இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வலி தரும் நேசம் - 4 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK019 Published on 17-02-2024

Total Views: 21828

பகுதி 4 

மீனா மேல் வேலை செய்யும் கனகத்தின் உதவியுடன் இரவு உணவிற்காக தயார் செய்து கொண்டு இருந்தாள்.

பார்கவி சமையல் அறைக்குள் வரவும் "வா கவி. எதாவது வேணுமா?"

"இல்லை கா. ரூம்ல இருக்க போர் அடிச்சுது. அதான் வந்தேன்."

"சரி உட்கார்." என்று சமையல் அறையில் இருந்த சிறு மேஜை பக்கம் கையை காட்டியவள் தான் பிசைந்த சப்பாத்தி மாவை எடுத்து வந்து பார்கவியின் முன் வைத்து "இந்த இதை உருட்டி கொடு." என்றாள்.

பார்கவி உருட்டிக் கொண்டே மீனாட்சியை பார்த்துக் கொண்டு இருந்தாள். 

அவள் திருமணமாகி இந்த வீட்டிற்கு வந்த இந்த எட்டு மாதங்களாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள். மீனாட்சி யார் மீதும் கோபப்பட்டு அவள் பார்த்தது இல்லை. சோர்ந்து உட்கார்ந்தும் பார்த்தது இல்லை. வீட்டில் சில நேரம் பார்கவி காது படவே அபிராமி அவளை எதாவது குறை சொன்னால் கூட அதை சாதரணமாக கடந்து விடுவாள். 

பார்கவி இங்கே வந்த இத்தனை மாதங்களில் ஒரு நாள் கூட அவளை போட்டியாக பார்த்தது இல்லை. புதிதில் அந்த வீட்டு பழக்க வழக்கங்களை இவளுக்கு சொல்லி கொடுத்த போது ஆகட்டும் அதில் சில பொறுப்புகளை பங்கிட்டு கொண்டது ஆகட்டும் எதிலும் போட்டியோ உரிமையோ இருந்தது இல்லை. இத்தனைக்கும் இது அவளுக்கு தாய் மாமன் வீடு. அம்மா சொன்னது போல இது என் இடம் என்ற எண்ணம் அவளுக்கு இருந்தாலும் தப்பில்லை.

ஆனால் முதல் நாளில் இருந்தே அந்த வீட்டில் ஒருத்தியாக தான் பார்கவியை உணர வைத்தாள் மீனாட்சி. அதே நேரம் நீ வந்துவிட்டாய் எனக்கு வேலை மிச்சம் என்று வேலைகளை அவள் தலையிலும் கட்டவில்லை. இதோ இப்போது போல வேலையில் பங்கும் கொடுத்தாள் அதே நேரம் அது சமமாக இருக்கமாறு பார்த்தும் கொண்டாள். பார்கவி பிள்ளை உண்டாகி இருப்பது தெரிந்து அபிராமியை போல கலப்படம் அற்ற சந்தோஷத்தை காட்டினாள் மீனா. அதற்கும் ஒரு படி மேலே போய் நெட்டில் தேடி தேடி அவளுக்கு தேவையானதை செய்தாள்.

இத்தனைக்கும் உறவு முறை மரியாதைக்காக அக்கா என்று அழைத்தாலும் தன்னை விட இரண்டு வயது தான் மூத்தவள். எத்தனை முதிர்ச்சியுடன் நடந்து கொள்கிறாள்?

தன்னை விட ஐந்து வயது மூத்த அண்ணி திருமணம் ஆகி வந்த நாளில் இருந்து எப்படியெல்லாம் நடந்து கொள்கிறாள். மீனா நிஜமாகவே கிரேட் என்று நினைத்துக் கொண்டாள் பார்கவி.

அதே நேரம் பார்கவிக்கு மீனா அமரன் வாழ்க்கை ஒரு புதிர் தான். அவர்கள் இருவரும் நேருக்கு நேர் பேசி அவள் பார்த்ததே இல்லை. அதனால் சண்டையில் இருக்கிறார்களா என்று பார்த்தால் அப்படியும் தெரியவில்லை. காலையில் அமரன் நேராக உணவு உண்ண தான் வருவான். வந்து அவன் மேஜையில் உட்காருவது எப்படி தான் மீனாவிற்கு தெரியுமோ? அவன் வரும் நேரம் சரியாக அங்கே சென்று சூடாக காலை உணவை பரிமாறி விடுவாள். ஒரு நாள் அமரன் வந்த பிறகும் மீனா வராமல் இருக்க அங்கே இருந்த பார்கவி சரி பொங்கல் தானே நாமே வைப்போம் என்று பரிமாற சென்றாள். எதுவும் சொல்லாவிட்டாலும் திரும்பி கிட்சன் பக்கம் பார்த்தான் அமரன். அப்போது சூடாக பொரித்த முந்திரியை தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு வந்தாள் மீனாட்சி. சரி தான். இவர்கள் சிங்க் நமக்கு புரியாது என்று அங்கிருந்து சென்றுவிட்டாள் பார்கவி.

அமரன் எப்போதுமே அமைதியானவன் தான். எப்போதாவது தம்பிகளிடம் பேசுவான். மற்றபடி கடை தன்னறை என்றே இருந்து விடுவான். 

மீனா இது பற்றி குறை பட்டதும் இல்லை. காலை பலகார வேலையை எட்டு மணி போல முடித்துவிட்டு மேலே தன்னறைக்கு சென்று விடுவாள். பின்னர் பதினோரு மணி போல வந்து மத்திய உணவு தயாரித்து ஆண்கள் நால்வருக்கும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வாள். எல்லோருக்குமே அருகில் தான் வேலையிடம் என்பதால் மத்திய உணவு கடையில் இருந்து ஒருவன் வந்து எடுத்து சென்று கொடுத்துவிடுவான்.

மேல் வேலைக்கு என கனகம் இருந்தார். வீட்டு பராமரிப்பு மொத்தம் அவர் பொறுப்பு. மீனா அவள் அறைக்கு சென்ற பிறகு கனகத்தை எல்லா வேலைகளையும் வாங்குவது அபிராமியின் பொறுப்பு. அவர் பெரிதும் சமையல் அறை பக்கம் வருவது இல்லை.

"கனகம்.." என்ற அபிராமியின் குரல் பார்கவியின் எண்ணங்களை தடை செய்தது.

"கனகக்கா இந்த சூப் அத்தை மாமா கிட்ட கொடுத்திடுங்க." என்று இரு கிண்ணங்களை கொடுத்தனுப்பிய மீனா தனக்கும் பார்கவிக்கும் எடுத்துக் கொண்டு வந்து பார்கவியின் முன் அமர்ந்தாள்.

"சொல்லு கவி. என்ன கேட்கணும் உனக்கு? என்னை அப்படி சைட் அடிச்சிட்டு இருந்தே?"

"நீங்க ஏன் கா ஹனிமூன் போகலை?" சட்டென்று கேட்டுவிட்டாள் பார்கவி.

ஆச்சரியமாக பார்த்தாள் மீனா.

"ஓ இன்னைக்கு அவனை சொன்னேன்னு தேவா என்னை சொன்னானா?"

"ஆமா."

சிறிது நேரம் தன் சூப்பை அளைந்து கொண்டு இருந்த மீனா "எங்க கல்யாணம் என்னோட அம்மா இறந்த மறு மாசம் நடந்தது. அப்போ இருந்த மனநிலையில் எங்களுக்கு போக தோணலை. அப்புறம் அப்படியே போயிடிச்சு. அதுக்கும் மேல இதுல பெரிய ரகசியம் எல்லாம் இல்லை."

"அஞ்சு வருஷமாவா?"

"என்ன கவி பண்ணுறது? அவருக்கு கடையை விட்டுட்டு வர முடியலை. எங்க கல்யாணத்துக்கு அப்புறம் தான் இடிச்சு பெருசா கட்டினது. அப்போ தற்காலிகமா வர கடைக்கு மாத்திட்டு போறது அப்புறம் இந்த கடையோட கட்டிட வேலை அதுக்கு அப்புறம் பெரிய கடைக்கேற்ற கொள்முதல் அது இதுனு ஓடிக்கிட்டே இருக்காங்க. வீட்டுலயும் உங்க கல்யாணம் அடுத்து இப்போ விசு கல்யாணம் அப்படினு பொறுப்புகள் இருக்குது இல்லையா?" சொல்லிவிட்டு சப்பாத்தி சுட சென்றாள் மீனாட்சி.

"அக்கா.. அப்புறம்...."

"சொல்லு கவி.ஏன் தயங்குற?"

"அம்மா பேசினதுக்கு நான் சாரி சொல்லிடுரேன். தப்பா எடுத்துக்காதீங்க."

"நான் போட்ட ஜூஸை நீ குடிச்சியா?"

"அப்போவே குடிச்சிட்டேன் கா."

"எனக்கு அவ்வளவு தான் வேணும் கவி. உனக்கு நான் உனக்கோ பாப்பாவுக்கோ கெடுதல் நினைக்க மாட்டேன்னு நம்பிக்கை இருந்தா எனக்கு அது போதும்."

"தேங்க்ஸ் கா. எங்க அம்மா பேசினதுல நீங்க என் கிட்ட கோவிச்சுப்பீங்களோ அப்படினு பயந்துகிட்டு இருந்தேன்."

"அவங்க பேசினதுக்கு நீ என்ன கவி செய்வ? எனக்கு கோவமே வரலை. அப்படியே வந்தாலும் அது உங்க அம்மா மேல தான் வரணும். உன் மேல எதுக்கு வரணும்?"

"கோவமே வரலையா?"

"ஆமாம்."

"அப்போ ஏன் அங்கே இருந்து உடனே போயிட்டீங்க? நீங்க கோவிச்சிக்கிட்டு போறீங்கன்னு தான் நினைச்சேன்."

"அப்படி எல்லாம் இல்லை. அங்கேயே இருந்தா உங்க அம்மா மேல மேல பேசிக்கிட்டே போவாங்க. உனக்கு தான் சங்கடம். என்னாலயும் ஒரு கட்டத்துக்கு மேல அவங்க அறியாமையில பேசுறதை கேட்டுட்டு இருக்க முடியாது. கண்டிப்பா அவங்களுக்கு பாடம் நடத்த ஆரம்பிச்சுருவேன். எனக்கும் அவங்களுக்கும் அது தேவையா? அது தான் சரி எப்படியும் நீ பார்த்துபேனு வந்துட்டேன்."

"செம்ம கா நீங்க." சொன்ன பார்கவியின் குரலில் ஒரு பக்தையின் பரவசம் இருந்தது.

"சரி அதிருக்கட்டும். உனக்கு ஐந்தாம் மாதம்ஜடை பின்னனும்னு அத்தை சொல்லிக்கிட்டு இருந்தாங்க. உங்க அம்மா வீட்டுல செய்யுறது இருக்கட்டும். இங்க நம்ம வீட்டோட உனக்கு ஒரு நாள் செய்யலாமா?"

"எதுக்கு கா வீண் வேலை இருக்குற வேலையில? சீமந்தம் எப்படியும் நம்ம வீட்டுல தானே செய்வாங்க. அது போதும். இன்னும் சின்னவர் கல்யாண வேலை வேற இருக்கும். என்னால எதுலயும் உங்களுக்கு பெருசா உதவியா இருக்க முடியாது. கல்யாணம் சேர குட்டியை பார்க்குற வேலையே சரியா இருக்கும். அதனால இன்னும் அதிகம் வேலையெல்லாம் இழுத்துவிட்டுக்காதீங்க."

"அப்படி சொல்லுறியா? சரி தான்." என்று சொன்ன மீனாட்சி கையில் இருந்த வேலையில் கவனம் செலுத்தினாள்.


Leave a comment


Comments


Related Post