இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -4 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 08-02-2024

Total Views: 31234


"உங்க ஆயா சொல்லுவாங்கள யாரையும் வீட்டுக்குள்ள விடாத அவங்களாம் நமக்கு இணையா இல்லைன்னு"

"ஆமா.."

"அது தான் தீண்டாமைன்னு சொல்லுவாங்க."

"புரியலம்மா."

"எல்லோரையும் நம்ப சமமா பார்க்கணும், நம்ப பெரியவிங்க, அவங்க சின்னவீங்கன்னு எதுமே இங்க இல்ல, எல்லோருமே ஒன்னு தான்,  ஆனா அது புரியாம உன் ஆயா சொல்றாங்கல அதுதான் தப்பு. மக்கள் எல்லோரும் ஒன்னு தான்.நம்ப பெரியவீங்க நிலாப் பாப்பா வீடு நம்பள விட கீழே இருக்காங்கனன்னு வீட்டுக்குள்ள விடக்கூடாதுன்னு இன்னைக்கு ஆர்ப்பாட்டம் செஞ்சாங்கள அதுதான் தீண்டாமைன்னு சொல்றாங்க.அந்தக் காலத்துல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலை செஞ்சாங்க. அப்படி பிரிச்சி செஞ்சா எல்லாவேலையும் சீக்கிரம் நடக்கும்னு செய்ய ஆரம்பிச்சது,  அவங்க என்ன வேலை செஞ்சாங்களோ அதையே பிரிவா சொல்லி பெரிய வேலை செஞ்சவீங்க பெரியவீங்கணும்  சின்ன வேலை செய்ஞ்சவீங்களே தீண்டதாகவர்களும்னு சொன்னாங்க."

"எனக்கு புரியலம்மா"

"உனக்கு புரியற வயசும் இல்லைடா கண்ணா,  பெரிய வயசானதும் இந்த சமுதாயமே உனக்கு கத்துக் கொடுத்துடும், அப்போ அம்மா சொன்னதை மட்டும் மனசுல வெச்சிக்கோ  எல்லோரும் எல்லோருக்கும் சமம்ன்னு அதுப் போதும்,"  என்றார்.

யுகிக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் "ம்ம் சரிம்மா" என்றான்.

அவன் சரி என்று அடுத்தப் பாடத்திற்கு சென்றாலும், மணிமேகலையால் அவன் கேள்வியில்  இருந்து வெளி வர முடியவில்லை.

இந்த சமுதாயத்தில் எத்தனை எத்தனை பாகுபாடுகள். குழந்தைகளாக இருக்கும் போதே  அவர்கள் மனதில்  ஜாதி மதம் என்ற நஞ்சை விதைத்து விடுகிறார்கள்.

எங்கிருந்து வந்தது இந்த தீண்டாமை,  இவன் தான் பெரியவன், இவன் தான் சிறியவன் என  அந்த கடவுள் சொன்னாரா?,மனிதர்களாகவே ஒன்றை முடிவு செய்து தன்னை தானே பெரியவன் என்று சொல்லிக் கொண்ட கூட்டம் இது.

மணிமேகலை சிறுவயதில் இருக்கும் போது கோவிலில் ஒரு சார் மக்களை மட்டும் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்திருக்க அப்போது தோன்றிய கேள்வி இது. ஏன் ஏன் ஏன் என்று. கேட்டால் நீ சின்னப்புள்ள உனக்கு சொன்னாலும் புரியாது என விளக்கம் அளிக்க மறுத்துவிடுவார்கள் ,80 களில்  பெரிதாக பெண் பிள்ளைகளை பேசவிட்டதில்லை அப்படி பேசவிட்டிருந்தால் கண்டிப்பாக பாரதி கண்ட புதுமை பெண்ணாக வந்திருப்பார் மணிமேகலை. இன்றும் ஆசிரியராக இருக்கிறார் தான் ஆனால் வீட்டில அவர் நினைத்ததைப் பேசிவிட முடியாது.


அன்று இரவு தூங்கும் போது  மணிமேகலை  தன் அருகில் படுத்திருக்கும் மகளையும் சின்ன மகனையும் பார்த்துவிட்டு தன்னை விட்டு தள்ளி  மாமியாருடன் படுத்தியிருக்கும் பெரிய மகனை ஏக்கமாகப் பார்த்தார்.

10 வயதாகிவிட்டது இப்பது வரையிலும்  தன்னுடன் பெரிய ஒட்டுதல் ஏற்படவில்லை, அவனே வந்து தன்னுடன் இருக்க ஆசைப்பட்டாலும்  கிருஷ்ணம்மாள் அதற்கு விடுவதில்லை  என தினமும் மகனை நினைத்துக் கவலைக் கொள்வார் மணிமேகலை. இப்போதும் அதேக்கவலை தான்.

சின்ன மகனுக்கு சொல்லிக் குடுத்ததைப் போல பெரிய மகனுக்கு சொல்லிக் கொடுத்து நல்வழிப் படுத்த வேண்டும் என ஆசை தான்,   இந்த வீட்டில் அது கனவில் மட்டும் தான் நடக்கும் என்பதால் பெருமூச்சு ஒன்றை மட்டும் வெளியிட்டார்.

இரவு  முழுவதும் மகனை நினைத்தே தூக்கத்தை விரட்டிவிட்டார்.

மழை பெய்ததால் இன்று  அவர் வேலை செய்யும் அரசாங்கப் பள்ளிக்கு விடுமுறை விட்டிருந்தனர்,  நாளை திரும்ப பள்ளிக்கு செல்ல வேண்டும்.

இரண்டு மகனையும் கிளம்பி தானும் கிளம்புவதுக் கூட பெரிய விஷயமில்லை தான் ஆனால் பள்ளி செல்லாத மகளை மாமியாரிடம் விட்டுச் செல்ல வேண்டுமே என்ற கவலையும் சேர்ந்துக் கொள்ள உறக்கம் கண்ணை தழுவாமல் விளையாட்டுக் காட்டியது.

இந்த வருடம் ஷாலினி பள்ளி சென்றிருக்க வேண்டும்,வாய் சரியாக பேச வராததால் அடுத்த வருடம் சேர்த்திக் கொள்ளலாம் என விட்டுவிட்டனர் 

விடியற்காலையில் தான் கண்ணுறங்கினார்.

"வள்ளு அம்மா சோறு வெச்சி கத்திரிக்கா புளிக் குழம்பு வெச்சிருக்கேன்,மறக்காம சாப்புட்டுபோய்யா"

"சரிம்மா நீ பார்த்து போ, சாப்பாடு எடுத்துகிட்டியா?".

"ம்ம் எடுத்துகிட்டேய்யா, நீ பாப்பாவை ஆயா வீட்டுல விட்டுட்டு சாப்பாடு குடுத்துட்டு போய்டு சரியா?" என கேட்டுக்கொண்டே ராஜி தன் உணவு பாத்திரங்களையும் தலைக்கு கட்டும் துணியையும் பையில் எடுத்து வைத்தார்.

"சரிம்மா" என்றவன் பள்ளிப் பாடப் புத்தகத்தை மஞ்சப்பையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

"நேத்து லீவுன்னு வீட்டுல தானேயா இருந்த"

"ம்ம்"

"அப்போ இந்த பையை துவைச்சுப் போட வேண்டியது தானே பாரு அழுக்கா இருக்கற மாதிரி இருக்கு"

"இன்னைக்கு வந்து கசக்கிப் போட்டறேன்ம்மா நீ சீக்கிரம்  கிளம்பு இல்லனா வேகுவேகுன்னு நடப்ப".

"சரிய்யா" என்றவர் வயர்கூடையில் சாப்பாடும்,கோக்ககோலா 2 லிட்டர் பாட்டளில் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு சிட்டால் வேலைக்குக் கிளம்பினார்.

அவர் போனதும் நிலாவைத் தூக்கிக் கொண்டு கிருஷ்ணம்மாளிடம் சென்றான் வளவன்.

"ஆயா.."

"ம்ம்"

"பாப்பாவை விட்டுட்டுப் போறேன் இதுல பாப்பாவுக்கு தண்ணி சோறு எல்லாம் இருக்கு."

"ம்ம் அந்த திண்ணையில விட்டுட்டுப் போ",  என உள்ளே இருந்து கிருஷ்ணம்மாளின் குரல் கேக்க. அழும் நிலாவை திண்ணையில் விட்டவன்.

"அம்மு அழக் கூடாது அண்ணா ஸ்கூல் போய்ட்டு வந்துடுவேன் அழாதம்மு" என்றவனுக்கு தங்கையை விட்டு செல்லவே மனம் இல்லை.

அந்தநான்கு வயது குழந்தைக்கு என்ன தெரிந்ததோ அண்ணனின் முகம் வாடவும் சட்டென்று தன் அழுகையை நிறுத்தி விட்டு அண்ணனைப் பார்த்தது.

கிருஷ்ணம்மாள் உள்ளே இருந்து பார்க்கும் போது வளவன் தெரிய.. வெளியே வந்தவர்

"இன்னும் நீ போகலையாடா" என்றார் வேகமாக.

"போறேன் ஆயா." என்றவன் நிலாவை திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றான்.

"நிலா."

"ஆயா"

"சோறு தின்னியா?"

"ம்ம்"

"சரி உக்கார்ந்து இரு கொஞ்ச நேரத்துல மாடு ஓட்டிட்டு போலாம் சரியா."

"ம்ம்" என்றவள் அங்கு விளையாட்டு பொருட்களுடன் விளையாடிக் கொண்டிருந்த  நந்தனின் தங்கையைப் பார்த்தாள்.

குழந்தைக்குள் என்றுமே பாகுப்பாடு கிடையாதே. நேற்று கிருஷ்ணம்மாள் கோவமாக நடந்துக் கொண்டாலும் அதை மறந்து நிலா இன்று அவர்களுடன் இருந்துக்கொண்டாள்.

ராஜியின் கணவன் ஒரு  பொறுப்பற்ற கணவன்,  பொறுப்பற்ற தந்தை, வெளியூருக்கு வேலைக்குச் சென்றால் ஆறு மாதம் ஆனாலும் வீட்டிற்கு வரமாட்டார் , வேலை செய்யும் பணத்தை வீட்டிற்கும் கொடுக்க மாட்டார், ஊதாரி தனமாக செலவு செய்துவிட்டு வீட்டிற்கு வரும் போது பிள்ளைகளுக்கு இரண்டு பிஸ்கட் பாக்கெட்டை கையில் பிடித்துக்கொண்டு வரும் ரகம்,

பொறுத்துப் பார்த்த ராஜி. பிள்ளைங்களை நன்றாக வளர்க்க வேண்டுமென்றால் வேலைக்குச் சென்றால் தான் ஆகும் என சிட்டால் வேலைக்குச் சென்றார். இப்போது சிட்டால் வேலைக்கு ஒருநாளுக்கு 500 வரை கிடைத்தாலும் இருபத்தைந்து வருடங்களுக்கு  முன்பு சம்பளம் மிகவும் குறைவு தான்.

அதை வைத்து தான் பிள்ளைகளின் தேவையைப் பூர்த்தி செய்வார்.

வளவன் அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான், காலை உணவு வீட்டில் சாப்பிட்டு சென்றால் மதிய உணவு பள்ளியில் சாப்பிட்டுக் கொள்வான். பாடப்புத்தகம், சீருடை, செருப்பு முதல் கொண்டு அனைத்தும் பள்ளியில் தருவதால் வளவனைப் படிக்க வைப்பதில் ராஜிக்கு சிரமம் இருக்கவில்லை. அதையும் தாண்டி தான் படிக்காததால் தான் இந்த நிலைமையில் இருக்கிறோம் தன் மக்களையும் அந்த நிலைக்கு தள்ளிவிடக்கூடாது என்பதில் ராஜி உறுதியாக இருந்ததால் எவ்வளவு பாடுபட்டாலும் தன் மக்களை படிக்க வைத்துவிட வேண்டும் என  வெறி இருந்தது அவரிடம்.

வேலைக்கு செல்வதால் நிலாவை என்ன செய்வது என தடுமாறிக் கொண்டிருக்கும் போது கிருஷ்ணம்மாளாக தான் முன் வந்து

"எதுக்கு இத்தனை சிரமமப்படறவ சோத்தைக் கொண்டுவந்து குடுத்துட்டு போனா நான் பார்த்துக்கப் போறேன்"

"உங்களுக்கு எதுக்கும்மா சிரமம்?"

"எனக்கு என்ன சிரமம் இது?, நான் போற இடத்துக்கு வந்துட்டுப் போகுது, இதுக்குன்னு தனியாவா தூக்கி சுமக்கப் போறேன்", என ராஜிப் படும் கஷ்டத்தைப் பார்த்துவிட்டு சொல்ல, ராஜிக்கும் வேறு வழி தெரியவில்லை அதனால் கிருஷ்ணம்மாளிடம் விட்டு வேலைக்குச் செல்லத் தொடங்கினார்.

நிலா வீட்டின் உள்ளே துள்ளி விளையாடிக் கொண்டிருப்பாள்,கிருஷ்ணம்மாள் போகும் இடமெல்லாம் நிலா பின்னாடியே போவாள். அவர் மாடு மேய்க்கப் போனாலும் அங்கும் போவாள், தட்டு அறுக்கப்போனாலும் அங்கும் போவாள்.

கிருஷ்ணம்மாளின் கணவர் கிருஷ்ணமூர்த்திக் கூட கிண்டல் செய்வார்.

"உன்னோட பேரப்புள்ளைங்கள விட நிலா தான் உன் பின்னாலையே சுத்துவா போல.." என்று.

முதலில் அதெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத கிருஷ்ணமாளுக்கு நிலாவை வைத்து வளவனும் உள்ளே வர ஆரம்பிக்க, கொஞ்சம் நெருடலாக படத்தொடங்கியது.

அதற்கு தூபம் போடுவதுப் போல் அக்கம் பக்கம் இருக்கும் கிருஷ்ணம்மாளின் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

"நானலாம் உள்ளையே விடமாட்டேன் அப்புறம் இதுவே வழக்கமா போய்டும், இடத்தைக் குடுத்தா மடத்தைப் பிடிக்கற மாதிரி நம்பலையே வெளியே தள்ளிடுவாங்க, அவ வேற புருஷன் கூட இல்லாம இருக்கறான் நாளைக்கு உன் புள்ளையையே வளைச்சிப் போட்டாலும் சொல்றதுக்கில்ல பார்த்துக்கோ" என ஆள் ஆளுக்கு ஒரு  யோசனை சொல்ல கிருஷ்ணம்மாளின் மனம் கலங்க செய்தது.

"உண்மைதானோ, அப்படியும் நடந்துடுமோ" என்று யோசிக்கத் தொடங்க அதன்விளைவு பிரிவை  சொல்லி வீட்டின் உள்ளே விட மறுத்தார். "நீங்களெல்லாம் எங்களுக்கு கீழ தான்", என நித்தமும் அவருக்கு அவரே சொல்லிக் கொள்வது போல அனைவரின் மனதிலும் ஆழப்பதிய வைத்தார்.

இதனால் ராஜிக் கூட அவர்கள் வீட்டிற்கு செல்வதை தவிர்க்க ஆரம்பிக்க, ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்றால் மட்டும் கிருஷ்ணம்மாளே வலிய வந்து ராஜியை அழைத்துச் செல்வார்.

இப்போதும் நிலா வெளியே திண்ணையில் அமர்ந்திருக்க, அவள் அருகில் வந்து காலை பிடித்து இழுத்தாள் ஷாலினி.

"அக்கா" என நிலா ஷாலினி அருகில் இறங்க 

"நிலா" என்றார் கிருஷ்ணம்மாள் அழைத்தார்.

"ஆயா".

"பாப்பாக்கூட விளையாடு நான் சாப்பிட்டு வரேன் மாடு ஓடிட்டுப் போலாம்"

"ம்ம்" என்று ஷாலினியிடம் இருந்த விளையாட்டுப் பொருள்களை ஆசையாகத் தொட்டுப்பார்த்தாள்.

ஜேசிபி, டிரக், கார் எல்லாம் தனக்கு  எட்டாத விளையாட்டுப் பொருட்கள் என தடவிப் பார்க்க, தன்னைச் சுற்றி நிறைய விளையாட்டுப் பொருட்கள் இருந்தும் ஷாலினிக்கு அவற்றை அனைத்தையும் தாண்டி நிலா தான் பொம்மைப் போல் தெரிந்தாள்.

அதனால் முடியை பிடித்து இழுப்பதும் கன்னத்தைக் கடித்து வைப்பதுமாக ஷாலினி நிலாவைப் போட்டு படுத்தி எடுக்க ஒரு அளவிற்கு மேல் தாங்க முடியாமல் அழ ஆரம்பித்துவிட்டாள் நிலா.

"ஏய் ஏண்டி அழற"

"அக்கா கடிச்சி"..

"பாப்பா கடிச்சிடுச்சா"

"ஆமா ஆயா".

"அதுக்கு எதுக்கு இந்த அளவுக்கு தொறக்கர. இங்க இந்தா பாப்பா கடிக்கவும் செய்யும்  உதைக்கணும் செய்யும் என கோவமாக உள்ளே இருந்து சொல்ல.. நிலாவிற்கு பாதி புரிந்து புரியாமலும் இருந்தது.

சாப்பிட்டு வந்தவர் ஷாலினியை தூங்க வைத்துவிட்டு தன் கணவரிடம் பார்த்துக் கொள்ள சொல்லியவர்,"வா போலாம்" என நிலாவிடம் வந்தார்.

அவளும் கையில் தண்ணீர் பாட்டலுடன் கிருஷ்ணம்மாளின் பின்னால் சென்றாள். இரண்டு எருமை மாடுடன் அவர் முன்னே சென்றார்.

நிலா பள்ளி செல்லும் வரை இதுதான் வழக்கமானது.

மணிமேகலை அரசுப் பள்ளி ஆசிரியர், ஆனால் அவரது மகன்கள் படிப்பதோ தனியார் பள்ளியில் என்பதால் 

வளவன் பள்ளிவிட்டு வருவதற்கு முன்பே நந்தனும் யுகியும் வந்துவிடுவார்கள்.

வளவனின் பள்ளி வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது, அதே பள்ளியில் தான் மணிமேகலையும் ஆசிரியராக பணியாற்றினார். அதனால்  தன் வண்டியில்லையே தினமும் வளவனை அழைத்துச் செல்வார்.

இவ்வளவு நாளும் ஒண்ணுக்குள் ஒன்றாக இருந்தவர்கள் தான், இரண்டு வருடங்களுக்கு முன்பு எப்போது வெளியாட்கள் ராஜியையும் மார்த்தாண்டத்தையும் தவறாக பேச ஆரம்பித்தார்களோ அப்போதே ராஜியும்  அங்குச் செல்வதை நிறுத்திக் கொண்டார். கிருஷ்ணம்மாளும் தன் குணத்தை காட்டத் தொடங்கினார். இதனால் பிள்ளைங்களில் மனதில் தான்  வேதனையும் நஞ்சும்  சரிப் பாதியாக கலந்தது.

நந்தன் யுகியின் பள்ளிப் பேருந்து  மெயின் ரோட்டிற்கு தான் வரும் அங்கிருந்து கிருஷ்ணமூர்த்தி தான் அழைத்து வருவார்.

யுகி தாத்தாவின் கையைப் பிடித்துக்கொண்டு மெதுவாக வர அவரிடம் பையைக் கொடுத்துவிட்டு வேகமாக வீட்டிற்கு ஓடி வந்தான் நந்தன்.

திண்ணையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த நிலாவைப் பார்த்ததும்  நின்றவன் அவள் தலையில்லையே நங்கென்று கொட்டியவன்..

"கீழே உக்காருடி உனக்கு திண்ணைக் கேக்குதா?"  என மீண்டும் நிலாவின் முதுகில் அடிக்க

வலி தாங்காமல் வீல் என அழுதாள் நிலா.

"ஏய் இப்போ எதுக்கு அழற.. அடிச்சி மூஞ்சை உடைச்சிருவேன்" என ரவுடியாக மிரட்ட அவனின் மிரட்டலில் மழுங்க மழுங்க விழித்தாள் நிலா.

"அம்மா.அம்மா.. அம்மா வேணும்"

"உங்க அம்மாவை  என்ன நான் பாக்கெட்டுல வெச்சிருக்கேன் இறக்கி விட" என பெரியவர்கள் பேசுவதைப் பார்த்து உள்வாங்கியிருந்த நந்தன் அப்படியே பேசினான்.

அதற்குள் யுகியும் தாத்தாவும் வந்துவிட

"ஆயா" என கிருஷ்ணம்மாளைப் பார்க்க ஓடிவிட்டான் நந்தன்

"ஏன் பூனை அழற?" என ஷூவைக் கழட்டிக் கொண்டே யுகி கேக்க உள்ளே இருந்து நாக்கை கடித்தவாறு ஒற்றை விரல் நீட்டி "சொன்ன மூக்கை அறுத்துடுவேன் சொல்லாத மிரட்டினான்" நந்தன்.

"வலிக்குது,அண்ணா வேணும் அம்மா.. வேணும் "

"இங்க வா நம்ம விளையாடப் போலா" என நிலாவை அங்கிருந்து அழைத்துச் சென்றியிருக்க போகும் இருவரையும் குரோதம்  ததும்பும் விழியுடன் பார்த்திருந்தான் நந்தன்.


Leave a comment


Comments


Related Post