இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -6 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 15-02-2024

Total Views: 49567

பதிமூன்று வயது முடியும் தருவாயில் இருந்தவனுக்கு, இந்த அளவிற்கு கோவம் வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

"நாயே என்னடா பண்ணி வெச்சிருக்க அவளை. அவ என்னடா பண்ணுன, உன்னை, இப்படி மண்டையை உடைச்சி  வெச்சிருக்க" என யுகி நந்தனை அடித்தவன் நேராக கிருஷ்ண மூர்த்தியுடன் சென்று சொல்ல..

பேத்திக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த கிருஷ்ணம்மாள் சமையலறைக்குச் சென்று காபிப் பொடி டப்பாவை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்.

நிலாவின் காயத்தில் காபிப் பொடியை வைத்து அழுத்தி ரத்தம் வருவதை தடுத்தார்.

கல் வேகமாக விழுந்ததால்  தையல் போடும் அளவிற்கு காயம் ஏற்பட்டிருக்க காபிப் பொடியையும் தாண்டி ரத்தம் கொட்டியது.

உடனே கிருஷ்ணமூர்த்தி நிலாவைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்.

அப்போது தான் பள்ளி முடித்து வந்த வளவன் இதைப் பார்த்து அழ.. யுகியும் ஷாலினியும் சேர்ந்து அழுதனர்.

அத்தனை நடந்தும் மரம் போல் நின்றான் நந்தன்.

அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லையா,  இல்லை தன் ஷூவை எடுத்ததற்கு இது தேவை தான் என நினைத்தானா தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் மூலையில் போய் நிற்க,அவனை பேசத் தொடங்கி விட்டார் கிருஷ்ணம்மாள்.

நெற்றில் காயம் என்னும் போது அது காலத்துக்கும் அழியா வடுவாக தங்கிவிடும்.

இதனால் முகத்தின் அழகு சீர்கெடும் பெண் பிள்ளையாக இருக்கும் போது வருங்காலம் எப்படி இருக்குமோ என  உள்ளுக்குள் கவலையாக இருந்தது கிருஷ்ணம்மாளுக்கு. ஆனால் வெளியே பேரனை விட்டுக் கொடுக்க முடியாமல் அவன் செய்த தவறை சரி என்பது பேசிக் கொண்டிருந்தார்.

"நீ எதுக்குடா அவன் ஷூவை வாங்கிட்டுப் போன, நீ போட்ட ஷூவை  என் பேரன் போடணுன்னு தலையெழுத்தா?. உன் தகுதிக்கு என் பேரனோட ஷூ கேக்குதா பரதேசி நாயே, ஏன் செருப்பு போட்டு ஓடுனா உன் காலு  தரையில ஓடாதோ, நீ பண்ண தப்புக்கு தான் உன் தங்கச்சி தண்டனை அனுபவிக்கறா" என அப்படியே மாற்றிப் பேசினார்.

"எல்லாம் வைக்கிற இடத்துல வைக்கணும்னு இதுக்கு தான் சொல்றது, இவன் தகுதி தராதாரம் எங்க என் பேரனோட தகுதி தராதரம் எங்க, நீயெல்லாம் என் பேரனோட ஷூக்கு ஆசைப்படலாமா.ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய துரத்துச்சா அந்த கதையால இருக்கு. ஏதோ போனா போகுதுன்னு ஓரத்துல இருக்க இடம் கொடுத்தா, என் வீட்டுப் பொருளையே தூக்கிட்டு போயிருக்க" என வாய் ஓயாமல் பேசினார்.

அதில் வளவன் அழுதுக் கொண்டே இருக்க.நந்தன் எந்த குற்றவுணர்வும் இல்லாமல் நின்றான். மூன்று தையல் போட்டு நிலாவை கூட்டி வந்தார் தாத்தா.

"ஏய் கிருஷ்ணா."

"சொல்லுங்க.."

"புள்ளைக்கு ஏதாவது சாப்பிடக் குடு மாத்திரை குடுக்கணும்" என்றார்.

"தாத்தா நான் குடுத்துக்கறேன்  டாக்டர் என்ன சொன்னாங்க". என்றான் வளவன் அழுது வீங்கிய முகத்துடன்.

"சின்ன காயம் தான் தையல் போட்டுருக்காங்க நாலு நாள் கழிச்சி வந்து தையலை பிரிச்சிக்க சொல்லிருக்காங்க.பயப்பட ஒன்னுமில்ல" என்று சொல்ல, மணிமேகலையின் டிவிஎஸ்  உள்ளே வந்தது.

அவர் உள்ளே வரும்போதே கண்கள் நிலாவின் கட்டின் மீது தான் இருந்தது.

"ஐயோ புள்ளைக்கு என்னாச்சு?" எனக் கேட்டுக் கொண்டே வந்தார்.

"அண்ணா" என ஷாலினி ஆரம்பிக்கும்போதே கிருஷ்ணம்மாள் வாயை மூடிவிட, அதைப் பார்த்த யுகி கத்திவிட்டான்.

"அம்மா இவன் தான் பூனை மண்டையை உடைச்சான்" என கத்த.

வண்டிக்கு கூட நன்றாக ஸ்டாண்ட் போடாமல் அப்படியே விட்டு ஓடி வந்தவர், என்ன நடந்தது? என கேக்க.

நந்தனே நேர்மையாக முன் வந்து நடந்ததை சொல்லிவிட்டான்.

அவ்வளவு தான்  அங்கே இருந்த வேப்பமரக் குச்சியை உடைத்து வெளு வெளு என வெளுத்துவிட்டார் மணிமேகலை.

காலையில் இருந்த தயக்கம் கூட இப்போது இல்லை மணியிடம்

மகன் தவறான பாதையில் செல்வதை எந்த தாயால் ஏற்றுக் கொள்ள முடியும். நந்துவை அடிக்க அடிக்க இங்கு அவர் மனம் ரம்பமாக அறுத்தது.

"அம்மா இப்போ எதுக்கு என்னைய அடிக்கற?"  அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டு அசராது கேள்வி கேட்டான்.

"அந்த புள்ளைய மண்டையை உடைச்சிட்டு திமிரா வேற கேள்வி கேக்கற.எங்க இருந்துடா வந்தது இவ்வளவு திமிரு?"

"ஏன் வரக்கூடாது எனக்கு 14 வயசாகப் போகுது, யார்கிட்ட எப்படி நடந்துக்கனும் தெரியும், ஒன்னுமில்ல ----- இவங்ககிட்ட இப்படி தான் நடந்துக்கணும், ஒரு ஷூ வாங்க வக்கில்லாத நாயி" என நந்தன் வார்த்தையை விட அவன் கன்னத்தில் இடியென அறைந்தார்  மணிமேகலை.

"ஒரு தகுதி தாரதமில்லாத நாய்க்காக என்னைய அடிச்சிட்டில, நான் உன்னைய திருப்பி அடிக்க ரொம்ப நேரம் ஆகாது, ஆனா அது உனக்கு தான் கேவலம்ன்னு சும்மா விடறேன்" என நுனி மூக்கு சிவக்க பேசியவன் அங்கிருந்து வீட்டினுள் சென்று புகுந்துக் கொண்டான்.

தன்னை அடிப்பேன் என அவன் சொல்லாமல் சொல்லிச் சென்றது மணிமேகலையை  சில்லு சில்லாக உடையச் செய்தது.

இந்த வீட்டில் தனக்கு   எந்த மரியாதையும் கிடைக்கவில்லை என்றப் போதும் தன் பிள்ளைகளுக்காக தான் சுயமரியாதையைக் கூட விட்டுவிட்டு வாழ்கிறார். அவரையே ஒற்றை வார்த்தையில் ஏன் வாழ்கிறோம் என நினைக்க வைத்துவிட்டான் நந்தன்.

யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று உள்ளுக்குள் மறுகிப் போனார்.

மருமகள் உடைந்துப் போய் நிற்பதைப் பார்த்த கிருஷ்ணம்மாள் மணியின் தோளைத் தொட.

"விடுங்க அத்தை அவன் இன்னிக்கு இப்படி பேசறான்னா அதுக்கு காரணம் நீங்க தான். இன்னும் எங்கப் போய் நிற்கப் போறானோன்னு நினைக்கும் போது என்னோட ஈரக்குலை ஆடுது. நான் வளர்த்த பையனும் இங்க நிற்கறான் பாருங்க பெரியவிங்களை எதிர்த்துக் கூட பேசாம, நீங்க வளர்த்துன பையனும் என்ன பன்றான்னு பாருங்க"  என அழுதவர், " இனி சாகற வரைக்கும் அவன்கிட்ட பேச மாட்டேன்த்த எனக்கு என்னோட மரியாதை முக்கியம்,"  என்றவர் அழுதுக்கொண்டே உள்ளே சென்றுவிட்டார்.

ஒரு ஷூ கடனாய் வாங்கியதற்கு எவ்வளவு பெரிய பிரச்சனையாகி விட்டது என கவலைக் கொண்ட வளவன், தன்னால் தான் தன் தங்கைக்கு இந்த நிலை என்று நிலாவைத் தூக்கிக் கொண்டு தன் வீட்டிற்கு வந்து விட்டான்.

இரவு ராஜி வந்ததும் நிலாவின் நிலையைப் பார்த்தும் கூட அதற்கு காரணமானவர்களிடம் ஒரு வார்த்தை கேக்கவில்லை.அதில் வளவனுக்கு பெரும் கோபம்.

அடுத்த வந்த நாட்களில் நிலாவும் சரி, வளவனும் சரி நந்தன் வீட்டிற்கு செல்லவில்லை.

மணிமேகலையுடன் பள்ளி செல்பவள்,வழியில் ஒரு டியூசன்  சொல்லித் தரும் வீட்டில் இறங்கிக் கொள்வாள்.இதையும் வளவன் தான் ஏற்பாடு செய்திருந்தான்.

டியூசன் முடிந்ததும் வளவன் வந்து கூட்டிச் சென்று விடுவான். மணிமேகலையும் யாரையும் வற்புறுத்தவில்லை.ஏன் இங்கு வருகிறாய் நான் இருக்கிறனே என்றெல்லாம் சொல்லவில்லை. எந்த நம்பிக்கையில் சொல்லுவார். இன்று மண்டையை உடைத்தவன் நாளை எது வேண்டுமானாலும் செய்வான். இனி நிலாவோ வளவனோ அதிகம் வராமல் இருப்பது தான் சரி என்று தோன்ற வளவன் எடுத்த முடிவை வரவேற்க தான் செய்தார்.

இதில் பாதிக்கப்பட்டது அதிகம் யுகியும் ஷாலினியும் தான்.

மாலை நிலா வந்ததும் ஷாலினியும் யுகியும் அவளுடன் விளையாடுவார்கள், அதில் வளவன் வந்து கலந்துக் கொள்வான் ஆனால் இப்போது இருவரும் இல்லாமல் சோர்ந்து போனார்கள் அண்ணனும் தங்கையும்.

யுகியே வந்து பேசினாலும் வளவன் பேசாமல் விலகிக் கொள்வான்.நிலாவையும் யாருடனும் பேசாமல் பார்த்துக் கொண்டான்.

ஒரு தாயாக கேக்க வேண்டிய இடத்தில் ராஜி வேண்டுமானாலும் கேட்காமல் போகலாம் ஆனால் ஒரு அண்ணனாக நிலாவை பாதுகாப்பது தன் கடமை,  துஷ்டனைக் கண்டால் தூர விலகு என எட்டாம் வகுப்பு படிப்பவனுக்கு தெரியாமல் இருக்குமா என்ன? அதான் விலகிக் கொண்டான் அவன் குடும்பத்தையும் விலக வைக்க தான் பார்க்கிறான் ராஜி   அதற்கு ஒத்துழைக்க வேண்டுமே.

மணிமேகலை தன் பெரிய மகனிடம் இருந்து முற்றிலும் விலகிக் கொண்டார். நந்தனும் பேச முயலவில்லை.தவறை உணர்ந்து தான் பேச முயலவில்லை என்று மட்டும் தவறாக நினைத்துவிடாதீர்கள். அந்த தவறை மட்டும் என்றும் நந்தன் செய்யவே மாட்டான்.

காலையில் 5 மணிக்கு எழும் மணிமேகலை. நந்தனுக்கும், மார்த்தாண்டத்துக்கும் தேவையான உடை, பொருட்களை எடுத்து வைத்துவிட்டு உணவு சமைக்கச் செல்வார்.,

அதன்பிறகு ஷாலினியைக் குளிக்க வைத்து உணவு ஊட்டி  நால்வருக்கும் உணவு டப்பாவில் போட்டு அடைத்துவிட்டு யுகிக்கு தேவையானதை பார்ப்பார்,  மூவரையும் கிருஷ்ணமூர்த்தி வேன் ஏற்றப் போனால் இவர் பள்ளிக்கு கிளம்பி சென்றுவிடுவார்.

இது தான் மணிமேகலையின் வழக்கம், கணவனைப் போல் மகனையும் ஒதுக்கி வைக்கப் பழகிக் கொண்டார்.ஏனென்றால் 
கணவன் அடித்தால் கூட வாங்கிக் கொள்ளலாம், மகன் அடித்து வாங்கும் அவலநிலை தனக்கு வந்துவிட்டால் தன் உயிர் உடலில் இருக்காது என்று தான் விலகிக் கொண்டார். அவர் விலகலில் கணவன் எப்படி கவலைக் கொள்ளவில்லையோ அதேப் போல் மகனும் கவலைக் கொள்ளவில்லை என்பது  தான் உண்மை.

பிறந்ததில் இருந்து ஒன்னுக்குள் ஒன்னாக பழகியவர்களுக்கு இரு நாட்கள் பேசாமல் இருந்ததே மிகப் பெரிய விஷயமாக இருந்தது.

"வள்ளி, வள்ளி,  பேசு ப்ளீஸ்டா அவன் பண்ணதுக்கு நான் என்னடா பண்ணுவேன், ப்ளீஸ் வள்ளி நீ பேசலைன்னா பூனையும் பேச மாட்டா"  என கெஞ்சவும்  நடந்துக் கொண்டிருந்த வளவன் நின்று விட. யுகிப் பேசி பேசியே வளவனை சமாதானம் செய்து விட்டான்.

"வள்ளி உனக்கு அவன் மேல கோவம்ன்னா அவன்கிட்ட தான் பேசாம இருக்கனும் எங்ககிட்ட ஏன் பேச மாட்டிங்கிற.?"

"நான் பண்ணது தப்பு தான் யுகி, அதுக்காக மண்டையை உடைக்கறது,  எங்களைய கீழ்தரமா நடத்துறதுலா  ரொம்ப தப்பு என்னால அதை ஏத்துக்க முடியல, எங்க அம்மாவே சொன்னாலும் இனி உங்க வீட்டுக்கு வரது ஆகாது விடு."

"சரி வீட்டுக்கு வர வேண்டா என்கிட்ட பேசலாம்ல அதுக்கூட மாட்டியா அப்போ அவ்வளவு தானா எல்லாமே"  என அழும் குரலில் கேக்க, இதற்கு மேல் பேசாமல் இருந்தால் யுகியின் மனம் வேதனை அடையும் என வளவன் பேசிவிட்டான்.

முதல் புள்ளியை யுகி வைத்துவிட்டதால் அடுத்த அடுத்த புள்ளியை அங்கிருந்தவர்கள் வைக்க  ஒரு நாள் தான் தேவைப் பட்டது.

கிருஷ்ணம்மாள் வளவனிடம் வழிய வந்து பேசக் காரணம் இருந்தது.

அந்த ஊரில் கொஞ்சம் தண்ணீர் பற்றாக்குறை, வீதி உள்ள அடிப் பம்பில்  தண்ணீர் அடித்து தான் வீட்டு தேவையை பூர்த்திச் செய்துக் கொள்ள முடியும்.

கான்வண்டில் படிக்கும் பேரன்களை அடிபம்பில் அடிக்க சொல்லி கேக்க முடியாது.. கேட்டாலும் செய்ய மாட்டார்கள், அதற்கு என்று இருக்கும் அடிமை வளவன் தான் பள்ளி செல்லும் முன் இருபது குடமாவது தண்ணீர் அடித்து  நந்தனின் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்து விட்டு தான் பள்ளிச் செல்வான்.

மணிமேகலைக் கூட இதைக் கண்டித்திருக்கிறார்.

"அத்தை நீங்க பண்றது ரொம்ப தப்பு, படிக்கற பையனை ஸ்கூல் போக விடாம தண்ணி எடுக்கச் சொல்றிங்க அவன் அவங்க வீட்டுக்கும் எடுத்துட்டு நம்ப வீட்டுக்கும் எடுத்துட்டு எப்போ ஸ்கூல் போறது.அங்க போய் என்ன படிப்பான்"

"அதுக்குன்னு என்னைய போய் இந்த வயசுல அடிப்பம்புல அடிக்கச் சொல்றியா?. உனக்கு மாடு மேச்சிக் குடுக்கறதேப் பெருசு இதுல தண்ணியை  எடுக்க சொல்லுவ போல" என கிருஷ்ணம்மாள் கத்த.

"நான் அப்படி சொல்லல அத்தை, நந்தன் இருக்கான் யுகி இருக்கான், அவங்க வீட்டுல இருக்கும் போது செய்ய சொல்லலாம்ல, அந்த பையன் அவன் வீட்டுக்கு எடுப்பானா? நம்ப வீட்டுக்கு எடுப்பானா? உதவி செய்யறாங்கன்னு போட்டு புழியக் கூடாது, அட்டப் பூச்சி மாதிரி அவங்க ரத்தத்தை உறியறீங்க"என மனம் சுணங்க சொல்ல.

"போடி போக்கத்தவளே செய்யறவனே கம்முனு இருக்கான் இவளுக்கு  எங்க நோகுதுன்னு தெரியல, காத்து உள்ளப்பவே தூத்திக்கணும் இதுகூட தெரியாம பசங்களுக்கு பாடம் சொல்லிக் குடுக்கப்  போய்ட்டா.. இவகிட்ட புள்ளைங்க படிச்சு உருப்புட்ட மாதிரி தான்".என சென்று விடுவார்.

இந்த இரண்டு நாட்களால வளவன் இல்லாமல் அவர்கள் வீட்டில் தண்ணீருக்கு பஞ்சமாகிப் போனது, அதனால் விளைந்த பாசம் தான் கிருஷ்ணம்மாளுக்கு.

மகளுக்கு மண்டை உடைந்த செய்தி கேள்விப்பட்டதும்  ராஜி  கலங்கிப் போனார்.  ஆனால் அதைப் பற்றி யாரிடமும் கேக்கவில்லை, வளவன் கூட கேளும்மா ஏம்மா கேக்க மாட்டிங்கிற அவங்களுக்கு நம்ப என்ன கொத்து அடிமையா இப்படி போட்டு பாடா படுத்துறாங்க அம்முக்கு கண்ணுல அடிப்படிருந்தா என்ன பண்ணிருப்போம் கேளும்மா கேளு" என ராஜியிடம் சண்டைக்குப் போனான்.

ஆனால் இதெல்லாம் சிறுபிள்ளைங்க பிரச்சனை பெரியவிங்க தலையிடக்கூடாது. என்ற எண்ணத்தில் "கேட்ட மணிக்காவுக்கே என்ன கதின்னு பார்த்தில அப்புறம் நம்ப கேட்டா மட்டும் நியாயமா கிடைக்கப் போகுது விட்டுதள்ளு" என்று விட்டார்.

அடுத்து வந்த நாட்களில்  நந்தன் மட்டும் சற்று விலகி இருந்தான் மற்ற எதிலும் மாற்றம் எதுவுமில்லை.


Leave a comment


Comments


Related Post