இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு - டீஸர் அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 14-02-2024

Total Views: 33343

கலகலவென சில்லறைகளை சிதறவிட்டதுபோல் சிரித்தபடி ஓடிக் கொண்டிருந்தாள் அவள். தென்னை, வாழை, கரும்பு என்று சுற்றிலும் பசுமையை மட்டுமே சுமந்திருந்த அந்த வனப்பு மிகுந்த தோட்டப்பகுதிக்குள் தாவணியை இழுத்து சொருகி தரையில் வழிந்து விழுந்த பாவாடையை தூக்கிப் பிடித்துக் கொண்டு பாம்பு போன்று நீண்டிருந்த ஒற்றைப் பின்னல் ஒயிலாய் ஆடியபடி மத்தளங்களில் ஒலி எழுப்ப மான்குட்டியாய் குதித்து ஓடிக் கொண்டிருந்தாள்.



“ஏய்… நில்லு… நில்லுடி…” கம்பீரம் கலந்த காந்தக் குரல் ஒன்று அவள் முதுகில் பின்னே துரத்தியபடி… வேட்டியை ஒற்றைக் கையால் தூக்கிப் பிடித்தபடி கைகளில் சிக்காமல் துள்ளி ஓடும் மான்குட்டியை துரத்தும் வேடனாய் வசீகரமாய் அவன்.



“முடிஞ்சா புடிச்சுப் பாரு…” தேனில் குழைத்த குரலில் சவால்விட்டு சிரிப்பு முத்துக்களை சிதறவிட்டபடி தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தாள்.



மரங்களைக் கடந்து குறுகிய நீரோடை ஒன்று எதிர்ப்பட ஒரு நொடி தாமதித்து நின்றவள் முழு முழுக்க காட்டாமல் பக்கவாட்டில் திரும்பி அவன் தன்னை நெருங்கிவிட்டான் என்பதை உணர்ந்து பாவாடையை தூக்கி இடுப்பில் சொருகி வேகமாய் தண்ணீருக்குள் குதித்து கைகளை விசிறியபடி வேக நடையுடன் முன்னேற… துரத்தி வந்தவன் தானும் தண்ணீருக்குள் குதித்து விசிறிய கைகளில் ஒன்றை தாவிப் பிடித்திருந்தான்.



அவன் ஸ்பரிசத்தில் ஓட்ட நடை நின்றுபோய் சிலையானாள் அவள். அவள் கைப்பற்றிய மகிழ்ச்சியில் சிரிப்புடன் சிலிர்ப்பும் சேர்ந்து சில நொடிகள் தானும் உறைந்து நின்றான். அவள் தப்பிச் செல்லா வண்ணம் அழுத்தமாய் அவள் கைப்பற்றி தன் கையோடு கோர்த்துக் கொண்டான்.



“தப்பிச்சா ஓடுற… உன்னை விடமாட்டேன்… இப்ப மட்டும் இல்ல… எப்பவுமே…” நீரோடையின் சலசலத்த ஓசையைத் தாண்டி சத்தமாய் கூறியிருந்தான்.



“அய்யய்யோ… இது என்ன வம்பா போச்சு… இந்தாங்க… உங்களைத்தான்… அய்யோ… என் கையை விடுங்க… என் விரல் எலும்பை எல்லாம் உடைச்சிராதீங்க… யாத்தே… யோவ்… விடுய்யா கையை…” சத்தமிட்டு கத்தியவளின் குரல் காதில் ஒலிக்க அடுத்த நொடி ஆஆஆ என்ற அலறலுடன் எழுந்து அமர்ந்தான் தரணீதரன்.



கையை தேய்த்தபடியே மலங்க மலங்க விழித்தான். இடுப்பில் ஒரு கையும் மறு கையில் காபி கோப்பையுமாய் அவனை முறைத்த நிலையில் அவள்… காபி கோப்பையால் சூடு வைத்ததால் பதறி எழுந்திருக்கிறான் பையன்… பாவம்… கனவில் இருந்து இன்னும் விடுபடவில்லை போலும்.



“ப்ச்… கனவா…?” சலித்துக் கொண்டான்.



“பேக் போர்ஷன் அவ்ளோ அழகா இருந்தது… முகத்தை பார்க்கிறதுக்கு முன்னால கனவை கலைச்சு விட்டுட்டாளே படுபாதகி…” எரிச்சல் மண்ட அவளை முறைத்திருந்தான்.



“எதுக்கு சூடு வச்சே…?” கோபமாய் கேட்டான்.



“நீங்க எதுக்கு என் விரல் எலும்பை எல்லாம் உடைச்சீங்க…?” முறைத்தபடி தானும் பதிலளிக்க குழப்பமாய் கண்கள் சுருக்கினான்.



‘அடக்கடவுளே கனவோட நிஜத்தை கலந்துட்டேன் போல…’ சட்டென்று முகத்தில் அசடு வழிய அவளை பார்த்து சிரித்து வைத்தான்.



“காபி கொடுக்கலாம்னு வந்தா கையை உடைக்கப் பார்க்கிறீங்க… நல்ல ஆளுதான்… இந்தாங்க… காபியை பிடிங்க…” புருவம் நெறிய காபி கோப்பையை அவனிடம் நீட்டினாள்.



ஜன்னல் வழியே தழுவிச் சென்ற தென்றலின் சுகந்தத்தை அனுபவிக்கும் முன் பில்டர் காபியின் வாசம் நாசியில் ஏறி வேறு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த “வாவ்…” என்றபடி கண்மூடி ரசித்து காபி பருகினான்.



சில நொடிகள் அவனை ஆராய்ந்து திரும்பிச் சென்றவளை “ஹலோ…” என்று அழைக்க வேகமாய் திரும்பியவள் “என் பேரு ஹலோ இல்ல…” என்றாள் கோபமாய்.



“காபி ரொம்ப நல்லா இருந்தது பூங்கொடி…” புன்னகை இதழ்களுடன் கூறினான்.



“என் பேரு பூங்கொடி இல்ல…” இப்போது எரிச்சலாய் கூறியிருந்தாள்.



“ஹான்… பூங்கோதை…”



பல்லைக் கடித்து முறைத்தாள்.



“பூங்குழலி…?” புருவம் ஏற்றி கேள்வியாய் பார்த்தான்… அவளோ உதட்டை சுழித்து கண்கள் சுருக்கி கடுகடுப்பாய் பார்த்தாள்.



“இல்லையா… அப்போ பூங்கொத்து… பூச்சரம்… இந்த மாதிரி ஏதோ ஒன்னு…” கைகளை விரித்தபடி கூறியவனை அடிக்க ஏதாவது பொருள் கண்களில் தென்படுகிறதா என்று கண்களை சுழலவிட்டாள்.



“அதுவும் இல்லையா… பூந்தென்றல்… பூவிழி…” தலையை அண்ணாந்து பூவில் ஆரம்பிக்கும் பெயர்களாக சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தவனை கொலை வெறியுடன் நெருங்கினாள்.



அவன் கையில் இருந்த காலியான காபி கோப்பையை வெடுக்கென பிடுங்கி நங்கென்று அதனைக் கொண்டே தலையில் குட்ட “ஸ்ஸ்…அம்மா…” என்றவன் பரிதாபமாய் பார்த்தபடி தலையை தேய்த்தான்.



“என் பேரு பூச்செண்டு… இதை தவிர வேற என்னென்னமோ சொல்றீங்க…” கொதித்துப் போய் பேசியவளை குட்டிய இடத்தை தடவியப்படியே பார்த்தவன் 



“ஓஓ… ஆமால்ல… பூச்செண்டு… வெரி பெக்கியூலியர் நேம்… அப்படி என்ன பேருக்கு பஞ்சமா போயிருச்சுன்னு இந்த பேரை வச்சிருக்காங்க உனக்கு…” பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி கூறியவனை தீயாய் முறைத்தவள் கை முஷ்டியை மடக்கி உதட்டை குவித்து விரல்களில் ஊதி அவன் தலையில் குட்டுவதற்கு கை ஓங்க “எம்மாடியோவ்… ஆளை விடு பொக்கே…” என்றபடி வேகமாக எழுந்து குளியலறை நோக்கி ஓடி இருந்தான்.


Leave a comment


Comments


Related Post