இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -7 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 19-02-2024

Total Views: 39742

"வேற என்னதாண்டா கூப்பிடறது ஏண்டா எங்களைப் போட்டு படுத்தி எடுக்கறிங்க?", இந்த வீட்டை விட்டுவிட்டு எங்கையாவது ஓடி விடலாமா? எனத் தோன்றியது வளவனுக்கு. அதையெல்லாம் இப்போது யோசித்துக் கொண்டு நிற்க.

"என்னடா நான் கேட்டுட்டே இருக்கேன் பதில் பேசாம நிற்கர?"

"அவனை விடுங்க அண்ணா இந்த வருஷம் தேருக்கு போறதைப் பத்தி பேசிட்டு இருந்தான்.என்ன இந்நேரத்துக்கு வந்துருக்கீங்க" என்றவர் மார்த்தாண்டத்தின் கையைப் பார்க்க,  அவரின் கையிலோ கருப்பு கவரில் ஏதோ உணவுப் பொருள் இருந்தது.

"வீட்டுக்கு சில்லி வாங்கிட்டு வந்தேன் அப்படியே புள்ளைங்களுக்கும் குடுத்துட்டு போலாம்னு வந்தேன்" என்றவர் கவரை ராஜியை நோக்கி நீட்ட, வளவன் அவரை முறைத்தான் "எதையும் வாங்காதே" என்று படித்து படித்து சொல்லிருக்க தாய் அவன் சொன்னதை மதியாமல் வாங்கவும், கோவம் உள்ளுக்குள் கணன்றது.

வளவனின் பார்வைக்காகவே "இருங்கண்ணா பணம் தரேன்" என கவரை கீழே வைத்தவர் உள்ளே செல்லப் போக.

"இதென்ன புதுப் பழக்கமா இருக்கு ராஜி?. எப்பவும் பசங்களுக்கு வாங்கும் போது வாங்கிட்டு வரது தானே,"என்றவர் "எல்லாமே புதுசா பண்ணிட்டு இருக்கீங்க இதெல்லாம் நல்லதுக்கு இல்லை பார்த்துக்கோங்க" என முகம் சுணங்க சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

அவரே நேரடியாகக் கொண்டு வந்து தரவேண்டும் என்று இல்லை. அந்த வழியில் இரவு நேரத்தில் வெளிச்சம் என்பது சிறிதும் இருக்காது., வளவன் வீட்டிலோ மின்சாரம் இல்லாததால் குழந்தைகளை தனியாக அனுப்ப முடியாது என அவரே தான் எப்போதும் கொண்டு வருவார், அதையும் கிருஷ்ணம்மாள் தடுக்க தான் முயற்சி செய்தார், ஆனால் அது மார்த்தாண்டத்திடம் வேலைக்கு ஆகாமல் போய்விட்டது.

மார்த்தாண்டம் போய்விட்டாரா? என வாசல் சென்று பார்த்து வந்தவன், " அம்மா உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியவே புரியாதா?,  எதுக்கு இப்படி இருக்க? அவங்க குடுக்கறதை எல்லாத்தையும் வாங்கறதால தான் நம்ப என்னமோ அவங்களுக்குன்னு கடவுள் நேந்து விட்ட அடிமை மாதிரி நடத்துறாங்க. அவங்களை சொல்லியும் குத்தமில்லம்மா நீ இடம் குடுக்கற அதனால தான் அப்படி பண்றாங்க" என சாப்பிடாமல் எழுந்து சென்று விட்டான்.

"டேய் தம்பி நைட் சாப்பிடாம படுக்கக் கூடாதுடா, சோறு வேற தட்டுல காத்துட்டு இருக்கு. நம்பதான் சாப்பாட்டுக்காக காத்துட்டு இருக்கனும், சாப்பாடு நமக்காக காத்துட்டு இருக்கக் கூடாது, சொன்ன புரிஞ்சிக்கோ" என எடுத்து சொல்லி சாப்ட அழைத்து வந்தவர், சில்லியை தட்டில் எடுத்து வைக்க.

"இதை மட்டும் எடுத்து வெச்ச தட்டை தூக்கி அடிச்சிடுவேன் எனக்கு வைக்காத". என்றான் கடுமையாக.

"தம்பி யாரோ ஒருத்தர் ரெண்டுப் பேர் பண்றதுக்கு நீ மொத்தக் குடும்பத்தையும் தப்பா பார்க்கற, ஆயாவும் நந்தனும் தான் தப்பா நினைக்கிறாங்கன்னா அவங்கள விட்டு விலகி இரு,  மத்தவீங்க என்ன பண்ணாங்க?. சொல்லு,வாங்கி தர வேண்டிய உன் அப்பனே பிள்ளைங்களும் பொண்டாட்டியும் இருக்குதா? இல்லைனான்னு எட்டிப்பார்க்க மாட்டிக்கிறான், மார்த்தி அண்ணாவுக்கு நமக்கு வாங்கி தரணும்னு ஏதாவது இருக்கா?, இல்லைல ஆனாலும் வாங்கிட்டு வராங்கன்னா அவரை மதிச்சு சாப்பிடணும், சாப்பிடு" என்றார்.

அதற்கு மேல் என்ன பேசினாலும் அங்கு எடுப்படாது என வளவனுக்கு நன்கு தெரியும்,  15 வயது பையனுக்கு இந்த புரிதல் கூட இல்லாமல் இருக்கும்மா என்ன அதனால் சில்லியை வாங்கிக் கொண்டான்.

நிலா இதில் எதிலும் கலந்துக் கொள்வதில்லை நந்தன் வீட்டைப் பற்றிய பேச்சு வந்தாலே அமைதியாகிவிடுவாள். எப்போதும் நந்தன் மண்டையை உடைத்தானோ அதில் இருந்து பிறந்த ஞானம் இது.

இங்கு இப்படி இருக்க நந்தன் வீடோ கலவர பூமியாக இருந்தது.

"அவங்களுக்கு நம்ப வாங்கித் தரணும்னு ஏதாவது இருக்கா?, எதுக்கு அவங்களுக்கு வாங்கி தரிங்க?" என நந்தன் கத்திக் கொண்டிருந்தான்,  இதற்கும் கிருஷ்ணம்மாள் தான் முதல் விதையை விதைத்திருந்தார்.

என்ன மாதிரியான குணம் இது என மணிமேகலைக்கு வேற தன் பெரிய மகனை நினைத்து கவலை உண்டாகியது.

"நந்து இதென்ன?, நடக்கறது, கேள்வி கேக்கறதுன்னு எல்லாமே புதுசா இருக்கு, ராஜி வீடு இங்க வந்து இருபது வருஷம் இருக்கும் அப்போல இருந்து இப்போ வரைக்கும் அவங்க வேற நம்ப வேறன்னு பிரிச்சிப் பார்த்ததில்லை. நமக்கு வாங்கும் போது அவங்களுக்கும் வாங்கிடுவேன், இனியும் இதுதான் நடக்கும் அதை கேள்வி கேக்க யாருக்கும்  இங்க உரிமை இல்ல"  என மகனைப் பார்த்து ஆரம்பித்தவர் தாயைப் பார்த்து முடித்து வைத்தார்.

"அவங்க வேற ஜாதியா இருக்கலாம், அதுக்காக பழகுன பாசம் இல்லாம போய்டுமா?, சொல்லப் போனா நம்பளவிட அவங்க தான் உஷத்தி நம்ப அந்த கடவுளை தூர இருந்துதான் பார்க்கறோம் ஆனா அவங்க கடவுளையே தொட்டு பூஜை பண்றவீங்க,  எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது இனி பேசும் போது பார்த்து பேசு பதனைஞ்சு வயசாகிடுச்சு இன்னும் சுயப்புத்தி இல்லாமல் சொல்புத்திக் கேட்டு நடந்துட்டு இருக்க, வளவனும் உன் வயசுப் பையன் தானே எப்படி பொறுப்பா நடந்துக்கறான் நீயும் இருக்கியே" என பேசிவிட்டுவிட்டார் மார்த்தாண்டம்.

என்றாவது ஒருநாள் தான் இப்படி பேசுவார், அது இன்று நடந்துவிட.நந்தன் அமைதியாகிவிட்டான்.

வெளியே பார்ப்பவர்களுக்கு அவன் அமைதியாக இருப்பது போல் தான் தெரியும் ஆனால் உள்ளுக்குள் உருக்கி ஊற்றிய இரும்பாக கொதித்துக் கொண்டிருந்தான்.

அந்த வருடப் பொதுத்தேர்வு வந்துவிட்டது. எதற்கு எடுத்தாலும் வளவனுடம் ஒப்பிட்டு பேசும் தந்தைக்கு மதிப்பெண்ணில் பதிலடி கொடுக்க வேண்டும் என்றே வெறிக்கொண்டு படித்தான் நந்தன்.

வளவனுக்கு அப்படி எதுவும் போட்டி இல்லாததால் படிக்க வேண்டியதை நிதானமாக உள்வாங்கி படித்தான்.

இருவருக்கும் பொதுத் தேர்வு ஆரம்பித்து விட்டது. அரசுப் பள்ளியில் தான் நந்தனின் பள்ளிக்குச் சென்டர் போட்டிருக்க, வளவனை எப்போதும் முறைத்துக் கொண்டே இருப்பான் நந்தன்.

"ஏண்டா மச்சான் அவனை அப்படி பார்க்கற?"

"இவன் தான் என்னோட முதல் எதிரி. "

"சீ அவன் எங்க நீங்க எங்க.. சட்டைக் கூட ஒழுங்காப் போடாம கசங்கி கந்தரகோலமா இருக்கு, இவனைப் போய் எதிரின்னு சொல்றியேஉன்னோட எனிமியா இருக்கக் கூட தகுதி வேணும் நந்து". வீட்டில் கிருஷ்ணம்மாள் என்றால் வெளியே இதுபோன்ற இத்துப்போன நண்பர்கள் நாலுப்பேர் தான் நந்தனின் செயல்களுக்கு காரணம்.

அவனே மாற வேண்டும் என்று நினைத்தால் கூட இவர்கள் விட மாட்டார்கள்.

"நீ சொல்றதும் சரி தான்,ஆனா அவன் நல்லப் படிப்பான் எனக்கு ஈக்குவலா இல்லாத ஒருத்தன் என்னய  விட மார்க் எடுத்தா எனக்கு தான் கேவலம், அதுக்காகவாது நான் வெறியோட படிச்சு அவனை விட மார்க் வாங்கணும் என்று மீண்டும் வளவனை முறைத்தான்.

அவன் யாரைதான் நன்றாகப் பார்க்கிறான் என அவனது முறைப்பையும் கடந்து விட்டான் வளவன்.

தேர்வு நல்லபடியாக முடிந்தது. எப்படியும் வளவனை விட நன்றாக மதிப்பெண் எடுத்துவிடுவோம் என விடுமுறையை கொண்டாட அம்மாயி,  தாத்தா வீட்டிற்குச் சென்றான் நந்தன், அவனுடன் யுகி ஷாலினியும் சென்றுவிட அந்த ஒருமாதமும் எதோ கைதிக்கு விடுதலை கிடைத்ததுப் போல் இருந்தது வளவனுக்கும் நிலாவிற்கும்


Leave a comment


Comments 1

  • J Janani
  • 2 months ago

    அகந்தை அழிந்ததடி பூந்தளிரே இரண்டாவது பாகம் அமேசான் கிண்டிலில் எப்போது வரும்

  • J Janani
  • 2 months ago

    ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ் ரொம்ப நாளா எதிர்பார்க்கிறேன்


    Related Post