இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா-2 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 16-02-2024

Total Views: 27161

பாகம்-2
எல்லோரிடமும் பொதுவான மன்னிப்பை வேண்டியவள் அடுத்த நொடியே தனது அலுவலக நண்பனுடன் அந்த இடத்தைக் காலி செய்திருந்தாள். இப்போது தான் திருமணம் நடந்து முடிந்தது. முடிந்ததா? எந்த அக்னியின் முன்பு தலை குனிந்து தாலியை வாங்கி கொண்டாளோ  அதே அக்னி தேவன் தன்னுடைய அலுவலகத்தை இப்படி செய்திருக்கலாமா ? மனம் வெதும்பியது. அவளின்  எண்ணம் முழுவதும் அலுவலகத்திலேயே சுழன்றது. 
இங்கே திருமண மணடபத்திலோ யாரும் திகைப்பிலிருந்து வெளியில் வரவே இல்லை. நிரஞ்சனாவின் அன்னையும்தான். என்ன நடந்தது? புரியவில்லை. சிலைபோல நின்றிருந்த செந்தில் என்னும் சிலைக்குத் தங்கை வந்து தோள்  தட்டியபோதுதான் உயிர் வந்தது போலும். அருகில் இருக்க வேண்டியவள் இல்லை. மனம் முழுவதும் அத்தனை கோபம் அதுவே விரைவில் வெறியாகவும் மாறி விடும். ஏற்கனவே முன் கோப காரன். இதுவும் சேர்ந்து கொள்ள கேட்கவும் வேண்டுமா? அவள் காலில் மினுமினுக்க வேண்டிய மெட்டி பரிதாபமாக யாரும் அற்ற அனாதையாகக் கிடந்தது. அடுத்து போடுவதற்கு ஆசையாக மோதிரம் வாங்கி வைத்திருந்தான். வைர மோதிரம் எல்லாம் இல்லை. அவன் வசதிக்கு ஏற்ற மாதிரி தான் வாங்கி இருந்தான். இருந்தாலும் அவனின் ஆசையும் நேசமும் அந்தத் தங்கத்தின் விலையைவிட மிக மதிக்க மதிப்பு வாய்ந்தது. அவனின் பெரிய தங்கை ரேணுகா அந்தப் பொருட்களை எடுத்துப் பத்திர படுத்திக் கொண்டாள். சிலர் உணவருந்தினார்கள். பலர் இழவு வீட்டிற்கு வந்தது போலச் சொல்லிக் கொள்ளாமலே சென்றார்கள். 
"பெத்த புள்ளையே ஆனாலும் இப்படியா வந்து நிப்பாங்க? இதெல்லாம் சொல்லித்தான் தெரியனுமா?" 
செந்திலின் அன்னை மீனாட்சியை இது தான் சாக்கு என்று வாய்க்கு வந்த படி பேசி விட்டுச் சென்றார்கள். ஏன் தன்னுடைய தரித்திரம்தான் பிள்ளையைத் தொடர்கிறது என்று அவளுமே  நினைத்தாள். கோபத்தில் மாலையை விட்டு எறிந்தவன் தன்னுடைய கோபத்தை யாரிடமும் காட்டாமல் இருக்க மிகவும்.  சிரமப்பட்டான்.மணமகன் அறையில் சென்று அமர்ந்து கொண்டான். அவள் சென்றபிறகு அவள் வீட்டிலிருந்து கேள்வி கேட்க என்று யாருமே இல்லை. வந்தவர்கள் அவளின் அலுவலக நண்பர்கள் தான். அலுவலகத்தில் நெருப்பு என்றதும் அனைவருமே பறந்திருந்தனர். ஆனால்  நிரஞ்சனாவின் அன்னை மட்டும் அங்கே தனியாகத் தைரியமாக நின்றிருந்தார். மீனாட்சியிடம் வந்து பேசினார். 
"சம்பந்தி இப்ப நான் உங்க கிட்ட எந்தச் சமாதானமும் சொல்ல முடியாது. சொன்னா  அது சரியாவும் இருக்காது. இங்க நடந்தது எல்லாமே தப்பு தான். ஆனா  கவலை படாதீங்க. கொஞ்சம் டைம் குடுங்க. அவளே வந்து உங்க கிட்ட முறைப்படி பேசுவா. ஏதோ இன்னிக்கு நிலைமை இப்படி ஆகிடுச்சு அவ தப்பானவ இல்ல. மாப்பிள்ளை கிட்ட இப்ப நான் பேசல. அவரு ரொம்ப கோபத்துல இருக்கறாரு. நிலைமை கொஞ்சம் சரி ஆகட்டும். நானே வந்து உங்க வீட்டுல அவரைப் பார்த்துப் பேசறேன்"
அவரின் நிலைமை மீனாட்சிக்கும்  புரிந்தது. அதனால் அவரும் எதுவும் வாய் திறக்கவில்லை. யார் என்ன பேசினாலும் ஏனோ பெண்கள் மட்டும்  நிதானத்தை இழக்கவில்லை. வருத்தம்தான். இருந்தாலும் நிரஞ்சனாவை செந்தில் வீட்டு பெண்கள் மூவராலும் ஏனோ தவறாக நினைக்க முடியவில்லை. அவளின் அழகா, திறமையா? எளிமையா? ஏதோ ஒரு விதத்தில் அந்தச் சில மணி நேரங்களில் நிரஞ்சனா அனைவரின் உள்ளத்திலும் அமர்ந்து விட்டாள். சில நிமிடங்களில் செந்திலின் மனதில்  அமரவில்லையா? அப்படித்தான். வயிறு முழுக்க பசி இருந்தும் யாருக்கும் உணவு இறங்கவில்லை.
 அவன் ஊட்டிப் பிறகு அவள் ஊட்ட எத்தனை அழகான தருணமாக அமைய வேண்டிய நாள் இது? முதலில் கோபம் வந்தாலும் பிறகு அதுவே செந்திலுக்கு வருத்தமாக மாறியது. ஆங்கிலத்தில் டிஸ்ஸப்பாயிண்ட்மெண்ட் என்று சொல்வார்களே,அதுதான் அவனுக்கும். ஏக்கம், வருத்தம், கோபம், துக்கம் எல்லாம் அவன் மனதில் தாண்டவமாடியது. வீட்டிற்கு வந்து  சேர்ந்தார்கள். விளக்கு ஏற்றவில்லை. மாலை ஆனது. 
"அம்மாடி பவி! அந்தப் பொண்ணுக்கு போன போட்டு எப்ப வருவான்னு கேளு. வீட்டுல விளக்கு வைக்க வேணாம்? என்னம்மா மீனாட்சி ராத்திரிக்கு சடங்கு வைக்கப் போறியா இல்லை? ஜோசியர் நேரம் குறிச்சு கொடுத்தாரில்ல? எத்தனை மணிக்கு?"
பெரிய அத்தை வேண்டுமென்றே வம்பிழுத்தாள். 
"முதல்ல அந்தப் பொண்ணு வரட்டும் அண்ணி. அப்புறமா அவங்க ரெண்டு பேருமே பேசி முடிவெடுத்துப்பாங்க" பட்டென வெட்டிவிட்டார்      மீனாட்சி.
"சார்! நிரஞ்சனா அண்ணி இருக்காங்களா?"
பேசும் தோணியிலேயே  புரிந்து கொண்டான் பாஸ்கரன். 
"இல்ல பவித்ரா. உங்க அண்ணி இன்னிக்கு வீட்டுக்கு வருவங்களாண்ணே தெரியல. நாங்க  ரெண்டு பேரும்  இங்க போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கோம். இங்க கொஞ்சம் பிரச்சனை. உங்க அம்மாகிட்ட சொல்லிடு"
"ஒங்க நிலைமை புரியுது மேடம் அதுக்கு என்ன பண்ண முடியும்?"
காவலர் அண்ணியிடம் பேசுவது அவளுக்கும் கேட்டது. 
"சரிங்க சார்" அமைதியாகப் போனை வைத்து விட்டாள்.
விஷயத்தைக் கேட்டதும் பெரிய அத்தை பேயாட்டம் போட்டு விட்டாள். இதுக்குத்தான் தலை பாடா அடிச்சுக்கிட்டோம். வெளில சம்பந்தம் வேணாம். மஞ்சுளா பொண்ணையே கட்டுன்னு. சொந்தத்துல பொண்ணு வேணாம் அது இதுன்னு சொல்லி உன் புள்ளைக்கு பெரிய இடத்திலேர்ந்து பொண்ணு எடுத்த. அவ சீரு  கொண்டு வருவா. ஒன்  பொண்ணுங்கள பெரிய இடத்துல கட்டி கொடுக்கலான்னு நினைச்ச. பாத்தியா கடவுள் எப்படி வச்சாரு ஆப்பு? புள்ளைய பெத்து வச்சுருக்கோன்னு எத்தனை திமிறுல ஆடின. ஆட்டுக்கு வாலை  அளந்து தான் வச்சிருக்கான் கடவுள். இப்பவும் ஒன்னும் கெட்டு  போகல மீனாட்சி. மரியாதையா நம்ம மாதவிக்கும் செந்திலுக்கு அடுத்த முஹூர்த்ததுலையே கல்யாணத்த  வைக்கறோம். அந்தச் சிறுக்கி மூஞ்சில கரிய பூசறோம். 
அவர்கள் என்ன பேசினாலும் எங்களுக்கு வெக்கம் இல்லை என்ற படியே மீனாட்சியின் அண்ணன்  நின்றுகொண்டிருந்தார். எப்போது பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தமோ அப்போதே வெட்கம் மானம் எல்லாவற்றையும்  தலையைச் சுற்றி தூக்கி எறியும் பல பெற்றவர்களைப் போல அவரும் ஒருவர். எல்லாம் முடியும் வரை கூடவே இருக்க வேண்டும். பிரச்சனை ஓய்ந்த பிறகு தங்கையின் கண்ணீரை துடைத்து, "கவலைப்படாத"  என்று ஆறுதல் சொல்ல வேண்டும். இப்படியே வருடங்கள் ஓடியது தான் மிச்சம். மீனாட்சியின் நாத்தனார்களோ அல்லது அவளின் புகுந்த வீட்டில் மற்றவர்களும் என்றுமே மாறப் போவதில்லை. எந்தப் பிரச்சனை என்றாலும் வீட்டிற்கு வரும் மருமகளையே  குற்றம்  சொல்வதும் அவள் மீதே பழி  போடுவதும் இயல்பான விஷயமாகி பல காலம் ஆகி விட்டது. அது ஏதோ சாப்பிடுவது போல உறங்குவது போல  ஏன் மூச்சு விடுவது போலவே மாறி இருந்தது. பொறுமை பொறுமை என்று சொல்லிச் சொல்லித் தந்தைக்கு அடுத்த ஸ்தானத்தில் அவரும் ஒரு எருமையாகவே மாறிப் போய் இருந்தார். கெட்டதிலும்  ஒரு நல்லதாகத் தன் மனைவியை யாரும் ஒரு சொல் பேச முடியாதபடி தாங்கிக்  கொண்டார். செந்திலுக்கு ஹீரோ மாமாதான். படிப்பு பணம், பதவி எல்லாவற்றிற்கும் மேலாகக் குணம். வீட்டு  பெண்களை எப்படி தாங்க வேண்டும் என்பதற்கு அவரே உதாரணம். பல விஷயங்களை அவரைப் பார்த்துக் கற்றுக் கொண்டான் தனக்கு வரும் மனைவியை மாமாவைப் போலவே நன்றாகப் பார்த்துக் கொள்ள வேணும் என்று எண்ணி இருந்தான். அவன் வசதிக்குத் தங்க தாம்பாளத்தில் தாங்க முடியாது. ஆனால்  அவன் உள்ளங்கையில் தாங்க முடியுமே? ரேணுகாதான் விளக்கேற்றினாள். அனைவருக்கும் டீப்போட்டுக் கொடுத்தாள். 
"எதுக்கு எல்லாரும் அண்ணியை திட்டறீங்க?அவங்க தான்  எல்லாருகிட்டையும் மன்னிப்பு கேட்டுட்டுதானே போனாங்க?  அவங்களுக்கு அங்க பிரச்சனையோ?"
" அடி  செருப்பால! யாரு யாருக்கிடி அண்ணி. பாரு உங்க அண்ணனை.
ராத்திரிக்கு சடங்கு நடக்காம மனசுக்குள்ள புழுக்கிகிட்டு இருக்கான். நம்ம எல்லார் மானத்தையும் தெருவுல போட்டு மிதிச்சுருக்கா.அவளா ஒனக்கு அண்ணி?"
"சின்ன அத்தை தங்கையிடம் பேசிய பேச்சு ரேணுகாவிற்கு கோபமாக வந்தது. 
"சே! சின்னப் புள்ளைகிட்ட என்ன பேசணுன்னு தெரியாது?" மனதிற்குள் அருவருத்தவள்,
"நீ உள்ள போ, பவி. பெரியவங்க பேசற இடத்துல உனக்கும் எனக்கும் என்ன வேலை?" கண்டிப்புடன் தங்கையைக் காப்பாற்றியவள் தானும் உடனேயே உள்ளே சென்று விட்டாள். 
உள்ளே சென்றவள் அதோடு நிற்காமல் 
"அம்மா! இதுல சக்கரை இல்லை. வந்து எனக்கு வேற எங்க இருக்குன்னு சொல்லேன்"
சாமர்த்தியமாக அன்னையையும் காப்பற்றிய  ரேணுகாவை மனதில் புகழ்ந்தார்  மாமா.  ஆனால் அதை அப்படி எளிதாக விட்டு விடுவார்களா சின்ன அத்தையும் பெரிய அத்தையும். 
ராஜ தோரணையுடன் இருக்கும் செந்திலை யாருக்குத்தான் பிடிக்காது? மாதவிக்கும் பிடித்திருந்தது. அவன்  எனக்குத்தான். உரிமையும் இருந்தது. அவன் தூக்கி வளர்த்த பிள்ளை மாதவி. தொட, சீண்ட என்றுமே அவனுக்குத் தனி உரிமை உண்டு. அப்படித்தானே அவனும் நினைத்தான். அவன் அவளுக்குச் சகோதரனை விடவும் ஒரு தந்தையின் ஸ்தானத்திலேயே இருந்து பழகி விட்டான். அவனுக்கும் மாதவிக்கும் திருமணமா? முடியாது என்று கூறி விட்டு வெளியிலிருந்து பெண் எடுத்தால்  அதுவோ  வேறு விதமாகப் போய்  நின்றது. இனி தன் வாழ்க்கை தன்  முடிவு என்று இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பது அவனுக்குப் புரிந்து விட்டது. அதே சமயம் அவங்க வீணாக அன்னையை பழித்துப்  பேசுவதையும் அவனால் பொறுத்து கொள்ள முடியாது. இத்தனை நேரம் அமைதியாக அறையில் அடைந்து கிடந்தவன் வெளியில் வந்து,
"அப்டி எல்லாம் நீங்க நினைக்கற மாதிரி எல்லாம்  அவளை அத்தனை சுலபத்துல அறுத்து விட முடியாது. உங்க எல்லாரையும் வச்சு தானே தாலி காட்டி இருக்கேன். முறைப்படி விவாகரத்து பண்ணாத்தான் அடுத்த கல்யாணம் பண்ண முடியும். அதுக்கும் அவ சம்மதிக்கணும். அப்பத்தான்  கோர்ட்டு ஒத்துக்கும்"
"ஏன் அப்பு! அது ஒரு கல்யாணமா? வெறுமனே தாலி  கட்டிட்டா அது கல்யாணமா? "
"நாம ஆயிரம் சடங்கு சொன்னாலும் அதை எல்லாம்  கோர்ட்டு ஏத்துக்கணுமே ? என்ன மாமா உங்களுக்குத் தெரியாதா?
பெரிய  மாமாவை அர்த்தத்துடன் பார்த்தான் செந்தில் 

தொடரும்.....


Leave a comment


Comments 1

  • அஸ்வதி
  • 3 months ago

    இந்த அத்தைக வந்தாலே எப்பவும் வம்பு தான். கொஞ்சம் கூட நாகரீகம் கிடையாது. செந்தில் இப்ப நல்லா பேசினாலும் இனி எப்படி நடந்துப்பான்னு தெரியலயே... மாமா பாத்திரம் நல்லவரா தெரியுது. தங்கைகளும் , அம்மாவும் கூட...


    Related Post