இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
மாயவனின் அணங்கிவள் அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 26-09-2023

Total Views: 44456

பொன்சோலை ஊருக்கு அருகே அழகான பொய்கை , அதன் அருகே சிறிய காட்டாறு ஓட... இரை தேடும் வெண் கொக்குகள் ஆங்காங்கே தன் இரைக்காக காத்திருக்க....பசுமை  வயல்வெளிகளை கண்ணுக்கு விருந்தாக்கும் கொங்கு மண்டலத்தின் அழகிய கிராமம் அது....

கிராமம் என்றாலே பசுமைகள் இருப்பதுப் போல் பழமைகள் இருக்கும்.

பழமைகள் மாறாக் கூடாது என்று இன்றும் பல சாம்பிரதாயங்களை கடைபிடிப்பர்... அதில் பொன்சோலை  கிராமம் மட்டும் விதிவிலக்கல்ல...

அந்த வெள்ளை மாளிகையினுள் இருந்த தோட்டத்தில் நாற்காலியில் அமர்ந்து பேப்பரைப் படித்துக்கொண்டிருந்த  கிருபாகரன்..அவர் அருகில் இருந்த  தம்பியிடம் 

"தினா  நாளைக்கு ஒரு பஞ்சாயத்து இருக்குனு அப்பா சொல்லிட்டு இருந்தாரே  என்னாச்சு?" 

"நம்ப  வேந்தன் பார்த்துக்குவான் நீங்க கூட இருந்தா போதும்னு கூட அப்பா சொன்னாரேண்ணா...அதுலாம்  வேந்தன் பார்த்துப்பாண்ணா" 

"வேந்தன் பார்த்துப்பான் தான்...அவனைப் பத்தி உனக்கு தெரியாதா எல்லாத்துலையும் நேர்த்தியும் ஒழுங்கும் இருக்கும்னு பார்ப்பான்..அவன் போனா சரியா வருமா..இதுவேற ஊர் பஞ்சாயத்து அவனைப் பத்தி நம்ம ஊரு பசங்களுக்கு தெரியும் வெளியூர் பசங்களுக்கு என்ன தெரியும்.?" 

"நம்ப பையனை விட அதுக்கு வேற யார்ண்ணா சரியா வருவா... கவலையை விடுங்க வேந்தன் பார்த்துப்பான்." என்றார் தினகரன். 

அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அழுத்தமான நடை சத்தம் அவர்களின் காதை எட்டியது. இருவரும் ஒரு சேர வாசலை நோக்கினர். 

தனது நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு வேகமாக உள்ளே வந்தவன்," முருகா என்ன அந்த பட்டன் ரோஸ் செடி காயுது ஒழுங்கா ஊரம் வைக்கறியா? இல்லையா?, மணி பிளாண்ட் கூட சரியா வரவே மாட்டிங்குது..உனக்கு ஒரு செடியைக்கூட ஒழுங்கா வளர்க்க தெரியாதா?, இனி செடி ஒழுங்கா வளரலைன்னா நான் ஆள் மாத்த வேண்டியிருக்கும்" என்றான் அதிகாரமாக. ..

அவன் அதிகாரத்தில் முருகன் எனப்பட்டவன் ஒரு நிமிடம் ஆடிதான் போனான்...

வேகமாக  ஓடி வந்து அவன் முன் கைக்கட்டியவன்...

"நேத்து நீங்க சொன்ன உரம் தான் ஐயா வெச்சேன்...மணிபிளாண்ட் கூட போன வாரத்தைக் காட்டிலும் நாலு இலை அதிகமா விட்டுருக்குய்யா..." என்று பம்பியவன் உள்ளுக்குள்ள "இதுக்கு மேல  எப்படி வளருமா? அதுக்கூட சேர்ந்து நானும் வளர்ந்தா தான்  உண்டு போல" என்று  புலம்பினான்.

முருகன் சொன்ன கடைசிப் பாதியை  விட்டுவிட்டு முதல் பாதியை  மட்டும் பிடித்துக்கொண்டவன், "அப்போ செடிக்கு தண்ணி விடலையா  உரம்  மட்டும் வெச்சிட்டு விட்டுட்டியா?" என்றான் தோரணையாக.

"நீங்க உரம் தானே வைக்க சொன்னங்கனு"  என்று  தலையை  சொறிந்தவனை  அனல் பார்வை பார்த்தவன்.."சோறு போட்டா குழம்பு ஊத்திக்காம சாப்பிடுவியா? " என்றான்  வேகமாக  

"இதோ  ஐயா  தண்ணி பாச்சறேன்" என்று பம்பியப்படியே  ஓடியவனால் அங்கிருந்த மற்ற வேலையாட்களும் தன் வேலையை  ஒழுங்காக செய்ய..."முருகா இங்க வா"என்று மீண்டும் அழைத்தான்.

"சொல்லுங்கயா?"

"அது என்ன அந்த  ரெட் கலர் ரோஸ் இவ்வளவு பூ  வெச்சிருக்கு செடியும் புதுசா  இருக்கு, எப்போ வாங்குன?"

"நம்ப அருவி அம்மிணி தாங்க வாங்கிட்டு வந்தாங்க  அவங்களுக்கு சிவப்பு கலர்னா ரொம்ப பிடிக்கும்னு.. போன தடவை வந்தப்ப வாங்கிட்டு வந்து அவங்க கையாலையே  வெச்சிட்டு போனாங்க.. இந்த முறை அவங்க வந்ததும் பூ கொத்து கொத்த பூத்துருக்குங்கய்யா அம்மிணி கை அப்படிங்க..."  என்றான் கடைசியாக  அவன் வாயை விட..

"அப்போ ஒன்னு பண்ணு உங்க அம்மிணியை  வெச்சே இங்க இருக்கற எல்லா செடியையும் மாத்தி நடு... பூவா பூத்து கொட்டும் "

"அவங்களே  லீவுக்கு வந்துருக்காங்க...வேலை செஞ்சா  கை  நோகுங்க ஐயா, பாவங்க  நானேப் பார்த்துக்கறேன்" 

"நீ பார்த்த லட்சணம் தான் தெரியுதே" என்றவன் "அவளும் தின்னுபுட்டு சும்மாதான் சுத்திட்டு இருக்கப் போறா... செஞ்சா ஒன்னும் குறைஞ்சிட மாட்டா..." என்றவன் சுற்றி வேலைப் பார்ப்பவர்களை  ஒருப் பார்வை பார்த்தவாரே கிருபாகரனின் அருகில் சென்றவன்.

"என்ன இன்னைக்கு நேரமா  வந்துட்டீங்க போல.. எவ்வளவு தூரம் வரைக்கும் போனீங்க?" என்றவாரே அவர் கையில் இருந்த பேப்பரை வாங்கிப் படிக்க ஆரம்பித்தான் 

"களத்து மேடு வரைக்கும் போனோம் வேந்தா.. அதுக்கு மேல இந்த வயசானாக் காலத்துல நடக்க முடியாது  சாமி  என்ற  கிருபாகரனை...

பேப்பரை விலக்கி ஒரு பார்வைப் பார்த்தவன்,  "இனி வாய்க்கா மேட்டு வரைக்கும் வாக்கிங் போகல  காலையில் ராகி களி தான் சாப்பிட குடுக்க சொல்லுவேன்" என்று  சொல்லிவிட்டு  மாளிகைக்குள் நுழைந்தான்  அவன் பின்னே அண்ணன் தம்பி இருவரும் உள்ளே நுழைந்தனர்.

வீட்டின்னுள்ளும் அவரவர் வேலைகளை அவரவர் பார்த்த வண்ணம் இருக்க...வீடே அமைதியாக  இருந்தது.

அதில் இருந்தே இன்னும் அவள் எழவில்லை என்பதை உணர்ந்து கொண்டவன்...

"அத்தை..... " என்று சத்தம் போட...ஒற்றை வார்த்தையில் அதில் அந்த வீடே அதிர்ந்தது.

எங்கிருதோ வேகமாக  ஓடி வந்து அவன் முன் நின்றார் அவனின் அத்தை நிர்மலா...

"சொல்லு தம்பி..."

"என்ன இன்னும் உங்க பொண்ணு எந்திரிக்கலையா...? எவ்வளவு தடவை சொல்றது நேரமா எழுந்து வாக்கிங் போகனும்னு... அவளால  என்னோட தம்பி தங்கச்சிகளும்  கெட்டுப் போறாங்க"  என்றான்  மிரட்டலாக..

"பிள்ள நேத்து தானே  ஹாஸ்டல இருந்து வந்தது... பாவம் அங்க சரியா தூக்குச்சோ இல்லையோ இன்னும் ஒரு வாரத்துக்கு லீவு தானே நாளையில இருந்து சரியா  செஞ்சிடுவா, நான் எழுப்பி விட்டறேன்"   என்றார் இறங்கிய குரலில்..

பெற்ற மனம், பிள்ளையை  கல்லூரி விடுதியில் விட்டதால்  அவளின் அருகாமைக்கு ஏங்கி தவித்தது...ஆனால் அவளை மட்டும் தனியாக  அனுப்பினால் வீட்டில் எல்லோரும் கேள்வி கேப்பார்கள் என்று  தன் தங்கையும் சேர்த்தே விடுதியில் சேர்க்க சொல்லிருந்தான் அவன்.

அவன்தான்  அதிவேந்தன்....

கிருபாகரன் மாலதியின் மூத்த மகன்,  தனது  29 வயதில்  அடியெடுத்து வைத்துள்ளான்.. வேந்தனை  பொருத்த வரையிலும் அனைத்திலும் சரியாகவும்  நேர்த்தியாகவும் இருக்க வேண்டும்,அதை  மீறி தவறு நடந்தால் அதற்கு யாரால் தவறு நடக்கிறதோ அவர்களே பொறுப்பு... என்று  வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல் பேசி விடுவான்...

சேதுபதி அம்புஜத்தம்மாளுக்கு இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள்..

மூத்தவர் தான்  கிருபாகரன்  இளையவர்  தினகரன்...அவருக்கு அடுத்து தான் நிர்மலாவும் ஷர்மிளாவும் பிறந்தனர்...

ஊரில் பெரியக் குடும்பம் என்பதால்  சொத்துக்களை வெளியே அனுப்ப மனமில்லாமல்  பெண் கொடுத்து பெண் எடுக்க  முடிவு செய்தார்  சேதுபதி...

அதன்படி  நிர்மலாவின் கணவர் கேசவனும்  கிருபாகரனின் மனைவி மாலதியும்,தினகரனின் மனைவி  அமுதாவும்  அண்ணன் தங்கைகளால்  பிறந்து வளர்ந்ததால் எந்த வித  ஏற்ற இறக்கத்தைப் பற்றியும் கவலைப்படாமல்  சேதுபதி  மூவருக்கும் திருமணத்தை  முடித்து விட்டார்...இதில் ஷர்மிளா மட்டும் வெளி இடத்தில் கொடுத்து விட்டார் சேதுபதி...

கிருபாகரன்  மாலதி தம்பதிக்கு இரு மகன் மூத்தவன் அதிவேந்தன்... இளையவன்  இனியன்

தினகரன்  அமுதா தம்பதிக்கு
கார்த்திகேயன் என்ற மகனும்  ரித்விகா  என்ற  மகளும்  உள்ளனர்.

நிர்மலா கேசவனுக்கு   ஒரு மகன் நிரூபன் இரண்டாவதாக  பெண் தேனருவி....

தேனருவிக்கு 10 வயதிற்கும்  போது கேசவன்  திடீரெண்டு மாரடைப்பில் இறந்ததால்  நிர்மலாவிற்கு தன் அண்ணன்களின் வீடே சரணாகதி என்றானது தன் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அண்ணன்கள் வீட்டிற்கே வந்து விட்டார்...

ஷர்மிளா, நந்தகோபாலன் என்றவருடன் திருமணம்  நடந்து  அவருடன்  வெளிநாட்டில் வசிக்கிறார். அவர்களுக்கு தேவனந்தினி என்ற ஒரு பெண் குழந்தையும் உண்டு...

"இந்த லீவுல  உங்க பொண்ணுகிட்ட சொல்லி வாலை எல்லாம் சுருட்டி வெச்சிட்டு இருக்க சொல்லுங்க இல்லைனா திரும்பவும் லீவுக்கு இங்க வரமுடியாது.. நாளைக்கு காலையில  5 மணிக்கு எழுந்து வாக்கிங் போக   ரெடியா  இருக்கனும், இல்லைனா...?நாளைக்கு முழுக்க இந்த வீட்டுல இருக்கற எல்லா வேலையையும் அவதான்  செய்யணும்"  என்றான்  மிடுக்காக..

"அவள் வந்திருப்பதோ  ஒரு நாளோ இரண்டு நாளோ அவ இருக்கற வரைக்கும்" என்று நிர்மலா இழுக்க...

"அவ இஷ்டம் போல விட்டா வீடு வீடு மாதிரி இருக்காது...அவளும் கெட்டுப் போய் என்னோட தம்பி தங்கச்சியையும் கெடுத்துடுவா" என்றவனை "விடு வேந்தா அருவி வந்ததும் தான் வீடு கலகலன்னு இருக்கு..." என்று அவளுக்கு சார்பாக கிருபாகரன் பேச..அவரை ஒரு பார்வையில் அடக்கி விட்டான் வேந்தன். 

"அம்மா ஒரு கப் காபி" என்று கண்களை துடைத்துக் கொண்டே தூக்கக் கலக்கத்தில் வந்த அருவி... வேந்தனை கவனிக்கவில்லை... 

அதை நிர்மலா புரிந்துகொண்டு சைகை செய்ய.. 

"அம்மா நான் காபிக் கேக்கறேன், நீங்க என்ன காத்துலையே கையை வீசி காக்கா விரட்டுட்டு இருக்கீங்க" என்றாள் சிணுக்களாக.. 

தூங்கி எழுந்தவளின் . தலைமுடிகள் கலைந்து கன்னத்தோடு உறவாட... கண்களில் இருந்து மிச்ச தூக்கமாக இரவு உடையில் வந்து நின்றவளை தன் பார்வையால் எரித்தான் அதிவேந்தன்...

"அடியே கூரு கெட்ட குப்பாயி அங்க கொஞ்சம் திரும்பி பாருடி"  என்றார் நிர்மலா அருவிக்கு மட்டும் கேக்குமாறு.

அப்போதுதான் அங்கு நின்ற  வேந்தனை கவனித்தவள்... வாய் தானாக  "மாமா......" என்றது...

"இதுதான்  வயசு பிள்ளை எழுந்துக்கற நேரமா...? ஊர்லையே  பெரியக் குடும்பம் நம்மளுது, எப்பவும் நம்ப  வீட்டுக்கு நாலுப் பேரு வருவாங்க போங்க... இப்படி கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாம டிரஸ் பண்ணிட்டு வந்து  நிற்கற... எத்தனை தடவை சொல்றது.. இது மாதிரி  டிரஸ் எல்லாம் உன் ரூமோட வெச்சிக்கோனு" என்று வசவை ஆரம்பித்த  வேந்தனை 

"போச்சா இன்னிக்கு காலையில்லையே இவன் கிட்ட திட்டு வாங்கிட்டமா இந்த நாள் நாசமா  போன மாதிரி தான்... எங்க இருந்துதான்  என்னைய திட்டறதுக்குனே வருவானோ"  என்று  அருவி நினைத்துக்கொண்டிருக்க..

"அம்மா காபிம்மா" என்று  தலையை  சொறிந்தவாறு தன் தாய்  அமுதாவிடம் ரித்விகா  கேக்க

அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள் அருவி... 

அவளைப் போலவே இரவு உடை அணிந்து அவளுடன் ஒரே அறையில் தூங்கி அவளுடனே எழுந்து வந்தவளை வேந்தன் எதுவும் கூறவில்லை.. 

அவள் பார்வையை உணர்ந்தானோ என்னவோ "என் தங்கச்சி கெட்டு போறதுக்கு முதல் காரணமே இவ தான் அத்தை... இல்லனா நேரம் காலமா எப்போவே ரித்து எழுந்துருப்பா" என்று அதற்கும் அருவியையே திட்டியவனை கொலைவெறியுடன் பார்த்தாள் அருவி..

"என்ன மாமா இது... அவ பண்றதுக்கும் நான்தான் காரணமா... அவ லேட்டா எழுந்தா அவளைக் கேளுங்க... என்னை எதுக்கு சொல்றீங்க...? நான் எழுந்து போறவளை இழுத்து போட்டு தூங்க சொன்ன மாதிரி பேசறீங்க" என்றாள் அருவியாக...


Leave a comment


Comments 3

  • D Dhivya
  • 1 week ago

    How to read nxt ud

  • D Dhivya
  • 1 week ago

    How to nxt id read

  • A Akila
  • 7 months ago

    tesing

  • W Writer @Writer
  • 7 months ago

    Notification Testing

  • W Writer @Writer
  • 7 months ago

    Notification Testing


    Related Post