இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கொஞ்சி பேசி .. 01..1 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK022 Published on 15-02-2024

Total Views: 23159




ஓம் கந்தனே சரணம்..


கொஞ்சி பேசிட வேணா(ணு)ம்.. 01..





சேத்துமடை ஊர் காளியம்மன் கோவிலில் திருவிழா மிகவும் கோலாகலமாக நடந்தது..

மூன்று நாள்  திருவிழா..



அந்த ஊர் மக்கள் மட்டும் இல்லாமல் பக்கத்து ஊர் மக்களும் சேர்ந்து அந்த திருவிழாவை சிறப்பாக நடத்தினார்கள்…


திருவிழாவை ஒட்டி ஊர் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என அனைவருக்கும் அவர்கள் வயதுக்கு தகுந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒரு பக்கம் நடைபெற்றது..


இன்று திருவிழாவின் இறுதி நாள்..

சைக்கிள் ஓட்ட போட்டி, சிறுவர்களுக்கு  ஓட்டப் போட்டி, 

பெண்களுக்கு கோலப்போட்டி, மாலை கட்டும் போட்டி என்று வகை வகையான போட்டிகள் ஒவ்வொரு இடமாக பிரித்து நடைபெற்றுக் கொண்டிருந்தது..



கட்டிளம் காளைகளுக்கு அவர்களின் வீரத்திற்கு சவால் விடும் வகையான அந்த ஊர் பிரசிடெண்டால் வழங்கப்படும் ஐந்து சவரன் தங்க நகையை யார் வெல்ல போகிறார்கள் என்ற வெறியுடன் கூடிய கபடி போட்டியும் ஒரு பக்கம் நடைபெற்றது..




கபடி போட்டி களம் அந்த இடமே பரபரப்பாக இருந்தது..



வெற்றிவேல் அணி,  சக்திவேல் அணி என இரண்டு அணிகள் அந்த ஊரில் ஒவ்வொரு வருடமும் போட்டியிடும்..



எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி ஐந்து சவரன் தங்க நகையை   தட்டிச் செல்லும்..


அந்த ஊரின் விசேட அறிவிப்பாளர் அதாவது கோவில் அல்லது ஊரின் பொது விடயம் சம்பந்தமாக ஓர் அறிவித்தல் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு மிகவும் பொருத்தமான மற்றும் தகுதியானவன் சங்கி என்பவன் மட்டுமே..



அவன் மைக் பிடித்து பேசும் அழகை காண மற்றும் கேட்கவே பெரியோர் முதல் சிறியவர் வரை காத்திருப்பார்கள்..


‘ நமது சேத்துமடை கிராமத்தின் காளியம்மன் கோவில் திருவிழாவை சிறப்பித்து முடித்து வைத்த பக்தர்கள் அனைவருக்கும்  வணக்கமும்,நன்றியும்..


இதோ திருவிழாவின் இறுதி நாள் இன்று பூஜை அனைத்தும் காலை நேரத்தோடு முடிந்து திருவிழாவை சிறப்பிக்கும் விதமாக பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற காத்துக் கொண்டிருக்கிறது..



நடைபெற இருக்கும் விளையாட்டு போட்டிகளை கண்டு ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என அனைவருக்கும் கைதட்டி உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்..


இன்னும் சற்று நேரத்தில் பத்து வருடங்களாக இந்த ஊரை அடையாளப்படுத்தி வரும் கபடி விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது..


சக்திவேல் அணி,வெற்றிவேல் அணி என இரண்டு அணிகளும் தயார் நிலையில் உள்ளார்கள்..


விளையாட்டு வீரர்களுக்கு தொல்லை கொடுக்காமல் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் இடத்தில் அனைவரும் அமர்ந்து பார்த்து மகிழும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது..


கபடி விளையாட்டு போன்று பெண்களுக்கான மாலை கட்டுதல், கோலம் போடுதல், சைக்கிள் ஓட்டப்போட்டி சிறுவர்களுக்கான ஓட்ட போட்டி என அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறக் காத்துக் கொண்டிருக்கிறது அனைத்தையும் கண்டு மகிழுங்கள்..’


என்று சங்கியின் அறிவிப்பு முடிந்து கபடி போட்டியை பார்க்க அமர்ந்து கொண்டான்..

சேத்துமடை ஊரைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர்களின் ஒருவரும் அவரது நண்பரும் பேசிக்கொள்கிறார்கள்


“ ஏப்பா காளி வா நாம போய் அந்த பக்கம் பொண்ணுங்க விளையாடுறதை பார்க்கலாம்.. ” என்று அழைத்தார்..


நண்பர் “ என்னப்பா மாரி இப்படி சொல்லிட்ட. இங்க பாரு பசங்க கபடி விளையாட எவ்வளவு ஆர்வமா இருக்காங்க.. அவங்களுக்கு போய் உற்சாகப்படுத்துவதை விட்டுட்டு பொண்ணுங்க பக்கம் போற. வா அங்க போலாம்.. ” என்று கூறி காளி நண்பரின் கையை பிடித்து அழைத்தார்..


“ அட என்னப்பா நீ.. இவங்க கபடியத்தான் வருஷா வருஷம் பார்கிறோமே.. இந்த வருசமுமா அதையே போய் பாக்கணும்.. வேணாம் பா இந்த வருஷம் யார் ஜெயிச்சு அந்த தங்க நகை எடுத்துட்டு போவாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. அதை பத்தி நான் சொல்லுறேன் கேட்டுக்கோ..” என்றார் முத்து..



“ சரிப்பா சொல்லு.. நான் தான் சின்ன வயசுலயே  இங்க இருந்து குடும்பத்தோட வெளிநாடு போய்டோமே.. அங்க படிச்சி வேலை எடுத்து குடும்பத்தை உயர்த்தி பிள்ளைகளை நல்லா படிக்க வைத்து அவங்க வாழ்க்கையை அமைத்து கொடுத்துட்டு பொண்டாடியும் இறந்து போனதும் அங்க இருக்க பிடிக்காம இப்பதானே நம்ம ஊர் மண்ணை தேடி வந்திருக்கிறேன்.. அதனால எனக்கு ஒன்னும் தெரியல நீயே விளக்கமா சொல்லு கேட்டுக்கிறேன்.. ” என்றார் காளி..


“ நாம சின்ன பசங்களா இருக்கும் போது இந்த ஊரையே திரும்பி பார்க்க வைத்த உயிர் நண்பர்கள் இரண்டு பேரை தெரியும் தானே உனக்கு..”


“ அட ஆமாம்பா..!   பத்மநாதன் மற்றும் சத்தியநாதன் அண்ணாகளை மறக்க முடியுமா என்ன?.. அவங்களுக்கு என்ன?.  தொடர்ந்து சீக்கிரம் சொல்லுப்பா ஆர்வமா இருக்கு..”



“ சுருக்கமா சொல்லுறேன் கேட்டுக்கோ.. இந்த ஊர் நெருக்கமான நண்பர்கள்.. அவங்க படிப்படியா உழைத்து முயற்சி செய்து கஷ்டப்பட்டு வளர்ச்சியடைந்து இந்த ஊர் பெரிய குடும்பம்னு பேர் எடுத்தாங்க..



  திருமண வாழ்க்கை ஆரம்பித்து இரண்டு பேருக்குமே ஒவ்வொரு ஆண் பிள்ளைகள் பிறந்தாங்க..


பத்மநாதன் ஐயா மகன் சுந்தரலிங்கம் ரொம்ப ஊதாரியா இருந்தார்..


சத்தியநாதன் ஐயா மகன் ராமலிங்கம் ரொம்பவே திறமையானவர்..


தந்தை வழி தொடர்ந்து அவங்களுமே நண்பர்களா தான் இருந்தாங்க..



ராமலிங்கத்தை பார்த்து கூட சுந்தரலிங்கம் உழைக்கணும்னு எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் தீய வழியில் போய் பணத்தை அளிக்கவே ஆரம்பிச்சார்.. அவர் வளர வளர அவர் அளிக்க ஆரம்பித்த பணம் அவங்க சொத்தே குறைய ஆரம்பிச்சுது..



பத்மநாதன் ஐயா சொத்து ஒரு பக்கம் குறைய சத்தியநாதன் ஐயா சொத்து அதிகமாகிட்டே இருந்துது .. 


பிள்ளைகளின் தவறான பழகத்தால் அந்த சொத்து பிரச்சனை  அவங்க நட்பை முறிக்கல..



ரெண்டு பேரோட மனைவியும் ரொம்ப சந்தோஷமாவே இருந்தாங்க..


சத்தியநாதன் சுந்தரலிங்கதை அழைத்து பேசினார்.. ஆனா சுந்தரலிங்கம் அவர் கூறிய அறிவுரை எதையும் காது கொடுத்து கேட்காமல் ஊதரியாவே இருந்தார்..



பெரியவங்க  பிள்ளைகள் ரெண்டு பேருமே வளர்ந்து கல்யாணத்துக்கு தயாராக இருந்தாங்க..



ராமலிங்கத்துக்கு தேடின முதல் பொண்ணே அமைந்து நல்லபடியா ஊரை அழைத்து கல்யாணம் பண்ணிவைத்தார் சத்தியநாதன்..



மூன்று வருடமாகி பின் அஞ்சு வருஷமாகியும் மகனுக்கு பொண்ணே கிடைக்காமல் ரொம்பவே உடைஞ்சி போயிட்டார் பத்மாதான்..



ராமலிங்கத்துக்கு ஆண் குழந்தை ஒன்னும் ரெண்டு வருஷத்துல பெண் குழந்தையும் பிறந்துடுச்சு..


ராமலிங்கத்தோட மனைவி பரமேஸ்வரி தான் பார்த்துட்டு அவங்க ஊர்ல கொஞ்சம் வசதி குறைந்த குடும்பத்து பெண் கலாவை திருமணமும் பண்ணி வைத்தாங்க..



ரொம்பவே அடிமட்ட நிலமைக்கு பத்மாநாதன் குடும்பம் சுந்தரலிங்கதின் பொறுப்பில்லாத செயலால் தள்ளப்பட்டது..” என்றார் மாரி..



“ அட என்னப்பா மாரி.. அந்த சுந்தரலிங்கம் கடைசி வரைக்கும் திருந்தவே இல்லையா? என்னதான் நடந்துச்சு அப்புறம்..” என்றார்..



“ அதுவா கலா சத்தியநாதன் ஐயாவோட வயல்ல தான் வேலை பார்த்து சுந்தரலிங்கத்தையும் அந்த குடும்பத்தையும் பார்த்துக்கிட்டாங்க..



உழைக்க தயங்காத பொண்ணு அதனால நல்லாவே கணவனுக்கும் சேர்த்து உழைச்சாங்க..


எவ்வளவு வேகமா பத்மநாதன் கஷ்டப்பட்டு உழைத்து உயர்ந்த நிலைக்கு வந்தாரோ..  அதே வேகத்துல மகன் சுந்தரலிங்கம் அதை தரமட்டமா ஆக்கி தினமும் உழைச்சிட்டு வந்தா தான் சாப்பாடு என்னும் நிலைமைக்கு தள்ளிட்டார் அந்த குடும்பத்தை..



சத்தியநாதன் ஓய்வெடுத்ததும் ராமலிங்கம் தொழிலையும் வளர்த்துக்கொண்டு மனைவி பரமேஸ்வரி உதவியுடன் குழந்தை குடும்பம் என சந்தோஷமாக இருந்தார்..



சத்யநாதன் நண்பர் குடும்பத்திற்கு எவ்வளவோ உதவி செய்ய முயற்சி செய்தும் அதை பத்மநாதன் ஏற்றுக்கொள்ள மறுத்துட்டார்..


அவருக்கும் வீட்டுக்கு நன்றாக வாழ வந்த மருமகள் உழைத்து அதைத்தான் சாப்பிட வேண்டுமா?. என்று கவலை அவரை பிடித்துக் கொண்டது..



கலா வேலை செய்துவிட்டு வந்து வீட்டு வேலையும் செய்து கணவன் கிட்ட அடியும் திட்டும் வாங்கிக்கொண்டு அவர் காலத்தை கழித்தார்..



வழமை போன்று சொத்தும் அழிந்த பின் குடிப்பதற்கு பணம் இல்லாமல் கலா உழைத்து சேர்த்து வைக்கும் பணங்களையும் களவு எடுக்க ஆரம்பித்தார் சுந்தரலிங்கம்..


கலா திருமணம் செய்து இரண்டு வருடத்திற்கு பின்பு தான் கலாவுக்கு மணிமேகலை அழகான பெண் குழந்தை பிறந்தது..



பெண் குழந்தை பிறந்த பின் கணவன் பொறுப்பாக மகளைப் பார்த்து அவளை  நன்றாக வாழவைக்க வேண்டும் என்று நினைத்து உழைக்க ஆரம்பிப்பார் என்று காத்திருந்த கலாவிற்கு மரணமே பரிசாக கிடைத்தது..



மணிமேகலைக்கு மூன்று வயது இருக்கும்பொழுது களை எடுக்க வயலுக்கு சென்ற போது விஷ பாம்பு கடித்து அங்கேயே மரணம் அடைந்து விட்டார்..



காலையில் உயிரோடு சென்ற மனைவி மாலை இறந்து சடலமாக வீட்டிற்கு வந்ததை பார்த்துக் கூட சுந்தரலிங்கம் ஒரு சொட்டு கண்ணீர் விட்டு அழவில்லை..  யாருக்கு வந்த விருந்தோ என விழுந்த சவத்தை கொண்டாடும் விதமாக சூதாடிக் கொண்டிருந்தார்..



கலாவை இறுதிச் சடங்குகள் முடித்து  அடக்கம் செய்ததும் மணிமேகலையை யாரும் பார்த்துக் கொள்ளவில்லை..  பார்வதி தான் மணிமேகலையும் கையோடு தன் வீட்டிற்கு அழைத்து சென்றார்..



பார்வதியின் மூத்த மகன் விஸ்வநாதன் மணிமேகலையுடன் அனுசரனையாக விளையாடிக் கொண்டிருந்தான்..



மகள் வசந்தகுமாரி மணிமேகலையுடன் பேசாமல் அவள் பக்கம் திரும்பியும் பார்க்காமல் அவர்களுடன் அவள் விளையாடக்கூடாது என அண்ணனிடம் சண்டை பிடித்தாள்..



தங்கை சொன்னதை கேட்டுக் கொள்ளாமல் மேகலாவை நன்றாக பார்த்து தன்னுடன் வைத்துக் கொண்டான்..



கலா மற்றும் மகள் வீட்டில் இருந்த காரணத்தினால் இரவில் சுதந்தரம் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தான் கொஞ்ச காலமாக..



தற்போது வீட்டிற்கும் வருவதில்லை அப்படியே மகனை விட முடியாதுன்னு நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டதாக ராமலிங்கத்திடம் பார்வதி கூறி மீண்டும் கலாவை தங்கை கோமதியை சுந்தரலிங்கத்திற்கு திருமணம் செய்து வைத்தார்கள்..



கோமதி கொஞ்சம் துடுக்குத்தனமான பெண் அதனால் கணவனை ஓரளவுக்கு வந்து கொஞ்ச நாட்களிலேயே அடக்கி ஒடுக்கி வீட்டில் இருக்க வைத்தார்..


பத்மநாதனையும் அக்காவின் மகள் என்று பாராமல் மணிமேகலையும் நன்றாகவே பார்த்துக் கொண்டார்..


கணவனை வேலைக்குப் போக கூறினார்.. ஆனால் சுந்தரலிங்கம் வேலைக்கு போக விருப்பமில்லை என்று கூறியதால் அதைப்பற்றி பேசாமல் தானே வேலைக்கு போய் அந்த குடும்பத்தை பார்த்துக்கொண்டு கணவனை கொஞ்சம் கொஞ்சமாக திருத்த ஆரம்பித்தார்..



இல்லற வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நன்றாக போய்க் கொண்டிருந்தபடியால் அவர்களுக்கு  பெண் குழந்தை ராசாத்தி பிறந்தார்.. அதன் பின் ஐந்து வருடங்கள் கழித்து மல்லிகா பிறந்தார்.. 



மணிமேகலைக்கு 18 வயது முடிந்ததும் பேத்தியை எவ்வாறு கரை சேர்க்க போகிறோமோ என்று நினைத்து கவலைப்பட்டார் பத்மநாதன்..



நண்பரின் கவலையை பார்த்து சத்தியநாதன் தன் பேரனுக்கு  மணமுடித்து வைக்கலாம் என்று நினைத்து விஸ்வநாதனிடம் மணிமேகலையை திருமணம் செய்து வைக்க கேட்ட போது அவனும் மறுக்காமல் சந்தோஷமாகவே மனைவியாக மணிமேகலை ஏற்றுக் கொண்டான்..



பார்வதியும் மணிமேகலையை சிறுவயதில் இருந்து பார்த்து வளர்த்ததால் அந்த குடும்பத்துக்கு மருமகளாக சந்தோஷமாகவே ஏற்றுக்கொண்டார்..



  குழந்தை பருவத்தில் இருந்து விளையாடிக் கொண்டு இருந்தவர்கள் இப்பொழுது திருமண வாழ்க்கையில் இணைந்து சந்தோசமாக வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்..


பேத்தியின் திருமணத்தை கண்குளிர பார்த்த பத்மநாதன்  மகனால் அவர் பட்ட மன வேதனைக்கு ஆண்டவன் விடுதலை கொடுக்க நினைத்தாரோ என்னவோ இரவில் மாரடைப்பிலேயே அவர் உயிர் பிரிந்து சென்றது..



சத்யநாதன் நண்பனின் இறப்பை தாங்க முடியாமல் தவித்து போனார்..


அவருக்கு ஒரு கை உடைந்து போனது போல் மிகவும் கவலையுடன் அவரும் நோயில் விழுந்தார்..


மேலும் ஐந்து வருடங்கள் கழித்து சுந்தரலிங்கம் கோமதி தம்பதியருக்கு சக்திவேல் எனும் ஆண் குழந்தை பிறந்தான்..



மணிமேகலை விஸ்வநாதன் தம்பதியருக்கு நந்தினி எனும் பெண் குழந்தை பிறந்தது..



சக்திவேலுக்கு ஏழு வயது இருக்கும் பொழுது தான் வெற்றிவேல் பிறந்தான்..


சத்தியநாதன் உடல்நிலை முடியாமல் போய் மரணிக்கும் காலத்தில் பார்வதியிடம் ஒரு சத்தியத்தை பெற்றுக் கொண்டார்..


எந்த காலத்திலும் அவர் நண்பர் குடும்பத்தை கைவிட்ட கூடாது என்றும் அவர்களை எப்பொழுதும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்..


பார்வதி சந்தோஷமாகவே மாமனாருக்கு சத்தியம் செய்து கொடுத்தார்..அதன்படி முன்பு போல் தற்பொழுதும் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் அந்த குடும்பத்தையும் கோமதிக்கு அனைத்து விதத்திலும் உதவியாக இருந்து பார்த்துக் கொண்டார்..




மணிமேகலை நல்லபடியாக புகுந்தவீட்டிலும் வாழ்ந்தார்..  தாய் வீட்டுக்கும் சந்தோசமாக வந்து சென்றார்..


இதுவரையிலும் மனைவியை ஒரு சுடுச் சொல் சொல்லாமல்  குழந்தையாக இருக்கும் போது பார்த்துக் கொண்டது போல் தற்போதும் விஸ்வநாதன் மணிமேகலையை தாங்கித்தான் பார்த்துக் கொண்டார்..


பார்வதியும் மணிமேகலையை மகளாகத்தான் பாவித்தார்..  எந்த ஒரு மாமியார் கொடுமையும் பண்ணி தவிக்கவிடவில்லை..


 

மேகலா அந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து வசந்தி அவளை சின்ன வயதில் ஏற்பட்ட வஞ்சம் காரணமாகவே வேலை சொல்லியே பலி வாங்கிக் கொண்டிருந்தார்..

மகள் வசந்தாவின் குணம் சரியில்லை என்று தெரிந்து கொண்ட பார்வதி சீக்கிரமாக அவளுக்கு  திருமணம் செய்து கொடுத்து அனுப்பி வைத்தார்..



சக்திவேலுக்கு 15 வயதாக இருக்கும் பொழுது தாய்க்கு ஓய்வு கொடுத்துவிட்டு கோமதி சிறிது சிறிதாக உழைத்து சேர்த்த பணத்தில் வாங்கிய வயலில் அவனே பயிர் செய்தான்..


அதற்கு விஸ்வநாதன் சக்திவேலுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நல்லபடியாகவே வழி நடத்தினார்..


அவனும் மாமா மாமா என்று அவரிடம் நன்றாகவே ஒட்டிக்கொண்டான்..


கோமதி இதுவரையிலும் தன் அக்காவின் மகள் தன் மகள் என்று யாரையும் பிரித்து பார்த்ததில்லை..


சக்திவேலுக்கு விவரம் தெரிந்த போது இந்த விஷயம் ஊரால் தெரியப்படுத்தப்பட்டது அப்போது கோமதி நன்றாகவே சக்திவேலுக்கு மல்லிகா மற்றும் ராசாத்தி மூவருக்கும் எடுத்து சொல்லி விட்டார்..


இங்க பாருங்க பிள்ளைகளா நான் வேற எங்க அக்கா வேற இல்ல.. எல்லாமே என் பசங்க தான்


மூத்த தாரம் மகள்ன்னு யாரும் மேகலாவை பிரிச்சு பார்க்க கூடாது..
அப்படி பார்த்த நான் உங்களுக்கு அம்மாவாவே இருக்க மாட்டேன்.. என்றார்..



மூவருமே ஒன்றுபோல் இதை நீங்க எங்ககிட்ட சொல்லனுமா அம்மா அவ எங்களுக்கு மூத்த அக்கா..


நீங்க வேற, கலா அம்மா வேறன்னு நாங்க நினைக்கல.. என்று கூறி அவர் பாசமாக வளர்த்த பிள்ளைகள் தவறவில்லை என்று நிருபித்தார்கள்..


சுந்தரலிங்கம் நன்றாக குடித்து குடித்து ஓய்ந்து விட்டார்..



Leave a comment


Comments


Related Post