ அண்ணா போய்டுவானா?" என்றாள் ஏக்கமாக

"அவன் சொல்லி என்னைக்கு செய்யாம இருந்துருக்கான் நோம்பி முடியற வரைக்கு மட்டும் தான் டைம் குடுத்துருக்கான்" என்றவர், "வயசான காலத்துல பேரன் பேத்தி பார்த்துட்டு சந்தோசமா இருக்கலாம்ன்னு பார்த்தா அதுக்கு வழி செய்யாம குடும்பத்தை எப்படி பிரிக்கறதுன்னு பார்த்துட்டு இருக்காங்க, எங்கைன்னு போய் சொல்றது?" என அவர் புலம்பிப்படியே அழைப்பைத் துண்டிக்க.. ஷாலினி மணி சொன்னதை ராஜிடம் ஒப்பித்து விட்டாள்.

"இதுல என்ன இருக்கு ஷாலு?. கல்யாணம் பண்ணா இப்படிலாம் நடக்கும்னு தெரிஞ்சி தானே கட்டிக்கிட்டா, அப்புறம் என்ன.? இது மாதிரி எவ்வளவோ பார்த்துட்டோம் இதலாம் அம்முவை ஒன்னும் பண்ணிடாது" என்றவர் "போய் கிளம்பச் சொல்லு நம்ப கூட்டிட்டுப் போவோம்." என்றார்.

"சரிங்க அத்தை கிளம்பி ரெடியா இருப்போம், அவர் வரட்டும் அப்புறம் போலாம்".

"நோம்பி நொடியிலக் கூட ஆபிஸ் போகணுமா? இவன் சொன்னக் கேட்டா ஆகும், எங்க கேக்கறான்? போன் போட்டு சீக்கிரம் வர சொல்லு, வர லேட்டாகும்ன்னா நம்ப மட்டுமாவது போய்ட்டு வந்துடுவோம்" என்று அவர் பூஜை பொருட்களை எடுத்து வைக்க, ஷாலினி வளவனுக்கு அழைத்து விரைவில் வரச் சொல்லிவிட்டு நிலாவைப் பார்க்கப் போனாள்.

"அம்மு"

"ஷாலு."

"என்ன பண்ற?"

"குளிச்சுட்டு இருக்கேன்"

"கிளம்பி வா" என்றவள் கீழேச் சென்று அவளும் கிளம்பினாள்.

அரக்கு நிற பட்டுப் புடவை நெற்றியில் குங்குமம், கழுத்தில் நந்தன் போட்ட தாலிக் கொடியைத் தவிர வேறு எதுவும் இல்லை.காதில் வளவன் போட்ட சின்ன ஜிமிக்கி,கையில் வளையல் இல்லாமல் வெறும் கையாக இருக்க, அதைப் பற்றி எல்லாம் நிலா கவலைக் கொள்ளவில்லை

அப்படியே இறங்கி கீழே வர. அவள் தலையில் ராஜி பூவை வைத்துவிட்டார்..

"அம்மு இந்த வளையலைப் போட்டுக்கோ" என ஷாலினி இரண்டு தங்க வளையலைக் கொடுக்க.

"இல்லை வேண்டா ஷாலு.. அவருக்கு தெரிஞ்சா சங்கடப்படுவாரு. அவர் எடுத்துக் குடுக்கும் போது போட்டுக்கறேன்."

"லூஸு மாதிரி பேசாத அம்மு,வெறுங்கையா கோவிலுக்குப் போக முடியுமா?அவசரத்துக்கு போடறதுல தப்பில்ல போடு" என நிலாவின் கையையைப் பிடித்து ஷாலினியேப் போட்டு விட்டாள்.

நிலா ராஜியைப் பார்க்க, அவரோ போட்டுக்கோ என்பது போல் தலையை ஆட்ட.. 'நந்தனுக்கு தெரிந்தால் இதற்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு" என பெரும் மூச்சிவிட்டு வெளியே வர, வளவன் அப்போது தான் காரை விட்டு இறங்கினான்.

"கிளம்பியாச்சா அம்மு?"

"ம்ம் ஓடு ஓடு சீக்கிரம் கிளம்பி வா"என்று காரின் பின் பக்கம் அமர்ந்து நந்தனுக்கு அழைத்தாள்.

"சொல்லு குட்டி."

"கோவிலுக்கு போயாச்சா?"

"நானும் அப்பாவும் வந்துட்டோம்".

"நாங்களும் கிளம்பிட்டோம்."

"ம்ம்"

"உங்களுக்கு பிடிச்ச அரக்கு கலர் பட்டு"

"சேலைக் கட்டிருக்கியா?"

"ம்ம்"

"நான் கட்டிவிடாம ஏண்டி கட்டுன?"

"கட்டுற ஆள் வந்துருக்கணும்".

"இப்போ வரேன்"

"நான் தான் கட்டிட்டேனே."

"அதை அவுரு நான் முதல்ல இருந்து கட்டறேன்".

"சும்மா இருங்க" என்றவளின் முகம் அரளியாக சிவந்து விட.

"நந்து பட்டாசு வைக்கிறாங்க அங்கப் போய் நில்லுப்பா" என்றார் கோவில் தலைவர்.

"சரிடி வா" என்றவன் அழைப்புத் துண்டித்துவிட்டு,அவர் சொன்னதை செய்யப் போய்விட்டான்.

நிலாவிற்கு ஏதோ காதலனைப் பார்க்க போவதுப் போல் உடல் முழுவதும் குறுகுறுவென்று இருந்தது

காதல் போதையே பரம சுகம் தானே,அவள் கனவு உலகில் இருக்க அதற்குள் அனைவரும் வந்துவிட்டனர்.

"அம்மு போலாமா" என்றவாறு ஷாலினி முன்னால் ஏற அப்போது தான் சுயநினைவுக்கு வந்தவள்

"ஹா போலாம்" என்றாள்.

கார் கோவிலை நோக்கிச் செல்ல.

"யுகி இப்படி மாறுவான்னு நான் நினைக்கவேயில்ல அத்தை. இன்னிக்கு நடந்த பிரச்சனையில வாயையே திறக்காம நின்னானா அம்மா சொல்றாங்க" என்று ஷாலினி ஆரம்பிக்க

"ஷாலு கோவிலுக்கு தேவையானதை எடுத்து வெச்சியா?  புடிமாவு அந்த தட்டுல இருந்துச்சே, அதை எடுத்தியா?" என நிலா பேச்சை திசை திருப்பப் பார்க்க,

"இன்னைக்கு என்ன பஞ்சாயத்து?" என்றான் வளவன்.

"அவ ஏதோ சொல்லிட்டு இருப்பா நீ ரோட்டைப் பார்த்து ஓட்டு"

"ஷாலு சொல்லு".

அவள் நடந்ததை அருகில் இருந்துப் பார்த்ததுப் போல் அனைத்தையும் சொல்ல.

"இந்த அத்தையை சொல்லணும் லைவ் அப்டேட் மாதிரி அங்க நடக்கறதை உடனுக்குடன் இங்க ஒளிபரப்பிடறாங்க". என தலையில் அடித்துக் கொண்டவள்

"ஷாலு ஒன்னு சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காத"

"சொல்லு அம்மு".

"நீங்க ரெண்டுபேரும் ஆதர்ஸ கணவன் மனைவி தான் நான் இல்லைன்னு சொல்லல்ல அதுக்காக..எல்லாத்தையுமா சொல்லுவ..இப்போ இவன் போய் ஆடுவான் அங்க" என்றவளுக்கு ஆயாசமாக இருந்தது.

"நான் எதுக்கு ஆடப் போறேன்? என்னைக்கு அவன் பொண்டாட்டிக்கு மரியாதைக் குடுக்கணும்ன்னு சொன்னானோ அன்னையில இருந்தே நான் விலகிட்டேன் என்னமோ பண்ணிட்டுப் போகட்டும்ன்னு"

"இது எப்போ நடந்துச்சு?" என்று ஷாலினி கோவமாக கேக்க.

அன்று யுகிடம் பேசப் போனது அவன் பேசியதை சொல்ல 

"நீங்களும் அவளும் ஒன்னா?, எப்படி அவன் அப்படி சொல்லலாம்?" என ஷாலினி கோவப்பட்டாள்..

"இப்போ கோவிலுக்குப் போகும் போது இந்தப் பேச்சு எதுக்கு விடுங்க? வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம் "என்றார் ராஜி.

"அம்மாவும் புள்ளையும் ஒரே மாதிரி இருங்க. நம்ப உரிமையை நம்ப தான் கேட்டு வாங்கணும் அத்தை. சின்ன வயசுல நீங்க ஆயாவையோ அண்ணனையோ எதிர்த்து பேசிருந்தா, இவங்க இவ்வளவு அவமானப்பட்டுருக்க மாட்டாங்க. நீங்க அன்னிக்கு நமக்கு எதுக்கு வீண் வம்புன்னு போற மாதிரி தான்,இன்னைக்கு அம்முவும் போறா,. சும்மா சும்மா அவங்க ஜாதியை வெச்சிப் பேசிட்டு இருக்காங்க இப்போ நம்ப எதிர்த்து பேசலைன்னா கடைசி வரைக்கும் இதே தான் நீடிக்கும், இவங்க இப்படியே வளஞ்சி குடுத்தே வளர்ந்துட்டாங்க,அதனால பெருசா தெரியல, நாளைக்கு இவங்களுக்குன்னு குழந்தை வரும் போது அதையும் இப்படி தான் பேசுவாங்க, நம்ப ஜெனரேஷன்ல ஜாதி குலம்ன்னு வளர்ந்துட்டோம் அதை அடுத்த ஜெனரேஷனுக்கும் கடத்தக் கூடாது,எல்லோரும் சமம்ன்னு சொல்லிக் குடுக்கணும், அப்போதான் நம்ப பட்ட கஷ்டத்தை அவங்க பட மாட்டாங்க" என மூச்சு வாங்க வாங்க பேசினாள் ஷாலினி.

"ஹப்பா என் பொண்டாட்டி போராளி ஆகிட்டால அம்மு"

"ஆமா ஆமா பெரிய போராளி தான்" என்று நிலா சொல்ல கோவில் வந்து விட்டது.

அனைவரையும் இறக்கி விட்டு காரை ஒரு ஓரமாக நிறுத்த வளவன் போய்விட..

"அத்தை மாலை வாங்களைல வாங்க போய் வாங்கிட்டு வருவோம், அம்மு நீ போய் முதல்ல பேல்ஸ் புடி, அப்போதான் சீக்கிரம் தேங்காய் உடைச்சிட்டு போக முடியும்" என நிலாவிடம் தட்டைக் கொடுத்துட்டு மாலை வாங்க ஷாலினி சென்று விட்டாள்.


Leave a comment


Comments


Related Post