இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...1 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 15-02-2024

Total Views: 57903

தவசிபுரம் ஊராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது. 


மஞ்சள் நிற பெயிண்டில் கருப்பு நிற எழுத்துக்களில் பளபளத்த அந்த கல்பலகையின் வரவேற்பை கண்களுக்குள் வாங்கியபடி தனது ப்ளூ மெட்டாலிக் ஆடி காரை அந்த போக்குவரத்தற்ற தெளிவான சாலையில் புகுத்தி இருந்தான் தரணிதரன்.


காரின் வேகத்தை முழுமையாய் குறைத்து சாலையின் இருமருங்கிலும் பார்வையை பாய்ச்சியவன் தன்னிச்சையாய் இதழ் விரித்து புன்னகைத்தான். இருபுறமும் முழுக்க முழுக்க பச்சைப் பசுமைகள். மாந்தோப்புகள்… தென்னந்தோப்புகள்… வாழைத்தோப்புகள்… கரும்புத் தோட்டங்கள்… நெற்பயிர்களின் கூட்டங்கள் என்று பச்சை வண்ணத்தின் பல பரிமாணங்களில் இயற்கை அன்னை எழிலோவியமாய் சிரித்துக்கொண்டிருந்தாள். மதுரையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அழகையும் செழுமையையும் சுமந்த விவசாய கிராமம் தவசிபுரம்.


சாலையிலிருந்து 5 அடி இடைவெளியில் இரு மருங்கிலும் நேர்த்தியாய் அமைக்கப்பட்ட வாய்க்கால்களில் சலசலவென மெலிதான சத்தத்துடன் நீரோட்டம்… வைகை ஆற்றின் குறையாத நீர்ப்பாசனம்… ஏனோ வறட்சி காலத்திலும் கூட தண்ணீர் பஞ்சமும் நிலத்தடி நீர் பிரச்சனையும் நீர்ப்பாசன தொந்தரவுகளும் தவசிபுரத்திற்கு மட்டும் வந்ததே இல்லை… நீர் வரத்துக்கு ஏற்றபடி ஊரின் அமைப்பு வடிவம் பெற்றுக் கொண்டதா தெரியாது… வாய்க்கால்களில் தண்ணீர் வற்றியதாக சரித்திரம் பூகோளம் என்று எதுவும் இல்லை… நீர், நிலம், காற்று, சூரியஒளி என்று இயற்கை தாய் தனது மொத்த அன்பினையும் கொட்டிக் கொடுத்து வளர்த்து வரும் செல்லப் பிள்ளை அந்த ஊர்.


மூலிகை வாசத்துடன் நாசியை தழுவி செல்லும் காற்றும் கூட சுத்தமாய் சுகாதாரமாய் சல்லடை போட்டு சலித்து அனுப்பி வைக்கப்பட்டது போல் சுவாசப்பையில் இதமான குளிர்ச்சியை ஏற்படுத்தியது. தோட்டங்களுக்கு மத்தியில் ஓட்டு வீடுகளும் மச்சு வீடுகளுமாய் அதிகபட்சமாய் 100 வீடுகளை உள்ளடக்கி இருக்கும் தவசிபுரம்.


‘மாசில்லாத இரைச்சல் இல்லாத ஆரோக்கியமான குட்டி உலகம்… கொடுத்து வைத்த மக்கள்…’ தனக்குள் நினைத்துக் கொண்டான் தரணிதரன். இத்தனை அழகையும் கண்டுகளிக்க கண்கள் இரண்டும் போதவில்லையே என்று எண்ணி வியந்தவன் பக்கவாட்டில் திரும்பி தன் நண்பனைப் பார்த்தான். அழகாவது வசீகரமாவது ரசனையாவது… எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் வெகு சுவாரஸ்யமாய் வாட்ஸ் ஆப்பில் யாருடனோ சேட்டிங்கில் இருந்தான் கார்முகிலன்… அந்த ஊருக்கு சொந்தக்காரன்.


“டேய்… உன் ஊருக்குள்ள வந்தாச்சு… கொஞ்சமாவது எக்ஸைட்மெண்ட் வேண்டாமா…? ஊரோட அழகை பார்க்க பார்க்க எனக்கே திகட்டல… நீ என்னடா கொஞ்சம் கூட ரசனையே இல்லாம ஒரு இன்வால்வ்மெண்ட் இல்லாம வந்துட்டு இருக்க… போனை தூக்கி ஓரமா வைக்கிறியா… இல்ல புடுங்கி எறியட்டுமா…?” அதட்டலாகவே கேட்டான் தரணிதரன்.


பட்டென்று போனை அணைத்து சட்டைப் பையில் போட்டுக் கொண்டவன் “எல்லாம் பார்த்து பார்த்து சலிச்சுப் போன இடம்தானே… என்ன புதுசா இருக்கு…” என்று தோளை குலுக்கி முகத்தை சுளித்தவனை முறைத்துப் பார்த்தான்.


“நம்ம ஊர்னா கொஞ்சமாவது அட்டாச்மெண்ட் இருக்கணும்டா… அதுவும் எவ்வளவு அழகான ஊர்… நான் மட்டும் இப்படி ஒரு ஊர்ல பிறந்திருந்தா இந்த ஊரை விட்டு வெளியே போயிருக்க மாட்டேன்… விவசாயம் பண்ணிக்கிட்டு அப்படியே சந்தோஷமா கிராமத்து வாழ்க்கையை என்ஜாய் பண்ணி இருப்பேன்…’ சிலாகித்துக் கூறியவனை ஒரு மார்க்கமாய் பார்த்து கோணலாய் சிரித்தான் கார்முகிலன்.


“இப்போ அப்படித்தான் தோணும்… ஆனா ரியாலிட்டில நீயும் என்னை மாதிரிதான் இருந்திருப்ப…” என்றபடியே கைகள் இரண்டையும் தூக்கி சோம்பல் முறித்தவன் “கார் ஓட்டுறியா இல்ல நகர்த்துறியாடா… அங்கே பாரு… அந்த சைக்கிள்காரன் உன்னை ஓவர்டேக் பண்ணிட்டு போறான்…” 


மணி அடித்தபடியே தங்கள் காரை கடந்து சென்ற சைக்கிள்காரனை காட்ட “நீ வந்து ஓட்டு… உன் வீடு உனக்குதானே தெரியும்… இதே ஸ்பீட்லயே போ… நான் அப்படியே ரசிச்சுக்கிட்டே வரேன்…” என்றவன் மாறி அமர்ந்துகொள்ள இப்போது கார்முகிலன் கார் ஓட்டத் தொடங்கினான்.


நெற்கதிர்கள் முற்றி தோள் சேர்த்து ஒன்றோடு ஒன்று ஒரே பக்கமாக தலை சாய்த்து காற்றின் ரீங்காரத்துக்கு ஏற்றபடி அலை அலையாய் அழகாய் நெளிந்து நடனமாட அந்த அழகினை தன் கைப்பேசியில் படம்பிடித்தபடி வரத் தொடங்கினான் தரணிதரன்.


தரணிதரன்… 28 வயதில் அந்த வயதிற்கே உரிய இளமையும் கம்பீரமும் கொண்ட ஆறடி ஆண்மகன்… மாநிறம்தான் என்றாலும் மங்கையரை மயக்கும் வசீகரத் தோற்றத்துக்கு சொந்தக்காரன்… அவன் நண்பன் கார்முகிலன் அவனைவிட ஒரு இன்ச் உயரம் குறைவு என்றாலும் அழகில் தரணிக்கு இணையானவன்தான். இருவரும் பெங்களூரில் உள்ள ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் இயந்திர பொறியாளர்களாக (mechanical engineers) உயர்ந்த பதவியில் கை நிறைய சம்பளத்துடன் நகர வாழ்க்கையை முற்றிலும் நுகர்ந்து வாழ்பவர்கள்.


தரணியின் சொந்த ஊர் காரைக்கால் என்றாலும் அவன் படித்தது கோவையிலும் வேலை கிடைத்து அமர்ந்தது பெங்களூருவிலும். கிராமத்து வாழ்க்கையை இதுவரை பார்த்திராதவன்… ஆனால் அந்த வாழ்க்கையின் மேல் ஒரு தனி ஈடுபாடு கொண்டவன்… கிடைக்காத அனுபவிக்காத விஷயங்களின் மீது மனிதர்களுக்கு எப்போதும் தனி ஆர்வம் இருப்பது இயற்கைதானே.


முகிலன் தனது தந்தையின் வேண்டுகோளின்படி ஒரு முக்கிய வேலையாக அங்கு வந்துள்ளான். தரணிதரனையும் கையோடு இழுத்து வந்துள்ளான்… அந்த அழகிய பழமை வாய்ந்த பெரிய வீட்டின் முன் காரை நுழைத்து நிறுத்தி இருந்தான் முகிலன். ஹாரன் ஓசை கேட்ட உடனே மொத்த குடும்பமும் வெளியில் ஓடிவந்து நின்றிருந்தது… முகிலனின் தந்தை மணிவாசகம் தாய் செண்பகம் சிரித்த முகங்களாய் ஓடிவந்து நின்றிருக்க… காதிலுள்ள தண்டட்டி ஆட முதுமைக்கே உரித்தான நடையுடன் வேகமாய் வெளியே வந்தார் முகிலனின் பாட்டி சின்னப்பொண்ணு.


“எய்யா… ராசா… முகிலு…” குரல் தழுதழுக்க அழைத்தவர் வாஞ்சையாய் அவன் கன்னம் வருடி முத்தமிட்டு அவனை அணைத்துக்கொண்டார். பாட்டிமார்களுக்கு எப்போதும் பேரன்கள் என்றால் மகனை காட்டிலும் கூடுதல் பாசம் வந்து ஒட்டிக் கொள்ளுமே.


“சின்னு… எப்படி இருக்க…? இளைச்சுப் போயிட்டியே…” உதட்டை பிதுக்கியபடி தன் பாட்டியின் கன்னத்தை செல்லமாய் கிள்ளினான் முகிலன்.


“எங்கிட்டோ தொலையா போயி நீ உக்காந்துக்கிட்ட..

 இந்த கெழவிய அடிக்கடி வந்து பார்த்துட்டுப் போனாதானே ஆகும்…” செல்லமாய் முறுக்கியபடி அவனது குமட்டில் இடித்தார் பாட்டி. 


சிரித்தபடியே நடந்தவன் தன் அன்னையை அணைத்து நலம் விசாரித்து தந்தையுடன் பேசிக் கொண்டிருக்க அனைத்தையும் அழகான புன்னகையுடன் கைகள் இரண்டையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டபடி தள்ளி நின்று ஒருவித ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் தரணிதரன்.


“தம்பி யாரு…?” கண்களை சுருக்கி நெற்றியில் கையை குவித்து வைத்து பார்த்தபடி பாட்டி கேட்க அனைவரிடமும் தன் நண்பனை அறிமுகம் செய்து வைத்தான் முகிலன். இவர்கள் உள்ளே நுழையும் புடுபுடுவென சத்தத்துடன் புல்லட் ஒன்று உள்ளே வந்து நின்றது… நடுத்தர வயதை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் இறங்கி வந்தனர்.


“முகிலு…” ஆசையாய் அழைத்தபடி ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டார் மல்லிகா… முகிலனின் அத்தை… மணிவாசகத்தின் தங்கை.


“வாடா மாப்ளேய்… எப்படி இருக்க…?” ஒரு கையால் மீசையை முறுக்கி மறு கையால் அவன் முதுகில் செல்லமாய் தட்டினார் மல்லிகாவின் கணவர் மாணிக்கவேல். இவர் செண்பகத்தின் உடன் பிறந்த சகோதரர்… பெண் கொடுத்து பெண் எடுத்துக் கொண்ட நெருக்கமான உறவினர்கள் இவர்கள். அனைவரும் கலகலத்தபடியே வீட்டிற்குள் நுழைந்தனர்… கமகமவென கோழிக்குழம்பின் வாசம் சமையலறையில் இருந்து கூடம்வரை நிறைந்து நாக்கில் எச்சில் ஊறச் செய்தது.


“ஆஹா… நாட்டுக்கோழி குழம்பா அப்பத்தா… உன் கைமணம் வாசத்தோட வருதே… கும்முனு பசியை தூண்டுது…” தன் வயிற்றை ஒரு கையால் தடவியவன் மறு கையால் தரணியின் தோளில் கை போட்டுக் கொண்டான்.


“எல்லாத்தையும் ரெடி பண்ணி எடுத்து வச்சிட்டு கூப்பிடுங்க… அதுக்குள்ளேயும் நம்ம வீட்டை தரணிக்கு சுத்தி காட்டிட்டு வந்துடறேன்…” என்றபடியே தரணியோடு நடந்தான் முகிலன்.


சுத்தி பார்க்கும் அளவிற்கு அந்த கிராமத்து வீட்டில் அப்படி என்ன தனித்துவம்…? நிச்சயமாய் தனித்துவம்தான்… மணிவாசகத்தின் தாத்தா காரைக்குடி மாடலில் பார்த்து பார்த்து உருவாக்கிய வீடு அது… அடிக்கும் தலைக்குமான நிறைய சாளரங்கள்… அகன்று விரிந்த நிறைய அறைகள்… ஆங்காங்கே வழுவழு தூண்கள்… ஆத்தங்குடி டைல்ஸ் என்று காரைக்குடி பாணியில் கட்டப்பட்ட அழகிய மாளிகை அது… வீட்டுக்குள் நுழைந்த நேரமாய் தனது கைப்பேசியில் ஒவ்வொன்றையும் கிளிக்கிக் கொண்டுதான் இருக்கிறான் தரணி.


மாடி ஏறப்போன முகிலன் ஏதோ நினைத்துக் கொண்டவனாய் வேகமாய் திரும்பி “அத்த… கேட்கவே மறந்துட்டேன்… நீங்க ரெண்டு பேர் மட்டும்தான் வந்திருக்கீங்க… நரிச்சின்னக்கா வரலையா…?” அகலமாய் சிரித்தபடி கேட்டான்.


“அடேய்… அவளை அந்த பேர் சொல்லி கூப்பிடாதடா… வீட்டையே ரணகளம் பண்ணிடுவா…” முகத்தை சுருக்கிக் கொண்டு கூறினார் அவன் அம்மா செண்பகம்.


“ஆமா முகிலு… அவளுக்கு நாங்க வெச்ச பேரையே ஏத்துக்க முடியாம பொழுதுக்கும் சண்டை போட்டுக்கிட்டுதான் அலையறா… இதுல நீ வேற எப்ப பார்த்தாலும் இந்த பேரை சொல்லி கூப்பிடற… ரங்கு ரங்குன்னு ஆடுவா…” இது மல்லிகா.


“அவ ரங்கு ரங்குன்னு ஆடினாலும் ஜிங்கு ஜிங்குன்னு குதிச்சாலும் எனக்கு எப்பவும் நரிச்சின்னக்காதான்… எங்கே அவ…?” மாடிப்படியின் பளபளப்பான மரக்கைப்பிடியில் சாய்ந்தபடியே கேட்டான் முகிலன்.


“உன் சோக்காலி ஒருத்தன் உன்கூட பள்ளியோடத்துல படிச்சானே… மொக்கச்சாமி மகே…”


“நாராயணன்…”


“ஆங்… அவே தங்கச்சிக்கு இன்னிக்கு நிச்சயதார்த்தம்… இவளும் அவளும் சினேகிதிங்க… அவளுக்கு அலங்காரம் பண்ணிவிட போயிருக்கா…”


“பார்றா… நரிச்சின்னக்கா பியூட்டிஷியன் வேலை எல்லாம் பாக்குறாளா…?” ஒற்றை விரலால் தாடையில் வருடியபடி சிரித்தான் முகிலன்.


“ஆமா… மதுரைக்கு போயி மூனு மாசம் அந்த படிப்பு படிச்சிட்டுதான் வந்தா… சிறுசில இருந்தே அடுத்தவுகளுக்கு அலங்காரம் பண்ணிட்டுத்தானே அலைவா… என்னமோ ஒன்னு… அவ ஆசைப்பட்டதை செஞ்சிட்டுப் போகட்டும்…” பேசியபடியே மல்லிகாவுடன் இணைந்து சமையலறைக்குள் நுழைந்து கொண்டார் செண்பகம்.


“நான் வர்றது அவளுக்கு தெரியும்தானே மாமா…”


தனது மைத்துனனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த மாணிக்கவேல் “எல்லாம் தெரியும் முகிலு… இப்போ வந்துருவா…” என்றார் மூக்குக் கண்ணாடியை சரிசெய்தபடியே.


“வரட்டும்… நல்லா வச்சி செய்றேன்…” தனக்குள் முணுமுணுத்து சிரித்துக் கொண்டவன் “சரி வாடா… அவ வர்றதுக்குள்ள ஒரு ரவுண்டு சுத்திட்டு வந்துருவோம்…” என்றபடியே தரணியின் கையை பிடித்தபடி மாடிக்கு ஓடினான் முகிலன்.


“அது என்னடா நரிச்சின்னக்கா…? டிஃபரண்டா பேர் வச்சிருக்கே… யாரு உன்னோட அத்தை பொண்ணா…?” காற்றில் அலைபாய்ந்த கேசத்தை கோதியபடியே கேட்டான் தரணி.


“ஆமாடா… சரியான வாலு… எப்ப பார்த்தாலும் எங்களுக்குள்ள அடிதடியாதான் இருக்கும்… சின்ன வயசுல என்னை எங்க அப்பாகிட்ட கோர்த்துவிட்டு அடி வாங்க வைக்கிறதே ஒரு வேலையா வெச்சுக்கிட்டு அலைவா… நரி மாதிரி தந்திரமா ஏதாவது வேலை செஞ்சுக்கிட்டே திரிவா… அப்படி வச்ச பேருதான் நரிச்சின்னக்கா… நான் அப்படி கூப்பிடும்போது அவளுக்கு வருமே கோபம்… பார்க்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கும்… அதுக்காகவே அவளை வம்பிழுப்பேன்…” சிரித்தபடியே தனது பழைய நினைவுகளுக்குள் மூழ்கி எழுந்தான் முகிலன்.


“அதுக்காக இப்படியா காமெடியா பேர் வப்ப…”


“இதையே காமெடின்னு சொல்ற… அவ நிஜப்பேர் இன்னும் காமெடியா இருக்கும்… அதை நினைச்சு வேற பெரிய கவலை என் அத்தை மக ரத்தினத்துக்கு…” என்றவன் சற்று உரக்கவே சிரித்திருந்தான்.


“அப்படி என்னடா பேரு…?” ஆர்வமாய் கேட்டான் தரணி.


“பூச்செண்டு…”  சொன்னவன் வெடித்து சிரிக்க 


“வாட்…?” கேள்விப்படாத புதுமையான பெயரில் ஆச்சரியப்பட்டு தானும் அவனுடன் சிரிப்பில் இணைந்து கொண்டான் தரணிதரன்.


(தொடரும்)


Leave a comment


Comments


Related Post