இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -2 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 06-02-2024

Total Views: 34147

நிலவியா  குடும்பமும் யுகியின் குடும்பமும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள், யுகியின் குடும்பம் உயர் பிரிவை  சேர்ந்தவர்கள் என்பதால் நிலவியா  குடும்பத்தை  எப்போதும்  கீழ்தரமாக,   மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார் யுகியின் பாட்டி.

அது  விஜயநந்தனின்   மனதில் ஆழப் பதிந்துவிட்டது.. குழந்தைகளின் மனம்  எதைப் பார்க்கிறதோ,  எதை கேக்கிறதோ அதை தானே அப்படியே செய்ய சொல்லும்.

நந்தனின் மனமும் அப்படி தான் தன் பாட்டி தாத்தா செய்யும் கீழ்தரமான  செயல்களை மனதில்  உள்வாங்கிக் கொண்டான்.

அன்று இரவு  அந்த வீட்டில் நிம்மதியாக  உறங்கிய  ஜீவன்  என்றால்  அது நந்தனும் அவனது தாத்தா பாட்டியும் மட்டும்   தான்..

கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணம்மாள் தம்பதிக்கு மார்த்தாண்டம் என்ற மகனும், செல்வராணி என்ற மகளும் இருக்கின்றனர்.

மார்த்தாண்டம் 1980 களில் தீவிரமான குஷ்பு ரசிகர். குஷ்புக்கு கோவில் கட்டுவதற்காக தன்னுடைய கல்லூரிக்கு கட்ட வைத்திருந்த பணத்தையே கொடுத்துவிட்டு தேர்வு எழுத முடியாமல்  பெயிலானவர். அதில் அவருக்கு அப்படி ஒரு பெருமை வேறு. குஷ்பு போலவே இருந்த ஒரேக் காரணத்திற்காக சாந்தி என்றப் பெண்ணை காதலித்தார்.,

அந்தக் காலத்தில் காதல் என்றாலே மிகப்பெரிய பாவச் செயலாகப் பார்க்கபட்டது,  அதுவும் கிராமங்களில் சொல்லவே வேண்டாம் ஜாதி மதங்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலம், வீட்டில் சொன்னால் கண்டிப்பாக திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என பயந்து வீட்டை விட்டு ஓடிப் போக முடிவு செய்து இருவரும் பேருந்தில் ஏறி அமர்ந்திருக்க, அதை ஊருக்காரன் எவனோ பார்த்துவிட்டு கிருஷ்ண மூர்த்தியிடம் போயி சொல்லிவிட்டனர்.

பேருந்துநிலையத்திற்கே சென்று மார்த்தாண்டத்தை அடித்து உதைத்து இழுத்து வந்தார் கிருஷ்ண மூர்த்தி.

மார்த்தியோ காதல் கைக் கூடாமல் போன விரக்தியில் இருக்க, இதுதான் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய சரியான நேரம் என்று கிருஷ்ணமூர்த்தி வலுகட்டாயமாக  மணிமேகலையை மார்த்தாண்டத்திற்கு மனம் முடித்து வைத்தார்

மனம் ஒப்பாமல் எப்படி வாழ்வது?.. மணிமேகலைப் பிடிக்கவில்லை அவர் நின்றால் குற்றம் நடந்தால் குற்றம் என அனைத்திற்கும் குற்றம் கண்டே நாட்கள் வேகமாக ஓட. நந்தன் எப்படியோ பிறந்து விட்டான்.அதுவும் விபத்து தான், இரண்டாவதாக யுகி உருவாகும் போது மணிமேகலையின் மீது மரியாதையும் அவள் தாய்மையின் மீது  பெரும்மதிப்பும் உண்டாகியிருந்தது தான்
ஆனால் அதை வாய் திறந்து அவரிடம் சொன்னதில்லை, முகத்தில் கூட காட்டியதில்லை, மூன்றாவதாக ஷாலினியை  பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் தான் பெற்றுக் கொண்டனர். மார்த்தாண்டத்தின் ஆசை மணிமேகலைக்கே தெரியாது என்பது தான் பெரும் சோகம்.

எத்தனை வருடம் கடந்தாலும் மணிமேகலையிடம் சகஜமாக பேசியதில்லை.கோபம் வந்தால்  அதை மணிமேகலையிடம் தான் காட்டுவார்,பன்னிரண்டு வருட வாழ்க்கையில்  மணிமேகலையும் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. நீ அப்படியே இரு நான் உன்னைய இப்படியே ஏற்றுக் கொள்கிறேன் என்று வாழ்ந்துவருகிறார் , ஆனால் அவ்வவ்வப் போது மனம்  தளர்ந்து போவது போல் சிலக் காரியம் நடக்கும் ஏன் மார்த்தாண்டமே  அவரை கேவலப்படுத்துவது போல் தோன்றும் அப்போதெல்லாம் குழந்தைகளின் முகத்தைப் பார்த்து தன்னை சமாதனம் செய்துக் கொள்வார்.பல பெண்களின் வாழ்க்கை இப்படி தானே செல்கிறது.

செல்வராணிக்கு கந்தவேல் என்றவருடன் திருமணம் நடந்து  கவிநிலா, கவியரசி என்ற  இரு பெண்கள் இருக்க ஆண் மகனுக்காக  எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்தநாள் காலை விடியல் வளவன்,  நிலவியாவின் குடும்பத்திற்கு  மேலும் சோதனைகளை வழங்கியது.

நிலவனின் தாய்  ராஜி., காலையில் எழுந்ததும் வளவனிடம் சொல்லிக் கொண்டு   கூரை மேய்பவர்களைப் பார்க்க சென்றுவிட்டார்..

வளவன்  வீட்டைச் சுற்றிக் கிடந்த கூரைக் குப்பைகளை கூட்டி அள்ளிக் கொண்டிருந்தான்.

அதுவரையிலும் வளவனுக்கு உதவியாக சிறு சிறுக் குப்பைகளை எடுத்துப் போட்டுக்கொண்டிருந்த நிலா,

"அண்ணா.."என்றாள் பாவமாக.

"சொ.ல்லு பாப்பா..."

"அம்மா எப்போ வருவாங்க..?"

"ஏன் பாப்பா...?"

"பசிக்குதுண்ணா..."  என்று வயிற்றில் கையை வைக்கும் தங்கைக்கு என்ன செய்து பசியாற்றுவது என அந்த சிறுவனுக்கு தெரியவில்லை..

பால் ஆற்றிக் கொடுக்கக் கூட  அடுப்பில்லை, இருக்கும்  மண்ணெண்ணெய் அடுப்பை வளவனுக்கு  பற்ற வைக்கவும் தெரியாது.. என்ன  செய்வது என்று கையை பிசைய.. யுகி வேகமாக  ஓடிவந்தான்..

"ஹாய் பூனை நைட் தூங்குனியா?,நைட்டு மழையில நீங்க என்ன பண்ணீங்களோன்னு பயந்துட்டே இருந்தேன்"..என்று  அவள் கையைப் பிடித்து சொன்னவனுக்கு பதில்  சொல்லாமல்

"அண்ணா பசிக்குது." என்று சொன்னதையே சொன்னாள் நிலா.

"பூனைக்குட்டிக்கு பசிக்குதா.. வா அம்மாகிட்ட சாப்பாடு போடச் சொல்றேன்"  என்று  நிலாவின் கையைப் பிடித்து இழுத்தான் யுகி 

"வேண்டா யுகி, உங்க ஆயா திட்டுவாங்க விடு"'என வளவன்   நிலாவை பிடித்திருந்த கையை  எடுத்துவிட்டான்.

"எதுக்கு  திட்டப் போறாங்க..? நீ நகரு வள்ளி நான் பார்த்துக்கறேன்   என்று வளவனை விலக்கிவிட்டு நிலாவை தூக்க  முடியாமல்  தூக்கிக் கொண்டு ஓடினான்.

"வள்ளின்னு கூப்பிடாதன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்", என்று வளவன் கத்த, அதைக் கேக்க அந்த இடத்தில் யுகி இல்லை.

"அம்மா... அம்மா.".

"ஹா தம்பி இவ்வளவு நேரம் எங்கப் போன.. சீக்கிரம் வா  குளிச்சிட்டு ஸ்கூல் போகணும்" என்று,  அம்மா என அழைத்த  யுகியின் சத்தத்தில் திரும்பி பார்க்காமல் குழம்பை  கிண்டிக் கொண்டிருந்த மணிமேகலை கூற..

"அம்மா பூனைக்கு பசிக்குதா.. சாப்பிட குடுங்க" என்றான்.. ஏதோ செல்லப்பிராணி  பூனைப் போல

அப்போது தான் திரும்பிப் பார்த்த மணிமேகலை.. "ஓ  நிலாக் குட்டிக்கு பசிக்குதா வாங்க சாப்பிட பழம் கொடுக்கறேன்"  என்று நிலாவைத் தூக்கிக் கொண்டார்.

அவரது குரல் நிலாவை கொஞ்சினாலும், கண்கள் யாராவது வந்துவிடுவார்களோ என்று  பயமாக  எட்டி  எட்டிப் பார்த்தது..

"யுகி பிரிட்ஜ்ல  பழம்  இருக்கு எடுத்துப் பாப்பாகிட்ட குடுத்து வெளியேக் கூட்டிட்டுப் போய் விளையாடு  நான் சமைச்சிட்டு உன்னைய கூப்பிடறேன்" என்று  நிலாவை இறக்கி விட்டவர்.. சமையல் வேலையைப் பார்க்க, யுகி பழங்களை  எடுக்கச் சென்றுவிட்டான்.

அப்போது தான்  குளித்துவிட்டு வந்த  நந்தன்.  நிலா அங்கு இருப்பதைப் பார்த்ததும் நேராக அவனது ஆயாவிடம் ஓடினான்.

"ஆயா ஆயா ஆயா....." என கத்திக் கொண்டே ஓட 

"சொல்லு கண்ணு.."

"நீ சொல்லிருக்கில அந்த நிலாவை வீட்டுக்குள்ளைலா விடக்கூடாதுன்னு.."

"ஆமா கண்ணு அவங்களா நம்மளுக்கு கீழே அவங்களை வீட்டுக்குள்ள விட்டா வீடே நாறிப் போய்டும், இப்போவே ஊரு உலகம் தப்பா பேசுது. இதுங்க உள்ளே வந்தா நம்ப வெளியே போகவேண்டியது தான் ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை தொரத்துச்சா அந்த கதையா ஆகிப் போய்டும் அதுங்களா உள்ளே வந்தா. என்றார் மூச்சுவாங்காமல் நந்தனின் ஒற்றை வார்த்தைக்கு இவ்வளவும் சொல்ல..

"அந்த நிலா  வீட்டிக்குள்ள இருக்கு ஆயா வா.. வந்து பாரு"  நந்தன்   சொன்னதும் கிருஷ்ணம்மாளுக்கு கோவம் தலைக் கால் தெரியாமல் வந்தது..

"வா கண்ணு"  என நந்தனின் கையைப் பிடித்தவர்   உள்ளேச் ஆவேசமாக சென்றார்.

நிலாவோ  யுகிக் கொடுத்தப் பழத்தை  ஆசையாக  கையில் வாங்கி  அப்போது தான் வாயின் அருகே கொண்டுச் செல்ல.கிருஷ்ணம்மாள் அதை தட்டிவிட்டார்.

"உன்னைய தான்  வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொன்னேன்டி கழுதை, எதுக்குடி வந்த?"  என்று பின்னால் சட்டையைப் பிடித்து  தரதரவென்று இழுத்து வீட்டிற்கு வெளியேக் கொண்டு போக..அவரது காலைப் பிடித்துக் கொண்டான் யுகி 

"ஆயா விடு ஆயா..பாவம்ல பூனை.. பசிக்குதுன்னு பழம் வாங்குனது ஒரு தப்பா ? அதுக்கு எதுக்கு  இழுத்துட்டு போற , விடு ஆயா பாப்பா பாவம் ஆயா" என்று கத்த..

அவனை இழுத்துப் பிடித்துக்கொண்டான் நந்தன்....

சத்தம் கேட்டு  மணிமேகலை ஓடி வந்தவர் "அத்தை சின்ன புள்ளைய என்ன பண்றீங்க விடுங்க"  என்று கெஞ்சினார்.

யாருடைய குரலுக்கும் அடிப் பணியவில்லை கிருஷ்ணம்மாள்.

"ச்சீ என்ன மனுஷி  இவங்க,  ஒரு பிஞ்சு குழந்தையை தரதரன்னு இழுத்துட்டு வராங்க.." என்று முகத்தை திருப்பிக் கொண்டார். அதை தவிர அந்த வீட்டில் வேறு எதுவும் செய்ய முடியாது  அவரால்..

நிலா கத்தி அழுகவும்,  பக்கத்து வீட்டில் இருந்த வளவனுக்கு கேட்டுவிட  வேகமாக  ஓடிவந்தான்.

"டேய் எத்தனை தடவை  சொல்லிருக்கேன் வீட்டுக்குள்ளார வர வேலை வெச்சிக்காதீங்கன்னு., அவ  என்ன சொல்றது நாம என்ன கேக்கறதுன்னு? வரீங்களா இன்னொரு தடவை உள்ளே வந்திங்க  காலை வெட்டி கையில குடுத்துடுவேன், உன் தங்கச்சியை தூக்கிட்டு ஓடிடு.." என்று  கிருஷ்ணம்மாள் முறைக்க..

நிலவியாவை நெஞ்சோடு அணைத்துக் கொண்ட வளவன்..யுகியை  குற்றம் சாட்டும் பார்வைப் பார்த்துவிட்டு அங்கிருந்து தங்கையை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்

"அத்தை நீங்க பண்றது சரியில்ல.. அவங்க என்ன வேண்டாதவீங்களா.. நம்பள விட  பணத்துல  சின்னவீங்கன்னா இப்படி பண்ணுவீங்களா?" என்று ஆற்ற மாற்றாமல்  கேட்டுவிட்டார் மணிமேகலை.

"ஏய் உனக்கு என்ன புதுசா சொல்லனுமா, நம்ப ஆளுங்கள தவிர வேற யாரையும் நான் உள்ள விட மாட்டேன்னு உனக்கு தெரியாதா..? இதுல கல்யாணமாகி பத்து வருசத்துக்கு மேலாகுது.. ஒரு கூறும் இல்லாதவ பாடம்  சொல்லிக் குடுத்து  புள்ளைங்களுக்கு நல்லா விளங்கிடும் இவளை எங்கிருந்து புடிச்சிட்டு வந்தேன்னு எனக்கே தெரியல, குடும்பத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்க சொன்னா  குடும்பத்துக்கு  எதிராவே பேசிட்டு திரியறது".என்று   தலையில் அடித்துக் கொண்டு செல்ல..

இது அனைத்தும் அருகில் இருந்து பார்த்த நந்தனின் மனதில் ஆழப் பதிந்தது.

"அப்போ நம்ப ஆளுங்கக் கூட தான்  சேரணும் போல.." என்று  எண்ணிக் கொண்டான்.

சிறு பிள்ளைகளின் மனம்  களிமண்ணைப் போன்றது.. அதற்கு  என்று உருவம் எதுவும்  இல்லை .. நாம் எந்த உருவத்தில் வடிக்கிறோமோ அந்த உருவமாக உருப்பெருகிறது..

கிருஷ்ணம்மாளின் போதனைகளின் விளைவாக  நந்தனின் மனதில்  மனிதர்களிடத்தில் ஏற்ற தாழ்வை உருவாக்கிவிட்டார்.



Leave a comment


Comments


Related Post