இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வலி தரும் நேசம் - 1 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK019 Published on 15-02-2024

Total Views: 28895

வலி தரும் நேசம் 

பகுதி 1 

இந்த கதை ஒரு கூட்டு குடும்ப கதை. அந்த குடும்பத்தின் தலைவர் திரு காசிநாதன். வயது ஐம்பத்தைந்து. திருவண்ணாமலை கோவில் அருகே இருக்கும் கடை வீதியில் சொந்த இடத்தில துணி கடை வைத்து இருக்கிறார். அவர் தந்தை காலத்தில் வீதி வீதியாக சென்று விற்றதை மாற்றி இவர் காலத்தில் கடையாக அமைத்தவர். அவரது மனைவி திருமதி அபிராமி. வயது ஐம்பது. குடும்ப தலைவி. 

இவர்களுக்கு மூன்று மகன்கள். மூத்தவன் அமரநாதன். பன்னிரெண்டாம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெரும் அளவிற்கு புத்திசாலி. மார்க்கெட்டிங் பிடித்து இருக்கிறது என்று தேர்ந்து எடுத்து அது சம்பந்தமாக படித்தவன் சென்னையில் மூன்று ஆண்டுகள் வேலையும் செய்தான். தந்தையின் வற்புறுத்தலில் வேலையை விட்டுவிட்டு கடையை பார்த்துக் கொள்கிறான். இவன் பொறுப்பு ஏற்ற பின் ஒரு மாடி கட்டிடமாக இருந்த கடையை விரிவாக்கி ஐந்து மாடி கடையாக மாற்றி உள்ளான். இப்பொது திருவண்ணாமலையே ஜவுளி தேவைகளுக்கு இவர்கள் கடையை தான் முதலில் தேர்ந்து எடுக்கும் அளவிற்கு வளர்த்து இருக்கிறான். சிறியவர் முதல் பெரியவர் வரை தினசரி முதல் திருமண பட்டு வரை அனைத்தும் இருந்தன "நாதன் டெக்ஸ்" இல். இவனது மனைவி மீனாட்சி. அந்த வீட்டின் மூத்த மருமகள். இன்ஜினியரிங் படித்து இருந்தாலும் வீட்டின் பொறுப்புகளால் வேலைக்கு செல்லவில்லை. காசிநாதனின் தங்கை பெண். தாய் தந்தையை இழந்த தங்கை மகளுக்கு தான் தான் ஆதரவு என்று அவளை மூத்த மகனுக்கு திருமணம் செய்துவைத்து தன்னோடே வைத்துக் கொண்டார் காசிநாதன். மீனாட்சி என்றால் காசிநாதனுக்கு அவ்வளவு செல்லம். அவள் திருமணம் ஆகி இந்த வீட்டிற்கு வந்த பின் அவர் அபிராமி என்று அழைத்ததை விட மீனா என்று அழைத்ததே அதிகம். அவள் கேட்டு அவர் எதையுமே மறுத்தது இல்லை. கிட்டத்தட்ட அந்த வீட்டில் அவள் ராஜ்ஜியம் தான். அந்த பொறுப்புகளுக்கு தகுதியானவளாக இருந்ததால் இது வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறது வீடு.

இரண்டாவது மகன் தேவநாதன். அண்ணன் அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவிற்கு படிப்பான். கணிதம் படித்துவிட்டு அங்கே இருந்த கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறான். அவனுக்கு சென்ற ஆண்டு தான் பெற்றோரால் நிச்சயித்து திருமணம் முடிந்தது. மனைவி பார்கவி. உயிரியல் பட்டதாரி. திருமணம் ஆகி மூன்றே மாதங்களில் கருவுற்றுவிட்டதால் வேலைக்கு செல்லவில்லை. இப்போது இவள் ஐந்து மாதம்.

மூன்றாவது மகன் விசுவநாதன். வீட்டின் செல்ல பிள்ளை. அண்ணன்களுக்கு கூட அவனை அதட்டி பேச வராது. நினைத்ததை சாதித்தும் கொள்வான். அதனால் தானோ என்னவோ தைரியமாக படிக்கும் போதே கூட படித்த பெண்ணை விரும்பி அவளையே இப்போது மணந்து கொள்ள போகிறான். அப்போதே காதலித்து இருந்தாலும் இருவரும் பொறுப்பானவர்களாக படிப்பில் கவனத்தை சிதறவிடாமல் படித்து வேலையிலும் அமர்ந்த பின்னே வீட்டில் விஷயத்தை சொன்னார்கள். அபிராமிக்கு மகனின் சந்தோஷமே முக்கியம். அதனால் உடனே சம்மதித்துவிட்டார். தந்தையை சரி கட்ட மீனாட்சியை முன் நிறுத்தினான் விசு. அவன் திட்டம் வெற்றி பெற்று இதோ இன்று அவனுக்கு நிச்சயார்த்தம். அவன் ஐந்து வருட காதலி நந்தனாவுடன். இவனும் அவளும் ஒரே வங்கியில் வெவ்வேறு கிளைகளில் துணை மேலாளராக இருக்கிறார்கள்.

இப்போது அவர்களது நிச்சயதார்த்தை பார்க்க போவோமா?

நந்தனாவின் பெற்றோர் அந்த ஊரில் பெரிய குடும்பங்களில் ஒருவர். வசதி என்று பார்த்தால் இப்போது காசிநாதன் வீட்டிலும் ஓரளவு வசதி தான் என்றாலும் இதெல்லாம் அமரநாதன் தலை எடுத்த பிறகு தான் இந்த அளவிற்கு வந்தது. அதற்கு முன் ஓரளவு வசதி தான். கஷ்டம் என்று இல்லை ஆனால் ஊர் பெரியமனிதர் என்று சொல்லிக்கொள்ளும் அளவும் இல்லை. நந்தனாவின் வீட்டிலோ ஐந்து ஆறு தலைமுறைகளாக ஊர் பெருந்தனக்காரர்கள். அந்த வீட்டின் ஒரே வாரிசு நந்தனா. அவர்கள் அறை மனதாக தான் நந்தனாவின் பிடிவாதம் தாங்காமல் தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்து இருந்தார்கள். தங்களை விட வசதி குறைவான வீட்டிற்கு மகள் போகிறாள் என்ற குறை நந்தனாவின் தாய் ராஜேஸ்வரிக்கு உள்ளுக்குள் இருந்தது. அதிலும் அங்கே சென்றாலும் ஓர் கூட்டு குடும்பத்தில் கடைசி மருமகளாக அவளால் பெரிதும் சுதந்திரமாக இருக்க முடியாது என்பது அவர் எண்ணம். ஆனால் ஒற்றை பெண்ணாய் வளர்ந்திருந்த நந்தனாவிற்கோ விசுவநாதன் மீது ஈர்ப்பு பல பட காரணமே அவனது குடும்ப அமைப்பும் அதை பற்றி அவன் பேசிய விதமும் தான். அதனால் அவள் ஆவலாகவே இந்த திருமணத்தையும் அதற்கு பிறகான வாழ்க்கையையும் எதிர்நோக்கி இருந்தாள்.

நிச்சய மண்டபத்திற்கு மாப்பிள்ளையுடன் அவன் குடும்பத்தினர் வந்து இறங்கினர். பட்டு வேட்டி சட்டையில் வந்த விசுவிற்கு நந்தனாவின் சகோதரன் முறையில் இருந்த ஒருவன் மாலை அணிவித்து அதோடு ஒரு செயினும் ஒரு காப்பும் தங்கத்தில் அணிவித்தான். 

மாப்பிளை உள்ளே செல்ல அவன் பின்னோடு வரிசை தட்டுகளை எடுத்துக் கொண்டு வீட்டினர் சென்றனர். மேடையில் வரிசை தட்டுகளை அடுக்கிக் கொண்டு இருந்த மீனாட்சி பார்கவி கையில் இருந்த தட்டை வாங்கிக் கொண்டாள்.

"எங்கேயாவது காத்து வருகிற இடமா பார்த்து உட்கார் கவி." என்று சொல்லிவிட்டு வேலையில் ஆழ்ந்தாள் மீனாட்சி. 

மாப்பிளை அழைப்பின் போது கால் மணி நேரம் நின்றிருந்ததிலேயே சற்று ஓய்ந்து போய் இருந்த பார்கவி மறுத்து பேசாமல் ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்தாள்.

அவள் அமர்ந்த பத்து பதினைந்து நிமிடங்களில் அவள் அம்மா மாலாவும் அப்பா சுந்தரமும் வந்தனர். சுந்தரம் சம்பந்தியுடன் பேச சென்றுவிட பார்கவியின் அருகில் உட்கார்ந்தார் மாலா. 

"என்ன அம்மு எப்படி இருக்கே? என்ன சொல்றான் என் பேரன்?"

"பேரன்னு முடிவே பண்ணிட்டியா மா? பொண்ணா இருந்தா என்ன செய்வே?" என்று கிண்டலாக கேட்டாள் பார்கவி.

"என்ன செய்வேன்? கொஞ்சுவேன். அவ்வளவு தான்.சும்மா பேச்சுக்கு பேரன்னு சொன்னா அதையே பிடிச்சிக்க கூடாது. நான் அப்படி பாகுபாடு பாக்குறவ கிடையாதுன்னு உனக்கு தெரியும். உங்க அண்ணனுக்கு ரெண்டும் பொண்ணு. அதனால இது பையனா இருந்தா மாறுதலா இருக்குமேன்னு சொன்னேன். மத்தபடி நம்ம வீட்டுல அப்படி உன்னை என்னைக்காவது வேறுபாடா நடத்தி இருக்கிறோமா?" என்று கண்டித்தார் மாலா.

இல்லை தான். பார்கவிக்கும் அவள் அண்ணன் சுகுமாருக்கும் எல்லாமே சமம் தான் அந்த வீட்டில். தாய் மாலாவிற்கு பேத்திகள் என்றால் உயிர் என்றும் தெரியும். பெரியவள் பிறந்த போது எங்கள் வீட்டு மகாலட்சுமி என்று சொல்லி அதே பெயரை வைத்தவர் மாலா. சிறியவள் பிறந்த போதும் அப்படி தான். பெரியவள் பெயரை ஒட்டியே ஜெயலட்சுமி என்று பெயரை தேர்ந்து எடுத்தார். அதிலெல்லாம் குறை சொல்ல முடியாது தான். என்ன மாலா ஒரு உரிமை பைத்தியம். பெற்றவளுக்கு பிள்ளைகளுக்கு பெயர் வைக்க ஆசை இருக்கும் என்றே யோசிக்காத ரகம். அண்ணி ரஞ்சனி பொறுத்து போகிற குணம் என்பதால் வண்டி ஓடுகிறது.

இங்கேயும் அவர் எண்ணம் ஒரு மாறுதல் மட்டும் இல்லை என்பது பார்கவிக்கு தெரியும்.

அதனாலேயே தாயை நக்கலாக பார்த்து "அதெல்லாம் சரி தான். ஆனா நீ அதுக்கு மட்டுமா பேரன் வேணும்னு சொல்ற?" என்று கேட்டாள்.

அவளை முறைத்த மாலா "இல்லை தான். உன்னை மாதிரி ஒரு மக்கு பெண்ணையும் அதுக்கு ஏத்த மாப்பிள்ளையும் அமைஞ்சா நான் என்ன தான் செய்ய? அவர் என்னனா வீட்டு தொழில் லட்சத்துல வருமானம் ராஜா மாதிரி வாழலாம். அதை விட்டுட்டு ஒரு காலேஜ்க்கு போய் யாருக்கோ பதில் சொல்லிக்கிட்டு இருக்கார். அவங்க அண்ணன் அந்த கடையை மொத்தமா அவனுதாக்கிக்குவான் போல. நீயாவது கொஞ்சம் திறமையா வீட்டுல உன் கையை ஓங்க வைப்பேன்னு பார்த்தா அங்கே பார் எல்லாத்துக்கும் அவளை தான் கூப்பிடுறாங்க. உன்னை யாராவது தேடுறாங்களா?ஏற்கனவே தங்கச்சி பொண்ணு அப்படிங்குற உரிமை வேற அவளுக்கு. இதையெல்லாம் மீறி உங்க பக்கம் உங்க மாமனார் மனசு சாயனும்னா உனக்கு ஒரு பையன் பிறந்த அது அந்த வீட்டோட முதல் வாரிசா இருந்தா தான் நடக்க முடியும்." என்று சொல்லி பெருமூச்சுவிட்டார்.

"ஏன் மா இப்படி யோசிக்குற? எனக்கு என்ன குறைச்சல்? அந்த வீட்டுல எல்லாரும் என்னை நல்லா தானே பாத்துக்குறாங்க?" குரலில் அலுப்பு தட்ட கேட்டாள் பார்கவி. பின்னே? திருமணம் நிச்சயம் ஆன நாளில் இருந்து அவள் கேட்கும் அதே விஷயம் தானே. தாய் எப்போது மாறுவார் என்று அலுப்பாக இருந்தது அவளுக்கு.

"அடி  போடி முட்டாள். இப்போ உனக்கு நான் சொல்லுறது புரியாது. சொத்து பிரிக்கும் போது தெரியும் எல்லாரோட லட்சணமும்." நொடித்துக் கொண்டார் மாலா.

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே பட்டு வாங்க மணமகள் மேடை ஏறி இருந்தாள். அவள் வாங்கி கொண்டு உள்ளே செல்லவும் விசுவை அங்கே ஒரு நாற்காலியில் பெரியவர்கள் உட்கார வைக்கவும் சரியாக இருந்தது.

இதையெல்லாம் கவனித்த பார்கவி கண்ணால் கணவனை தேடினாள். தம்பி அருகில் நின்றிருந்த தேவநாதன் இவளை கவனிக்கவில்லை. அவள் அவனை தேடுவதை கவனித்து அவன் காதுகளில் ஏதோ சொன்னான் அமரநாதன்.

உடனே மனைவியிடம் விரைந்தான் தேவா.

"என்ன பாரு? ஏதாவது வேணுமா?" கரிசனமாக கேட்ட கணவனை பெருமையாக பார்த்த பார்கவி அம்மாவையும் கவனித்தாயா என்பது போல பார்த்தாள்.

என்னமோ என்பது போல அவர் தோள் குலுக்கவும் இவரை திருத்த முடியாது என்று முடிவு செய்தவள் கணவனிடம் கவனத்தை திருப்பினாள்.

"நான் மணமகன் அறைக்கு போறேன். மீனாக்காவை நான் கேட்டேன்னு சொல்லுங்க." என்று எழுந்து சென்றாள். சரி என்று சொன்னவன் மீனாட்சியை தேடி சென்றான். பார்கவி பின்னாலேயே சென்றார் மாலா.

"மீனா உன்னை பாரு தேடுனா. மணமகன் அறையில இருக்குறா."

"ஓ. அவளுக்கு களைப்பாக இருந்திருக்கும். அவள் ஜூஸ் குடிக்கும் நேரம் இல்லையா." என்ற மீனாட்சி மணமகன் அறை நோக்கி சென்றாள்.

உடன் நடந்த தேவா "நான் போய் உணவறையில் இருந்து எடுத்து வரவா?" என்று கேட்டான்.

"வேண்டாம் வேண்டாம். இன்றைய மெனுவில் தர்பூசணி ஜூஸ் என்று நந்தனா சொன்னாள். கவிக்கு அது பிடிக்காது. அதனால் நான் வீட்டில் இருந்தே அவளுக்கு  எடுத்துவந்து விட்டேன். பையில் இருக்கும். நான் போய் எடுத்து கொடுக்கிறேன் தேவா. நீ வேறு வேலை இருந்தால் பார்."

இருவருக்கும் சில மாதங்களே வயது வித்தியாசம் என்பதால் சிறு வயதில் இருந்தே பேர் சொல்லி அழைத்து பழகி இருந்தனர். மீனாட்சி அந்த வீட்டின் மருமகள் ஆன பிறகும் அது மாறவில்லை. விசு இளையவன் என்றாலும் அவளை அண்ணி என்று அழைத்து இல்லை. மீனா தான். அவளும் தேவா, விசு என்று தான் அழைப்பாள். இதை யாரும் இது வரை பெரிது படுத்தியது இல்லை.

மணமகன் அறைக்குள் சென்ற மீனா "என்ன கவி? பசிக்குதா? இரு ஜூஸ் எடுத்துட்டு வந்தேன்." என்று தேடி எடுத்து கொடுத்தாள்.

"பசிக்குதுனு சொல்ல வேண்டியது தானே. நான் எதாவது உணவறையில் இருந்து எடுத்துட்டு வந்து கொடுத்திருப்பேன்." என்று கேட்டார் மாலா. மகள் தன்னை கேட்காமல் மீனாட்சியை தேடியதில் அவருக்கு கோபம்.

"எதுக்கு மா? எனக்கு டாக்டர் கொடுத்த டயட் படி அக்கா எதாவது எடுத்திட்டு வந்திருப்பாங்கனு தெரியும். அதனால தான் அவங்களை கூப்பிட்டேன். பாருங்க ஜுஸ் இருக்கு." என்று சொல்லி பருக ஆரம்பித்தாள்.

மீனாட்சி அறையை விட்டு வெளியேற ஆரம்பித்தாள்.

லேசாக வாசம் பிடித்த மாலா "ஏய் பார்கவி இந்த ஜூஸ்ல என்ன இருக்கு?" என்று கேட்டார்.

பார்கவி புரியாமல் பார்க்கவும் "கமலா பழமும் துளி அன்னாசியும் இருக்கு சித்தி." என்று பதில் அளித்தாள் மீனாட்சி.

"அடிப்பாவி. உனக்கு என்ன ஒரு துர் புத்தி?அன்னாசி பழத்தை கொடுத்து அவ வயித்துல இருக்குற கருவை அழிக்க பாக்குற!!!!" என்று குரல் நடுங்க கேட்டார் மாலா.

"அம்மா" என்று அதட்டினாள் பார்கவி.

இருவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினாள் மீனாட்சி.


Leave a comment


Comments


Related Post