Total Views: 44328
நள்ளிரவு நேரம், குடிசை வீடு எங்கும் இருள் சூழ்ந்த இடமாக பயங்கர அமானிஸமாக காட்சியளித்தது.. வான் சிறப்பைப் பற்றி வள்ளுவன் தனி அதிகாரத்தை படைத்து வருணவனுக்கு வாரி வழங்கி இருந்தாலும், அவை யாவும் போதவில்லை என்பது போல் தன் கோவத்தை புயலாகக் காட்டி வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார் வருணத் தேவன். புயல் காற்றில் அந்த ஒற்றைக் குடிசை வீட்டை, இப்போது தூக்குவதா இல்லை சற்றுப் பொறுத்து தூக்குவதா? என்று வருண தேவனுக்கும், வாயு தேவனுக்கும் இடையே தனியாக போர் வேறு நடந்துக் கொண்டிருந்தது.. இறுதியில், போட்டியில் வாயு தேவன் வெற்றிப் பெற்றுவிட, மழையுடன் கூடிய பலத்தக் காற்றில் வீட்டின் ஒருப் பகுதிக் கூரையைத் தூக்கி வேறு இடத்தில் வைத்துவிட்டு தான் இருவரும் ஓய்ந்தனர். இதுவே போதும் இதற்கு மேலும் அந்தக் குடும்பத்தைச் சோதிக்க வேண்டாம் என்று நினைத்தார்களோ என்னவோ. மழையும் காற்றும் ஒருசேரக் குறைந்து விட்டது. "அம்மா பயமா இருக்கும்மா.. நம்ப வேற வீட்டுக்கு போய்டலாமா?" என்று தன் தாயின் உடலை இறுக கட்டிப் பிடித்துக் கொண்டு நான்கு வயது சிறுமி அழ, தாயின் மடியில் 10 வயது சிறுவன் படுத்திருக்க, மூவரும் வீட்டின் மூலையில் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தனர், அந்த வீட்டின் சுவர்களும் , எஞ்சி இருந்த கூரையும் தான் அவர்களை பாதி நனையாமல் காப்பாற்றிக் கொண்டிருந்தது. ஆம்பளை இல்லாத வீடு அரைவீடு என்பார்கள், ஆனால் இங்கும் இருந்தும் இல்லாத நிலை தான், பொறுப்பற்ற தந்தையால் அந்த குழந்தைகளின் வாழ்வில் வசந்தம் என்பதே இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. என்றாவது ஒருநாள் இந்த நிலை மாறி வாழ்வில் வசந்தம் வந்துவிடாதா? என்று அந்த பிஞ்சுக் குழந்தைகள் கண்களின் ஏக்கம் கண்டே தாயின் மனதில் தினம் பாரம் ஏறிக் கொள்ளும். எப்போதுமே இருளில் இருந்து பழகியதால் தானோ என்னவோ.. ஊரே இருளில் மூழ்கியிருக்கும் போது இவர்கள் வீட்டில் பொட்டுப் போல் வெளிச்சம் எரிந்துக் கொண்டிருந்தது. "கண்ணு அம்மு.. இந்த ஒரு ராத்திரி பொறுத்துக்கோடாம்மா...ராசா செல்லம் ஒருநாளுடா" என்று மடியில் இருந்த சிறுவனின் தலையை கோதி இரு குழந்தைகளையும் அடைக்காக்கும் கோழிப் போல் தன் முந்தானைக்குள் மூடிக் கொண்டவர்.. "அம்மா நாளைக்கு கூரையை மேஞ்சிபுடறேன்" என்றார் பாவமாக. மகன் , மகளை அணைத்துக் கொண்டிருந்தவருக்கு எங்கு கீழே இறக்கிவிட்டால் இருவரும் பயந்து விடுவார்களோ என்ற பயம் சூழ இருவரையும் தன் மார்பிலும் மடியிலுமே படுக்க வைத்திருந்தார் இரவு முழுவதும். அவர்கள் பணத்தில் தான் ஏழையே தவிர, பாசத்தில் அல்ல அன்பு கொடுப்பதில் அவர்களை மிஞ்சிய கோடிஸ்வரர்களை இனி தான் தேடு கண்டுபிடிக்க வேண்டும் திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயத்தில் சமந்தாம்பாளையம் என்னும் குக்கிராமத்தில் தான் அவர்கள் இருந்தனர். 20 வீடுகளை இருபுறமும் கொண்ட தெருவில் தொடக்கத்தில் பிள்ளையார் கோவில் இருந்தது. அதன்முடிவில் தான் இவர்கள் வீடு. வீட்டிற்கு, சுற்றுப்புற சுவர் எழுப்ப வசதி இல்லாத காரணத்தால் வேலி அமைத்து அதில் ஒரு மரக்கதவை போட்டிருந்தனர். அதைதாண்டிப் போனால் கால் ஏக்கராவிற்கு பெரிய மண் வாசல் அதன் ஓரத்தில் சிறிய மண் குடிசை வீடு,நாலுப்பேர் சேர்ந்து படுத்தால் இடம் போதாது என்ற நிலையில் தான் அந்த வீடு இருந்தது. வருஷம் ஒருமுறை அடிக்கும் ஆடிக் காற்றில் கூரைப் பறப்பதும், அடுத்தநாள் மேய்வதும்,இவர்களின் வழக்கம் தான், வீட்டின் கூரையின் தப்பையில் தொங்கிய லாந்தர் விளக்கு கூறியது அந்த வீட்டில் மின்சாரம் இல்லை என்று.. ராமன் , ராஜி என்ற தம்பதினர் தான் அதில் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு பத்து வயதில் வளவன் என்ற மகனும், நான்கு வயதில் நிலா என்ற மகளும் இருக்க, ராமன் ஒரு ஊதாரி. வண்டியில் கிளினாரா செல்பவர் வீட்டிற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் வருவார் அது வரையிலும் வீடு என்ற ஒன்றும் அதில் மனைவி மக்கள் இருக்கிறார்கள் என்றும் அந்த ஆறுமாதத்தில் நினைவில் வைத்துக் கொள்வதில்லை, சம்பாரிக்கும் பணத்தில் ஒரு சல்லிப் பைசாக் கூட வீட்டிற்கு கொடுத்ததாக இந்த பத்து வருடத்தில் ராஜிக்கு நினைவே இருந்ததில்லை. மகன் பிறந்த பிறகு தான் ராமனின் குணங்களை கண்டுக் கொண்டார். ராமனுடன் பிறந்த அக்கா ஜானகியும் தம்பி கணபதியும் கூட இவர்களுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். இவர்களிடம் இருந்து எதை பிடுங்கிக் கொண்டு செல்லலாம் என்று நினைக்கும் பிணதின்னி கழுகு கூட்டம். ராஜி கணவனைப் பற்றி பல தடவை உறவுகளிடம் புகார் கொடுத்து விட்டார் ஏன் என்று கேக்க நாதி இல்லை. ராஜிக்கும் உடன் பிறந்தவர்கள் இருந்தும் இல்லாத நிலை, பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்து அவர் ராமனை திருமணம் முடித்து வைத்ததும் தன் கடமை முடிந்தது என ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருக்க ராஜியின் கஷ்டத்தைக் கேக்க கூட ஆள் இல்லாமல் போய்விட்டார்கள். என்ன நிலை வந்தாலும் ராமனுடன் தான் வாழ்ந்து ஆக வேண்டிய கட்டாயம். வளவன் பிறந்ததுமே இனி ஒரு குழந்தை வேண்டாம்,தான் கஷ்டப்படுவது போல் பிள்ளைகளையும் கஷ்டப்படுத்த முடியாது என்ற எண்ணத்துடன் இருந்தவரை, வற்புறுத்தி காயப்படுத்தி என மனதாலும் உடலாலும் வன்புணர்வு செய்து தான் இரண்டாவதாக நிலா பிறந்தாள். குழந்தை பெற துணையாக இருந்தால் மட்டும் ஒரு தந்தையின் கடமை முடிந்துவிடுமா என்ன?, பிள்ளைங்களை வளர்ப்பதில் பெரும் பங்கு தந்தையை தானே சேரும் அதில் எதிலும் ராமன் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. ஆறு மாதத்திற்கு ஒருமுறை வரும் தந்தையின் முகத்தைக் க்கூட அந்த பிள்ளைகள் நினைவில் வைத்திருப்பது மிகவும் கடினம் தான் வளவன் பிறக்கும் போது இந்த கூரை வீட்டிற்கு வாடகை வந்தார்கள். அப்போது அந்த வீடு பராமறிப்பு இல்லாமல் சிதிலமடைந்து இருந்தது. 1990 ரில் அந்த வீட்டின் வாடகை வெறும் 50 ரூபாய். அதில் மின்சாரமில்லை கூரை தங்கள் செலவில் மேய்ந்துக் கொண்டால் அதை வாடகையில் கழித்துக் கொள்வார்கள். தெருவின் கடைசி வீடு என்பதால் பராமரிப்பு இல்லாததில் மற்றவர்களுக்கு வசதியாக போய்விட வீட்டு குப்பைகளை கொட்டி குப்பை மேடாக மாற்றி வைத்திருந்தனர். அதை அனைத்தையும் சுத்தம் செய்து நல்ல இடமாக மாற்றியதே ராஜி தான். வாடகைக் குறைவு மின்சார கட்டணம் இல்லை, அக்கம் பக்கத்தில் நிறைய வீடுகள் சொந்தம் போல் பழகும் சுற்றத்தார்கள் என எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இந்த இடத்தை விட்டுப் போகக்கூடாது என ராஜியை உறுதியாக வைத்திருந்தது. இதோ இப்போது மூவரும் மழையில் தத்தளிக்கும் போதுக் கூட.. மனம் தளரவில்லை ராஜி. ராமனுடன் ஆஹா ஒஹோ என்று வாழ்ந்திடவில்லை இரு நாள் கூத்திற்கே இரு குழந்தைகள் கையில் இருந்தது.ராஜிக்கு தனக்கு என்ற ஆசையை மலையேற்றி விட்டு பிள்ளைகளுக்காக வாழத் தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன. "அம்மா... பூனைக்குட்டி வீடு மழையில ஏதாவது ஆகிடுமா,பூனை பாவம்மா?" என்று மாடி வீட்டில் இருந்த அந்த குழந்தை தன் தாயின் முகம் பார்த்து ஏக்கமாக கேட்டது. "அதுலாம் எதும் ஆகாது யுகி, நீ தூங்கு" என 8 வயது சிறுவனை சமாதானம் செய்து தூங்க வைக்க முயற்சிக்க, அவனோ தூங்க மாட்டேன் என்று அடம்பிடித்தான்.. "அம்மா வா நம்ப போய் பார்த்துட்டு வரலா, பூனை அழுவா, பாவம்ல.." என இவன் அழுதான். "டேய் இப்போ கம்முனு படுக்கறியா? இல்லையா? எவ வூடு என்ன ஆனா உனக்கு என்ன..?" என்று யுகேந்திரனின் அருகில் படுத்திருந்த பத்து வயதான சிறுவன் சீறிப் பாய.. "நந்து நான் பார்த்துக்கறேன் நீ தூங்கு.." என்ற தாய்க்கு, எந்த புதல்வனுக்கு சார்பாக பேசுவது என்று தெரியவில்லை.. "அம்மா நாளைக்கு உனக்கு ஸ்கூல் இருக்கா..?" "இருக்காது சின்ன தம்பி.." "அப்போ இப்போவே வா பூனை வீட்டுக்கு போவோம்.. அவ ரொம்ப பாவம்.. இந்த மழையில அழுவா" என்று யுகி மீண்டும் அடம்பிடிக்க இந்த முறை நந்தன் எழுந்து யுகியை அடித்துவிட்டான். "போறதா இருந்தா நீ போ...எங்க அம்மாவ எதுக்கு கூப்பிடற..? அந்த கழுதையிலா நம்ப காலுக்கு கீழன்னு ஆயா சொல்லிருக்குள்ள" என்று பத்து வயது பையன் அவன் மனதில் விதைக்கப் பட்ட விஷத்தின் காரணமாக தேளாக கொட்டிப் பேசினான். பலருக்கு பாடம் எடுக்கும் ஆசிரியராக இருந்தாலும் தன் மகனுக்கு பாடம் எடுக்க முடியாமல் தவித்து நின்றார் மணிமேகலை.. "பெரிய தம்பி நீ பேசறது தப்புடா கண்ணு.." "தப்புலா இல்லை.. ஆயா இப்படி தான் சொல்லிருக்காங்க, அவங்களா நம்ப காலுக்கு கீழ தான்," என்றவன் திரும்பிப் படுத்துக் கொண்டான். பூனை என்று யுகி அழைக்கப்படும் 5 வயது குழந்தை தான் நிலவியா... யுகியின் உயிர் என்று கூடக் கூறலாம்... நிலவியா பிறந்தப் போது யுகி அறிந்த ஒரே விலங்கு பூனை மட்டும் தான்,நிலவியாவின் கண்கள் பூனையின் கண் போல் இருக்கிறது என நினைத்து அப்போதில் இருந்து நிலவியாவை பூனை என்று தான் அழைப்பான்.. அந்த சமயம் வீல் என்று அழுத ஆறு வயது ஷாலினியை தட்டிக் கொடுத்து தூங்க வைத்தார். "சின்ன தம்பி, பாப்பா அழுதுல..இவளை விட்டுட்டு எப்படி அங்க போக முடியும்.மழை வேற பெய்யுது.. காலையில போய் பார்க்கலாம்" என்று சமாதானம் சொன்னார். என்ன சமாதானம் சொன்னாலும் யுகியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.'அவனது பூனை அழுவா' என்பதிலையே குறியாக இருந்தான். "ச்சை இவன் கூட நிம்மதியா தூங்க முடியுதா?, நான் ஆயா தாத்தாக் கூடப் போய் படுத்துக்கறேன், பூனை பூனைன்னு ஒருநாள் அந்த பூனையை கல் எடுத்து சாத்தப் போறேன் பார்த்துக்கோ " என்று எழுந்து செல்லும் பெரிய மகனை தடுக்க முடியாமல் ஏக்கமாகப் பார்த்தார் மணிமேகலை...
Nice