இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வலி தரும் நேசம் - 3 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK019 Published on 16-02-2024

Total Views: 24417

பகுதி 3 

 

வீட்டினுள் விரைந்த மீனாட்சி அங்கே கூடத்தில் நின்றிருந்தவர்களை தாண்டி நேரே காசிநாதன் அறைக்கு விரைந்தாள். 

அவள் செல்வதை பார்த்த விசு "இங்க என்ன நடந்துகிட்டு இருக்கு இவை பாட்டுக்கு போயிட்டே இருக்கா." என்று தேவாவின் காதில் முணுமுணுத்தான்.

"சும்மா இருடா. அப்பாவை மலை இறக்க வேப்பிலை எடுத்திட்டு வர போயிருப்பா." என்று திருப்பி கிசுகிசுத்தான் தேவா.

சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டாள் பார்கவி. இதில் தான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று அவள் நினைத்ததும் ஒரு காரணம். எதுவாக இருந்தாலும் மீனாட்சி அக்கா பார்த்துக் கொள்வார்கள். எப்படியம் மாமாவை சமாளிக்க அவர்களால் தான் முடியும்.

அவள் நினைத்தது போல கையில் ஒரு மாத்திரையும் தண்ணீர் பாட்டிலும் எடுத்துக் கொண்டு கத்திக் கொண்டு இருந்த காசிநாதன் முன் நீட்டினாள்.

"முதல்ல இதை சாப்பிடுங்க. மதியம் சாப்பிட வேண்டிய ப்ரெஷர் மாத்திரை சாப்பிடாம உங்க பிபியை ஏத்திகிட்டதும் இல்லாம எல்லாரையும் கத்துக்கிட்டு இருக்கீங்க."

காசிநாதன் ஏதோ சொல்ல வரவும் "ம்ம்ம். மூச். இந்த மாத்திரை சாப்பிட்டு அஞ்சு நிமிஷத்துக்கு அப்புறம் தான் பேசணும். இங்க உக்காருங்க. நான் எல்லாருக்கும் குடிக்க எதாவது எடுத்திட்டு வரேன்." என்று அதட்டிவிட்டு சென்றாள் மீனாட்சி.

அதுவரை வானுக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டு இருந்த மனிதர் பெட்டிப் பாம்பாக அடங்கி போய் உட்கார்ந்துவிட்டார். 

அவர் அமைதியாகவும் அங்கே நடப்பதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல அமரநாதன் மேலே ஏறி தன் அறைக்கு சென்றுவிட்டான்.

எல்லோருக்கும் சத்து மாவு காஞ்சி போட்டு எடுத்து வந்த மீனாட்சி பார்கவியிடம் முதலில் ஒன்றை நீட்டினாள்.

"இதை குடிச்சிட்டு நீ போய் ட்ரெஸ் மாத்திக்கோ. இங்க நான் பார்த்துபேன்."

"சரி கா."

அமரநாதன் அங்கில்லாததை கவனித்தவள் எல்லோருக்கும் கொடுத்துவிட்டு தன் கோப்பையை எடுத்து வைத்துவிட்டு அவனுக்கானதை மட்டும் எடுத்து போய் மாடியில் கொடுத்துவிட்டு வந்தாள்.

"பார்த்துக்கோ... அண்ணன் கேட்காமலே என்னலாம் நடக்குது. உன் ஆளும் என் ஆளும் செய்வாங்கனு நினைக்குற?" விசு முணுமுணுக்க "டேய் நீ புதுசா வேற பிரச்சனையை கிளப்பாத டா. அவனக்கு மச்சம் அனுபவிச்சிக்கிட்டு போகட்டும்." என்று சொன்னான் தேவா.

பார்கவி காதில் எல்லாமே விழுந்துவிட்டது என்பது அவள் தேவாவை முறைத்ததில் இருந்து தெரிந்தது. ஹி ஹீ என்று மனைவியை பார்த்து வழிந்தான் தேவா. தலையில் அடித்துக் கொண்டு தன் கஞ்சியை குடித்தாள் பார்கவி.

மேலிருந்து கீழே வந்த மீனாட்சி காசிநாதன் அருகில் சென்று அமர்ந்தாள். 

"இப்போ சொல்லுங்க மாமா. எதுக்கு கூரையே இடிஞ்சு விழற மாதிரி கத்திட்டு இருந்தீங்க?" என்று கதை வேறு கேட்டாள்.

அவர் அடங்கினாலும் இவ ஏத்தி விடுவா போலயே என்று நினைத்துக் கொண்டார் அபிராமி. நினைக்க மட்டும் தான் செய்தார். வாயை திறக்கவில்லை. அப்புறம் அதற்கு வேறு வாங்கிக்கட்டிக் கொள்ள வேண்டும். மருமகளை கண்ணால் சுட்டெரிக்கவும் தவறவில்லை.

பாவம் அபிராமி. அவர் பேசவில்லை என்றாலும் அவர் மீனாட்சியை முறைத்ததை கவனித்துவிட்டார் காசிநாதன்.

"அவளை எதுக்கு முறைக்குற? வீட்டுக்கு பெரியவளா ஒரு விசேஷம் அப்படினா எல்லாத்தையும் நீ தானே கவனிக்கணும்? இது வேணும் அது வேணும்னு கேட்டு வாங்க தெரியுதுல? அங்க விசேஷ வீட்டுல விட்டு கொடுத்திட்டு வந்திருக்க? யார் என்ன பேசினாங்கனு தெரியுமா உனக்கு?"

ஒருவேளை அம்மா பேசியது மாமா காதிற்கு போய் இருக்குமோ? பார்கவி பதட்டத்துடன் தேவநாதனை பார்த்தாள். அவனுக்கு இன்னும் விஷயம் தெரியாது. தெரிந்தால் எப்படி நடந்து கொள்வான் என்றும் தெரியவில்லை.

"ப்ச் தெரியுமா தெரியுமா னு கேட்டிட்டு இருக்கீங்களே அது தான் எனக்கு தெரியலைனு ஆகிடுச்சுல. என்ன நடந்துச்சுனு நீங்களே சொல்லுங்க." அலுப்பும் கோபமுமாக கேட்டார் அபிராமி.

"பொண்ணுக்கு எல்லாரும் நலங்கு வெச்சப்போ நம்ம வீட்டு பொண்ணுங்க நீங்க யாரும் ஏன் வெக்கலை?"

"நான் மாமியார் ங்க. வைக்குற பழக்கம் இல்லை."

"சரி."

"பார்கவி மாசமா இருக்கிறதால வைக்க கூடாது."

"சரி." அவர் சொன்ன சரியிலேயே அவர் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு இருப்பது தெரிந்தது.

"மீனா வைக்க வேண்டியது தான் ஆனா அந்த நேரம்னு பார்த்து அவ பந்தியை பார்க்க போய்ட்டா. சரினு நான் அவசரத்துக்கு உங்க அண்ணன் மருமகளை வைக்க சொன்னேன்."

"மீனா இல்லைனு தான் நீ ஆளை மாத்தினியா?" நேராக பார்த்துக் கேட்டார் காசிநாதன்.

"பின்னே? அது தான் நாங்க போட்டு வச்சிருந்த லிஸ்டுல மீனா பேர் இருந்ததே. சொல்லேன் மீனா."

மனைவிக்கு அங்கே நடந்தது உண்மையாக தெரியவில்லை என்று புரியவும் மீனட்சியின் பக்கம் திரும்பினார்.

"நீ ஏன் அங்க இருக்காம பந்திக்கு போனே?"

"அது அங்க வேலை இருந்துச்சு போனேன்." என்றாள் மீனாட்சி மழுப்பலாக.

"மீனு..."

"ப்ச் என்ன மாமா. பந்திக்கு போனேன். பசிச்சிது ஒரு லட்டு எடுத்து சாப்பிட போனேன். இதெல்லாம் ஒரு விஷயம்னு கேக்குறீங்களே." அலுத்துக் கொண்டே எழப்போனாள் மீனாட்சி.

"உனக்கு லட்டு பிடிக்காதே?" சந்தேகம் கேட்டான் விசு.

"உன்னை இப்போ கேட்டங்களா?" அவனிடம் பாய்ந்தாள் மீனா.

"அவன் சொல்லி தான் உனக்கு லட்டு பிடிக்காதுன்னு எனக்கு தெரியனுமா? சொல்லு ஏன் போனே?" கர்ஜனையாக வந்தது காசிநாதனின் குரல்.

மீனாட்சி பதில் சொல்லாமல் தரையை பார்த்தாள்.

ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது என்று உந்த அபிராமி மருமகளை பார்த்தார்.

"ஏன் மீனா?"

"சம்பந்தி வீட்டுல அவ காது படவே பேசிகிட்டு இருந்தாங்க. அவ நலங்கு வச்சா அபசகுனமாம். அங்கே இருந்து அவ உடனே போகவும் உன் கிட்ட சொல்லி சரி கட்டுவானு பார்த்தேன். அவ உன் கிட்ட வந்து பேசுறதையும் பார்த்தேன். சரி நீங்க உங்களுக்குள பார்த்துக்குவீங்கன்னு சும்மா இருந்திட்டேன். ஆனா கடைசி வரைக்கும் மீனா நலங்கே வைக்கலை. நீ வேணும்னு தான் அப்படி செஞ்சேன்னு உன்னை தப்பா நினைச்சிட்டேன் அபி. மன்னிச்சிரு." இது தான் காசிநாதன். மூக்கின் மேல் கோபம் வந்தாலும் தன் தவறை உணர்ந்துவிட்டால் உடனே மன்னிப்பும் கேட்டுவிடுவார். அதனாலேயே அவர் கோபங்களை பொறுத்து போக முடிந்தது அபிராமியால்.

"என்ன மீனா சொன்னாங்க?" அபிராமி விசாரித்தார்.

"ப்ச் பெருசா எதுவும் இல்லை. மாமா நீங்க ஏன் இதை பெருசு படுத்துறீங்க?" அங்கிருந்து விலகவே பார்த்தாள் மீனாட்சி.

"நீ சொல்ல மாட்டே. இவளுக்கு கல்யாணமாகி அஞ்சு வருஷம் ஆகியும் குழந்தை இல்லையாம். அதனால இவ ஏதாவது செஞ்சா அபசகுனமாம். இதை கேட்டுட்டு நீ ஏன் சும்மா இருந்த மீனா?"

"மாமா. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு நம்பிக்கை. அவங்க எண்ணம் அது தான் அப்படினா அது தப்புனு சொல்ல நாம யாரு?"

"அதெப்படி? அதுக்காக அவங்க நம்பிக்கைக்காக உன் உரிமையை விட்டு கொடுப்பியா?" கோபமாக கேட்டார் காசிநாதன்.

"நான் எங்கே விட்டுக்கொடுத்தேன்? இதோ இங்கே நம்ம எடத்துல நான் தானே ஆலம் சுற்றினேன். அவ்வளவு தான். அங்க போய் நான் செஞ்சே தீருவேன்னு அடம் பிடிச்சு பிரச்சனை செஞ்சு நாம என்ன சாதிக்க போறோம்?" பொறுமையாக கேட்டாள் மீனாட்சி.

"அதெப்படி நம்ம வீட்டு பொண்ணை சொல்லுவாங்க? நான் அப்போவே அமரன் கிட்ட சொல்லி இருக்கனும். நீ அபிராமி கிட்ட சொல்லுவனு நினைச்சுகிட்டு சும்மா இருந்திருக்க கூடாது."

அவர் தானே.. கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பார் என்று மனதினுள் சடைத்துக் கொண்டவள் "சும்மா இருந்ததால என்ன கெட்டுப்போச்சு? நீங்க சொன்னா மாதிரி நான் அத்தைகிட்ட சொல்லி அவங்க என்னை நலங்கு வைக்க சொல்லி அந்த வீட்டு பாட்டி சபையில அதை தடுத்து அது ஒரு பிரச்சனை ஆகி... எதுக்கு இதெல்லாம்? இன்னைக்கு ஹீரோ நம்ம விசு. ஹீரோயின் நந்தனா. அவங்க ரெண்டு பேரோட சந்தோசம் தான் இன்னைக்கு பிரதானமா இருக்கனும். அதை விட்டுட்டு சாம்பாருல உப்பு இல்லை... வெண்டைக்காய் பொரியல் வேகலனு பிரச்சனை பண்ணிட்டு இருக்க கூடாது." என்று கேலியாக சொன்னாள்.

"ப்ச்.. இது என்ன அவ்வளவு சாதாரண விஷயமா?"

"அப்படி தான் எடுத்துக்கணும். இதனால யாருக்கு என்ன கஷ்டம்?"

"உனக்கு? உன்னை அவமான படுத்தி இருக்காங்களே?"

"அதை அவமானமா எடுத்துக்கிட்டா தானே??? அவங்க அறிவு அவ்வளவு தான். அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான். நாம விலகி வந்துட்டா அங்க பிரச்சனைக்கே வாய்ப்பில்லையே?"

"எனக்கு இன்னும் மனசே கேட்கலை." என்று மேலும் காசிநாதன் புலம்பவும் "மாமா மாமா மாமா. நம்மளை மத்தவங்க எப்படி நடத்தினாலும் அதை நாம எப்படி எடுத்திக்கிறோம் அப்டிங்கிறதுல தான் இருக்கு. கோபமோ வருத்தமோ அவமானமோ அது அவங்களோட எண்ணம் தகுதி அதை தான் காட்டுது. நம்ம செல்ப் வார்த் நமக்கு தான் தெரியும். சின்ன வயசுல ஒரு விளையாட்டு விளையாடுவோம். யாராவது நம்மை திட்டினா மிரர் அப்படினு சொல்லுவோம். அதுக்கு என்ன அர்த்தம்னா அவங்க நம்மள என்ன சொன்னாலும் அது அப்படியே ரெபிளெக்ட் ஆகி அவங்களுக்கு அந்த வார்த்தை போய்டும் அப்படினு. அதுல இன்னொரு நன்மை கண்ணாடி அப்டிங்கிறதால அந்த வார்த்தை நம்மள எந்த விதத்திலும் பாதிக்காது என்பது தான். அதையே வாழ்க்கையிலும் செஞ்சிடனும். நம்மள சுத்தி ஒரு கண்ணாடியை வச்சிட்டா யார் என்ன சொன்னாலும் அது நம்மை பாதிக்காது. அது அவங்களுக்கே போய் சேர்ந்திடும். நல்லது நினைச்சாங்கன்னா நல்லது.  கெட்டது நினைச்சாங்கனா கெட்டது. சோ சிம்பிள்." என்று தோள்களை குலுக்கிவிட்டு சென்றாள் மீனாட்சி.

இப்படி பேசியே எல்லாரையும் மயக்கி வச்சிடு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார் அபிராமி.

அங்கிருந்தவர்களும் அதற்கு மேல் பேச என்ன இருக்கிறது என்பது போல கலைய ஆரம்பித்தனர்.

"என்ன பீசுடா இவ? இவளுக்கு கோவமே வராதா?" பெருமையும் ஆச்சரியமுமாக கேட்டான் தேவா.

"அதை தான் டா நானும் யோசிச்சேன். எனக்கே அப்பா சொன்னப்போ கோவம் வந்துச்சு. நாளைக்கு நந்தனா கிட்ட இதை பற்றி பேசணும்."

அங்கே வந்த மீனா "எதுக்கு அவளை கஷ்டப்படுத்துறதுக்கா? தேவை இல்லாத வேலை. நீ வேற வேலை இருந்தா பாரு போ. முதல்ல ஹனிமூன் எங்கேன்னு பேசி முடிவு பண்ணுங்க. அப்புறம் இவனை மாதிரி கோட்டை விட்டுட்டு பக்கத்துல ஏற்காடுக்கு போகாதீங்க." என்றாள்.

"சரிங்க ஆபீசர்." என்று பவ்வியமாக சொல்வது போல விசு சொல்லவும் அவனை விரல் நீட்டி பத்திரம் காட்டிவிட்டு சென்றாள்.

"பார்கவி என்னை மன்னிச்சு விட்டாலும் இவ காலத்துக்கும் சொல்லி காட்டுவா போல."

"பின்ன? அக்கா எத்தனை தடவை உங்களுக்கு ஞாபகப் படுத்தி இருப்பாங்க? என்கிட்ட பாஸ்போர்ட் இருக்கானு கேட்க சொல்லி. கடைசி நிமிஷத்துல வந்து பாஸ்போர்ட் கேட்டு அது வராம ஏற்காடுக்கு தானே போனோம்." பின்னே இருந்து வந்தது பார்கவியின் குரல்.

"உனக்கு அது பிடிச்சிருந்ததுனு சொன்னியே?"

"அதனால தான் இது வரைக்கும் உங்களோட நான் சண்டை போடல. ஆனா அக்கா கேட்க அவங்களுக்கு எல்லா உரிமையும் இருக்குனு சொன்னேன். அவ்வளவு தான்."

"இவ்வளவு பேசுறாளே உங்கொக்கா அவ எங்க போனாளாம் ? என்னைக்காவது கேட்டு இருக்கியா?"

"எங்கே?"

"எங்கேயுமே போகலை. அது தான் அங்க சிறப்பே." என்று சொல்லி விசு கை விரித்தான்.

"ஏன்?"

"அதுக்கு பதில் அந்த ஆண்டவனுக்கும் திரு மற்றும் திருமதி அமரனுக்கும் மட்டும் தான் தெரியும்." என்று சொல்லி பெருமூச்சு விட்டு சென்றான் விசு.

குழப்பத்துடன் கணவனை பார்த்தாள் பார்கவி.


Leave a comment


Comments


Related Post