இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 2 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 15-02-2024

Total Views: 32114

மோகன்ராம் ஸ்பின்னிங்ஸ் அண்ட் கார்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்தில் தான் அபிநந்தன் ஜெனரல் மேனேஜராக வேலை பார்க்கிறான். அவன் அறையில் உள்ள இன்டர்காம் அழைக்க ஏற்றவனுக்கு அவனை பார்க்க ஒரு பெண் வந்திருப்பதாக சொல்லப்பட “யார்” என்ற யோசனையோடு அவளை உள்ளே வரச்சொல்லி கூறினான் அபிநந்தன்.

இந்த கார்மெண்ட்ஸ்க்கு சொந்தமான ஸ்பின்னிங் மில்லில் தான் அபிநந்தன் தந்தை சுந்தரேசன் மெக்கானிக்காக வேலை செய்ய ஒரு எந்திரம் பழுது பார்க்கும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். தந்தை இல்லாமல் தவித்து நின்ற குடும்பத்திற்கு உதவ முன்வந்து நிறுவன முதலாளி மோகன்ராம் பணத்தை கொடுக்க “வேண்டாம்” என்று பார்வதி மறுக்க பிள்ளைகள் பெயரில் வைப்புத்தொகையாக போட்டுவிட்டார்.

இளம்வயதில் விதவையான பார்வதி வேலைக்காக சென்ற இடங்களில் முதலாளிகளின் அத்துமீறலுக்கு பயந்து மீண்டும் தன் கணவருக்கு நன்கு அறியப்பட்ட மோகன்ராமிடம் வந்து ‘ஒரு வேலை வேண்டும்’ என்று கேட்க அவரும் தன் கார்மெண்ட்ஸில் தையல் வேலை தந்தார்.

அத்தோடு அபிநந்தன் படிப்புக்கு நிறையவே உதவி செய்துள்ளார் மோகன்ராம். இப்போது இவன் படிப்பை முடித்த கையோடு வேலையையும் தந்து இப்போது தன் திறமையை நிரூபித்து அபிநந்தன் ஜெனரல் மேனேஜராக பதவியேற்றுள்ளான். இங்கிருக்கும் ப்யூன் செக்கியூரிட்டி முதல் முதலாளி குடும்பத்தினர் வரை அபிநந்தனுக்கு நல்ல பரிச்சயமும் மரியாதையும் உண்டு. 

முதல் முறை அவனை தேடி ஒரு இளம்பெண் வந்திருக்க ஆளாளுக்கு அதை கவனித்தாலும் தங்களின் வேலையை பார்ப்பது போல அமர்ந்து கொண்டனர். 

வெண்பிஞ்சு விரல்கள் நோகாமல் கதவை தட்டி உள்ளே வர அனுமதி கேட்க “யெஸ் கம்இன்..” என்று அனுமதி தந்தவன் பார்வை வந்தவள் எங்கோ பார்த்தது போல தோன்ற அவள் யார் என்று ஆராய்ச்சியில் இறங்கியது. 

அவளின் உருவத்திற்கு பொருத்தமாக பார்வையில் விகல்பம் ஏற்படாத படிக்கு க்ரீன் அண்ட் மெரூன் கலர் சுடிதார்.. இடைவரை நீண்ட கூந்தல் பின்னலிடப்பட்டு தலை நிறைய மல்லிகை சரம் சூடியிருந்தாள். ஒப்பனைக்கு அவசியமற்ற மாசு மருவற்ற முகம் பெரிதாக ஆடம்பரம் இல்லாமல் உடைக்கு பொருத்தமாக வெள்ளை முத்துக்கள் கோர்த்த பாசி இருகையிலும் இரு ஜோடி தங்க வளையல்… 

பார்வையில் அவளை அளவெடுத்து கொண்டு இருந்தவன் அவளின் மையல் பார்வையில் எதுவும் புரியாமல் முழித்துக் கொண்டு அவளின் தேன்மதுர  குரலில் தெளிந்தான்.

“ஹாய் மிஸ்டர் அபிநந்தன்… எப்படி இருக்கீங்க? அம்மா தங்கச்சி எல்லாம் நல்லா இருக்காங்களா?” அவள் இயல்பாக கேட்க 

“சாரி… நீங்க யாருன்னு எனக்கு தெரியலை…” அவன் விழிக்க

“நான் இன்னும் என்னை அறிமுகப்படுத்திக்கவே இல்லையே… நான் அபி.. அபிலாஷா… என்னை உங்களுக்கு தெரியாது.. பட் உங்க எல்லாரையும் எனக்கு தெரியும். அப்பறம் நேத்து வீட்டுக்கு போய் வாங்கின ட்ரெஸ் எல்லாம் பார்த்து என்ன நடந்தது… உங்க தங்கச்சி சர்ப்ரைஸ் ஆனாங்களா இல்ல அம்மா ஏன் இந்த செலவுனு கோபப்பட்டாங்களா?” என்று அவள் கேட்டபோது தான் நகைக்கடையில் தான் ஃபோன் பேசிக்கொண்டு இருக்கும்போது தாயோடு பேசிக்கொண்டு இருந்த பெண் இவள்தான் என்று நினைவுறுத்திக் கொண்டான் அபிநந்தன்.

“ஓ… சரி நீங்க எதுக்கு என்னை பார்க்க வந்திருக்கீங்க… நேத்துதான் எதார்த்தமா என்னை பார்த்தீங்க ஆனா இன்னைக்கு எப்படி என்னை தேடி இங்க வரைக்கும் வந்தீங்க?” அவன் புரியாது கேட்டிட

“ஆக்சுவலா நான் உங்க எம்.டியோட சன் ப்ரதீப்போட ஃப்ரண்ட்… நேத்து உங்களை உங்க ஃபேமிலி பார்த்தப்போ உங்களை மாதிரி ஒரு ஃபேமிலி எனக்கும் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு… ஜஸ்ட் உங்களோட ஒரு ஃப்ரண்ட்ஷிப் வைச்சுக்க தோணுச்சு” என்று அபி சொல்ல

“ம்ம்… நேத்து பார்த்த என்னை ஒரு நைட்ல கண்டுபிடிச்சு இப்போ என் கண் முன்னால உட்கார்ந்திருக்கீங்க… இதுல இருந்தே உங்களுக்கு இருக்கிற செல்வாக்கு எனக்கு புரியுது… இதோபாருங்க மிஸ்…” என்று அபிநந்தன் நிறுத்த

“அபிலாஷா” என்று பெயரை நினைவுறுத்தினாள்.

“யா.. மிஸ் அபிலாஷா… நான் எப்பவும் எல்லாத்துலயும் கரெக்டா இருக்க நினைப்பேன்… அதாவது ஃபேமிலி டைம்ல ஆஃபிஸ் பத்தி பேச்செடுக்க மாட்டேன் அதேப்போல ஆஃபிஸ் ஹவர்ஸ்ல ஃபேமிலி பற்றி பேசுறதும் பிடிக்காது…” சிரித்த முகத்துடன் கத்தரிப்பது போல அபிநந்தன் பேச

“ஓ… குட் பாலிசி…” என்று பாராட்டியவள் “சரி அப்போ நான் உங்களை வீட்ல வந்தே மீட் பண்றேன்” என்று அதிரடியாக சொல்லிவிட்டு அவனுக்கு பேசவே நேரம் தாராமல் எழுந்து சென்று விட்டாள் அபிலாஷா..

திடீரென்று வந்தாள் ஏதேதோ பேசினாள் வீட்டிற்கு வருகிறேன் என்று கிளம்பிவிட்டாள் ‘யார் இவள் எப்படியானவள்?’ என்ற சிந்தனைக்கு சென்ற மூளையை கட்டி இழுத்து வேலை பக்கம் திரும்பினான்.

இரண்டு நாட்கள் கடந்திருக்க தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது அபிநந்தனுக்கு…

“ஹலோ யாருங்க…” என்று அபிநந்தன் கேட்க

“மிஸ்டர் அபிநந்தன் அம்மா மேல அவ்வளவு பாசம் இருக்கிறது போல அன்னைக்கு நடந்துக்கிட்டீங்க அம்மாவோட ஹெல்த் கண்டிஷன் தெரிஞ்சு வைச்சுக்க மாட்டீங்களா” என்று ஒரு பெண் குரல் பொரிந்து தள்ள ஏற்கனவே கேட்ட குரலாக இருக்க குழம்பி போனவன்

“ஹலோ யாருங்க நீங்க உங்களுக்கு என்ன வேணும்? அம்மா… அம்மாவோட ஹெல்த்க்கு என்ன?” என்றிட 

“நான் அபிலாஷா பேசுறேன். உங்க அம்மா இங்கே கோவில்ல மயங்கி விழுந்துட்டாங்க பாவம் உங்க தங்கச்சிக்கு என்ன செய்யனு புரியலை நான்தான் கூட்டிட்டு வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கோம்” என்று சொல்ல முகவரி சொல்ல

“ஓ… அம்மா அம்மாக்கு எப்படி இருக்கு என்னாச்சு அக்சயா என்ன பண்றா ஏன் எனக்கு கால்பண்ணல?” என்று பதட்டத்துடன் கேள்விகளை அடுக்க

“பொறுமையா இருங்க மிஸ்டர் அபிநந்தன்… அம்மாக்கு சீரியஸா எதுவுமில்ல.. டாக்டர் செக்கப் பண்ணிட்டு இருக்காங்க அக்சயா கொஞ்சம் பதட்டத்துல இருக்கிறதால நானே உங்களுக்கு கால் பண்ணேன்” என்று சொல்ல

“சரிங்க… நான் வரவரைக்கும் கொஞ்சம் அங்க கூட இருந்து பார்த்துக்கோங்க நான் இன்னும் அரைமணில வந்திடுறேன்.” என்று அழைப்பை துண்டித்து விரைந்தான் அபிநந்தன்.

மருத்துவமனையில் அழுதுகொண்டு இருந்த அக்சயாவை சமாதானம் செய்துகொண்டு இருந்தாள் அபிலாஷா. அவர்கள் அருகில் சென்ற அபிநந்தன் “அச்சு என்னாச்சு அம்மாக்கு?” என்றபடி அபிலாஷா மற்றும் அக்சயாவை மாறிமாறி பார்க்க

“அண்ணா…” என்று அவன் தோளில் சாய்ந்து அழுதாள் அக்சயா

“அச்சு என்னமா? அபிலாஷா என்னங்க ஆச்சு?” என்றிட

“அது… இன்னைக்கு கோவில்ல பூஜை நடந்தது அதை பண்றவங்க விரதம் இருக்கனும் அம்மா அதை இருந்ததால லோபீபி ஆகி மயங்கிருக்காங்க” என்று அபிலாஷா சொல்ல

“என்ன அச்சு? இப்படி விரதமெல்லாம் இருக்கக்கூடாதுனு எத்தனை தடவை சொல்லிருக்கேன் அம்மா தான் கேட்கமாட்டாங்க கூட இருக்க நீயாவது சொல்லலாம்ல?” என்று கடிந்து கொள்ள

“போதும் நிறுத்துண்ணா… எல்லாம் உன்னாலதான் உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி எத்தனை முறை கேட்டாங்க நீ மறுத்திட்டே இருந்த உன் மனசு மாறத்தான் அம்மா அந்த பூஜைல என்னை கலந்துக்க சொல்லி என்னால பசிதாங்க முடியாதுன்னு அம்மா விரதம் இருந்தாங்க” என்று சற்று முன்னர் அம்மாவிற்கு எதுவும் இல்லை என்று மருத்துவர் சொல்ல கேட்ட தைரியத்தில் பேசினாள் அக்சயா..

“ஆனா ஊனா என் கல்யாணத்துல வந்து நில்லுங்க ரெண்டு பேரும்… அப்படி என்ன அவசரம் அதுக்கு..” சலிப்பாக புலம்பியபடியே திரும்பிய அபிநந்தன் அபிலாஷா லேசாக சிரிப்பதை பார்த்து முன்பின் அறியாத பெண் முன்பு புலம்பியதை எண்ணி நாக்கை கடித்து கொண்டு

“சாரிங்க… அண்ட் ரொம்ப தேங்க்ஸ் நீங்க இல்லாட்டி அச்சு ரொம்ப தவிச்சுப் போயிருப்பா… சரி நீங்க எப்படி கோவிலுக்கு?” என்று கேட்க

“என் ஃப்ரண்ட் பவியோட மேரேஜ் பிக்ஸ் ஆயிடுச்சு அது நல்லபடியா நடக்க அவங்க ஃபேமிலியோட பூஜைல கலந்துக்க என்னையும் கூப்பிட்டாங்க அப்போதான் அம்மாவை பார்த்தேன்.” என்று அபிலாஷா சொல்ல

“எனிவேஸ் தேங்க்ஸ் அகைன்” என்று சொல்ல

“இட்ஸ் ஓகே மிஸ்டர் அபிநந்தன்… இப்போவாச்சும் ஃப்ரண்ட்லியா பேசுவீங்களா இல்ல இப்போவும் எதாவது அஃபிஷியல் வொர்க்கா?” அவள் கேலியாக கேட்ட அழகாய் முகம் விகசித்தான் அபிநந்தன். 

“உங்களுக்கு சிரிக்க கூட தெரியுமா?” ஆச்சரியம் போல அபிலாஷா கேட்க அவளை கூர்மையாக பார்த்தான் அபிநந்தன்.

அபிலாஷா ஃபோனில் அழைப்பு வர எடுத்தவள் “ஓ… என் ஃப்ரண்ட் தான் கால் பண்றா சரி நான் கிளம்பறேன் அம்மாவை இன்னொரு நாள் வந்து பார்க்குறேன் நீங்க போய் அம்மாவை பாருங்க…” என்று சொல்லி விட்டு கிளம்பினாள் அபிலாஷா.

ஒரு நிமிடம் சென்றவளை பார்த்துக் கொண்டே உறைந்து நின்ற அபிநந்தன் தலையை குலுக்கி விட்டு அன்னையை காணச் சென்றான் அபிநந்தன்.

“அம்மா எப்படிம்மா இருக்கீங்க” என்னதான் அம்மா எழுந்து அமர்ந்திருப்பது தெரிந்தாலும் அம்மாவிற்கு என்னவோ ஏதோ என்று இத்தனை நேரம் இருந்த பதட்டம் குறையவே இல்லை அபிநந்தனுக்கு..

“ஒன்னும் இல்லப்பா… லேசான தலைசுத்தல் தான் அதுக்கு போய் இப்படி ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்து பாரு.. இப்போ என் விரதமே கெட்டுப்போச்சு…” மகனுக்கான வேண்டுதல் பாதியில் நின்ற வருத்தத்தில் பார்வதி பேச

“அம்மா எத்தனை தடவை விரதமெல்லாம் இருந்து உடம்பை கெடுக்காதீங்கனு சொல்லிருக்கேன் கேட்கவே மாட்டேங்குறீங்க…” அன்பாய் கடிந்து கொள்ள

“டேய் உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்க்க ஆசை நீயோ தங்கச்சி கல்யாணத்துக்கு அப்புறம் தான்னு பிடிவாதம் பண்ற, சரி அவளுக்கு வரன் பார்க்கலாம்னு கேட்டாலும் படிக்கிறா சின்னப்பொண்ணுனு சொல்ற… ஏன்டா நந்தா!! நான் நல்ல ஆரோக்கியத்தோட இருக்கும்போதே உனக்கு ஒரு நல்லது பண்ணி உன்னை கண்ணார மாலையும் கழுத்துமா பார்க்கனும் அது தப்பா… உன்கிட்ட கேட்டா சம்மதிக்கமாட்ட அதான் அந்த கடவுள் உன் மனசை மாத்த வேண்டுதல் வைச்சேன்…” படபடவென்று வேதனை மொத்தமும் கொட்டித் தீர்த்தவர்

“என் வேண்டுதல் முழுசா நடக்காம போச்சு” என்று பார்வதி வருத்தமாக முடிக்க

“அம்மா கவலைப்படாதே உன்னோட வேண்டுதல் சீக்கிரமே நிறைவேறப் போகுது” என்று கூறிய அக்சயா

“ஆமாண்ணா… நாலுநாள் முன்னாடி நானும் அம்மாவும் நகைக்கடைல பார்த்த பொண்ணு எப்படி சரியா வந்து அம்மாவை காப்பாத்துச்சு? அதாவது பரவாயில்ல எப்படி கரெக்டா நான் சொல்லாமலே உனக்கு கால்பண்ணுச்சு… நீயும் அந்தபொண்ணு பெயரை சொல்லி கூப்பிடுற?” என்று அக்சயா சந்தேகமாக கேட்க என்ன சொல்ல என்று முழித்தான் அபிநந்தன்.

தொடரும்…


Leave a comment


Comments


Related Post