இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வலி தரும் நேசம் - 6 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK019 Published on 19-02-2024

Total Views: 21725

பகுதி 6 

ஆச்சரியப்படும் விதமாக மாலா சீமந்தத்தை ஒன்பதாம் மாதம் வைப்பதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.ஒரு விதத்தில் அதை அவர் வரவேற்றார் எனலாம். 

விவரம் அறிந்த அமரன் வரும் போதே தெரிந்த மண்டப உரிமையாளரிடம் பேசி பெரியவர்கள் சொன்ன தேதிக்கு பதிவும் செய்துவிட்டு வந்தான்.

அவர்கள் நினைத்து வந்த காரியம் வெற்றி பெற்றதில் நந்தனா குடும்பத்தினருக்கு திருப்தி.

தாயை தனியாக அழைத்து சென்று விசாரித்தாள் பார்கவி.

"என்னமா? எப்படி நீ தேதி மாத்துறதுக்கு ஒத்துக்கிட்டே?"

"வீணா எதுக்கு பிரச்சனை? ஒன்பதாம் மாசம் வச்சா அப்படியே உன்னை நான் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியும்." என்ற மாலாவை ஆச்சரியமாக பார்த்தாள் பார்கவி.

"நீ பிரச்சனை வேண்டாம்னு ஒதுங்கி போற ரகம் இல்லையே? என்ன விஷயம் உண்மையை சொல்லு."

"ப்ச் அது வேற ஒண்ணும் இல்லை. உங்க வீட்டுல பார்த்து வச்சிருந்த நாளுல அண்ணா அண்ணி எங்கேயோ பாரின் போக புக் பண்ணிட்டாங்களாம். அதனால இருக்க மாட்டோம்னு சொன்னாங்க. நீங்க தேதி முடிவு செய்யுறதுக்கு முன்னாடி எங்களை ஏன் கேட்கலைன்னு நேத்து ஒரே சண்டை."

"அதானே பார்த்தேன். ஆமாம் அவங்க ஏன் புக் பண்ணுறதுக்கு முன்னாடி உங்களை கேட்கலையாம்? எனக்கு ஏழாம் மாசம் வருதுன்னு தெரியும் தானே? அவங்க அதையும் யோசிச்சிருக்கணும் இல்லையா?" சரியாக கேட்டாள் பார்கவி.

"சரி விடு. இப்போ தான் எல்லாருக்கும் சாதகமா முடிஞ்சிருச்சே. வா போய் சாப்பாடு வேலையை பார்ப்போம். மீனா தனியா செஞ்சிகிட்டு இருக்கா பாரு." என்று முன்னே நடந்தார் மாலா.

உங்களுக்கா அக்கா மேல கரிசனம்? அண்ணா அண்ணியை விட்டுகுடுத்து பேச மனசில்லை அதனால இங்க இருந்து போக வழி தேடுறீங்க என்று எண்ணிக் கொண்டாள் பார்கவி. அவள் நல்ல நேரம் அவளை என்றுமே விட்டுத்தராத புகுந்த வீடு அமைந்தது தான். இல்லாவிட்டால் அவள் பாடு திண்டாட்டம் தான்.

இரவு உணவு முடிந்து அனைவரும் கிளம்பவும் வீட்டினர் திருமண ஏற்பாடுகள் பற்றி பேச அமர்ந்தனர்.

"இப்படி ஒரே மாசத்துல வச்சிருக்கோமே பணம் பிரட்டுறதுல ஒண்ணும் கஷ்டம் இல்லையே?" என்று கவலையாக கேட்டார் அபிராமி.

"என்ன பேசுற நீ? நமக்கு என்ன குறைச்சல். நல்லாவே செய்யலாம்." என்றார் காசிநாதன்.

"அதில்லை. இது நம்ம வீட்டுல நடக்குற கடைசி கல்யாணம். சொந்தக்காரங்களுக்கு கொஞ்சம் நல்லதா செய்யலாம்னு நினைச்சு இருந்தேன்."

"நீங்க ஆசைப்பட்டதை செஞ்சிடலாம் மா. என்ன செய்யணும்னு லிஸ்ட் போட்டு குடுங்க." சமாதானமாக பேசினான் அமரநாதன். 

"உங்க கல்யாணத்துக்கு சந்தர்ப்பம் சரி இல்லாததால எதுவும் செய்யலை. தேவா கல்யாணத்துல துணி எடுத்து கொடுத்தோம். இந்த முறை வெள்ளில எதாவது செய்யலாம்னு நினைச்சு இருந்தேன்." என்றார் தயக்கமாக.

அங்கிருந்து எழுந்து சென்றாள் மீனா.

போகிறவளையே ஓரக் கண்ணால் பார்த்தவன் "அவ்வளவு தானே. நம்ம ஜாவர் லால் கடையில் சொல்லி உங்களுக்கு பிடிச்சதை மொத்தமாக கொள்முதல் செஞ்சிடலாம். விலையும் குறைவா இருக்கும். ஆனா சீக்கிரம் முடிவு பண்ணிடுங்க. அப்ப தான் பத்திரிக்கை கூடவே கொடுக்க முடியும்." என்றான்.

அவன் பேசி முடிக்கவும் மீனா வரவும் சரியாக இருந்தது. அவள் கையில் இரண்டு மூன்று வெள்ளி பொருட்கள் இருந்தன.

"இது சின்ன ஜோடி விளக்கு. சேர்த்து நாற்பது கிராம் வரும். கொடுத்தால் பார்வையாகவும் இருக்கும். அது இல்லை என்றால் இந்த ஊதுபத்தி ஸ்டாண்ட். ஷோ பீஸ் போலவும் இருக்கும் உபயோகமாகவும் இருக்கும்."

"எனக்கு ஊதுபத்தி ஸ்டாண்ட் ஐடியா பிடித்திருக்கிறது" என்றாள் பார்கவி.

"அப்போ சரி அதையே செஞ்சிடலாம்." என்றார் அபிராமி.

"அச்சோ அத்தை பிடிச்சிருக்குனு தான் சொன்னேன். நீங்க உங்களுக்கு எது சரினு படுதோ செய்யுங்க." பதறி சொன்னாள் பார்கவி.

"இதுல சரி தப்புனு என்ன இருக்கு. எனக்கு வெள்ளில செய்யணும்னு ஆசை. அது எதுவா இருந்தாலும் சரி தான். உனக்கு பிடிச்சிருக்குனு சொன்னா அதுல எங்களுக்கு யாருக்கும் மாற்று அபிப்ராயம் இல்லாதபோ அதையே செஞ்சிடலாம். என்னங்க சொல்றீங்க?"

"மேலிடங்கள் நீங்க மூணு பேரும் சொன்னதுக்கு அப்புறம் அதுல அப்பீல் உண்டா? ஏற்பாடு செஞ்சிடு அமரா."

"சரி பா."

"இப்போ இன்னையில் இருந்து கல்யாணம் வரை என்ன நாளெல்லாம் நல்ல நாள் அப்படினு பார்த்து குறிக்கலாம். அதுக்கு அப்புறம் என்னென்ன என்னனைக்கு செய்யலாம் என்று பார்க்கலாம்."

மீனா சென்று ஒரு புத்தகத்தில் மஞ்சள் தடவி எடுத்து வர அதில் அபிராமி தேதிகள் பார்த்து சொல்ல பார்கவி எழுத ஆரம்பித்தாள்.

"அப்பா ஜவுளி எல்லாம் நம்ம கடையில் இருந்தே எடுத்திடலாம். கல்யாண பட்டு அப்புறம் நம்ம வீட்டு ஆளுங்களுக்கான புடவை எல்லாமே தனிப்பட்டு நெய்ய நமக்கு தெரிஞ்ச தரிக்காரரை வர சொல்ரேன். விசு நீ நந்தனா கிட்ட பேசி அவளுக்கு எப்படி வேணும்னு கேட்டு சொல்லிடு. அப்படியே வரவேற்பு சேலையும் நெய்யணும்னா சொல்லிடலாம்."

"சொல்லிடறேன் ணா. ஆனா இவ்வளவு குறைஞ்ச நாளுல செஞ்சு குடுப்பங்களா?"

"பேசாம நந்தனா சேலைகளை மட்டும் அவங்க கிட்ட கொடுக்கலாம். நாங்க மூணு பேரும் கடையில் இருக்குற பட்டுல எடுத்துக்குறோம்." என்றார் அபிராமி.

இப்படியாக பத்திரிகை அடிப்பது முதல் சாமி கும்பிடுவது வரை எல்லா வேலைகளை பற்றியும் அவர்கள் பேசி முடிக்க கிட்டத்தட்ட மணி ஒன்றானது.

"சரி எல்லாரும் போய் படுக்கலாம். கவி நீ நாளைக்கு மெல்லவே எழுந்து வா. இந்த நேரத்துல இப்படி முழிச்சு இருக்க கூடாது தான். ஆனா என்ன செய்ய? கல்யாணம் இருக்கே." என்று சொன்னபடி எழுந்து சென்றார் அபிராமி.

"கவி வாழைப்பழம் எதாவது சாப்பிட்டு படு. உனக்கு இல்லைனா ராத்திரி பசிக்கும்." என்றாள் மீனா.

"சரி கா" என்று சொல்லி அவளும் சென்று விட்டாள்.

எல்லாரும் படுக்க சென்ற பின் வீட்டை ஒரு முறை சுற்றி வந்து பூட்டி இருக்கிறதா என்று எப்போதும் இரவு பார்ப்பது போல பார்த்துவிட்டு மேலே தன்னறையில் சென்று கட்டிலில் படுத்தான் அமரநாதன்.

கீழே சமையல் அறையில் எல்லாம் முடிந்து விட்டதா என்று ஒரு முறை பார்த்துவிட்டு மேலே அறைக்குள் சென்ற மீனா குளியல் அறைக்கு சென்று தன் வழக்கம் போல வெண்ணீரில் குளித்துவிட்டு ஒரு குர்தா பைஜாமா அணிந்து கொண்டு வந்து தரையில் இருந்த அவள் படுக்கையில் படுத்துக் கொண்டாள்.

அவள் படுக்க செல்லும் முன்னே உறங்கி இருந்தான் அமரநாதன். அன்று ஏனோ மீனாவிற்கு உறக்கம் வரவில்லை தன் படுக்கையில் திரும்பி படுத்து உறங்கும் அமரநாதனையே பார்த்தாள். தன்னை அறியாமல் அவள் கண்களில் சிறு துளி கண்ணீர் துளிர்த்தது. என்னைக்கு அம்ரு என்னை புரிஞ்சுப்பீங்க என்று மௌன மொழியில் அவனுடன் பேசியவள் நேரில் கேட்டாலே பதில் வராத இந்த கேள்விக்கு தூக்கத்தில் இருப்பவனிடம் பேசி என்ன பயன் என்று சலித்துக் கொண்டு கண் மூடி உறக்கத்தை தேடினாள். இரண்டு மணி வாக்கில் நித்ராதேவி அவள் மீது கருணை கொண்டு அவளை தழுவினாள். 








Leave a comment


Comments


Related Post