இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-03 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 03-03-2024

Total Views: 48699

அத்தியாயம் மூன்று...


தங்கநிற பட்டைக்கரை வைத்த பட்டு வேட்டியும், சந்தன நிறத்தில் பருத்தி முழுக்கை சட்டையும் அணிந்து கொண்டு, கர்ணனின் கவசகுண்டலம் போல் தான் எப்போதும் அணியும் தனது பிளாக் மெடல் பட்டையான கைக்கடிகாரம் ஒரு கையிலும் பிளாக் சில்வரில் கருஞ்சிருத்தையின் வடிவமைப்பு கொண்ட பிரேஸ்லெட் ஒரு கையிலும் அணிந்துகொண்டு, அடங்க மறுத்த குழலை சிழுப்பிவிட்டு, முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டுக் கொண்டு கீழே இறங்கி வந்தான், யஷ்வந்த் கிருஷ்ணா.


மகனின் இக்கோலம் யமுனா எத்தனை ஏங்கிய ஒன்று.. ‘இருபத்தி ஏழு வயது தானே ஆகிறது எதுக்கு இந்த பதட்டம்?’ என்று பிறர் அறியத்துடிக்கும் கேள்விக்கு அவர்தானே பதில் அறிவார். திருமணமே வேண்டாம் என்றிருந்த தன் மகன் எப்படி இத்திருமணத்திற்கு சம்மதம் கூறினான் என்பதே அவருக்கு ஆச்சரியம் தான். ஆனால் எதற்கு கேட்டு வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டும் என்று அமைதி காத்தார்.


தனது சந்தோஷம் அனைத்தையும் மருமகளுக்கு சீராய் கொண்டு செல்லும் தட்டுகளில் தான் காட்டியிருந்தார். அஞ்சிலை வளர்ந்த விதத்தை அமுதா யமுனாவிடம் கூறித்தான் இருந்தார். மகளை பாதுகாக்க வேண்டி முட்டாள்தனமாக செயல்பட்ட அமுதாவைப் பார்த்து பரிதாபம் கொள்வதா திட்டுவதா என்று தான் இருந்தது அவருக்கு. ஆனாலும் திருமண வாழ்வைப் பற்றிக்கூட தெரிந்திராத பிள்ளை என்று அவரும் அறிந்திருக்கவில்லை.


வெள்ளந்தியான பெண், தனது முரட்டுத்தனமான மகன் என்று யோசிக்கையில் சற்றே பயமாக இருந்தாலும் தனது மகன் அப்படி தேவையின்றி அடுத்தவரை காயப்படுத்தும் முரடனில்லை என்பது அவருக்குப் புரிந்தது. 


தன் எண்ணத்தோடே இருந்தவரது அலைப்பேசி சிணுங்கி அதன் இருப்பைக் காட்ட, பேசியை எடுத்துப் பார்த்தவர் முதலில் இன்பமாய் அதிர்ந்து பின் வருத்தத்தோடு அழைப்பை ஏற்றார். 


“யமு அம்மா.. நோ நோ வரீஸ்.. எனக்கு தெரியும் நீங்க என் காலை (call) பார்த்ததும் உம்முனு ஆகிருப்பீங்கனு. எதுவும் யோசிக்காம என் அண்ணிய பார்த்து பிக்ஸ் பண்ணிட்டு வாங்க. நான் சீக்கிரமே வரப்பாக்குறேன்” என்று எதிர்முனையில் பேசப்பட்டதைக் கேட்டு ஒரு பெருமூச்சுடன் தலையசைத்தவர் மேலும் சிலநிமிடம் பேசிவிட்டு வைத்தார்.


யாதவன் தன் மனைவி அக்ஷரா மற்றும் மகன் யதுநந்தனுடன் வந்திட,


 “யதுகுட்டி சோ கியூட்” என்றபடி அண்ணன் மகனை தூக்கி கொஞ்சிய யாழினி யஷ்வந்தை நோக்கி, 


“அண்ணா யூ ஆர் லுக்கிங் சூப்பர் கூல்” என்றாள். 


இதழுக்கு வலிக்காத சிறு புன்னகை, கூடவே கொஞ்சம் தலையாட்டலில் தன் நன்றியைத் தெரிவித்தவன் அன்னையைப் பார்க்க, “புறப்படலாம் ப்பா” என்று வேலையாட்களை சீர் தட்டுகளை வண்டியில் ஏற்ற பணித்தார்.


அனைவரும் யாதவனின் வண்டியில் அமர, தனது லம்போர்கினியைக் கிளப்பிக் கொண்டு வந்தவன், அண்ணனிடம் இருப்பிடத்தின் விலாசத்தைக் கேட்டுக் கொண்டு முன்னே சென்றான்.


அடுத்த சில நிமிடங்களில் அனைவரும் அஞ்சனாவின் வீட்டில் கூடியிருக்க, சமையலறை மேடையில் அன்னை கொடுக்க மாட்டேன் என்று கூறிய வடையை ஏக்கத்துடன் பார்த்தபடி அமர்ந்திருந்தாள், அஞ்சனா.


அவள் அருகே உள்ளடங்கிய கடுப்புடன் அர்ஜுன் அமர்ந்திருக்க, 


“சித்தா ஏன் இப்படி இருக்காரு அத்தை?” என்று ஆதியின் மகன் அத்வைதும்,


 “ஏன் மாமா உம்முனு இருக்க?” என ஆத்ரியின் மகள் அதிதியும் கேட்டனர்.


வடையை நோக்கியவள் பார்வை அர்ஜுனை நோக்க, தானும் தங்கையவளை ஏறிட்டவன், 

“அப்படிலாம் இல்லைடா குட்டி” என்று குழந்தைகளுக்கு பதில் கூறினான். 


அப்போது பரபரப்பாய் உள்ளே வந்த மால்யதா, 

“அத்தை அவங்க வந்துட்டாங்க” என்று கூற, 


“இதோ வந்துட்டேன்.. டேய் அஜு நீயும் வாடா” என்றார், அமுதா.


“நான்லாம் வரலை..” என்று பட்டெனக் கூறியவன், அஞ்சுவின் பார்வையை உணர்ந்து, 


“நா.. நான் அஞ்சுவோட இருக்கேன். நீங்க போங்க” என்றான். குழந்தைகளும் துள்ளிக் கொண்டு வெளியே செல்ல, 


“அஞ்சு.. நான் சொன்னது நினைவு இருக்கு தானே? நீ படிக்குறதால கல்யாணத்துக்காக படிப்பை விடவெல்லாம் முடியாது. மேலும் தொடரனும், என்னோட ஸ்டேடஸ்ல நான் ஸ்டபர்னா இருக்கனும்னு சொல்லு சரியா?” என்று அர்ஜுன் கூறினான்.


“ஆங் ஆங்.. எல்லாம் ஞாபகம் இருக்கு அஜு” என்றவள், “அந்த வடை ஒன்னு எடுத்துக்கவா?” என்று வினவ, 


‘ஐயோ இறைவா’ என்று எண்ணிய போதும் அவள் கேட்ட தோரணையில் அவனுக்கு சிரிப்புதான் வந்தது. சிரித்தபடி அவள் கன்னம் கிள்ளியவன், 


“நீ பேசிட்டு வா நான் உனக்கு பூஸ்டோட தரேன்” என்று கூற, “ஐ.. ஓகே” என்றாள்.


உள்ளே வந்த அமுதா “அஞ்சு.. என்ன கத்திட்டு இருக்க? அவங்களாம் வெளிய இருக்காங்க.. சத்தம் போடாம இரு. இந்தா இதை போய் எல்லாருக்கும் குடு” என்று ஒரு தட்டு நிறைய தேநீர் குவளைகளை அவளிடம் கொடுத்தார். 


“அம்மா.. நீயே குடுக்க வேண்டியது தானே?” என்று அவள் வினவ, அர்ஜுனுக்கு பக்கென சிரிப்பு வந்து தொலைத்தது.


அர்ஜுனை முறைக்கவும் முடியாமல் தவித்தவர், 


“என்னையா பொண்ணு பாக்குறாங்க? உன்னை தானே பார்க்க போறாங்க? நீ தான் போய் குடுக்கனும்” என்றவர் அதை அவளிடம் கொடுக்க,


 “கீழ கொட்டாம கொண்டு போகனுமே ஆண்டவா” என்றபடி மெல்ல சமயலறை விட்டு வெளியேறினாள்.


குனிந்த தலை நிமிராது மெல்ல நடையிட்டு வந்தவள் மருந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை, காரணம் வெட்கமெல்லாம் இல்லை அவள் கொண்டு வரும் தட்டுதான். ஆனால் பார்ப்போருக்கு என்னவோ அவள் வெட்கத்திலும் அச்சத்திலும் சிரம் தாழ்த்தி வருவதைப் போல் தான் தெரிந்தது.


“வாவ் அண்ணா.. அண்ணி சோ கியூட் அன்ட் காட்ஜியஸ்” என்று யாழினி கூற, அப்போதே அலைப்பேசியிலிருந்து தன் தலையை உயர்த்தியவன் அவளைக் கண்டு உறைந்து போனான். அவள் அழகில் அவன் உறைந்து போனான் என்று நீங்கள் நினைத்தால், அதுதான் இல்லை.


'இதென்ன பால்வாடி பிள்ளைய கூட்டிட்டு வராங்க?’ என்று அவன் மனம் அதிர, சட்டென தன் தாயைத் திரும்பிப் பார்த்தான். அவன் அருகே அமர்ந்திருந்தவரோ மகன் பார்வை உணர்ந்து திரும்பி அவன் பார்வையிலேயே எண்ணம் உணர்ந்தவராய், 


“ஃபோட்டோ பார்க்கலையா ப்பா?” என்று மெல்ல வினவினார்.


புகைப்படத்தை பார்க்காதுவிட்ட தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்துகொண்டவன்,


 “இவ்வளவு சின்ன பொண்ணைலாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்று கிசுகிசுக்க, 


“யஷ்வந்த்.. என்ன விளையாட்டு இது?” என்று அதிர்ந்தார்.


அதற்குள் அஞ்சனா அவர்கள் அருகே வந்துவிட, ஜான்ஸன்ஸ் பேபி சோப்பின் மணம் கப்பென அவன் நாசியில் நுழைந்தது.

 (அந்த வாசம் நம்ம அஞ்சு பாப்பாக்கு ரொம்ப பிடிக்கும்.. அதனால அந்த சோப் தான் யூஸ் பண்ணுவா)


அவளை அழுத்தமாய் பார்த்தவன் தேநீரை எடுத்துக் கொள்ள, ஒருவழியாய் அனைவருக்கும் கொடுத்து முடித்த திருப்தியோடு தன் அன்னையின் அருகே சென்று நின்றாள்.


அமுதா யமுனாவை ஏறிட, யமுனா யாழினி மற்றும் அக்ஷராவை பார்த்தார். இருவரும் புன்னகையாய் தலையசைக்க, 


“எங்களுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. ரெண்டு பேரும் நாலு வார்த்தை தனியா பேசிட்டு வரட்டும்” என்று கூறினார்.


அமுதாவுக்கு பகீரென்று வரவே அவர் “அஞ்சனாக்கு இதுல முழு சம்மதம் தான்..” என்று இழுக்க, 


“இருக்கட்டும் சம்பந்தி.. சும்மா போய் பேசிட்டு வரட்டும்” என்று யமுனா கூறினார்.


அமுதாவால் அதை தட்ட முடியாது போக, “அஞ்சு.. ப்ளே ரூமுக்கு அவங்களை கூட்டிட்டு போ” என்று அஞ்சுவிடம் கூறினார். அஞ்சுவும் மெல்ல தலையசைத்து யஷ்வந்தை பார்க்க, தன் அன்னையை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தவன் எழுந்து அவளுடன் சென்றான்.


குழந்தைகளுக்கென்று கீழ் தளத்தில் உள்ள விளையாட்டு அறைக்கு அவனை அழைத்துச் சென்றவள், மனதிற்கு அர்ஜுன் பேசச் சொன்னதை ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருக்க, யஷ்வந்த் அவளை அழுத்தமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.


புசுபுசுவென்ற உடல் வாகும், ஐந்தடி உயரமும், குண்டு கன்னங்களும் பெரிய கண்களும், சிவந்த நிறமும், ஆரஞ்சு வர்ண புடவையும் என கலர் கோழி குஞ்சு போல் இருந்தவளைப் பார்த்தவன், ‘இந்த கோழிகுஞ்சு எத்தனாவது படிக்குதோ தெரியலையே’ என்று எண்ணிக் கொள்ள, அவனை நிமிர்ந்து பார்த்தவள், 


“என் பெயர் அஞ்சனா” என்றாள்.


“தெரியும்..” என்று அழுத்தமாய் அவன் வார்த்தை வந்து விழ, 


“நான் ஃபேஷன் டிசைனிங் செகண்ட் இயர் படிக்குறேன். கல்யாணம் பண்ண பிறகும் நான் படிப்பேன், எங்க வீட்டுக்கு தினம் வருவேன், மேல எனக்கு படிக்க எண்ணம் வந்தா அதுக்கும் படிப்பேன்” என்று ஒப்பித்தாள்.


அவளையே புருவம் சுருங்க பார்த்தவன், “யார் சொல்லி குடுத்து பேசுற?” என்று வினவ, பிடிபட்ட அதிர்ச்சியில் திருட்டு முழி முழித்தாள். அவனிடம் அதே பார்வை தொடர,


 “அ..அது.. அஜு தான் சொன்னான் இதெல்லாம் முதல்லயே பேசிடனும் மறந்துடாதனு” என்றாள்.


“அது யாரு?” என்று யஷ்வந்த் வினவ,


 “என் டிவின் பிரதர்.. என் அஜு தான் எனக்கு எல்லாமே. நான் எல்லாமே அஜுவ கேட்டு தான் முடிவு பண்ணுவேன்” என்று கூறினாள்.


 'ஏதே..’ என்று அழுத்துக் கொண்டவன் ஒரு பெருமூச்சு விட, 


“நீங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டாள்.


“பிஸ்னஸ்” என்று ஒரே வார்த்தையில் பதில் கொடுத்தவன், “இங்க பாரு.. எனக்கு கல்யாணம் மேல பெருசா இன்டிரஸ்ட் இருந்தது இல்லை. அண்ணாக்கு மேரேஜ் முடிஞ்சதுல இருந்து அம்மா எனக்கு பெண் பார்க்கவும் கல்யாணமே பண்ணிக்கும் ஐடியா இல்லைனு தான் சொல்லி வைச்சிருந்தேன்” என்று கூற, 


“அப்ப என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்களா?” என்று கேட்டாள்.


அவள் அப்படி கேட்டதும் பேச்சு தடைப்பட்டு நின்றவன்,


 “உனக்கு கல்யாணம் ஓகே தானா? இவ்வளவு சீக்கிரம் எதுக்கு பண்ற?” என்றே கேட்க,


 “அம்மா சொன்னாங்க இந்த இயர் கல்யாணம் பண்ணா தான் எனக்கு கல்யாணம் நடக்குமாம்” என்றாள்.


யஷ்வந்த் 'புல்ஷிட்..’ என்று நினைத்துக் கொள்ள, 


“நான் ஒன்னு கேக்கலாமா?” என்று தயங்கினாள். ஒற்றை புருவம் உயர்த்தி அவளைப் பார்த்தவன், 


“ம்ம்..” என்க, 


“இப்ப கல்யாணம் பண்ணிக்க ஓகேவானே எல்லாரும் கேக்குறீங்களே ஏன்? கல்யாணம் பண்ணி என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு தானே போக போறீங்க? இங்க சாப்பிட்டு தூங்குறதுக்கு பதிலா அங்க சாப்பிட்டு தூங்க போறேன். அஜுவும் இதே கேட்டான், நீங்களும் இதே கேக்குறீங்க?” என்றாளே பார்க்க வேண்டும்.


'ஏதே.. சாப்டு தூங்க போறியா?’ என்று அரண்டு விழித்தவன், “வ..வாட்?” என்க, அவள் திருதிருவென விழித்தாள். 


“கல்யாணம்னா என்னனு நினைக்குற?” என்றவன் கேள்வி தடுமாறி வெளிவர, ‘தடுமாற்றம் என்றால் என்ன?’ என்று கேட்கும் அவனது கூர்மையான பேச்சுக்கள் அவனைப் பார்த்து வியந்து நின்றது.


“நீங்க எனக்கு தாலி கட்டுவீங்க, நான் உங்க வைஃப் ஆவேன். நான் உங்க வீட்டுக்கு வந்து உங்களோட இருப்பேன்” என்று அவள் கூற, 


“யாரு உனக்கு இப்படி சொன்னது?” என்றான். 


“எங்க அம்மா தான்” என்று அவள் கூற, 


‘ஓ காட்..’ என்று இதழ் குவித்து தன் கோபத்தை பெருமூச்சாக வெளியேற்றினான்.


'இவ்வளவு சின்ன பொண்ணு, கல்யாணம்னா என்னனு கூட தெரியாத பொண்ணை ஏன் இப்படி படுத்துறாங்க?’ என்று அவன் எண்ணிக் கொண்டிருக்க, 


“என்னாச்சு?” என்று மென்மையானக் குரலில் வினவினாள்.


அவளை நிமிர்ந்து பார்த்தவன் அழுத்தமான ஒரு பார்வையை வீசிவிட்டு ‘ஒன்றுமில்லை’ என்பதுபோல் தலையசைக்க, 


“என்னை கல்யாணம் பண்ண உங்களுக்கு ஓகேவா?” என்று கேட்டாள். 


'நான் வேணாம்னு சொன்னாலும் வேற மாப்பிள்ளை பார்த்து கட்டிவைக்கதான் போறாங்க’ என்று அவன் மனம் எண்ண, திருமணம் செய்யும்வரை முன்வந்த தானே செய்து கொள்வோமே என்று முடிவாகினான்.


“பிடிக்கலையா?” என்று அஞ்சனா வினவ, அவள் கண்களை ஏறிட்டவன், 


“ஓகே தான்” என்றான். முகம் மலர புன்னகைத்தவள், 


“அப்ப ஓகே.. ஐ லவ் யூ” என்று கூற, 


“ஆங்?” என்றான். சிறுபிள்ளை தந்தையிடம் கூறவதுபோல் அவள் கூறியதில் அவனுக்கு சிரிப்பதா சளிப்பதா என்று தான் இருந்தது. 


‘உடன் பிறந்தோர் மற்றும் கணவனைத் தவிர வேறு எந்த ஆணுக்கும் ஐ லவ் யூ கூறக் கூடாது’ என்பது அவள் அன்னை புகட்டிய பாடங்களில் ஒன்று என்பதை புரிந்து கொள்வது அந்த பிஸ்னஸ் டைகூனுக்கு ஒன்னும் பெரிய விடயமில்லையே!


இருவரும் அவ்வறை விட்டு வெளியே வர, யஷ்வந்தைப் பார்த்த யமுனா, வழக்கம் போல் அவன் முகத்திலிருந்து எந்த உணர்வுகளையும் கண்டறிய முடியாமல், பெருமூச்சு விட்டுக் கொண்டு, 


“சரி சம்பந்தி.. வர்ற முகூர்த்தத்துலயே கல்யாணம் வச்சுப்போம்‌. கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நிச்சயத்தை வச்சுக்கலாம்” என்றார்.


“ரொம்ப சந்தோஷம் சம்பந்தி..” என்று அமுதா மனம் குளிர, 


“புடவை நகையெல்லாம் எடுக்க நான் நாள் பார்த்துட்டு சொல்றேன்” என்று யமுனா கூறினார். 


விருப்பமே இல்லாது அங்கு நின்றிருந்த அர்ஜுன் அலங்கார பொம்மை போல் தனது தங்கையை அன்னை ஆட்டிவைப்பதில் கடுப்போடு வெளியேறிட, அமுதா மகனை எண்ணி நொந்து போனார்.


Leave a comment


Comments


Related Post