இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு - 2 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 17-02-2024

Total Views: 45383

கிராமத்து சமையல் எப்போதும் அலாதி சுவைதான்… என்னதான் நகரத்தில் நாசூக்காய் சமைத்தாலும் கிராமத்து கைமணத்தின் ருசியை அடித்துக் கொள்ளவே முடியாது… உப்பு காரம் உறைப்பு என்று கணக்காகப் போட்டு அன்பை மட்டும் அஜினோமோட்டோ போல் ருசிக்காக இணைக்காமல் அடிமனதில் இருந்து ஆத்மார்த்தமாக அள்ளித் தெளிப்பதால் சுவை கூடுதலாய் தெரிகிறதோ என்னவோ. கிராமத்து பாட்டிமார்கள் அன்னைமார்களின் அஜினோமோட்டோ அன்புதான். மசாலா கலவைகளை மிக்ஸியில் அரைக்காமல் ஆட்டு உரலிலும் அம்மிக் கல்லிலும் அரைப்பதால் சுவையின் பங்கு அதிகரித்துப் போகிறது.


இதோ… பேரனுக்காக நல்ல விடைக் கோழியாய் பிடித்து நெருப்பில் வாடி மஞ்சள் தடவி பக்குவமாக நறுக்கி பாங்காக மசாலாக்களை சேர்த்து கை உதவிக்கு மட்டும் மருமகளை வைத்துக்கொண்டு மொத்த சமையலையும் செய்து முடித்தது சின்னப்பொண்ணு பாட்டிதான். வீட்டின் பின் கட்டில் இருந்து வாழை இலைகளை வெட்டி வந்து பரிமாறுவதற்கு தயாராக அனைத்தும் எடுத்து வைக்கப்பட்டன. உணவின் வாசம் இரண்டாம்  தளம்வரை எட்டிப் பார்க்க அங்கு நின்றபடி தவசிபுரத்தின் அழகை கண்கள் நிறைத்து ரசித்துக் கொண்டிருந்த தரணியின் தோள் தொட்டான் முகிலன்.


“வயிறு சத்தம் போட ஆரம்பிச்சிருச்சுடா… போகலாம்…”


இருவரும் பேசி சிரித்தபடியே கீழே இறங்கி வந்தனர். ஆண்கள் அனைவரும் அமர்ந்துகொள்ள பெண்கள் பரிமாறத் தொடங்கினர். பொலபொலவென உதிர்ந்து விழுந்த ஆவி பறக்கும் முல்லைப்பூ போன்ற சாதத்தில் கறியுடன் அள்ளி குழம்பை ஊற்ற தன்னிச்சையாக நாவில் எச்சில் ஊறி விழுங்கிக் கொண்டனர் அனைவரும். வருத்த முட்டை, கொதகொதவென கறியாக மட்டும் தனியாக சிக்கன் கிரேவி, அதோடு உருண்டைகளாக சிலவற்றை இலையில் அடுக்க மொறுமொறுவென உருண்டை வடிவில் இருந்த பதார்த்தம் என்னவென்று புரியாமல் விழித்தான் தரணிதரன்.


“அட அப்பத்தா… கோலா உருண்டை பண்ணினியா…?” ஆச்சரியத்துடன் கேட்டு ஆர்வமாய் அவற்றை எடுத்து அந்த உருண்டை பதார்த்தத்தை வாயில் போட்டுக் கொண்டான் முகிலன். 


கண் மூடி ரசித்து உண்டவன் “ஆஹா… கோலா உருண்டை சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு… அருமை அப்பத்தா‌… உன் கை ருசி மாறவே இல்ல…” சிலாகித்தான்.


“உனக்குத்தான் அது நொம்ப பிடிக்குமே… அதுக்குத்தேன் பண்ணினேன்… நல்லா வள்ளு வதக்குன்னு சாப்பிடுங்க ரெண்டு பேரும்…”


பக்கவாட்டில் கால்களை நீட்டியபடி அருகில் அமர்ந்து பரிமாறத் தொடங்கினார் பாட்டி. உண்மையில் மெய்மறந்து ருசித்து சாப்பிட்டவன் தரணிதரன்தான். என்னதான் கை நிறைய வருமானமும் வசதியும் இருந்தாலும் வாய்க்கு ருசியான உணவு கிடைக்க கொடுப்பினை வேண்டும். கிராம வாசம் தெரியாமல் வளர்ந்தவன் தரணி… சொந்த பந்தங்களின் அருகாமையும் அனுசரணையும் அன்பும் கிடைக்காமல் போன துர்பாக்கியசாலிதான் அவன்… ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சிறு வயதில் இருந்தே விடுதி வாழ்க்கைதான்… கல்விதான் பிரதானம் என்று ஆறாம் வகுப்பு முதல் வலுக்கட்டாயமாய் விடுதிக்கு தள்ளப்பட்டவன். 


மாதம் ஒருமுறை இன்ஸ்டால்மெண்டில் அன்பை கொடுத்துச் செல்லும் கார்ப்பரேட் பெற்றோர். பள்ளி வாழ்க்கையை முடித்து கல்லூரிக்குள் அடி எடுத்து வைத்த போதும் அதே கட்டமைக்கப்பட்ட வாழ்க்கைதான். குழந்தையில் இருந்த ஏக்கக்கத்தை ஒரு கட்டத்தில் மனம் ஏற்றுக்கொண்டு அந்த வாழ்க்கைக்கு பழக்கப்படுத்திக் கொண்டது. பெற்றவர்களுக்கு அவன் மீது அன்பு உண்டு… ஆனால் அதில் கட்டமைப்புடன் கூடிய அளவீடுதான் விஞ்சி நிற்கும்.


சில நேரங்களில் இவ்வளவுதான் வாழ்க்கையா என்று மனம் சோர்வடையும்… மாற்று வாழ்க்கை தேடி மனம் மருகும்… ஆனால் நிதர்சனம் வேறல்லவா… பெற்றவர்களின் எதிர்பார்ப்பை இரண்டு விஷயங்களில் முழுமையாக பூர்த்தி செய்திருந்தான். ஒன்று கல்வியில் முதல்நிலை மாணவன்… இன்னொன்று ஒழுக்கத்தில் முதன்மையானவன். பெற்றவர்களுக்கு இதைத் தாண்டிய பெரும் பாக்கியம் வேறு இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் அவனுக்குள் ஆழமாக நிறைய ஆசைகள் எதிர்பார்ப்புகள் ஏக்கங்கள் என்று சிறிது சிறிதாக கொட்டப்பட்டு சேகரமாகி மலைபோல் உயர்ந்து ஓரமாக நிற்பது அவனுக்கு மட்டும்தானே தெரியும்.


கேம்பஸ் இன்டர்வியூவில் அவனது மதிப்பெண்களுக்கும் திறமைக்கும் அலேக்காக அள்ளிச் சென்று கொண்டது பெங்களூருவின் அந்த பெரிய நிறுவனம். மீண்டும் ஹைடெக் கார்பரேட் வாழ்க்கை. அதே நிறுவனத்தில் அதே பேட்ச்சில் வேலைக்கு வந்து அமர்ந்தவன்தான் கார்முகிலன். பல விஷயங்கள் இருவருக்கும் ஒத்துப்போக சின்ன சிநேகம் நல்ல நட்பாக உருவெடுத்து ஒரு கட்டத்தில் உயிர் நண்பர்களாக உருமாறிப் போனார்கள். கடந்த ஆறு ஆண்டுகளாய் நகமும் சதையுமாகத்தான் இருவரும்.


இப்படி ஒரு அழகான ஊர்… அன்பை கொட்டிக் கொடுக்கும் சொந்தங்கள்… வசதிக்கு குறைவில்லாத வாழ்க்கை… ஆனாலும் கார்முகிலனின் கனவு கார்ப்பரேட் வாழ்க்கையை அல்லவா விரும்பி ஏற்றுக் கொண்டது. அவனது ஆசைக்கும் திறமைக்கும் பெரியவர்கள் தடை சொல்லாமல் மதிப்பு கொடுத்து ஒதுங்கிக் கொண்டனர். வருடம் மூன்று முறை மட்டுமே ஊருக்கு வந்து செல்வான் முகிலன். கிராமத்து வாழ்க்கையை வெறுப்பவன் என்று சொல்லிவிட முடியாது… நகரத்து வாழ்க்கையின் நளினத்தை அதிகமாக நேசிப்பவன் என்று சொல்லலாம். நண்பனின் வற்புறுத்தலால் தரணிதரன் உடன் கிளம்பி வந்திருந்தாலும் இந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் ஆசை தீர அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.


வஞ்சகம் இன்றி அள்ளி அள்ளி பாட்டி பரிமாறிக் கொண்டிருக்க நண்பர்கள் இருவரும் முட்ட முட்ட உள்ளே தள்ளிக் கொண்டிருந்தனர். ருசி அப்படி… அந்த கோலா உருண்டைதான் தரணிதரனை மிகவும் ஈர்த்தது.


“பாட்டிம்மா… இந்த டிஷ் ரொம்ப சூப்பர்… இதை இதுக்கு முன்னால நான் சாப்பிட்டதே இல்ல…” ரசித்து சுவைத்தபடி கூறியவனை கண்களில் கனிவுடன் பார்த்தார் சின்னப்பொண்ணு பாட்டி.


“அது ஆட்டுக்கறியை கொலவியில போட்டு மைய ஆட்டி உருண்டையா புடிச்சு எண்ணெயில பொறிக்கிறது… கோலா உருண்டைன்டு சொல்லுவோம்… அதுக்கு என்ன…? நீங்க ஊருக்கு போற வரைக்கும் நெதமும் செஞ்சு கொடுக்கிறேன்… நல்லா சாப்பிடுய்யா… அதென்ன பாட்டிம்மா…? நீயும் அப்பத்தான்டே கூப்பிடு…” என்றார் உரிமையாய். வயிறார உண்டு முடித்து பெரிய ஏப்பங்களுடன் எழுந்து கொண்டனர் அனைவரும்.


“அத்த… நரிச்சின்னக்கா எங்கே…? இன்னும் காணோம்…” கை கழுவி ஈரத்தை துடைத்தபடியே வந்து சோபாவில் அமர்ந்தபடி கேட்டான் முகிலன்.


“அங்கேயே சாப்பிட்டுத்தான் வருவா… சாப்பிடாம வந்தா அவுக சங்கடப்படுவாகல்ல…” என்ற மல்லிகா தானும் உணவருந்த அமர செண்பகமும் பாட்டியும் உடன் அமர்ந்து உணவு உண்ணத் தொடங்கினர்.


“அப்பா மூனு நாள்தான் லீவு போட்டு வந்திருக்கேன்… அதுக்குள்ளயும் வேலையெல்லாம் முடிஞ்சிடும்ல…” பாக்குப் பொட்டலத்தை பிரித்து வாயில் போட்டபடியே கேட்டான் முகிலன்.


“வரும்போதெல்லாம் நேரத்தை குறிச்சிட்டு வந்துருவியா…? ஒரு வாரம் பத்து நாள் எங்க கூட இருக்க மாட்டியா…? வந்ததும் கிளம்பறதைப் பத்தி பேசுற…” சாப்பிடுவதை நிறுத்தி கோபமாய் பேசினார் பாட்டி.


“என்னோட வேலை அப்படி அப்பத்தா… தரணிகிட்ட வேணாலும் கேட்டுப் பாரு… பெரிய போஸ்டிங்ல இருக்கோம்… நிறைய சாக்ரிஃபைஸ் பண்ணித்தான் ஆகணும்…”


“என்னத்தையோ இங்கிலிபீஸ்ல சொல்ற… மண்டையை மட்டும்தானே நாங்க ஆட்டுவோம்… உன் கல்யாணத்துக்காவது பத்து இருவது நாள் சேர்த்து லீவு போட்டுட்டு வருவியா… இல்ல தாலி கட்டின உடனே ஓடிருவியா…” சலிப்போடு கேட்டவரை தரணிதரன்தான் சங்கடத்துடன் பார்த்திருந்தான்.


“நாளைக்கு பத்திர ஆபீஸ்க்கு வரச் சொல்லி இருக்காங்க தம்பி… எல்லாத்தையும் கறால் பண்ணி தனித்தனியா எழுதியாச்சு… நீ கையெழுத்து போட வேண்டியதை போட்டுரு… மேக்க இருக்கிற தோட்டத்து பத்திரம்தான் இன்னும் தயாராகல… அதுக்கு மட்டும் ரெண்டு நாள் முன்னப் பின்ன ஆகும்… அதுலயும் நீ கையெழுத்து போடணுமே…” தன் தலையை சொரிந்தார் மணிவாசகம்.


“எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சுட்டு கூப்பிட்டு இருக்கலாமேப்பா… வேலையை இழுத்து விட்டுட்டாங்கன்னா என்ன பண்றது…? மூனு நாள்தான் என்னால இருக்க முடியும்… சீக்கிரமா அந்த வேலையை பார்க்கச் சொல்லுங்க…” கறாராய் பேசியவனை தர்மசங்கடமாய் பார்த்தனர் அனைவரும்.


“டேய்… பாத்துக்கலாம் விடுடா… ரெண்டு பேருமே லேப்டாப்பை கையில எடுத்துட்டுதானே வந்திருக்கோம்… இங்கே இருந்தே கூட கரெக்ட் பண்ணி வேலையை முடிச்சு கொடுப்போம்… வந்தவுடனே ஏன் எல்லாரையும் சங்கடப்படுத்துற…? அடுத்தவங்க மனசை புரிஞ்சு நடந்துக்கோடா…” முகிலனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினான் தரணி.


“நம்மால இங்கே இருந்தே வேலை செய்ய முடியும்னு தெரிஞ்சா பத்து நாளைக்கு டேரா போட வச்சிரும் என் அப்பத்தா…”


“அதனால என்ன…? சொந்தபந்தங்கள் கூட சேர்ந்து இருக்கிறது ஒரு வரம்டா… அது கிடைக்கும்போது சந்தோசமா அனுபவிக்கணும்… நிழலோட அருமை வெயில்ல இருக்கிறவனுக்குத்தான் தெரியும்… யாரையும் சங்கடப்படுத்தாம வேலையை திருப்தியா முடிச்சு கொடுத்துட்டு கிளம்பு…”


அக்கறையாய் அறிவுரை கூறிய நண்பனிடம் எதிர்வாதம் செய்ய முகிலனால் முடியவில்லை. தரணியின் நிதானமும் தீர்க்கமாய் ஆலோசிக்கும் திறமையும் முகிலனுக்கு கொஞ்சம் மிஸ்ஸிங் என்றே சொல்லலாம். வேலை விஷயமாகவோ தனிப்பட்ட விஷயமாகவோ குழப்பமான சூழ்நிலைகளில் எல்லாம் தரணியின் ஆலோசனைகளும் வழிகாட்டுதலும்தான் முகிலனை சரியாக வழி நடத்திச் செல்லும்.


“ஊரையெல்லாம் சுத்தி பார்க்கணும்டா… எப்போ போகலாம்…?” ஆர்வமாய் கேட்டான் தரணி.


“வயிறு முட்ட சாப்பிட்டிருக்கோம்… வெயில் வேற படைக்குது… ஒரு மணி நேரம் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு சாயந்தரம் போகலாம்…” முகிலனின் கூற்றுக்கு சரி என்று ஆமோதித்து இருவரும் தங்களுக்கான அறைக்குச் செல்ல எழுந்து கொண்டனர். வாசலில் ஸ்கூட்டி வந்து நிற்கும் சத்தம்.


“இதோ வந்துட்டாய்யா… உன் நரிச்சின்னக்கா…” என்ற பாட்டி வெற்றிலையால் சிவப்பேறி இருந்த காரைப் பற்கள் தெரிய சிரிக்க “எம்மோவ்… அவ மட்டும் இதை காதுல கேட்டா உன் தண்டட்டியோட சேர்த்து காதையும் அத்துட்டு போயிருவா… காலம் போன கடைசியில காது இல்லாம சுத்தப் போறியா… வாய மூடிக்கிட்டு இரு…” என்றார் மணிவாசகம்.


“அம்மாச்சி… ஏய் கெழவி… எந்திரிச்சு வெளியே வா…” சத்தமான குரல் மட்டும் வாசலில் இருந்து உள்ளே வந்தது.


“நான் மெதுவாத்தானே சொன்னேன்… பசப்பியோட பாம்பு காதுல விழுந்திருச்சா… என்னை உண்டு இல்லைன்னு பண்ணிருவாளே…” கவலைப்பட்டுக் கொண்டார் பாட்டி.


“ஏ கெழவி… இப்போ நீ வெளியே வர்றியா… இல்ல நான் வண்டியோட உள்ளே வந்து உன் மேல ஏத்தட்டுமா…?” அதட்டலான குரலில் “வாரேன்டி சீயான் மகளே… என் வீட்டு சீமான் கையால ஒனக்கு தாலிய கட்டவச்சு சிண்ட புடிச்சு இழுத்துட்டு வந்து உன் கையையும் காலையும் விறகுக்கு பதிலா உடைச்சு அடுப்புல வைக்கிறானா இல்லையா பாரு…” புலம்பியபடியே தரையில் கையை ஊன்றி எழுந்து கொண்டவர் வேக நடை போட்டு வெளியே போனார்.


“அராத்து… உள்ளே நுழையும்போதே எப்படி அட்ராசிட்டி பண்ணுது பாரு…” தரணியிடம் தலைசாய்த்துக் கூறி சிரித்தான் முகிலன். அந்த அராத்து ஆனந்தியைக் காண தரணிக்கும் பேராவல்… அனைவரின் கண்களும் வாசலையே பார்த்திருந்தன.


“வந்தும் வராம எதுக்குடி தொண்டை கிழிய கத்துறவ… என் பேரன் வந்துட்டாய்ன்… கூட அவன் சோக்காலியும் வந்திருக்கியான்… அடக்க ஒடுக்கமா பொம்பளப் புள்ள மாதிரி இரு…”


“அடடா… உன் பேரனுக்கு மட்டும் தனியா ரெண்டு கொம்பும் நாலு வாலும் முளைச்சிருக்கோ… பார்த்து அப்படியே நடுங்கி போறதுக்கு… போவியா…” அசட்டையாய் சொன்னபடியே வண்டியில் இருந்து இறங்காமல் அதே நிலையில் அமர்ந்திருந்தாள் அராத்து ஆனந்தி… அதுதாங்க நம்ம பூச்செண்டு. அவள் பெயரை யார் கேட்டாலும் சொல்லும்போது மனது முழுக்க வேதனையும் வெறியும் கிளம்பும்.


“உனக்கு கூட மல்லிகான்னு கொஞ்சம் சொல்லிக்கிற மாதிரி ஒரு பேர் வச்சுக்கிட்ட… நான் என்ன பாவம் பண்ணினேன்…? எனக்கு ஏன் இப்படி ஒரு பேர் வச்ச…?” அடிக்கடி மல்லுக்கு நின்று மல்லிகாவை உண்டு இல்லை என்று ஆக்குவாள்.


“நான் எங்கேடி பேர் வச்சேன்…? உன் அம்மாச்சிதான் ஆசையா வச்சது…”


அவ்வளவுதான்… கிழவியின் மீது கோபம் கொள்ள இது ஒன்றே போதுமான காரணமாகிப் போனது… வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வகையாக தன் அம்மாச்சியை வாரிக்கொண்டே இருப்பாள் பூச்செண்டு. ஆனால் அவளுக்குப் புரியவில்லை… மிக மிக அரிதான அழகான பெயர் அதுவென்று… பொருத்தமான பெயரை அல்லவா பாட்டி சூட்டி இருக்கிறார்… ஒற்றைப் பூவைவிட மொத்தக் குவியலான பூக்களின் அழகு தனித்துவம்தானே… அவளும்கூட பூக்குவியல்தான்… பல பூக்களை ஒன்று சேர்த்து உருவாக்கிய அழகான பூச்செண்டு… கிராமத்து தேவதை… அவள் பெயரின் அழகை அவளும் ஒரு நாள் உணர்ந்து கொள்வாள்… உணர வைப்பான் அவன்.


கால்கள் இரண்டையும் தரையில் அழுத்தமாய் ஊன்றி கைகளை கட்டியபடி வண்டியில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தவளை முறைத்தார் பாட்டி.


“என்னத்துக்கு தொண்டை மென்னிய போட்டு கத்தின…?”


“நான் வண்டி நிறுத்தற இடத்தில மொளகாயை காயப் போடக்கூடாதுன்னு சொல்லி இருக்கேனா இல்லையா… இம்மாம் பெரிய வாசல்ல வேணுன்னே இங்ஙனதான் கொட்டி வெப்பியா கிழவி…” முகத்தை சுளித்தபடி கூறினாள்.


“ஏன் இங்ஙனயேதான் இந்த வண்டி ஏறிக்கிட்டு நிக்குமோ… அங்கிட்டு தள்ளி நிறுத்தினா ஆகாதோ… ரொம்பத்தான்டி ரப்பு புடிச்சு அலையுற… இரு இரு… சீக்கிரமா மூக்கணாங்கயிறு போட்டு ஒன்ன இழுத்துட்டு வந்து இடுப்ப ஒடிக்கிறேன்…” புலம்பியபடியே பெரிய கோணிச் சாக்கில் கொட்டி பரப்பி விடப்பட்டிருந்த மிளகாயை இழுத்து நகர்த்தி வைத்தார் பாட்டி.


“ம்… அது…” அமர்த்தலாய் கூறி வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவள் சாவியை சுழற்றியபடியே “ஓய்…முனி மாமா…” என்று சத்தமிட்டபடி வேகமாய் உள்ளே ஓடி சரியாய் இல்லையில்லை தவறுதலாய் தரணியின் மடியில் அமர்ந்திருந்தாள்.


(தொடரும்)


Leave a comment


Comments


Related Post