இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -5 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 12-02-2024

Total Views: 35265

நாட்கள் இப்படி தான் சென்றது. நிலாவைப் பார்த்தாலே அடிப்பதும் கொட்டி வைப்பதும் என நந்தன் இருக்க அவனுக்கு நேர் எதிராக நிலா அழுதாலே அரவணைத்துக் கொள்வான் யுகி.

நிலாவிற்கு எட்டு வயதிற்கும்,  வீட்டின் வாசலைக் கூட்டிக் கொண்டிருந்தாள்.

"அம்மா ஹைஸ் கூல்ல நாளைக்கு விளையாட்டுப் போட்டி வைக்கறாங்கம்மா " என்று வந்து நின்றான் வளவன்.

"அதுக்கு என்ன வளவா நீயும் கலந்துக்கணுமா?".

"ம்ம் ஆமா 100 மீட்டர் ஓடறதுக்கு பிடி டீச்சர் ட்ரெயினிங் குடுத்துருக்காங்க"

"அப்போ ஓட வேண்டியது தானே."

"இல்லம்மா அது" என்று தயங்க.

அவன் தயக்கத்தைக் கண்டு "ஏதாவது வேணுமா?" என்றார்.

"ஷூ வாங்கிட்டு வர சொன்னாங்க டீச்சர், அதுக்கு செலவு ஆகும்ல அதான் நான் ஓடலைன்னு சொல்லிட்டேன்".

"அதுக்காக எதுக்குப்பா ஓடலைன்னு சொன்ன, எவ்வளவு வரும்னு சொல்லு  காசு இருக்கான்னு பாப்போம்".

"ஸ்போர்ட்ஸ் ஷூலா ரொம்ப காசு வரும்மா. ஒருநாளுக்கு எதுக்கு காசுப் போட்டு வாங்கணும்."

"அப்போ என்னதான் பண்ணனும்னு சொல்ற.அதையாவது சொல்லுய்யா"

"அது நந்து இல்லனா யுகிது ஏதாவது பழைய ஷூ இருந்தா ஒரு நாள் குடுக்கச் சொல்லுங்கம்மா அதை போட்டுட்டு போய்ட்டு வந்து குடுத்தறேன்".

"அவங்ககிட்டையா?, சரி கேட்டுப் பார்க்கறேன்".

"அம்மா கஷ்டமா இருந்தா வேண்டா."

மகன் தன்னை பற்றி யோசிக்கிறான் என்பதை விட, ஒரு தாயிக்கு வேற என்ன வேண்டும்.

அவன் தலையை கலைத்துவிட்டவர்.

"அதெல்லாம் ஒன்னுமில்லய்யா கேட்டுப்பார்க்கறேன்"

"ம்ம்" என்றவன் வாசலில் விளையாட சென்று விட்டான்.

தன் வேலையை முடித்துக் கொண்டு நந்தனின் வீட்டிற்குச் சென்றார்.

"மணிக்கா"

"வா ராஜி."

"எங்க அம்மா இல்லையா?"

"அவங்க நந்துவையும் யுகியையும் கூட்டிட்டு அந்த சாந்தா வீட்டு பிள்ளையோட பிறந்தநாளுக்கு போயிருக்காங்க சும்மா கேக் வெட்டறதுக்கு எதுக்கு போகணும்ன்னு சொன்னா யார் கேக்கறா, நந்து போகணும்னு அடம்பிடிச்சான்னு கூட்டிட்டு போயிருக்காங்க.சரி சொல்லு எதுக்கு கூப்பிட்ட.?"

"அது."

"தயங்காம சொல்லு".

"நாளைக்கு வளவனுக்கு ஓடற போட்டி இருக்காமா, அதுக்கு வெறுங்காலுல ஓட முடியாதுன்னு நந்துது ஏதாவது பழைய சூ இருந்தா வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்க்கா இருக்கா"

"அவனுதா  இருப் பார்க்கறேன்" என போனவர் "பழசு எதுவும் இல்லை ராஜி, புதுசு தான் இருக்கு நாளைக்கு அவனுக்கு   வெள்ளை சூ தானே போட்டுட்டுப் போவான், கருப்பு சூ இருக்கு அத எடுத்துப் போய் போட்டுட்டு வந்து குடுக்கச் சொல்லு"

"ஐயோ புதுசா வேண்டா மணிக்கா வளவன் இதைக் கேக்கவே தயங்கி தயங்கி நின்னான். புதுசுன்னா வேண்டாம்னு சொல்லிடுவான்".

"அதுக்குன்னு வெறுங்கால்ல ஓடச் சொல்றியா புடி அவன் அடம்பிடிச்சா நீதான் சொல்லிப் புரிய வைக்கணும் நீயே அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க"  என அதட்டி ராஜியின் கையில் ஷூவைக் கொடுக்க.

"நந்து தம்பி வந்தா சண்டை போடுமே " என தயங்கி நின்றார்.

"அவன் வந்தா ஷூ எங்கன்னு தான் கேக்கப் போறானாக்கும், போ ரஜி எல்லாம் ஓவரா தான் அவனுக்கு பயப்படறிங்க," என சொல்ல வேறு வழியின்றி ஷூவை வாங்கி வந்தார்.

"வளவா, நந்து ஷூ குடுத்துருக்காங்க."

"அம்மா அவன் வந்தா திட்டுவான்ம்மா"

"அதெல்லாம் மணி பார்த்துக்கும்! என்றுவிட்டார்.

அடுத்த நாள் நந்தனின் ஷூவைப் போட்டுக் கொண்டு  ஓட்டப் பந்தயத்திற்குச் சென்றான்.

நன்றாக ஓடியதில் இரண்டாவது பரிசு வாங்கினான் வளவன்.

அன்று மாலை ஷூவைக் கொண்டு வந்து கொடுக்கும் போது நிலா மண்டை உடைந்து ரத்தம் போய்க் கொண்டிருந்தது.

கிருஷ்ணமூர்த்தி  நிலாவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓட. வளவனை அவருடன் போக விடாமல் பிடித்துக்கொண்டார் கிருஷ்ணம்மாள்.

"பாப்பாக்கு என்னாச்சு? ஏன் ரத்தம் வருது பாப்பா பாப்பா நானும் அம்மு கூட நானும் போறேன் என்று வளவனும், யுகியும் அழுதனர் நந்தன்  ஒரு மூளையில் குறுகி நின்றிருந்தான்.

"வாங்கிட்டு போனவனை பேசாம, அந்த புள்ளையை அடிச்சி மண்டையை உடைச்சிருக்க என்ன நந்தா இது, உங்கம்மா வந்தா ஆடு ஆடுன்னு ஆடுவா, ஒன்னு கெடக்க ஒன்னு ஆகியிருந்தா என்னத்துக்கு ஆகறது?, தலையில் பட்ட கல்லு கண்ணுல பட்டுருந்தா அவ குருடியால சுத்திட்டு திரிஞ்சிருப்பா அந்த பாவம் நமக்கு எதுக்கு நந்தா? நீ பண்ணது தப்பு தானே,உங்கப்பனே உன்னை அடிச்சிக் கொன்னுடுவான் இதெல்லாம் தேவையா?" என பாட்டாக பாடிக் கொண்டிருக்க, நந்தன் தான் எதோ செய்திருக்கிறான் என புரிந்து போனது வளவனுக்கு.

ஆமாம் நந்தன் தான் நிலாவின்  தலையில் கல்லெறிந்து காயப்படுத்திருந்தான்.

தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் நிலா, மணிமேகலையுடன் பள்ளிச் சென்று வந்துக் கொண்டிருந்தாள்.

இன்றும் அதேபோல் பள்ளிச் சென்று வந்தவளை ஆள் இல்லாத வீட்டில் தனியாக இருப்பதற்கு பதில் தன் வீட்டில் இருக்கட்டும் என மணி  நிலாவை தன் வீட்டில் இறக்கிவிட்டு பக்கத்து ஊரில்  வாக்காளர் பட்டியலை சரிப்பார்க்கச் சென்று விட.

திண்ணையில் அமர்ந்து பள்ளிப் பாடத்தை எடுத்து எழுதிக் கொண்டிருந்த நிலாவின் அருகில் வந்து நின்றான் நந்தன்.

"ஏய்.."

"ம்ம்"

"என்னோட ஷூவை உன்னோட அண்ணன் எடுத்துட்டுப் போனானா?" என பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டு கேட்டான்.

காலையில்  வெள்ளை ஷூப் போடும் போதே கருப்பு ஷூ இல்லாததைப் பார்த்துவிட்டான் நந்தன்.

"அம்மா என்னோட பிளாக் ஷூ எங்க?" என்று கேட்டதுமே மணிமேகலைக்கு பக்கென்று இருந்தது.

"பெரிய தம்பி".

"அம்மா உங்ககிட்ட தான் கேக்கறேன் என்னோட ஷூ எங்க.?"

"அது தம்பி".

"அப்போ உங்களுக்கு தெரியும்ல சொல்லுங்க" என வீடே அதிரக் கத்தினான்.

"ம்ம் வளவனுக்கு ஸ்கூல்ல இன்னிக்கு ரன்னிங் ரேஸ் இருக்கா" என்று வார்த்தைகளை மென்று முழுங்கிக் கொண்டே சொல்ல.

"அதுக்குன்னு என் ஷூவை குடுத்தீங்களா?"

"ஒருநாளுக்கு தானே தம்பி, பாவம் வளவனால வெறுங்கால்ல ஓட முடியாதுல" என  முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொல்ல.

"நந்து ஸ்கூல் வேன் வந்துடும் சீக்கிரம் ஷூ போட்டுட்டு வா உங்களை விட்டுட்டு நான் கடைக்கு போகணும்" என மார்த்தாண்டம் வண்டியில் ஏறி அமர்ந்துக் கொண்டு கத்தவும் வேறு வழியின்றி 

கோவத்தை யார் மீது காட்டுவது என்ன தெரியாமல் அங்கிருந்த பக்கெட்டின் மீது காட்டி அதை உதைத்து விட்டுச் சென்றான்.

இப்போது நிலாவைப் பார்த்ததும் காலையில் நடந்தது நினைவுக்கு வந்துவிட, அந்தக் கோவத்தை அவள் மீது காட்டச் சென்றான்.

"எனக்கு தெரியாது."

உண்மையாலுமே  ராஜி மணியிடம் ஷூவைக் கேட்டது நிலாவிற்கு தெரியாது  தெரிந்திருந்தால் அதற்கான பதிலை சொல்லிருப்பாள்.

"என்னடி தெரியாது உன்னோட அண்ணா ஷூ போட்டுட்டு போகும் போது நீ பார்க்கல, இதை நான் நம்பனும் ம்ம்" என  நிலாவின் தலையில் கொட்ட.

"எனக்கு உண்மையாவே தெரியாது" என்று அவனிடம் சிக்காமல் ஓடிப் பார்த்தாள்.

"ஏய் ஒழுங்கா நில்லு, இல்லை கல்லூ கொண்டு அடிச்சி மண்டையை உடைச்சிருவேன்" என கையில் கல்லை எடுத்து வைத்துக் கொண்டு மிரட்ட. பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் நந்தனை விட்டு விலகி ஓடினாள் நிலா.

அவள் ஓட ஓட இங்கு நந்தனுக்கு வெறி ஏறியது, அவளைத் துரத்திக் கொண்டு இவனும் ஓட

"டேய் நிலாவை அடிச்சி வெச்சிடாத நந்து, சொன்னாக் கேளு, நீ கம்முனு இல்லனா அப்பா வந்தா நீ பண்றதை சொல்லி வெச்சிடுவேன்" என யுகி நந்தனை துரத்திக் கொண்டு ஓடினான்.

அதற்குள் நந்தன் நிலாவைப் பார்த்து கல் எறிய,  நந்தன் வருகிறானா என திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே ஓடிய நிலவின் முன் நெற்றியில் வந்து விழுந்தது நந்தன் எறிந்த கல்.

"ஆஆஆஆ அம்மா அம்மா. அண்ணா,அம்மா ஆஆஆஆ வலிக்குது ஐயோ ரத்தம் ரத்தம்" என நிலா வீல் வீல் என கதற  அவளின் அழுகையில் அப்படியே நின்று விட்டான் நந்தன்.


Leave a comment


Comments


Related Post