இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-02 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 18-02-2024

Total Views: 49429

அத்தியாயம்-02

“யாரை கேட்டு இப்படி முடிவு பண்ணீங்க?” என்று கண்களில் கனல் பொழிய அவன் கத்திக் கொண்டிருக்க, “அவ என் பொண்ணு. நான் யாரை கேட்டு முடிவு பண்ணனும்?” என்று அமுதா கேட்டார்.

“அவளை கேட்கணும். என்னை கேட்கணும். அவ என் அஞ்சு. என்கிட்டயும் அவகிட்டயும் கேட்காம நீங்களா எப்படி முடிவு பண்ணலாம்? இதுக்கு நான் கண்டிப்பா சம்மதிக்க மாட்டேன்” என்று அவன் கத்த, “என்னாச்சு அஜு?” என்று மாடியிலிருந்து பதட்டமாய் ஓடி வந்ததில் மூச்சு வாங்கக் கேட்டது அந்த ஐந்தடி உருவம்‌.

எழில் கொஞ்சும் வதனத்தில் இன்னும் குழந்தைத்தனம் மாறாத விழிகள், அவளால் அஜு என்று அழைக்கப்பட்ட அர்ஜுனின் அதிர்ந்த குரலில் மிரண்டு காணப்பட, அந்த மருண்ட விழிகளுக்கு முன் தனது அதட்டலான பேச்சைத் தொடர இயலாது “அ..அஞ்சுமா” என்றான் தமையன்.

“ஏன் அஜு அம்மாகிட்ட சத்தம் போடுற?” என்று அவனால் அஞ்சு என்று அழைக்கப்பட்ட அஞ்சனா வினவ, “அஞ்சு நீ உள்ள போ. நான் கூப்பிடுறேன்’’ என்று கூறினான் அவளது இரட்டை சகோதரன் அர்ஜுன். “ஏன்டா?” என்று மீண்டும் கேட்டவளைப் பார்த்து கண்கள் சுருக்கி  “ப்ளீஸ்டா உள்ள போ” என்று கூற, சரியென்ற தலையாட்டலோடு அனைவரையும் புரியாமல் பார்த்தபடி உள்ளே சென்றாள்.

மீண்டும் தன் அன்னையை ரௌத்திரம் பொங்கப் பார்த்தவன் “என்னால ஒத்துக்க முடியாது” என்று கூற, “கல்யாணம் பண்ணிக்கப் போறது அவதான். அவ சொல்லட்டும் முடியாதுனு” என்று அமுதா தன் மகனுடன் மல்லுக்கு நின்றார்.

“அவ முடியாதுனு சொன்னா விட்ருவீங்களா?” என்று ஏளனமாய் அவன் வினவ, இங்கு அமுதா பதறித்தான் போனார். அர்ஜுன் கூறுவதே வேதவாக்கு என்றிருக்கும் தன் மகள் அவன் திருமணம் செய்துக்கொள்ளக் கூடாது என்று கூறிவிட்டால் நிச்சயம் திருமணம் செய்துக்கொள்ள மாட்டாளே என்று அவர் உள்மனம் பதற, “சொல்லுங்க” என்றான்.

அதற்குமேல் கோபமுகம் காட்டி தன் காரியத்தை சாதித்துக் கொள்ள முடியாத அந்தத் தாய், கண்ணீரைத் தன் ஆயுதமாக ஏந்தினார்.

 “அம்மா அவன் தான் இவ்வளவு சொல்றானே? இப்ப என்ன அவசரம் உங்களுக்கு?” என ஆத்ரிகா வினவ, “உன் ஒருத்தி வாழ்க்கையே பாழாய்போன குற்ற உணர்ச்சில தவிச்சுட்டு இருக்கேன்டி. இந்த விஷயத்துல என்னை யாரும் மாத்த நினைக்காதீங்க” என்றார்.

“இப்ப அக்கா வாழ்க்கை என்ன பாழாய் போச்சு உங்களுக்கு? எவனோ ஒரு கேடுகெட்டவன் பண்ண தப்புக்கு இவ எதுக்கு பழி ஏத்துக்கணும்? அவனை நினைச்சுட்டு அக்கா ஒன்னும் பூவும் பொட்டும் இல்லாம இல்லை. என் அக்கா இன்னமும் அதே துணிவோட சிங்கப்பெண் மாதிரி தான் இருக்கா. இன்னும் சொல்லப்போகனும்னா இப்பதான் உண்மைலயே மதிக்கத்தக்க பெண்ணா தெரியுறா” என்று தன் அக்காவைப் பெருமையோடு பார்த்த அர்ஜுன் கூற,

 “உங்க காரியத்தை சாதிக்கணும்னு ஆத்ரிய நோகடிக்காதீங்க ம்மா” என்று ஆதி கூறினான்.

பிள்ளைகள் அனைவரும் தனக்கு எதிராகப் பேசுவது அவருக்கு இன்னும் சோர்வைக் கொடுக்க, “என் வலி உங்க யாருக்குமே புரியாது. என்னதான் ஆத்ரி சந்தோஷமா இருந்தாலும் அவளுக்கு ஒழுங்கா ஒரு வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கலைனு குற்ற உணர்வில் நான் துடிப்பது எனக்குத்தான் தெரியும். அந்த வேதனைலயே அந்த மனுஷன் போய் சேந்துட்டாரு. நானும் அப்பவே போயிருந்தா நிம்மதியா இருந்திருக்கும் போல” என்று முந்தானையில் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

“ஏன் அத்தை இப்படிலாம் பேசுறீங்க?” என்று மால்யதா பரிதாபமாய் வினவ, “இந்த வருஷம் முடியுறதுக்குள்ள அஞ்சனாக்கு கல்யாணம் பண்ணலைனா கல்யாண வாழ்க்கை நிலைக்காதுனு ஜோசியர் சொல்றாரு. இவ வாழ்க்கை ஏற்கனவே உருக்குழைஞ்சு தான் நிக்குது. கல்யாணமும் நிலைக்காம போனா நான் செத்தாலும் என் ஆத்மா சாந்தியடையாது” என்று கண்ணீர் வடித்தார்.

அர்ஜுனுக்கு ஏனோ அவரது கண்ணீர் கூட நடிப்பாகவே தோன்றியது. அவன் தன் பிடியில் உறுதியாக இருக்க, “அர்ஜுன்.. உன்னை கெஞ்சி கேட்குறேன்டா” என்று கெஞ்சினார். 

“அம்மா.. உங்களுக்கு ஏம்மா புரியலை? அவளுக்கு வெறும் பத்தொன்பது வயசு தான் ஆகுது. அதைவிட கொடுமை அவளுக்கு கல்யாணம்னா என்னனு கூட தெரியாது. இந்த வயதில் சராசரி பெண்களுக்கு தெரிந்திருக்க வேண்டியதை கூட அவளை தெரிஞ்சுக்க விடாம வளர்த்துட்டு இப்ப கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்? அஜுவை வற்புறுத்தினா ஆச்சா?” என்று ஆத்ரிகா வினவ, 

“அதெல்லாம் அவங்களுக்கு சொல்லிட்டேன் ஆத்ரி. எல்லாம் தெரிஞ்சுதான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாங்க” என்று அமுதா கூறினார்.

“யாரு அவங்க?” என்று அர்ஜுன் வினவ பரபரப்பாய் மாப்பிள்ளையின் புகைப்படத்தை எடுத்து வந்தவர் “பெயர் யஷ்வந்த் கிருஷ்ணா. யுவனா இன்டஸ்டிரீஸோட இரண்டாம் வாரிசு” என்று யஷ்வந்தின் புகழ் பாடினார். 

யஷ்வந்தின் புகைப்படத்தை ஆச்சரியமாய் பார்த்தவன், “அம்மா.. இவருக்கு எ.. எத்தனை வயசு? நம்ம அஞ்சுவ விட ரொம்ப பெரியவரா இருப்பாரு அம்மா” என்றான்.

“ரொ..ரொம்பலாம் இல்லை தம்பி. இருபத்தி ஏழு தான்” என்று அமுதா கூற, “கல்யாணம் பண்ண அவருக்கு இது உகந்த வயசா இருக்கலாம் ஆனா நம்ம அஞ்சுக்கு இல்லை. அவரைவிட பாப்பா எட்டு வயசு சின்னவ ம்மா” என்று ஆதி கூறினான்.

“அதனால என்னப்பா? ரொம்ப நல்லவர். தங்கமான மனுஷன். அவங்க குடும்பமும் நல்ல குடும்பம். நம்ம பிள்ளைய அவங்க வீட்டு பிள்ளையா நினைச்சு பார்த்துப்பாங்க” என்று அமுதா கூற, 

ஓய்ந்து அமர்ந்த அர்ஜுன் “ஏம்மா இப்படி பண்றீங்க?” என்றான்.

“அஜு.. அம்மா அவளுக்கு நல்லதுதான் பண்ணுவேன் ப்பா. ஒத்துக்குறேன்.. இதுவரை நான் அவளை சரியா வளர்க்கலைதான். ஆனா இந்த ஒரு விஷயம் மட்டும் ஏத்துக்கோப்பா” என்று அமுதா கெஞ்ச, “அஞ்சனா” என்று கத்தி அழைத்தான்.

உள்ளலறையிலிருந்து அடித்துப் பிடித்து வந்தவள் “ஏன் அஜு கத்துற? பயந்துட்டேன் தெரியுமா?” என்க, “சாரிடா” என்றவன் அவளை தன் அருகே அமர்த்திக் கொண்டான்.

யஷ்வந்த் கிருஷ்ணாவின் புகைப்படத்தைக் காட்டிய அர்ஜுன் “இவர் எப்படி இருக்காரு அஞ்சு?” என்று வினவ, கருப்பு வெள்ளை கோர்ட் சூட்டில் தோரணையாய் நின்று கொண்டிருந்த அந்த அழகனைப் பார்த்து, 

“நல்லா இருக்காரு ஆனா கொஞ்சம் சிரிச்சா இன்னும் நல்லா இருப்பார். அன்ட் இந்த பிளாக்குக்கு பதிலா ப்ளூ கோர்ட் சூட் போட்டிருக்கலாம்” என்று சிறுபிள்ளை போல் பதில் கொடுத்தாள்.

அதில் தன் அன்னையை ஒரு கண்டனப் பார்வைப் பார்த்தவன், “அஞ்சு.. அம்மா உன்னை இவருக்கு கல்யாணம் பண்ணி தரலாம்னு யோசிக்குறாங்க. நீ என்ன சொல்ற?” என்று வினவ, 

சற்றும் யோசிக்காது பட்டென, “நீயே சொல்லு அஜு நான் என்ன பண்ணனும்?” என்றாள்.

அதில் கண்களை அழுந்த மூடி பெருமூச்சு விட்டவன், “அஞ்சு.. எல்லாத்தையும் அஜு சொல்லட்டும் அஜு சொல்லட்டும்னு சொல்லக் கூடாது. சில விஷயங்கள் நீயா யோசிச்சு உனக்கு எது சரியோ அதைதான் செய்யணும்” என்று அடிக்கடி கூறும் வசனத்தைக் கூற,

 “ஏன் அஜு கோவப்படுற? அம்மா எப்பவும் எது செய்தாலும் உன்னை கேட்டுத்தானே செய்ய சொல்வாங்க? அதான உன்னை வந்து கேட்குறேன்? நீயே சொல்லு எனக்கு எது நல்லது?” என்றாள்.

அதில் மேலும் கடுப்பானவன் தன் கோபத்தை தன்னுடனே பிறந்தவளின் மீதுள்ள பாசத்திற்காக கட்டுப்படுத்திக் கொண்டு “அஞ்சு.. புரிஞ்சுக்கோ. கல்யாணம் ஒருத்தர் வாழ்க்கைல ரொம்ப முக்கியமான ஒன்று. அதை உன் விருப்பப்படி தான் நீ செய்யணும்” என்று கூற, 

“கல்யாணம் பண்ணிக்குறது நல்லதா கெட்டதா?” என்று கேட்டாள்.

அங்குள்ளவர்களுக்கு அவளது கேள்வியே ஆயாசமாக இருந்தது. 

“கல்யாணம்னா நீ என்னனு நினைக்குறடா?” என்று ஆத்ரிகா வினவ, 

“இது தெரியாதா? ஒரு பையன் ஒரு பொண்ணுக்கு தாலி கட்டி மனைவியாக்கிப்பான். அதற்கு பிறகு அவங்க ஹஸ்பென்ட் அன்ட் வைஃப். அப்றம் அவங்க ஒன்னா இருப்பாங்க” என்று கூறினாள்.

அதுதான் அவளைப் பொருத்தவரை திருமணம். மனம் ஒத்து விரும்பி காதலாய், இரு குடும்பத்தோடு சேர்ந்து ஒரு உறவை உருவாக்கும் உன்னத உறவுக்கு அவளுக்கு அமுதா கொடுத்த விளக்கம் இவ்வளவுதான். 

“அவ்வளவு தானா?” என்று ஆத்ரிகா வாய் பிளந்து கேட்க, “ஆமா” என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டாள். 

அனைவரும் அமுதாவை கொலை வெறியோடு நோக்க, அவர் திருதிருவென விழிப்பதைத் தவிர வேறு ஏதும் செய்ய இயலாது தவித்தார்.

“சரி ஓகே.. அப்படி கல்யாணம் பண்ணி வேற ஒருத்தர்கூட போக உனக்கு சம்மதமா?” என்று ஆதி வினவ, 

“அப்ப திரும்ப நான் இங்க வரவே மாட்டேனா?” என்று கேட்டாள். 

“இல்ல இல்லடா.. அவங்க வீடு பக்கத்துல தான் இருக்கு. நீ தினமும் வரலாம்” என்று பதட்டத்தோடு முந்திக் கொண்டு அமுதாவின் பதில் வர, 

யஷ்வந்தின் புகைப்படத்தைப் பார்த்தவள், “சரி பண்ணிக்குறேன்” என்றாளே பார்க்கலாம்.

“பாப்பா.. என்ன சொல்ற?” என்று அர்ஜுன் பதற, 

“ஆமா அஜு. அவங்க வீடு பக்கத்துல தானே இருக்கு. நான் டெய்லி உன்னை பார்க்க வருவேன் நீ ஃபீல் பண்ணாத. அன்ட் காலேஜ்ல நம்ம ஒன்னா தானே இருப்போம்” என்று அவனுக்கு ஆறுதல் கூறினாள்.

அவளை ஆவென்று பார்த்தவன் “ஆனா பாப்பா நீ சின்ன பொண்ணு” என்று கூற, 

“அவதான் பண்ணிக்குறேன்னு செல்லிட்டாளே.. பிறகு என்ன உங்களுக்கு?” என்று அமுதா பொறிந்தார்.

“அவ புரிஞ்சு பேசலை ம்மா” என்று கத்திய அர்ஜுன், 

“அஞ்சு.. உனக்கு நிஜமாவே ஓகேவா?” என்க, 

அவனையே பயத்தோடு பார்த்தவள், “அப்ப நீயே சொல்லு அஜு. நான் தப்பா சொல்றேனா? பண்ணிக்க கூடாதா?” என்று கேட்டாள்.

'முதன்முறை அவளாக ஒரு முடிவை எடுக்க தான் அதை தடுக்க வேண்டுமா? ஆனால் இவளுடைய பக்குவத்திற்கும் வயதிற்கும் திருமணம் என்றால் என்னவென்று கூட தெரியாது இருக்கின்றாளே? இப்படி ஒரு திருமணம் தேவையா?’ என்று அவன் மனம் யோசிக்க, அவனுக்கு கண்கள் கலங்குவது போலானது.

“அஜு..” என்று அவள் அழைக்க, தங்கையை மார்போடு அணைத்துக் கொண்டவனது இறுக மூடிய விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. அவன் நிலைகண்டு வருந்தியபடி மற்ற மூவரும் அமுதாவைப் பார்க்க, அவர் அனைவரையும் பாவமாக ஏறிட்டார்.

“உன் முடிவுல நிலையா இருக்கியா அஞ்சு?” என்று முடிந்தவரை திடமாக அர்ஜுன் வினவ,

 “நீ சொல்லு அஜு..” என்றாள். 

“இல்ல அஞ்சு.. சும்மா அஜு அஜுனு நான் சொல்றதையே செய்யக்கூடாது. நீயா ஒரு முடிவு எடு. ஆனா அதை நீ தான் ஃபேஸ் பண்ணனும்” என்று அவன் கூற, 

“வேணாம் அஜு.. எனக்கு பயமா இருக்கு” என்றாள்.

அமுதாவுக்கு எங்கே அவள் கல்யாணம் வேண்டாம் என்று கூறிவிடுவாளோ என்று பயமாக இருக்க “பாப்பா.. கல்யாணம் பண்ண பிறகும் நீ படிக்கலாம்டா. அவர் ரொம்ப நல்லவர்‌.. தினம் நீ நம்ம வீட்டுக்கு வந்துட்டு போகலாம்” என்று கூறினார்.

அர்ஜுனையே அவள் பார்க்க, “உன் இஷ்டம்” என்றவன் எழுந்து தங்கள் அறைக்குள் செல்ல, ஒன்றும் புரியாத நிலையில் ஆதியைப் பார்த்தாள். 

தங்கையின் அருகே வந்து அமர்ந்தவன், “என்னடா?” என்று வினவ, “அர்ஜுனுக்கு என்னாச்சு அண்ணா? ஏன் கோவமா இருக்கான்? நான் கல்யாணம் பண்றது அவனுக்கு பிடிக்கலையா?” என்று கேட்டாள்.

“அப்படி இல்லைடா.. நீ என்ன முடிவு பண்றியோ அதுதான்” என்று ஆதி கூற 

அவளது மறுபுறம் வந்து அமர்ந்த மால்யதா, “பாப்பா.. கல்யாணம் பண்ணினா தாலி கட்டுவாங்க அவங்க வீட்டுக்கு போவாங்கனு அத்தை உனக்கு சொன்னதோட முடிஞ்சுடாது. அதுல விட்டுக்கொடுப்பது, புரிஞ்சுக்குறது, பகிருறது, ஏத்துக்குறது, காதலிக்குறதுனு இத்தனை உணர்வுகள் இருக்கு. அது எதுவும் தெரியாம போகும் நீதான் எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணனும். அதைத்தான் அஜு சொல்ல வரான்” என்று கூறினாள்.

அண்ணாவையும் அண்ணியையும் மாறி மாறிப் பார்த்தவள் தன் அன்னையைப் பார்க்க, அவர் சரி என்று கூறிவிடு மகளே என்பதைப் போல் பார்த்தார். தங்கள் அறையின் கதவினை ஒருமுறை பார்த்துக் கொண்டவள், 

“நான் எல்லாம் கத்துப்பேன் அண்ணி.. எனக்கு ஓகே” என்று கூற, 

அங்குள்ள அனைவருக்கும் அவளது வெள்ளந்திப் பேச்சில் வருத்தமாகவும் அமுதாவுக்கு சந்தோஷமாகவும் இருந்தது.


Leave a comment


Comments


Related Post