இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வலி தரும் நேசம் - 5 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK019 Published on 18-02-2024

Total Views: 22793

பகுதி 5 

நாட்கள் மெல்லவே நகர்ந்தன. 

திடீரென்று ஒரு ஞாயிறு மாலை நந்தனாவின் பெற்றோர் இவர்கள் வீட்டிற்கு வந்தனர். அவள் தந்தை வழி பாட்டியும் வந்திருந்தார்.

அப்போது வீட்டில் தேவாவும் விசுவும் தான் இருந்தார்கள். காசிநாதனும் அமரனும் கடையில் இருந்தார்கள். பெண்கள் அருகே இருந்த கோவிலுக்கு சென்று இருந்தார்கள்.

அவர்களை வரவேற்று உட்கார வைத்தான் விசு.

தேவா உள்ளே சென்று பார்கவிக்கு அழைத்தான்.

"பாரு என்ன விஷயம்னு தெரியலை. நந்தனா அப்பா அம்மா வந்திருக்காங்க."

"நாங்க இப்போ வீட்டுக்கு தான் வந்துகிட்டு இருக்கோம். அங்க பிரிட்ஜுல அக்கா காலையில செஞ்சு வச்ச பாதாம் கீர் இருக்கும். அடுப்புக்கு வலப்பக்க ஷெல்ப்பில் கப் இருக்கும். ஊற்றி குடுங்க. அதுக்குள்ள நாங்க வந்திடுவோம்."

சமயோஜிதமாக பேசிய மருமகளை மெச்சுதலாக பார்த்த அபிராமி "இப்போ எதுக்கு வந்திருக்காங்கனு தெரியலையே?" என்று சத்தமாக யோசித்தார்.

"இன்னும் அஞ்சு நிமிஷத்துல வீட்டுக்கு போய்விடுவோம் . அப்போ தெரிய போகுது. வாங்க போகலாம்." என்று காரில் ஏறி கிளம்பினாள் மீனா. வீட்டு பெண்கள் உபயோகத்திற்கு என்று ஒரு சிறிய அல்டோவை வாங்கி வைத்து இருந்தார்கள். பெரும்பாலும் அதை மீனா தான் எடுத்து செல்வாள். காசிநாதன் இல்லாமல் எங்காவது போக வேண்டும் என்று அபிராமிக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டால் நம்பிக்கையான ஓட்டுநர் அமர்த்தி எடுத்து செல்வார். திருமணத்திற்கு பின் பார்கவியும் எடுத்தாள். ஆனால் இப்போது மாசமாக இருப்பதால் ஓட்டுவதில்லை. இதை தவிர ஒரு இன்னோவா வைத்திருந்தனர். ஆண்கள் நால்வரும் பைக்கில் சென்று வந்துவிடுவார்கள். வீட்டு உபயோகத்திற்கு என்று ஒரு ஸ்கூட்டியும் இருந்தது. அது மீனா கல்லூரியில் சேர்ந்த போது காசிநாதன் வாங்கி தந்த வண்டி. இப்போதைக்கு யாரேனும் மார்க்கெட் போக வேண்டும் என்றால் மட்டுமே பயன்படுகிறது. 

மீனா வண்டியை ஒட்டிக் கொண்டு வந்து அதற்குறிய இடத்தில் நிறுத்தினாள். 

மூவரும் வீட்டின் உள்ளே சென்ற போது காசிநாதனும் வந்து இருந்தார். அவர் மாலை சிற்றுண்டிக்காக எதேட்சையாக வந்து இருந்தார்.

வந்தவர்களை வரவேற்ற மீனாவும் பார்கவியும் சிற்றுண்டி வேலையை பார்க்க உள்ளே சென்றனர். அவர்களுடன் பேச அமர்ந்தார் அபிராமி.

உள்ளே சென்ற மீனாட்சி பிரீசரை திறந்து அதில் இருந்த ஒரு டப்பாவை எடுத்தாள். அதில் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த கட்லெட்களை எடுத்து எண்ணெய் தடவி அவனில் வைத்தாள். (கட்லட் செய்ய காய்கறிகளை வதக்கி வேகவைத்து உருளைக்கிழங்குடன் உப்பு காரம் சேர்த்து சின்ன உருண்டைகளாக தட்டி கரைத்த மைதா மாவில் தோய்த்து எடுத்து பின்னர் ரொட்டி தூளில் பிரட்டி இதை பிரீசரில் வைத்து விட்டால் வேண்டிய நேரம் எடுத்து பத்தே நிமிடங்களில் கட்லட் பொரித்து கொடுத்துவிடலாம். திடீர் விருந்தினருக்கு கொடுக்க வசதியாக இருக்கும்.)

மாலை சிற்றுண்டிக்காக ஏற்கனவே செய்து வைத்திருந்த சுண்டலுடன் இந்த கட்லெட்டுகளையும் பார்கவி உதவியுடன் தட்டில் வைத்து எல்லோருக்கும் எடுத்து சென்றாள் மீனா.

அவள் கொடுத்த தட்டை வாங்கிக் கொண்ட பாட்டியம்மா அதில் இருந்ததை பார்வை பார்த்துவிட்டு ஹ்ம்ம் பயங்கர சூட்டி இந்த பெண். அதனால் தான் எல்லாரும் இவளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள்.  

அங்கே திருமண தேதி குறித்த பேச்சு நடந்து கொண்டு இருந்தது.

"அது எப்படி சம்பந்தி இன்னும் ஒரு மாசத்துல வைக்க முடியும்?" என்று கேட்டுக் கொண்டு இருந்தார் காசிநாதன்.

"நீங்க கவலையே படாதீங்க. எல்லா வேலைக்கும் நம்ம கிட்ட ஆள் இருக்கு. அவங்க பார்த்துப்பாங்க. அது என்னனா இந்த தேதி தான் ஜோசியர் இவங்க ரெண்டு பேர் ஜாதகத்துக்கு முதல்ல குறிச்சு கொடுத்தது. அதுல நல்ல மண்டபம் கிடைக்கலைனு தான் வேற தேதி கேட்டு அதுல வைக்க முடிவு செஞ்சோம். இப்போ அன்ட் தேதியே பெரிய மண்டபத்துல ஏதோ விசேஷம் ரத்து ஆனதுனால கிடைச்சிருக்கு. ரத்து அப்படினு அபசகுனமா நினைக்க வேணாம். அவங்க ரெண்டு தேதில ப்ளாக் செஞ்சு வச்சிருந்தாங்களாம். இப்போ வேற தேதியில் வைக்க முடிவு செஞ்சதால இந்த நாள் நமக்கு கிடைச்சிருக்கு." என்று விளக்கினார் நந்தனாவின் தந்தை கோவர்தனம்.

"புரியுதுங்க. ஆனா அடுத்த மாசம் சின்ன மருமகளுக்கு ஏழாம் மாசம். சீமந்தம் செய்யலாம்னு பேசி இருக்கோம். அடுத்தடுத்து ரெண்டு விசேஷம்னா கஷ்டமா இருக்குமே." என்று எடுத்து சொன்னார் அபிராமி.

"அதை ஒன்பதாம் மாசம் மாத்திக்கோங்க." அசால்ட்டாக சொன்னார் ராஜேஸ்வரி. அவரை பொறுத்தவரையில் அவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். எவ்வளவு பெரிய இடத்து சம்பந்தம். அதற்குரிய மரியாதை தர வேண்டாமா?

"அது அப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவு செய்ய முடியாதுங்க. அந்த சம்பந்தி கிட்ட பேசணும்." என்று மறுத்தார் காசிநாதன்.

"இதுல பேச என்னங்க இருக்கு? ஏழாம் மாசமோ ஒன்பதாம் மாசமோ எதுல சீமந்தம் வைத்தாலும் நல்லது தான். இன்னும் சொல்ல போனா எங்க வீட்டுல ஒன்பதாம் மாசம் தான் வைப்போமே." என்று முடிவாக சொன்னார் பாட்டியம்மா.

அது உங்க வீடு இது எங்க வீடு என்று மனதிற்குள் தேவா நினைத்துக் கொண்டாலும் பெரியவர்கள் பேசும் போது இடையிட்டு பேச கூடாது என்று அமைதியாக இருந்தான்.

அவனுக்கு ஒன்பதாம் மாதம் வைப்பதில் சம்மதம் இல்லை. பார்கவிக்கு அது கஷ்டமாக இருக்கும் என்று பயம் அவனுக்கு. மற்றவர்களுக்கும் அந்த எண்ணம் தான். ஆனால் காசிநாதன் பேசட்டும் என்று இடையிடாமல் இருந்தனர்.

ஓரிரு நிமிடம் யோசித்த காசிநாதன் "பார்கவி உங்க அப்பா அம்மாவை இப்போ வர சொல்ல முடியுமா? இங்க அவங்க வந்தாங்கன்னா அப்படியே பேசிடலாம்."

"அது முறையா இருக்குதுங்க. நீங்களே கூப்பிட்டு பேசுங்க. இப்படி விஷயம் பேச வாங்கனு சொல்லுங்க." என்று எடுத்து சொன்னார் அபிராமி.

நந்தனா வீட்டினருக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. அவர்களுக்கு சமமாக அந்த சம்பந்தியையும் நடத்துவதா? அது மட்டும் இல்லாமல் அவர்கள் வரும் வரை இவர்கள் முடிவு செய்ய காத்திருக்கணுமா? இந்த பெண் மட்டும் பிடிவாதம் பிடிக்கவில்லை என்றால் இந்த இடத்தில எல்லாம் சம்பந்தம் செய்ய வேண்டிய நிர்பந்தம் வருமா? மனதினுள் பொருமினாலும் வெளியில் எதுவும் காட்டிக் கொள்ளாமல் இருந்தனர்.

சுந்தரத்திடம் பேசிவிட்டு வந்த காசிநாதன் "இன்னும் கால் மணி நேரத்தில் வருவதாக சொன்னார்கள். மீனா நீ எல்லாருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்மா."

"சரி மாமா." என்று அவள் உள்ளே செல்ல அவளை பின் தொடர்ந்தாள் பார்கவி.

"இருக்கட்டும் சம்பந்தி. எதுக்கு வீண் சிரமம்." என்று தடுத்து பேசினார் கோவர்தனம்.

"அது எப்படி? எப்படியும் பேசி முடிக்க இரவு சாப்பாடு நேரமாகிடும். அவ்வளவு நேரம் இருந்திட்டு எப்படி சாப்பிடாம போவீங்க?" என்று கேட்ட அபிராமி மருமகளுக்கு உதவி செய்ய உள்ளே சென்றார்.

"என்ன செய்யலாம்னு இருக்க மீனா?"

"காய் போட்டு சேமியா கிச்சடி கிளறி அதுக்கு தேங்காய் சட்னி செஞ்சுடரேன். அப்புறம் ரவை இட்லியும் கார சட்னியும் செஞ்சுடலாம். இன்னொரு பக்கம் பிடி கொழுக்கட்டை செஞ்சிடலாம் அதுக்கும் கார சட்னி தான் தோது. இப்போ ஊற வச்சா பருப்பு வடைக்கு சரியா இருக்கும். இனிப்பு மட்டும் விசுவை வாங்கிட்டு வர சொல்லலாமா இல்லை கோதுமை அல்வா கிளரிடவா?" மளமளவென்று அடுக்கினாள் மீனா.

"விசு வேண்டாம். அமரன் கிட்ட சொல்லி வாங்கிட்டு வர சொல்லுறேன். எப்படியும் அவனும் வரணுமே பேச. கூட எதாவது சூப் மாதிரி வச்சிடு. அந்த காய் போட்டு ஒண்ணு செய்வியே."

"கிளியர் சூப். சரிங்க அத்தை. செஞ்சிடலாம்."

"நான் அமரன் கிட்ட பேசிட்டு அப்படியே கனகாவையும் வர சொல்லுறேன். ஒத்தாசையா இருக்கும்." என்று வெளியே சென்றாள்.

மீனாவும் பார்கவியும் அளவுகள் பேசி சமைக்க ஆரம்பித்தனர்.

"இவங்க பேசுறதை பார்த்தா சீமந்தம் ஒன்பதாம் மாசம் தான் இருக்கும் போல. உனக்கு அது பரவாயில்லையா கவி?"

"எனக்கு அதுல ஒண்ணும் இல்லைக்கா. வெறும் நம்ம வீட்டு அள்ளுங்கனா நான் அங்கேயே பேசி எனக்கு ஒரு கஷ்டமும் இல்லைனு சொல்லி இருப்பேன். ஆனா அவங்க எல்லாரும் இருக்கும் போது பேச வேண்டாம்னு இருந்திட்டேன். அதுலயும் அத்தை மாமா எங்க அப்பா அம்மா கிட்ட கேட்கணும்னு சொல்லும் போது நான் வேண்டாம்னு சொன்னா அது நல்லா இருக்காது இல்லையா? அதுலயும் அந்த பாட்டி பேசின தோரணைக்கு எங்க அம்மாவே வரட்டும்னு விட்டுட்டேன்."

"நல்ல வேலை செஞ்ச."

"ஆனா எனக்கு பயமா இருக்கு கா."

"எதுக்கு? பிரச்சனை வராம அவங்க பேசிப்பாங்க. நீ கவலை படாத."

"அதுக்கு இல்லை கா. இவங்களே இப்படி இருக்காங்களே. நந்தனா எப்படி இருப்பாளோணு. நமக்கு ஒத்து போகுமா?"

"தப்பு கவி. ஒருத்தவங்களை பத்தி தெரிஞ்சுக்காம அவங்களை ஜட்ஜ் பண்றது தப்பு. இப்படி யோசிச்சா அவ இங்க வந்த அப்புறம் சாதாரணமா செய்யுறது கூட தப்பா தெரியும். அது மட்டும் இல்லாம எனக்கு நந்தனாவை தெரியும். விசு விரும்ப ஆரம்பிச்ச நாளுல இருந்து பாக்குறேன். கொஞ்சம் குழந்தை தனமா இருப்பா மத்தபடி ரொம்ப நல்ல பொண்ணு."

"அதில்லை கா. அவ நல்ல பொண்ணு தான். ஆனா இவங்க என்ன சொல்லி கொடுத்து அனுப்புவாங்களோ?"

"கவி... நீ என்ன எல்லா நேரமும் உங்க அம்மா சொன்னதை கேட்டுகிட்டு இருக்கியா? சுயமா யோசிச்சு தானே செய்யுற. நந்தனாவும் அப்படி தான் இருப்பா. நாம அன்பு காண்பிச்சா அன்பு மட்டும் தான் கிடைக்கும். நாம அன்பயே காண்பிப்போம்."

"சரி கா. நான் அப்படி யோசிக்கலை." இறங்கிய குரலில்  சொன்னாள் பார்கவி . அவளுக்கு இன்னமும் மீனாவிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று தோன்றியது.


Leave a comment


Comments


Related Post