Total Views: 40052
வீட்டில் தனியாக விட்டு வந்தால் கிருஷ்ணம்மாள் இவளிடம் வேலை வாங்குகிறேன் என பெரிய குடத்தை தண்ணீருடன் தூக்க வைத்துவிடுவார் பிள்ளை இடுப்பு வலிக்கிறது என இரவில் அழும். வளவன் இருக்கும் போதே இது நடக்கும் இல்லாதப் போது சொல்லவா வேண்டும்? அதனால் தான் அழைத்து வந்துவிட்டான்.
உடைந்த முட்டையை தங்கள் கணக்கில் தான் எழுதுவார்கள் என்பதால் நிலாவை துடிக்க வேண்டாம் என தள்ளி அமர சொல்ல அவள் பிடிவாதமாக துடைத்தாள்.
பழக பழக நிலாவுக்கும் நன்றாக துடைக்க வந்துவிட்டது.
அன்று ராஜி வீடு வரும் வரைக்குமே இவர்கள் இருவரும் வேலை செய்தனர்.
பிஞ்சுக் கை காலையில் இருந்து மாலை வரை மருந்து தண்ணீரில் இருந்ததால் கையில் கொப்பளம் போட்டு விட்டது.
"அம்மு இதுக்கு தான் சொன்னே நீ துடைக்க வேண்டாம்ன்னு நீ கேட்டியா இப்போ பாரு கை எப்படி இருக்குனு?"
"என்னைய மட்டும் சொல்றியேண்ணா உன் கையும் அப்படி தானே இருக்கு பாரு" என தன் அண்ணன் கையை எடுத்து விரித்துக் காட்ட வளவன் கையும் கூட அப்படி தான் இருந்தது.
"எனக்கு ஒன்னும் ஆகாது. ஆனா உனக்கு அப்படியா? கம்முனு கூட வந்து இரு அம்மு, அதுவே போதும்" என்றான்.
அடுத்த நாளும் இதுவே தொடர்ந்தது. ஒருவாரம் ஊருக்குச் சென்ற பட்டாளத்தால் அதற்கு மேல் இருக்க முடியவில்லை.
யுகி ஆர்ப்பாட்டம் செய்து கிளம்பி வந்துவிட்டான்.
அவனது பூனையைப் பார்க்க வந்துவிட்டான் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்,
நிலாவைப் பார்க்காமல் அவனால் அங்கு இருக்க முடியவில்லை.
"நீங்க போறதுனா போங்க நான் வரல..."..
"இவனை யார் வர சொன்னா என்னையக் கொண்டுபோய் ஊர்ல விடுங்க எனக்கு பூனைப் பார்க்கணும்."
"பூனை பூனைன்னு எதுக்குடா நாயா அலையர.. நீ போனா அவளால ஒரு நேரம் சோறுப்போட முடியாத பரதேசிக் கூட்டம்".
"நந்தா இப்படிலாம் பேசுனா அப்பாகிட்ட சொல்லி வெச்சிடுவேன் உனக்கு வர விருப்பமில்லைனா விடு நான் போயிக்கறேன் "
அப்பா என்றதும் நந்தன் அமைதியாகிவிட்டான்.
வீட்டிற்கு வந்ததும் முதலில் நிலாவைப் பார்க்க தான் ஓடினான் யுகி..
"பூன பூன எங்க இருக்க?" என நிலாவைத் தேடிக்கொண்டேப் போனவன், அவள் இல்லை என்றதும் விலில் இருந்து புறப்பட்ட அம்பாக கிருஷ்ணம்மாளிடம் வந்து நின்றான்
"ஆயா"
"என்னடா?"
"எங்க பூனையை காணா, எங்கப் போனா ஊருக்குப் போய்ட்டாளா?"
"இல்லை வேலைக்கு போயிருக்கா, அவ அண்ணன் முட்டை துடைக்கக் கூட்டிட்டுப் போயிருக்கான்" என சொல்லிவிட்டு வேலையைப் பார்க்க, கேம் விளையாடிக் கொண்டிருந்த நந்தனின் கை ஒரு நிமிடம் நின்றது.
"அவளுக்கு என்ன வேலை செய்ய தெரியும்ன்னு போயிருக்கா?". என நந்தன் கேக்க.
"படிக்கத் தெரிஞ்சிதான் நீ படிச்சியா,அதே மாதிரி தான் கொஞ்சம் கொஞ்சமா கத்துப்பா, c பூனை விஷயத்துக்கு நீ வராத" என்று அண்ணனும் தம்பியும் சண்டைப் போட்டுக்கொள்ள
"அவளுக்காக நீங்க ஏண்டா அடிச்சிக்கிறிங்க?, முட்டை துடைக்க என்ன வேலை தெரிஞ்சிருக்கணும், நல்லா வியாக்காணம் உள்ள குட்டி தான் அதெல்லாம் பொழைச்சிப்பா" என கிருஷ்ணம்மாள் மாடு ஓட்டிச் சென்று விட்டார்.
அவர் போனதும் நந்தன் தன் வீட்டுக்கு கிழக்கே உள்ள வீட்டின் பையனோடு விளையாடச் சென்று விட்டான்.
சிறு பிள்ளை போல் கண்ணாமூச்சி, கோலி இதெல்லாம் இப்போது நந்தன் விளையாடுவதில்லை கிரிக்கெட் தான்.
இதற்காக தெரு விட்டு தெரு போய் விளையாடுவான். கிரிக்கெட் என்றால் அவ்வளவு பைத்தியம் எங்கு கூப்பிட்டாலும் வந்துவிடுவான்.
விளையாட செல்லும் இடத்தில் சொந்தமாக கிரிக்கெட் மட்டை வைத்திருந்தனர், பேட்டிங் செய்ய வேண்டும் என்றால் இவன் தான் மட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். அது இல்லாமல் வெறும் பந்தை மட்டும் வீசிவிட்டு வந்தான்.
"டேய் ஒரு தடவை பேட்டிங் குடுங்கடா."
"ஐயய்யோ நான் மாட்டேன்ப்பா நீ பாலை வேகமா அடிக்கிறேன்னு என்னோட பேட்டை உடைச்சிருவா.."
"உடைக்க மாட்டேன்டா ப்ளீஸ் குடுங்கடா"
"முடியாது நந்தா நானே நைட் முழுக்க சாப்பிடாம இருந்து அழுது ஆர்பாட்டம் பண்ணி இதை வாங்கியிருக்கேன் உடைஞ்சிது எங்கப்பா தோலை உறிச்சிருவாரு "
அன்றே இரவே தந்தையிடம் ஒரே ஆர்ப்பாட்டம் தான் பேட் வாங்கித் தரச் சொல்லி.
"நந்து நீ மட்டும் எக்ஸாம்ல நல்ல மார்க் எடு நானே வாங்கி தரேன்."
"அப்போ யாருக்கு வேணும் நான் அடுத்து ஒருவாரத்துல ஸ்கூல் ஜாயிண்ட் பண்ணிடுவேன், என்னால விளையாட முடியாது இப்போ வாங்கி தாங்க."
"நீ நினைச்சதும் குதிரை ஏற முடியாது தம்பி,"
"அப்போ வாங்கி தர மாட்டிங்க அப்படி தானே ஒரு 1000 ரூபாய் பேட்டுக்கு கூட நான் ஆகாதவன் ஆகிட்டேன்ல விடுங்க பார்த்துக்கறேன்" என சாப்பிடாமல் சென்று விட்டான்.
மகன் சாப்பிடவில்லையே என கவலையாக இருந்தது மணிமேகலைக்கு. இருந்தாலும் அவன் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து பழக்கினால் இன்னும் மோசமான நிலைக்கு தான் போவான் என விட்டுவிட்டார்.
ஆனால் மகன் கேட்டு மார்த்தாண்டத்தால் இல்லை என்று சொல்ல முடியவில்லை, அடுத்த நாளே அவன் கேட்டது போல் கம்பெனி பிராண்ட் பேட்டையே வாங்கிக் குடுத்துவிட்டார்.
அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை தெருவில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடலாம் என மகிழ்ச்சியாக தூங்கினான்.
அந்த வாரம் முழுவதும் முட்டை துடைத்தே இரண்டாயிரத்துக்கு மேல் சம்பாரித்து விட்டான் வளவன்.
முதல் சம்பளத்தை வைத்து தாயிக்கும் தங்கைக்கும் புது துணி எடுத்துக் கொடுத்தான்.
"அம்மா வா துணி எடுக்கப் போகலாம்"
"எதுக்கு தம்பி புதுசுலா நீ சம்பாரிச்ச பணத்தை பத்திரமா வை பின்னாடி உன் படிப்புக்கு ஆகும் நாளைக்கு காலேஜ் சேரனும்னா தேவைப்படும்ல" என்றவர் மகனின் பணத்தை வாங்கி ஒரு ரூபாய் கூட வீட்டிற்கு என செலவு செய்யவில்லை.
"இன்னும் இரண்டு வருஷம் கழிச்சி வரப் போற காலேஜ்க்கு இப்போ என்ன அவசரம்மா, உங்களுக்குன்னு புது துணி வாங்கி குடுக்கணும்ன்னு தான் இவ்வளவு சிரமப்பட்டு வேலை செஞ்சேன் தெரியுமா?, வேண்டான்னு சொல்றிங்க" என்றவன் குரல் உடைந்து போய் வரவு,ம் அதற்கு மேல தாயால் தாங்க முடியவில்லை.
"இப்போ என்னடா துணி எடுக்கணும் அதானே வா போலாம்" என்று சேலையை உதறி சரியாக கட்டியவர் கலைந்த தலையை கையால் நீவி விட்டுக் கொண்டு வேக வேகமாக செருப்பை போட்டார்.
"பட்டு நீயும் டிரஸ் மாத்திட்டு வந்துடு."
"அண்ணா இதுவே நல்லா இருக்கு வா போலாம் "என புது துணி கிடைக்கப் போகிறது என்ற சந்தோசத்துடன் துள்ளலுடன் கிளம்பினாள் நிலா.
ஏழைகளுக்கு கார், பங்களா,தங்கம் வைரம் என இவற்றில் எல்லாம் மகிழ்ச்சியும் இல்லை, விருப்பமும் இல்லை, புது துணி, புது செருப்பு, என்று எப்போதாவது கிடைக்கும் பொருள்களின் மீது தான் விருப்பமும், மகிழ்ச்சியும், நிலாவும் அதில் தான் சந்தோசமாக இருந்தாள்.
கடைக்கு அழைத்துச் சென்று அம்மாவுக்கும் தங்கைக்கும் ஆயிரம் ரூபாய்க்கு துணி எடுத்தான்.
"டேய் தம்பி ஒரு நூறு ரூபாய்க்கு துணி எடுத்தா பத்தாதா எதுக்குடா ரெண்டுப் பேருக்கு ஆயிரம் ரூபாய்க்கு துணி தேவையில்லாம வீண் செலவு பண்ற தம்பி."
"அம்மா நம்ப என்ன தினம் தினம் துணி எடுக்கப் போறோமா?, நீயும் இது மாதிரி பட்டுப் புடவை கட்டணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கும்ல, இதுதான் கடைசி இனி இவ்வளவு காசுப் போட்டு துணி எடுக்க மாட்டேன், இப்போ எடுத்துக்கோ" என்றதும் ராஜியும் எதுவும் பேசவில்லை.