இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வலி தரும் நேசம் - 2 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK019 Published on 16-02-2024

Total Views: 24673

பகுதி 2 

"ஏன் மா இப்படி பேசுன? உனக்கு நான் எத்தனை தடவை சொல்லுறது? அக்கா எது செஞ்சாலும் என் நல்லதுக்கு தான்."

"போடி பைத்தியம். அன்னாசி பழம் மாசமா இருக்கிறவங்களுக்கு ஆகாது. அவ அது தெரிஞ்சி தான் அவளுக்கு முன்னாடி உனக்கு பிறக்க கூடாதுனு தான் இப்படி ஜூஸ் போட்டு கொடுக்குறா. இங்க குடு அதை." என்று கையை நீட்டினார் மாலா.

தாயை முறைத்த பார்கவி கடகடவென்று கையில் இருந்த ஜூஸை குடித்துவிட்டு பாட்டிலை கீழே வைத்தாள்.

"போதுமா? காலையில இருந்து அக்காவுக்கு எவ்வளவு வேலை தெரியுமா? எல்லாத்தையும் செஞ்சு எனக்காக யோசிச்சு வேலை மென்கெட்டு இதை பிழிஞ்சி எடுத்துட்டு வந்திருக்காங்க. நீ இவ்வளவு பேசுறியே. நீ தானே எனக்கு அம்மா? எனக்காக என்ன எடுத்துகிட்டு வந்தே?" கோபமாக கேட்டாள் பார்கவி.

"நீ நான் சொன்ன மாதிரி நம்ம வீட்டுக்கு வந்து இருக்க வேண்டியது தானே. நான் மூணாம் மாசமும் கூப்பிட்டேன். இதோ இப்போ அஞ்சாம் மாசம் ஆரம்பிச்சதும் கூப்பிட்டேன். நீ தான் உன் புருஷன விட்டு வர மாட்டேன்னு சொல்லிட்ட. வந்திருந்தா உனக்கு செய்ய வேண்டியது எல்லாத்தையும் செஞ்சிருபேன்."

"ஏன் அங்க வரலைனா செய்ய மாட்டியா? இன்னைக்கு இங்க வர போறன்னு தெரியும் தானே? எனக்கு பிடிச்சது எதாவது செஞ்சி எடுத்துட்டு வரது தானே?"

"கல்யாண வீட்டுக்கு யாரு டீ சமைச்சு எடுத்திட்டு வருவா?"

"இப்போ அக்கா செய்யலை? அது மாதிரி எதாவது பலகாரம் எடுத்திட்டு வர வேண்டியது தானே?" விடாப்பிடியாக கேட்டாள் பார்கவி.

மாலா அமைதியாக இருக்கவும் "அவங்க இந்த குழந்தை வந்ததுல இருந்து என்னை எப்படி தாங்குறாங்க தெரியுமா? அப்புறம் என்ன? முதல்ல இருந்தே அவங்க அப்படி தான். இப்போ என்னை ஒரு வேலை செய்ய விடுறது இல்லை. காலையில எனக்கு வாந்தி வருதுன்னு நான் எந்திரிக்குற நேரம் பார்த்து பதமா இஞ்சி தேன் கஷாயம் கலந்து கொடுக்குறதுல ஆரம்பிச்சு இப்போ ராத்திரியில எனக்கு கால் வலிக்குதுன்னு தேவா கிட்ட சொல்லி எனக்கு வெண்ணீர் ஒத்தடம் கொடுக்க வைக்கிறது வரை எல்லாமே அவங்க தான். அவ்வளவு ஏன்? அன்னைக்கு ஒரு செமினாருக்கு தேவா வெளியூர் போய் இருந்தார். அன்னைக்குனு பார்த்து எனக்கு செம்ம கால் வலி. அக்கா தான் நான் சொல்ல சொல்ல கேட்காம காலுக்கு ஒத்தடம் கொடுத்தாங்க. இப்போ நீ சொன்னியே அன்னாசி பழம் நல்லது இல்லைனு. அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்லை. நான் போனவாட்டி டாக்டர் கிட்ட போனப்போ டாக்டர் தான் அதுல நிறைய நல்ல விஷயங்கள் இருக்குனு சேர்த்துக்க சொன்னாங்க. அதை நான் அக்கா கிட்ட சொன்னேன். அதுக்கு அப்புறம் இப்படி ஜூஸ் போடுறாங்க. நான் சாப்புடுற ஒவ்வொரு வேளை சாப்பாடும் எனக்கு பிடிச்ச மாதிரியும் அதே சமயம் சத்தாவும் இருக்க எவ்வளவு மெனக்கெடுறாங்க தெரியுமா? இது எதுவுமே தெரியாம நீ பாட்டுக்கு பேசுற." பொரிந்து தள்ளிவிட்டாள் பார்கவி.

"நம்ம வீட்டுக்கு வந்து இருந்தேன்னா நானும் உனக்கு இதெல்லாம் செஞ்சிருபேன்." மாலா திருப்பவும் "யாரு? நீ? அப்படியே உன் மருமக உன்னை செய்ய விட்டுட்டாலும்." என்று நொடித்தாள் பார்கவி.

அதுவும் ஒரு வகையில் உண்மை தான். குழந்தைகள் விஷயத்தில் மாமியாருக்கு விட்டுக்கொடுத்து அமைதியாக இருக்கும் ரஞ்சனிக்கு ஆரம்பத்தில் இருந்தே பார்கவி என்றால் எட்டிக்காய் தான். அவள் திருமணம் ஆகி வந்தது முதல் பார்கவியை போட்டியாக தான் பார்த்தாள். அவளுக்கு கிடைக்கும் அனைத்தும் தனக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தாள். பார்கவிக்கு நகை வாங்கினால் தனக்கு வாங்கவில்லையே என்று பொருமினாள். திருமணம் ஆகி வந்த மருமகளுக்கும் திருமணம் ஆகாத மகளுக்கும் எந்த வீட்டில் சமமாக நகை வாங்குவார்கள்? அதற்கும் மேல் அது தன் வீடு பார்கவி சில நாட்களே இருக்க போகும் விருந்தாளி என்பது போல தான் நடந்து கொள்வாள். அப்போது தான் பார்கவி கல்லூரிக்கே செல்ல ஆரம்பித்து இருந்தாள். இதெல்லாம் அவளை காயப்படுத்தின. தனக்கு திருமணம் என்று ஒன்று நடந்த பின் தாய் வீட்டுக்கு தேவைக்கு அதிகமாக வரக் கூடாது என்று முடிவு செய்யவும் வைத்து இருந்தன. அதற்கு ஏற்றார் போல மாமியார் வீட்டிலும் அவளை தாங்கவே அங்கேயே இருக்க தான் பார்கவி விரும்பினாள்.

பார்கவியின் சொல்லில் இருந்த உண்மை சுட "நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன் கண்ணம்மா. அவ பாசமா இருக்குற மாதிரி வேஷம் போடுறா. இப்படி எல்லாம் நடந்து உங்களை ஏமாத்தி மொத்தமா சுருட்ட பாக்குறா. உனக்கு அவளையும் தெரியாது அவ அம்மாவையும் தெரியாது."

"அம்மா தேவை இல்லாம இல்லாதவங்கள பத்தி தப்பா பேசாதீங்க. அப்படியே நீங்க சொல்ற மாதிரி இருந்தாலும் அதுல தப்பு என்ன? எங்க வீட்டுக்காரரை படிக்க வச்சிருக்காங்க. சுயமா சம்பாதிக்கிற தகுதி அவருக்கு இருக்கு. ஏன் எனக்கும் இருக்கு. நிச்சயமா என்னைக்குமே நீங்க நினைக்குற மாதிரி நடக்காது. எங்க வீட்டு ஆளுங்களை எனக்கு தெரியும். அதையும் மீறி அப்படி நடந்தா எங்களை பார்த்துக்க எனக்கும் அவருக்கும் தெரியும். எங்க காலுல நாங்க நின்னுப்போம். அவங்க குடுக்குற சொத்தை நம்பி நாங்க ஏன் வாழனும்?" தீர்க்கமாக கேட்ட மகளுக்கு மாலா பதில் சொல்லும் முன் தேவா அங்கே வந்தான்.

"என்னங்க?"

"பொண்ணு சேலை மாத்திக்கிட்டு வந்தாச்சு. உனக்கு பரவாயில்லன்னா வெளியில வந்து உட்கார சொன்னாங்க அம்மா."

"இதோ வரேன். மீனா அக்கா எங்கே?"

"அவ பந்தி கிட்ட இருக்கா. ஏன்?"

"அப்படியா? நலங்கு வைக்கணுமே? சரி நீங்க போய் அவங்களை கூட்டிட்டு வாங்க." என்று சொன்னபடி வெளியே வந்தாள் பார்கவி.

ஆனால் ஆலம் சுற்றி பெண்ணும் மாப்பிள்ளையும் போட்டோ எடுக்க செல்லும் வரை மீனா வரவில்லை.

ஒருவேளை தன் மீது கோபமாக இருக்கிறாளோ என்று யோசித்தபடி உணவறை பக்கம் தேடினாள் பார்கவி. கையில் தட்டுடன் அவளை நோக்கி தான் வந்து கொண்டிருந்தாள் மீனாட்சி.

"இருந்ததுல உனக்கு பிடிச்சது அதிகம் எண்ணெய் இல்லாததுனு பார்த்து எடுத்துட்டு வந்து இருக்கேன். இப்போதைக்கு இதை சாப்பிட்டுக்கோ. வீட்டுக்கு மூணு மணி போல போயிடுவோம். அங்க போய் உனக்கு ஏதாவது செஞ்சு குடுக்குறேன். வா ரூம்ல உட்கார்ந்து சாப்பிடு." 

"ஏன் கா எடுத்திட்டு வந்தீங்க? நானே வந்து சாப்பிட்டு இருப்பேனே?"

"இல்லை கவி. அங்க பயங்கர கூட்டம். கொஞ்சம் காத்தோட்டமும் இல்லை. உனக்கு தான் காத்தோட்டம் பத்தலைனா மயக்கம் வருமே? அது தான் எடுத்திட்டு வந்திட்டேன். நீ உட்காரு. நான் போய் சித்தியை வர சொல்ரேன்."

"அக்கா.. அது..."

"சாப்பிடு கவி. ஆறிட போகுது." என்று சொன்ன மீனா வெளியேறி நேரே மாலாவிடம் சென்றாள்.

"சித்தி கவி அங்க ரூம்ல தனியா சாப்பிடுகிறா. கொஞ்சம் துணை இருக்குறீங்களா?" என்று கேட்டுவிட்டு அவர் பதில் சொல்லும் வரை காத்திராமல் வேறு வேலையை பார்க்க விரைந்தாள்.

நல்லா தான் நடிக்குறா என்று எண்ணிக் கொண்ட மாலா மகளை தேடி சென்றார்.

பார்கவி உண்டு முடிக்கும் முன் அவளுக்கு வேறு ஏதாவது வேண்டுமா என்று கேட்டு போக தேவா வந்தான். அவள் இல்லை என்று சொல்லவும் அவன் சென்றுவிட்டான்.

இப்போது மாசமாக இருக்கும் மகளிடம் மேலும் சண்டையிட மனமில்லாமல் அமைதியாக வேறு பேசினார் மாலா.

சடங்குகள் உணவு என்று எல்லாம் முடிந்தபின் நந்தனாவிடம் சொல்லிக்கொண்டு காசிநாதன் குடும்பம் வீட்டிற்கு கிளம்பி சென்றது. ஒரு வண்டியில் அமர் விசு காசிநாதன் மற்றும் அபிராமி வர மற்றொன்றில் தேவா பார்கவி மற்றும் மீனாட்சி சென்றனர்.

முதலில் சென்ற மீனாட்சி ஏற்கனவே தயாராக வைத்து இருந்த ஆலத்தை ஒரு வெள்ளி தட்டில் ஊற்றி அதன் மீது ஒரு சிறிய தட்டு வைத்து அதில் கற்பூரம் வைத்தாள். 

அவள் இதை முடிக்கும் நேரம் அமரனின் வாகனம் வந்தது. அதில் இருந்து இறங்கிய விசுவை வாசலில் நிறுத்தி வைத்து ஆலம் சுற்றி உள்ளெ போக சொன்னாள் மீனாட்சி. மருமகள் செய்வதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த காசிநாதன் உள்ளே சென்றதும் கத்த தொடங்கினார்.

"வீட்டுக்கு பெரிய மனுஷினு நீ இருக்கியே உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? எங்க எத செய்யணும்னு தெரியுமா தெரியாதா? நீ பொறுப்பா பார்த்துப்பேனு நினைச்சு அமைதியா இருந்தா இப்படி இந்த குடும்ப மானத்தையே வாங்குறியே? ஊருக்குள்ள யார் நம்மள பத்தி என்ன பேசுறாங்கனு தெரியுமா? இப்படி சபையில எல்லாருக்கும் முன்னாடி விட்டுக்கொடுத்திட்டு வந்திருக்கியே? உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? அவளுக்கு இருக்குறதுல பாதி பொறுப்பு உனக்கு இருக்கா?" என்று அபிராமியை திட்ட ஆரம்பித்தார்.

அவர் சத்தம் வாயில் வரை கேட்கவும் எதற்கு இவர் கத்துகிறார் என்று பார்க்க உள்ளே விரைந்தாள் மீனாட்சி.

உள்ளே இருந்தவர்களுக்கும் இவர் எதற்காக கத்துகிறார் என்று புரியவில்லை. அப்படி பொறுப்பற்று அபிராமி என்ன தான் செய்துவிட்டார்?


Leave a comment


Comments


Related Post