இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 1 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 14-02-2024

Total Views: 32446

“அபி... அபி இங்க கொஞ்சம் வாயேன்..” என்று திடீரென்று முன்னப்பின்ன தெரியாத ஒரு பெண்மணி தன் பெயரை கூறியழைக்க சுற்றும் முற்றும் விழித்து பார்த்தாள் அபிலாஷா...

“என்ன ஆன்டி.. எதுக்காக என்னை கூப்பிட்டீங்க?” என்று அவள் அருகில் வந்து கேட்க

“உன்னை யாருமா கூப்பிட்டது? நான் உன்னை கூப்பிடலையே…” என்று கையை விரிக்க

“இல்ல இப்போ அபினு கூப்பிட்டீங்களே.. அது என் பெயர் தான் ஆன்டி....” என்றிட

“ஓ... மன்னிச்சிக்கோமா... என் பையன் பெயர் கூட அபிதான்.. அபிநந்தன் அதோ அங்கே ஃபோன் பேசிட்டு இருக்கான் பாரு....  அவனைதான் கூப்பிட்டேன்.” என்று அந்த பெண்மணி கூற “ஓ…” என்று திரும்பி தான் நின்றிருந்த இடத்தை கடந்து பார்க்க ஓர் இளைஞன். 

வாட்டசாட்மாக ஆறடிக்கு வளர்ந்திருந்தான்… இதழ்கடையில் பூத்த புன்னகை மலர அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தவனை பார்த்து இவளுக்கும் அவன் புன்னகை தொற்றிக் கொண்டது.

“அம்மா… அண்ணாவ எப்போவும் நந்துனு தானே கூப்பிடுவ திடீர்னு நீ அபினு கூப்பிட்டதும் அண்ணாக்கு கேட்கலை பட் அபினு பெயர் வைச்சிருக்க இவங்களுக்கு கேட்டிருச்சு போல..” அந்த பெண்மணி அருகில் நின்றிருந்த இளம்பெண் அவரின் மகளாக இருக்க வேண்டும்.. என்று யூகித்து கொண்டாள் அபி


“ஹேய் அபி அங்க யார்கூடடி பேசிட்டு இருக்க வா டைம் ஆகுது…” அபிலாஷா உடன் வந்திருந்த தோழி அழைக்க இன்னும் அபிநந்ததன் பக்கம் இருந்த பார்வையை விலக்கிக் கொள்ளாமல் தோழிகளிடம் சென்றாள் அவள். 

எப்போதும் நகைகள் மீது அதிக ஆர்வம் இல்லாத அபிலாஷா தோழியரின் வற்புறுத்தலுக்காக வந்தவளுக்கு இப்போதும் நாட்டமில்லை தான்.. ஆனால் தன் தங்கைக்காக அரைப்பவுனாக இருந்தாலும் தங்கையின் முகவெட்டுக்கு பொருந்தும் விதத்தில் இருக்கிறதா என்று அலசி ஆராயும் பாசக்கார அண்ணன் மீது ஏனோ ஒரு ஆர்வம் அபிலாஷாவிற்கு…

“டேய் நந்தா!! நகைச்சீட்டு போட்ட பணம் ஒரு பவுனுக்கு தானடா வரும் இவளுக்கு அதுக்குள்ள எதாவது நகை பார்க்கலாம்… நீபாட்டுக்கு அரைப்பவுன் கம்மல் இரண்டு பவுன் செயின்னு எடுத்தா உன்னோட பட்ஜட்ல தான் துண்டு விழும்..” என்று தாய் பார்வதி அறிவுரை சொல்ல அண்ணன் வாங்கி தருகிறேன் என்று கூறிய செயின் தனக்கு கிடைக்காமல் போகுமோ என்று முகத்தை சுருக்கினாள் அபிநந்தனின் தங்கை அக்சயா..

“அம்மா!! அப்படி ஒன்னும் பெருசா இல்லமா இத்தனை நாள் நான் ஸ்பான்சர்ல படிச்சேன் நீ கார்மண்ட்ஸ்ல வேலை பார்த்து குடும்பத்தை சிக்கனமா பார்த்துக்கிட்ட அதனால எனக்கு வேலை கிடைச்சும் என் சம்பளம் சேவிங்க்ஸ்ல தானே இருந்தது… அதனால எல்லாம் பார்த்துக்கலாம் அம்மா… அச்சு… உனக்கு பிடிச்ச டிசைன் எடு… ஒன்னு ரெண்டு கிராம் கூடினாலும் பரவாயில்லை…” என்று அன்பொழுக பேசியவனை ஆச்சரியமாக பார்த்தாள் அபிலாஷா… 

ஆம், வசதியில் குறைச்சல் இருந்தாலும் பாசத்தை வாரிவழங்கும் ஒரு ஆண்மகனை… ஏன் மனிதப்பிறவியையே இப்போது தான் காண்கிறாள்… அவளைப் பொறுத்தவரை பணம் மட்டுமே ஒருவரின் முக்கியத்துவத்தை கணிக்கிறது… அவளைச் சுற்றி உள்ள உறவுகள் கற்றுக் கொடுத்தது அதைத்தான்.

“ஏய் என்னப்பா இங்க எனக்கு ஜூவல் சூஸ் பண்ண சொன்னா நீ எங்கேயோ வேடிக்கை பார்த்துட்டு இருக்க…” என்று அவளின் தோழி அவள் விழி செல்லும் வழியில் தேட அபிநந்தனை கண்ட தோழி “ஓ… பரவாயில்லை பையன் பார்க்க கொஞ்சம்… இல்ல அதிகமாவே ஸ்மார்ட்டா தான் இருக்கான்..‌ அதான் நீ அவனை சைட் அடிக்கிறியா?” என்று அபிலாஷாவை கேலி செய்ய

“ஸ்மார்ட் மட்டும் இல்ல.. ரொம்ப கேரிங் கூட.. ஏன் ஜெனி இந்த காலத்துல இந்தமாதிரி கேரிங்கா இருக்க பசங்க இருக்காங்களா?” அவள் வியக்க

“எந்த காலத்துலயும் இருப்பாங்க அபி.. அது அவங்க குடும்ப சூழல் அவங்களோட வளர்ப்புனு நிறைய காரணங்கள் இருக்கு…” என்று பதிலளித்தாள் இன்னொரு தோழி பவித்ரா. இவளின் தோழி பட்டாளத்தில் கொஞ்சம் மேல்தட்டு நடுத்தர வர்க்கம் பவித்ரா மட்டும் தான்.. அதுவும் கூட பள்ளியில் ஒருமுறை திடீரென பவித்ரா வீட்டிற்கு அபி சென்றிருக்க வீட்டில் இருந்ததை கொண்டு அவளின் தாய் சமைத்து அன்போடு பரிமாறிட அந்த அன்பில் விழுந்து மற்ற தோழிகளை விட அதிக நெருக்கம் காட்டினாள் பவித்ராவிடம்…

“ஜெனி உனக்கு இந்த நெக்லஸ் செட் சூப்பரா இருக்கும். உனக்கு ஓகேவா பாரு…” தோழி செலக்ட் செய்து வைத்திருந்த பல நகைகளில் ஒன்றை எடுத்து கொடுக்க

“இதுக்கு தான் அபி வேணும்னு சொல்றது… பாரு ஒருமணி நேரமா எதை சூஸ் பண்றதுனு தெரியாம குழம்பிட்டு இருந்தா ஒரு நிமிஷத்துல செலக்ட் பண்ணிட்டா பாரு…” என்று புகழாரம் சூட்டினாள் ஜெனி.

அதெல்லாம் அபி காதில் எங்கே விழுந்தது. தங்கைக்கு கம்மல் வாங்கி விட்டு இரண்டு பவுன் செய்ன் என்று சொல்லியிருக்க இரண்டரை பவுனுக்கு ஒரு செய்னை அக்சயா பிடித்திருக்கு என்று கூற வேண்டாம் என்று மறுத்த தாயை சமாதானம் செய்ய போராடிக் கொண்டு இருந்த அபிநந்தனை ரசித்துக் கொண்டு இருந்தாள் அபிலாஷா.

நகை வாங்கி முடித்த பின்னர் உடை வாங்க சென்றனர் அபிநந்தனின் குடும்பம்… நகை வாங்கி முடித்த நண்பிகள் இவளை அழைக்க “ஜெனி.. நீ பவியை ட்ராப் பண்ணிடு… எனக்கு ஒரு வேலை இருக்கு” என்று அபி இவர்களிடம் இருந்து கழற முயற்சிக்க

“ஹேய் ஜெனி இவளை தேவையில்லாத வேலை பார்க்காம ஒழுங்கா வீட்டுக்கு வரச்சொல்லு இல்லைன்னா நான் அம்மாகிட்ட சொல்ல வேண்டி வரும்…” தோழி தவறான பாதையில் சென்றிடுவாளோ என்ற அக்கறையில் பவி எச்சரிக்க

“நான் தேவையில்லாத வேலை எதுவும் செய்யலை பவி… ஜஸ்ட் இன்னைக்கு கொஞ்சம் ஃப்ரீயா இருக்கேன் கொஞ்சம் வெளியே சுத்தி டைம் பாஸ் பண்ணலாமேனு தான்… உன்னை இன்னும் ரெண்டு நாள்ல பொண்ணு பார்க்க வராங்களாம் வெளியே சுத்துனா ஸ்கின் டேன் ஆகும்னு அம்மா சொன்னாங்க அதனால நீ வீட்டுக்கு கிளம்பு ஜெனி இவளை ட்ராப் பண்ணு…” என்று சொல்லிவிட்டு அபிநந்தன் குடும்பம் செல்லும் ஆட்டோவை தன் காரில் பின்தொடர்ந்தாள் அபிலாஷா.

முதலில் தங்கைக்கான உடைகளை அபிநந்தன் அலசி ஆராய பார்வதி விலையை அலசி ஆராய்த்தார். அக்சயா இரண்டாயிரம் ரூபாயில் ஒரு சுடியை எடுத்து “அண்ணா நெக்ஸ்ட் மந்த் எங்க காலேஜ் ஆனுவல் டே வருது இந்த சுடி அதுக்கு போட்டு போனா நல்லா இருக்கும்ல?” ஆசையாக கேட்க

“இருக்கும்டி இருக்கும்… இரண்டாயிரத்துக்கு துணி வாங்கி என்ன? உன் கல்யாணத்துக்கு கட்டிக்க போறீயா ஒரு புடவை வாங்கினா கூட சரி… கல்யாணத்துக்கு அப்புறம் புருஷன் கூட சேர்ந்து விருந்து கச்சேரினு போகும்போது உடுத்திக்கலாம்…” என்று பார்வதி மகளை கடிந்து கொள்ள முகம் வாடி போனாள் அக்சயா.

“அம்மா… அவ குழந்தை இப்போ தான் இருபது வயசாகுது காலேஜ் போறா… அதுக்குள்ள கல்யாணம் அது இதுன்னு… பாருங்க அச்சு முகம் எப்படி வாடிருச்சுனு…” அபிநந்தன் சொல்ல இருபத்தைந்தை கடந்தும் தன் வீட்டில் இன்னும் தனக்கு திருமண பேச்சை எடுக்கவில்லை அக்கறை கொண்டு பவியின் அம்மா பேசிய போது கூட ‘தங்கள் குடும்ப பெண்ணோடு சொத்தையும் பாதுகாக்கும் ஆண்மகனாக தேடிக் கொண்டு இருக்கிறோம்’ என்று வாய்சவடால் மட்டும் தான் வந்தது. ஆனால் இருபது வயதில் இவளின் கல்யாணம் பற்றி பேசுவது கேட்டு தனக்கும் தாய் இருந்திருந்திருந்தால் இப்படியான அக்கறை கிடைத்திருக்கும் என்று மனதுக்குள் ஏங்கி நின்றாள் அபிலாஷா.

“அச்சு… உனக்கு எது வேணுமோ எடு அம்மா நீங்க வாங்க கொஞ்சம் உட்காரலாம்” என்று தங்கைக்கு ஜாடை காட்டிவிட்டு தாயை அழைத்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்தான் அபிநந்தன்.

ஒவ்வொரு உடையாக தன்மீது வைத்துப் பார்த்தாள் அக்சயா. ஆனாலும் அம்மா அடிக்கடி சொல்வது போல சிறுவயதில் இருந்தே அண்ணன் குடும்பத்திற்காக தன் சுகதுக்கத்தை மறந்து உழைக்கிறானே… அவனின் சேமிப்பில் அடங்கும் விலையாக இருக்க வேண்டும் என்று குறைந்த விலையில் உடைகளை தேட மெரூன் நிறத்தில் மில்லிமீட்டர் அளவு கூட இடம் விடாது அழகான வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு சுடிதார் அக்சயா விழிகளை கொள்ளை கொள்ள எடுத்து தன்மீது வைத்து அங்கிருந்த ஆளுயர கண்ணாடியில் பார்க்க அசந்து போனாள்.

சற்று தொலைவில் இருந்து கவனித்துக் கொண்டு இருந்த அபிலாஷாவிற்கு அக்சயா ஒரு தேவதை போலத்தான் தெரிந்தாள். ஆசையாக அந்த உடையை வருடி விலையை பார்க்க குறைவில்லாமல் நாலாயிரத்தை தொட்டிருக்க அதிர்ந்து போய் அம்மாவின் பக்கம் திரும்பி பார்த்தவள் அந்த உடையை தன் மீது வைத்து ஃபோனில் சில ஃபோட்டோக்களை எடுத்து கொண்டு ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு ஒரு சுடிதாரை எடுத்துக் கொண்டு வர அடுத்த வேண்டாம் என்று கூறிய பார்வதிக்கும் இரண்டு புடவைகளை வாங்கிய அபிநந்தன் “நீங்க வெளியே இருங்கம்மா நான் பில் பே பண்ணி ட்ரெஸ் வாங்கிட்டு வரேன்” என்று அபிநந்தன் சொல்ல பார்வதியும் அக்சயாவும் வெளியே காத்திருந்தனர்.

மீண்டும் உள்ளே சென்ற அபிநந்தன் தன் தங்கை ஆசையாக பார்த்து நினைவாக சேகரித்துக் கொள்ள நிழற்படங்கள் எடுத்துக் கொண்ட ஆடையை தேடி எடுத்து அதற்கும் சேர்த்து பில் போட்டு வாங்கிக் கொண்டான் அபிநந்தன்.

அபிலாஷாவிற்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம்… தானாவது அக்சயாவை அருகில் இருந்து பார்த்தோம்.. ஆனால் இவன் எங்கோ இருந்து கொண்டு தன் தங்கையின் விருப்பம் எப்படி அறிந்தான் என்று…

சொல்லாமலேயே தன் குடும்பத்தை புரிந்து அவர்கள் தேவையை நிறைவேற்றும் ஆண்மகன் அபிநந்தன் அபிலாஷா மனதில் வேரூன்றி போனான்… பர்சேஸ் முடிந்து “ஹோட்டல்ல சாப்பிடலாமா?” என்று அபிநந்தன் கேட்க

“வேண்டாம் நந்தா… வீட்ல நான் சமைச்சுதான் வைச்சுருக்கேன்.” என்று மறுத்து வீட்டிற்கு ஆட்டோவை போகச்சொன்னார் பார்வதி.

இத்தனை நேரம் ஏதோ ஒரு ஆர்வத்தில் இந்த குடும்பத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த அபிலாஷாவிற்கு அவர்கள் செல்லும் போது தானும் அவர்களில் ஒருத்தியாக செல்லவேண்டும் என்று தோன்ற தனக்குள் என்ன நடக்கிறது என்று திகைத்துப் போனவள் நொடியில் தெளிந்து இந்த குடும்பத்தில் தானும் சீக்கிரம் இடம்பெற வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டாள்.

அவனின் புன்னகை இவளுக்கு தொற்றியது போல இவளின் காதல் அவன் மனதை தொட்டுப் பார்க்குமா??

தொடரும்…


Leave a comment


Comments


Related Post