இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-01 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 14-02-2024

Total Views: 57310

சென்னையில் செல்வந்தர்கள் மட்டுமே குடியிருக்கும் பகுதி என்பதை பறைசாற்றும் விதமாக பல வர்ண மாளிகைகளைக் கொண்ட பகுதியது. அவற்றில் அந்த அழகிய மாளிகையில், பல அலங்காரங்கள் நடந்து கொண்டிருந்தது.


வீட்டின் பெருவாயிலிலிருந்து உள்ளே செல்வதற்கே அரை கிலோமீட்டர் இருக்கும்போலும் என வியக்கும் வகையில் அவ்வீட்டைச் சுற்றி இருக்கும் பச்சை பசேலென்ற தோட்டத்தில் முழு உலகையும் மறந்து பலநாள் பொழுதைக் கழிக்கலாம் என்பது போன்ற எழிலுடன் இருந்தது.


வீட்டின் முன் செயற்கை நீரூற்று, தோட்டத்தில் சிறு அல்லிக் குளம், குழந்தைகள் விளையாடுவதற்கு சிறிய திடல் (மினி பார்க்) என அனைத்தும் இருந்தது அத்தோட்டத்தில். 


அவற்றை ரசித்துவிட்டு அவ்வீட்டினுள் நுழைய, நேரெதிரே ராஜ தோரணையில் முதல் தளத்திற்கான படிக்கட்டுகள் இருந்தன. இடதுபுறம் சமையலறை மற்றும் பூஜையறை இருக்க, வலது புறம் மூன்று அறைகள் இருந்தன‌.


முதல் தளத்தில் சில அறைகளும், சிறு நூலகமும் இருக்க, கடைக்கோடியில் கருநிற மரக்கதவதின் மேல் ஓரம் மட்டும் போருக்கு தயாராக காத்திருக்கும் குதிரைகளைப் போன்று செதுக்கப்பட்டு அதற்கு மட்டும் வெண்மை நிறம் கொடுக்கப்பட்ட கலை நயம் பொருந்திய அறை ஒன்று இருந்தது. 


இங்கு கீழே கூடத்தில், மூவர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். 


"யஷ் ஒத்துகிட்டானா ம்மா?" என யாதவ் வினவ,


"அவன் ஒத்துக்காம செய்ய முடியும்னு நீ நினைக்குறியா?" என யமுனா வினவினார். 


"எல்லாம் சரிதான் அம்மா.. ஆனா பொண்ணு ரொம்ப சின்ன பொண்ணா இருக்கே. இதெல்லாம் அவனுக்கு தெரியுமா?" என்று யாதவ் வினவ 


"அதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா. ஆனா எந்த விஷயத்தையும் யோசிக்காம அவன் முடிவெடுக்க மாட்டான்" என்று யமுனா உறுதியுடன் கூறினார்.


அவர் யமுனா யுவராஜ் கிருஷ்ணா! அந்த யுவராஜ் குடும்பத்தின் ஆணி வேரான அவரது ஆளுமையும், அமைதியுமே பார்ப்போரை மதிக்க வைத்திடும். தொழிலுலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த யுவராஜின் காதல் மனைவியே யமுனா. 


'யுவனா இன்டஸ்டிரீஸ்' என்ற பெயரே தொழில் துறையில் சூடுபறக்க பேசப்படும் நிறுவனம் என்ற பெயரை உருவாக்கி, மிலிர்ந்த யுவராஜ் தனது உடல் நலம் காரணமாக மரணப்படுக்கையை அடைந்த காலம், அத்தனை தொழிலதிபர்களும் 'யுவனா இன்டஸ்டிரீஸ்' என்னவாகப் போகிறது என்ற ஆர்வத்தில் தான் இருந்தனர்.


தன் கணவரின் மொத்த நம்பிக்கையுமாக மாறிய யமுனா, கணவருக்கு இணையான துணிவுடன் அந்த நிறுவனத்தை மேலும் தூக்கி நிறுத்தி நடத்தியதில் அத்தனை பேரும் வாயடைத்து விதிர்விதிர்த்துத் தான் போயினர். இரண்டு மகன், ஒரு மகள் என தனது பிள்ளைகளையும் தனியே வளர்த்து இன்று மகனிருவருக்கும் நிறுவனங்களை ஒப்படைத்து அவர்களது ஆட்சிமுறையைக் கண்டு ரசித்து வருகின்றார்.


யாதவ் கிருஷ்ணன், யுவராஜ் மற்றும் யமுனா தம்பதியரின் முதல் மகன். முப்பத்தி வயது கொண்ட யாதவ் தனது மனைவி அக்ஷராவுடன் சேர்ந்து தங்கள் நிறுவனத்தின் 'பர்னிச்சர் இண்டஸ்ட்ரி' (furniture industry) என்று கூறப்படும் மரம் சார்ந்த பொருட்களின் விற்பனையை செய்து வருகின்றனர். இவர்களது இல்வாழ்க்கையின் அழகிய முத்தாய் ஆண்குழந்தை ஒன்று பிறக்க, யதுநந்தன் என்று பெயரிடப்பட்டு தற்போது மூன்று வயதுடைய குழந்தையாய் இவர்கள் வாழ்வை மலர்த்தியுள்ளான்.


யாழினி கிருஷ்ணா, இவர்கள் மூன்றாவது பிள்ளை. தற்போது முதுகலை பேஷன் டெக்னாலஜியில் இறுதியாண்டு பயிலும் மாணவி.


இவர்களது இரண்டாம் மகனே, யஷ்வந்த் கிருஷ்ணா. இரும்பினையும் தீ கொண்டு இழக வைத்திடும் யுக்தி இருப்பின், இந்த இரும்பனை இழக வைக்கும் தீ அவள் யாரோ என்று பெருமூச்சுவிடும்படியான ஒருவன். தேவைக்கு மட்டுமே புன்னகையை சிந்துபவன், தனது இறுக்கம் தொலைத்து சிரிப்பது யதுநந்தனிடம் மட்டுமே!


மன்னிப்பு என்ற வார்த்தையை உதிர்க்க, அவனது இறுகிய இதழ்களுக்கு பழக்கமில்லாததால், அவ்வார்த்தையை உதிர்க்க வேண்டிய சூழலையே கொண்டுவராதபடி எதிலும் நேர்மையாகவும், சரியாகவும் காய் நகர்த்திப் பழகியவன். அவன் ஒரு முடிவை எடுத்துவிட்டால், அது தவறாக இல்லாதபட்சத்தில் அவன் தாயால் கூட அதை மாற்றியமைக்க இயலாது.


திருமணம் செய்துகொள்வதில் விருப்பமில்லாதவன் தற்போது திருமணத்திற்கு சம்மதம் கூறியிருந்தது தாயவளுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. தொழில் தொழில் என்று அந்த போக்கிலேயே சென்று கொண்டிருந்தவனுக்கு அவனைப்போல தொழில் என்றே சுற்றும் ஒருத்தியை கட்டிவைத்திடக் கூடாது என்பதற்காகத்தான் தொழில் துறையில் அவனை திருமணம் செய்துக்கொள்ள முண்டியடித்த பெண்களைத் தவிர்த்திருந்தார்.


தற்போது வந்த சம்மந்தம் அவர் மனதிற்கு பிடித்திருந்தபோதும், உள்ளுக்குள் இத்தனை சிறு பெண்ணை தன் மகனுக்குக் கட்டிவைப்பதில் அவருக்கு சிறு நெருடல் தான். அதுவும் அப்பாவியான முகத்துடன் வெள்ளந்தியாக சிரித்த அந்த பூவவள் தன் மகனது முரட்டு குணத்தை ஏற்று வாழ்வாளா என்ற தயக்கம் இருந்த போதும் அவளை விட்டுவிட மனமில்லை. எத்தனை படித்த மேதையாக இருந்தாலும் அவரும் சராசரி தாய் தானே? தன் மகன் என்ற சுயநலம் தான் முதலில் எட்டிப்பார்க்க, சம்மதம் கூறியிருந்தார். 


மகனிடமும் சென்று பேசியவர் அவனை திருமணம் செய்து கொள்ள வைக்க எப்போதும் போல் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்க, எப்போதும் அதற்கும் அசையாதவன் இம்முறை சம்மதம் கூறியிருந்தது அவருக்கே பெரும் அதிர்ச்சி தான். ஆனால் அதுவும் இன்பமாக மாறிவிட, உடனே கல்யாண வேலைகளை துவங்கியிருந்தார்.


இங்கு கண்ணீருடன் தலைகுனிந்து அமர்ந்திருந்த அமுதவல்லியை முறைத்தபடி அவருக்கு எதிரே அமர்ந்திருந்த ஆதித்ரனின் கண்கள் அத்தனை கனல் பொழிந்தன. 


இருவருக்குமாக தேநீர் எடுத்துவந்து வைத்த மால்யதா, கணவர் தோள் தொட்டு 'நிதானமா பேசுங்க' என்று இதழசைக்க, சிறு தலையசைப்புடன் அமுதவல்லியைப் பார்த்து "இப்ப என்னம்மா அவசரம்?" என்று வினவினான்.


தன் கண்ணீரை முந்தானையில் துடைத்துக் கொண்ட அமுதா, "அவளுக்கு இந்த வருஷத்துக்குள்ள கல்யாணம் நடக்கலைனா அடுத்து கல்யாணமே ஆகாதுனு ஜோசியர் சொல்றாரு. அப்படியே ஆனாலும் அது நிலைக்காதுனு சொல்றாரு. எனக்கு வேற வழி தெரியலை ஆதி" என்று கூற, 


"மண்ணாங்கட்டி.. ஏன்மா எப்பப்பாரு இந்த ஜோசியம், ஜாதகம் அது இதுனு சொல்றீங்க? இது.. இதெல்லாம் உண்மை கிடையாது ம்மா" என்று ஆற்றாமையுடன் கத்தினான்.


"இப்படி நினைச்சு தான் என் முதல் பொண்ணோட வாழ்க்கை சீரழிஞ்சு போச்சு" என்று அவர் கூறுகையிலேயே "இங்க யார் வாழ்க்கையும் சீரழியலை. நானென்ன செத்தா போயிட்டேன்? நல்லா தானே இருக்கேன்?" என்றபடி உள்ளே வந்தாள் ஆத்ரிகா.


அவளை கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்த அமுதாவிற்கு வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்கி சண்டித்தனம் செய்ய, ஆதியின் அருகே வந்தமர்ந்தவள், 


"என் வாழ்க்கைக்கு என்னமா? நான் என் பொண்ணோட சந்தோஷமா ஒரு வாழ்க்கைல தான் இருக்கேன். நீங்க சொல்லும்படியான சீரழிவு என் வாழ்வில் இல்லை" என்று நிமிர்வுடன் கூறினாள்.


தங்கையை பெருமையுடன் ஒரு பார்வை பார்த்தவன் "ம்மா.. ஆரம்பத்துல இருந்தே நீங்க அஞ்சு வாழ்க்கைல தப்புக்கு மேல தப்பா செய்துட்டு இருக்கீங்க. இது வேண்டாம். அவ சின்ன பொண்ணு. உடலளவுல மட்டும் சொல்லலை. மனதளவுலயும் அவ இன்னும் வளரலை" என்று கூற, 


ஆக்ரோஷமான பார்வையுடன் அவனை ஏறிட்டவர் "சொன்னா புரிஞ்சுக்கோடா. ஏற்கனவே ஒருத்தியோட வாழ்க்கை இப்படி மாறிப்போனதை நினைச்சு உள்ளுக்குள்ள குற்ற உணர்வுல குன்றி போயிருக்கேன். இப்ப இன்னொருத்தி வாழ்க்கையும் அழியுறதை என்னால பார்க்க முடியாது. காலம் பூரா அது என்னை உருத்திக்கிட்டே இருக்கும். நான் அவங்க வீட்டுல பேசிட்டேன். இதுதான் என் முடிவு. என் பொண்ணு நான் சொன்னா யாருக்குனாலும் கழுத்தை நீட்டுவா. முடியாது வேணாம்ங்குறத அவ சொல்லட்டும்" என்று கத்திவிட்டு எழுந்து சென்றார்.


செல்லும் தாயை பார்த்த ஆத்ரிகா, "நீங்க சொன்னா யாருக்கும் அவ கழுத்தை நீட்டுவாதான். ஆனா அஜு சொன்னா அவ உங்களையே கூட தவிர்த்துட்டு போகவும் தயாரா இருப்பா" என்று கூற மின்சாரத்தை மிதித்தது போன்ற அதிர்வு அவருள் பரவியது.


 ஆம்! உண்மை தானே! 'தன் மகளுக்கு தனது சொல்லைவிட அர்ஜுனின் சொல் தானே வேதவாக்கு' என்று எண்ணியவர் "அஜு வரட்டும். பேசிக்கலாம்" என்றதோடு சென்றுவிட்டார்.


ஆத்ரிக்காவும் கோபத்தோடு எழுந்து சென்றிட, தங்கள் வீட்டில் நடக்கும் பெரிய பெரிய விடயங்களில் கூட தனக்கு உரிமை இல்லாததை எண்ணியும் நடந்து முடிந்த கசப்பான சம்பவங்களை எண்ணியும் ஆதியின் மனம் கனத்துப் போனது.


சில வருடங்களுக்கு முன்பு எத்தனை எத்தனை ஆனந்தமாக காட்சியளித்தது இந்த வீடு என்று எண்ணுகையிலேயே அவனுள் ஒரு விரக்தியான உணர்வு பரவியது. தனது மனைவியையும் தங்கையையும் அமர்த்தி கைகளில் வளை பூட்டி, பட்டுக் கன்னங்களில் சந்தனம் பூசி, வகைவகையாய் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.


ஏழுமாத கர்ப்பிணியாக தாய் வீட்டிற்கு ஒருவாரம் தங்கிச் செல்லவந்த ஆத்ரிகாவையும் ஒன்பது மாத கர்ப்பிணியாக வளைபூட்டி அமர்த்தியிருந்த மால்யதாவையும் கண்களில் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தனர் அக்குடும்பத்தினர்.


ஆனந்தன் மற்றும் அமுதவல்லி தம்பதியினருக்கு திருமணம் ஆன ஒரே ஆண்டில் ஆதித்யன் மற்றும் அடுத்த ஆண்டில் ஆத்ரிகா என்று இருபிள்ளைகள் பிறந்திட, இன்பமாக தங்கள் வாழ்வை வாழ்ந்து வந்தனர். இன்பமாக சென்றவர்கள் வாழ்வில் எதிர்பாராத விதமாய் முளைத்த உயிர்களே அஞ்சனா மற்றும் அர்ஜுன். ஆத்ரிகா பிறந்த பின்பு குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்திருந்த அமுதா ஏழு வருடம் கழித்து கற்பம் தரித்தது பெரும் அதிர்ச்சியான தகவலாகயிருக்க, பிறகு சிகிச்சை முறையாக செய்யப்படாததால் ஏற்பட்ட பிசகில் மீண்டும் அவர் கருவுற்றதும் அதுவும் அது இரட்டை உயிர் என்றும் தெரியவந்தது.


சரியென்று அக்குழந்தைகளை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு சுமந்தவருக்கு ஒன்பதாம் மாத தொடக்கத்திலேயே வலியெடுத்திட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பனிக்குடம் உடைந்தும் குழந்தைகள் வெளியே வராததால் அறுவை சிகிச்சை செய்தே இரண்டு உயிர்களையுள் இப்புவிக்கு கொண்டு வந்தனர்.


இன்பமாக பயணித்த வாழ்வில் அடுத்து வந்து சேர்ந்த அபார நிகழ்வே அவர்கள் வாழ்வின் முதல் வெடியாக அமைந்தது. பள்ளி சென்றிருந்த அஞ்சனாவை காணவில்லை என்பது தான் அச்செய்தி. பள்ளி கிரவுண்டில் விளையாடிக் கொண்டிருந்த அர்ஜுன் நேரமானதால் அஞ்சனாவின் வகுப்பிற்கு சென்று அவளை அழைத்துக் கொண்டு புறப்படயிருக்க, அங்கு அவளில்லை. ஆதி வந்து அழைத்து சென்றிருப்பான் என்று நினைத்த அர்ஜுன் வீட்டிற்கு வந்திட, அனைவரும் அவனிடம் அஞ்சனா எங்கே என்று கேட்டு திடுக்கிட வைத்திட்டனர்.


அஞ்சனாவை காணவில்லை என்பது புரியவர, காவல் நிலையத்தில் புகார் கொடுத்திட்டு அனைவரும் அவளைத் தேடி அலைந்தனர். ஒரு இரவு முழுதும் அவர்களை தவிக்க விட்டு மறுநாள் காலை காவலர்களால் மயங்கிய நிலையில் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஐந்தாம் வகுப்பு சிறுமியைக் கண்டு அனைவரும் பதறிப்போக அப்போதே அவளை மட்டுமல்ல அவளது சக மாணவியும் சேர்த்துக் கடத்தப்பட்டது தெரியவந்தது.


அந்த சின்னஞ்சிறு சிறுமி, தன் சொந்த தாய்மாமாவால் கற்பழிக்கப்பட்டு இறந்து போனதையும் அதை நேரில் பார்த்து பயந்து அரண்டு போன அஞ்சனாவையும் அவன் தன் இச்சைக்கு பயன்படுத்த இருந்த நேரம் காவலர்கள் அவர்களை கண்டுபிடித்தவிட்டதையும் கூறக் கேட்ட அனைவரும் அதிர்ந்து போயினர்.


அதிலிருந்து அவளை மீட்டெடுப்பதே அவர்களுக்கு பெரும் போராட்டமாக மாறிவிட, வெளியே செல்லவே அஞ்சிய மகளுக்கு வீட்டிலேயே படிக்க ஏற்பாடு செய்தனர். அவள் கவனத்தினை படிப்பு, கலைகள் என அதன் புறம் திருப்பிய அமுதா, செய்த மாபெரும் தவறு அவளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டிய பலதை தவிர்த்தது தான். 


பூப்பெய்திய மகள் கேட்ட கேள்விகள் எதற்கும் முறையான பதில்களைக் கூறாது, அவளது பாதுகாப்பிற்கு என்ற பெயரில் அவளை ஏதும் தெரியாது வெகுளியாகவே வளர்த்தார். தட்டிக்கேட்ட கணவன் மற்றும் மகளையும் 'என் மகள எப்படி வளர்க்கணும்னு எனக்கு தெரியும்' என்று கடிந்துவிட்டு நகர்ந்திருந்தார்‌.


பள்ளி சென்றுவிட்டு மீண்டும் வரும் அர்ஜுன் மட்டுமே அஞ்சனாவின் ஒரே பிடிமானம். அவனது வயதிற்கு அவள் வளரும் விதம் தவறு என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாத ஒன்றாக இருந்தபோதும் ஒருகட்டத்திற்கு மேல் தங்கை கூண்டுக்கிளியாக வளருவதை புரிந்து கொண்டு வீட்டில் தர்க்கம் செய்யத் துவங்கினான்.


"என் அஞ்சுவும் எல்லாரையும் போல போல்டா இருக்கணும். சும்மா அவளை வீட்டுலயே அடைச்சு வைக்காதீங்க" என்று வாதிட்டு அவளது பத்தாம் வகுப்பிலிருந்து மீண்டும் அவளை பள்ளிக்கு அழைத்து வரும்படி செய்திருந்தான்.


அப்போதும் 'யார் எது கொடுத்தாலும் வாங்கக் கூடாது. பசங்க கிட்ட பேசக்கூடாது; சிரிக்க கூடாது; மாதவிடாய் காலங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், முக்கியமாக அர்ஜுனை கேட்காமல் எதுவுமே செய்யக்கூடாது' என்று அவள் மனதில் ஆழப்பதித்து அனுப்பியிருந்தார்.


பிற மாணவிகளுடன் பயிலுகின்றாள் என்ற பெயரில் அவளும் பள்ளி சென்று வந்தாள் ஆனால் அவளது வெகுளித்தனம் மாறவுமில்லை மறையவுமில்லை. பிற ஆடவர் தன்னிடம் அத்துமீறித் தொடுகையில் இசைந்து கொடுக்கும்படி நடந்துக்கொள்ளக் கூடாது என்று தெரியும் ஆனால் அது ஏனென்று அவளுக்குத் தெரியாது. மாதா மாதம் மாதவிடாய் என்ற ஒன்று தன் உடலில் நிகழும் என்று அவளுக்குத் தெரியும் ஆனால் அதன் வேலையென்ன என்பது பற்றி ஏதும் தெரியாது. சுறுக்கமாகச் சொல்லப் போனால் அவளொரு வளர்ந்த குழந்தை.


அர்ஜுனுடன் பள்ளி சென்ற பிறகு தனது பயம் துறந்து அனைவரிடமும் சகஜமாகப் பேசிப்பழகினாள். யாரேனும் தேவையற்று தன்னை குறை கூறினாலோ, ஏமாற்றுவது தெரிந்தாலோ தட்டிக்கேட்கும் தைரியம் வரப்பெற்றாள். ஆனால் உடலளவில் நிகழும் மாற்றங்களைப் பற்றி எந்தவொரு அறிவுமற்ற குழந்தையாகவே இருந்தாள்.


இருப்பினும் அவளது இந்த மாற்றம் குடும்பத்தை ஓரளவு நிம்மதியடையச் செய்த நேரம் தான் வந்து சேர்ந்தது ஆத்ரிகாவின் கணவனிடமிருந்து விவாகரத்துக் கடிதம். முதல் காதலியை சந்தித்ததாகவும் இனி அவளுடன் தான் தனது வாழ்வு என்று கூறியிருந்தவன், இந்த விவாகரத்திற்கு எவ்வளவு பணம் ஈடாகக் கேட்டாலும் கொடுப்பதாக கூறியிருக்க, சிங்கப்பெண்ணவள் சிலிர்த்துப்போனாள். 


நேரே அவன் வீட்டை அடைந்த ஆத்ரிகா தனது திருமாங்கல்யத்தினை அவன் கண் முன்னேயே கழற்றி, "இதுக்கு அர்த்தம் தெரியாத ஒருத்தனோட வாழ்ந்ததை நினைச்சு வெக்கமா இருக்கு. இனியும் உன்கூட வாழ்றது உனக்கு எப்படியோ? ஆனா எனக்கு அசிங்கம்" என்றவள் விவாகரத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்து வந்திருந்தாள். 


ஜாதகத்தில் அவளுக்கு கல்யாணம் காலம் இல்லை என்று ஜோதிடர்கள் கூறியதையெல்லாம் நம்பிக்கை கொள்ளாது திருமணம் நடத்தியதால் தான் இத்தனை பிரச்சினையும் என்று நம்பிய அமுதா வெகுவாக ஒடிந்து போய்விட, ஆனந்தனும் ஒரே வருடத்தில் உடல் நலம் குன்றி காலமாகினார்.


குழந்தை பிரசவித்த ஒரு வருடம் தாய்வீட்டில் இருந்த ஆத்ரிகா அடுத்த வருடமே தனக்கு ஒரு வேலையையும் அருகிலேயே வாடகைக்கு ஒரு வீட்டையும் பார்த்துக் கொண்டு குடிபெயர்ந்திருந்தாள். 


"எனக்குனு இவ்வளவு சொத்து சுகம் இருக்கலாம். என்னை வெச்சு சோறுபோட உங்ககிட்ட கோடி கணக்கில் பணமிருக்கலாம். ஆனா அதுல உக்காந்து சாப்பிடுறது எனக்கும் பெருமையில்லை என் குழந்தைக்கும் பெருமையில்லை" என்று கூறியவள் அதே வைராக்கியத்தோடு தான் இன்னமும் இருந்து வருகிறாள்.


அனைத்தையும் அசைபோட்ட ஆதியின் மூடிய விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்க, கணவன் தோளில் கரம் வைத்து "எல்லாம் சரியாகிடும். எதுவும் யோசிக்காதீங்க" என்று ஆறுதல் செய்தாள் மால்யதா.


 "அஜு கண்டிப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டான்" என்று ஆதி கூற, 


"அதேதான் நானும் நினைக்குறேன். பார்ப்போம்" என்று கூறினாள்.


Leave a comment


Comments 1

  • L Laya
  • 4 months ago

    Nice start sis thodarnthu elutha vazhthukal ❤️


    Related Post