இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 4 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 19-02-2024

Total Views: 28114

“நந்தா காஃபி கொண்டு வரவாப்பா?” பார்வதி கேட்க


“வேண்டாம்மா ஒரு ஃப்ரண்டை பார்க்க போனேன் அப்படியே காஃபி குடிச்சிட்டேன்.” என்று அபிநந்தன் சொல்ல


“ஆமா… அண்ணா நீ பார்க்க போனது ஃப்ரண்ட்டா இல்ல ஃப்ரண்ட்டியா” என்று கேலியாக புருவம் உயர்த்தி அக்சயா கேட்க


“அதென்ன அச்சு ஃப்ரண்ட்டா ஃப்ரண்ட்டி?” என்று அபிநந்தன் கேட்க


“அதான் அண்ணா ஃப்ரண்ட்டான்னா பாய் ஃப்ரண்ட்… ஃப்ரண்ட்டின்னா கேர்ள் ஃப்ரண்ட்” கேலியாக அக்சயா சொல்ல அவள் தலையில் லேசாக கொட்டினார் பார்வதி.


“என்ன பேச்சு… அண்ணன்கிட்ட இப்படியா பேசுவ?” என்று பார்வதி அதட்ட


“சரி விடுங்கம்மா…” என்று தாயை சமாதானம் செய்தான் அபிநந்தன்.


“சரி நந்தா… அந்த பொண்ணோட நம்பர் உங்கிட்ட இருக்காப்பா?” என்று பார்வதி கேட்க


“எந்தப் பொண்ணு அம்மா?” புரியாமல் கேட்க 


“அதான் நந்தா… என்னை ஹாஸ்பிடல்ல சேர்த்த பொண்ணு… அதோட பெயர்கூட உன் பெயர் மாதிரி அபிதான்… நான் அன்னைக்கு உதவினதுக்கு நன்றி சொல்லனும்னு நினைச்சேன். அச்சு தான் அந்த பொண்ணு ஃபோன்ல இருந்து உனக்கு ஃபோன் போட்டு பேசிச்சு. அதனால நீ நம்பர் வைச்சிருப்பனு சொன்னா… இருந்தா கொஞ்சம் ஃபோன் போட்டு கொடுப்பா நன்றி சொல்லிட்டு அப்படியே நம்ம வீட்டுக்கு கூப்பிடுறேன்…” என்று பார்வதி கேட்க 


“அது அம்மா.. என்று தயங்கியவள் நான் இப்போ அவங்களைதான் பார்த்திட்டு வரேன்ம்மா… நானே நேரடியா நன்றி சொன்னதுக்கே சங்கோஜப்பட்டாங்க… வேண்டாம் விடுங்க ம்மா” என்றவன் சிந்தனை அவளிடம் இருந்து விடைபெற்ற நிமிடங்களுக்கு சென்றது.


குழம்பிய மனதோடு குளம்பியை குடித்து முடித்தான் அபிநந்தன். “ஓகே நந்தன்… நான் உங்களை கட்டாயப்படுத்தல.. பட் உங்க மேல இருக்கிற காதலை சொல்லாமலும் இருக்க முடியாது சொல்லிட்டேன்… இனி முடிவு நீங்கதான் எடுக்கனும்.” அபிலாஷா சொல்ல


“நான்தான் சொல்றேனே… என் தங்கச்சி படிக்கிறா அவளோட வாழ்க்கை செட்டில் பண்ற வரைக்கும் என்னால என் வாழ்க்கை பத்தி யோசிக்க முடியாது.” அபிநந்தன் இழுக்க


“இட்ஸ் ஓகே நந்தன்… இப்போ உங்க தங்கச்சி செகண்ட் இயர் படிக்கிறா… இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்கு. அப்பறம் கல்யாணத்துக்கு பார்த்தாலும் அப்படி இப்படினு ஒரு வருஷம் போனாலும் என்னால ரெண்டு மூணு வருஷம் காத்திருக்க முடியாதுனு தோணுதா உங்களுக்கு? கண்ல பார்த்த உடனே மனசுல பதிஞ்ச உங்களை பார்க்க எனக்கு இருபத்தைஞ்சு வருஷம் ஆச்சு நந்தன்… உங்களோட சேர்ந்து வாழ இன்னும் ரெண்டு வருஷம் தாங்க மாட்டேனா? 


ஒருவேளை என்னை காதலிக்கிறது தான் உங்களுக்கு பிரச்சினைன்னா பரவாயில்லை நந்தன்..‌ நீங்க உங்க மனசார என்னை நல்ல ஃப்ரண்டா நினைச்சுக்கோங்க.. நானும் எப்பவும் லிமிட்ஸ் தாண்ட மாட்டேன். ஆனா உங்களுக்கும் சேர்த்து வாழ்க்கை முழுக்க காதலிக்க நான் தயார்…” என்று சொன்னவளை ஆச்சரியமாக பார்க்க மட்டுமே முடிந்தது அபிநந்தனால்.


‘எப்படிப்பட்ட பெண் இவள்… இவளை புரிந்து கொள்ளவே தனித் திறமை வேண்டும் போலவே’ என்று அவள் முன்பு நினைத்த எண்ணமே அவளை பற்றி நினைக்கும் போதும் வர அதிலிருந்து தெளியவைத்தது தங்கையின் குரல்.


“பார்த்தியா அம்மா நான் அன்னைக்கு ஹாஸ்பிடல்லயே சொன்னேன். இப்போ அந்த பொண்ணை நேர்ல போய் பார்த்துட்டு நம்மகிட்ட ஃப்ரண்ட்அ பார்க்க போனேன்னு சொல்றாரு அண்ணன்.” என்று குற்றப்பத்திரிகை வாசிக்க 


“ஏன்டி என் புள்ளை என்ன பொய்யா சொன்னான். அந்த பொண்ணை போய் பார்த்ததை நம்மகிட்ட மறைக்காம சொல்லிட்டான்ல போ… போய் படிக்கிற வேலை இருந்தா பாரு” என்று மகளை கடிந்து அனுப்பிய பார்வதி அபிநந்தன் பக்கம் திரும்பி


“தம்பி அந்த கல்யாண புரோக்கர் வந்தாருப்பா நமக்கு ஏத்தமாதிரி ஒரு இடம் சொல்லிட்டு போனாரு. நானும் பொண்ணோட ஃபோட்டா பார்த்தேன். என் மனசுக்கு திருப்தி தான்… நந்தா நீயும் ஒரு முறை ஃபோட்டா பார்த்து என்ன ஏதுன்னு சொன்னா பேசி முடிச்சிடலாம்.” என்று பார்வதி சொல்ல


“அம்மா இப்போ என்ன அவசரம்? கொஞ்ச நாள் பொறுமையா இருங்க ம்மா நான் சொல்றேன். அதுவரைக்கும் அது இதுன்னு போட்டு மனசை குழப்பி உங்களை வருத்திக்காதீங்க…‌ முதல்ல அச்சு படிப்பு முடியட்டும்.” அபிநந்தன் சொல்ல


“அதில்ல நந்தா உனக்கு ஜாதகத்துல இந்த வருஷம் கல்யாணம் ஆகாம போனா இனி ஆகுறதுக்கு வாய்ப்பே இல்லனு சொன்னாங்க. நேத்து கூட ஒரு ஜோசியர் உங்க மருமக உங்க கண்ணுக்கு தெரிஞ்சிருப்பானு சொன்னாரு. அதனால தான் இந்த புரோக்கர் சொன்ன இடத்தை பார்க்க முடிவு பண்ணேன்.” என்று பார்வதி சொல்ல


“அம்மா… நான் தான் சொல்றேனே இனி எந்த புரோக்கர் ஜோசியர்னு யாரும் வீட்டுக்கு வரக்கூடாது.” என்று உத்தரவாக கூறிவிட்டு எழுந்து வீட்டின் பின்பக்கம் சென்று விட்டான் அபிநந்தன்.


கிச்சனுக்குள் சென்ற பார்வதி ஏதோ யோசனையிலேயே இருக்க “என்னம்மா எதையோ இவ்வளவு சீரியஸா யோசிக்கிற? நைட்டுக்கு என்ன சமைக்கலாம்ன்னா?” என்றபடி அருகில் வந்தாள் அக்சயா.


“எப்போ பாரு சாப்பாடு சமையல்… இதுவே குறியா இரு… படிக்கனும் னு நினைச்சுடாதே” என்று சாம்பாருக்கு பதிலாக இவளை தாளிக்க


“அம்மா ஏதோ முகம் கவலையா இருக்கேனு கேலியா கேட்டா என்னை இப்படி எரிஞ்சு விழற? ம்கூம் போம்மா…” செல்லமாக மூக்கை சுருக்கி கொண்டாள் அக்சயா.


“நீ வேற ஏன்டி… உங்கண்ணன் எந்த பொண்ணை காட்டினாலும் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்னு அடம் பண்றான். மத்த எல்லா விஷயத்திலும் உங்க விருப்பம் ம்மா னு சொல்லுவான் கல்யாணத்தை பத்தி பேசுனா வேணவே வேணாம் னு சாமி ஆடுவான். ஆனா இன்னைக்கு நான் சொல்ற வரைக்கும் கல்யாணப் பேச்சை எடுக்க வேண்டாம் னு சொல்றான்.


ஒருவேளை அவன் மனசுல யாரையாவது நினைச்சிருப்பானோ?” பார்வதி சந்தேகமாக கேட்க


“இதைத்தான் நான் அன்னைக்கே சொன்னேன்.. அம்மா எனக்கு தெரிஞ்சு அண்ணாக்கு அந்த பொண்ணு அபிலாஷாவை பிடிச்சிருக்கும் போல…” எதார்த்தமாக அக்சயா சொல்ல


“ஏய் என்னடி? நான் ஏதோ என் புள்ளை கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்குறான்னு வருத்தப் பட்டா நீ அவனை வேற பொண்ணோட முடிச்சு போட்டு பேசுற?” என்று கோபம் கொண்டார் பார்வதி.


“அம்மா நீ சந்தேகமா பேசவும் தானே நான் என் சந்தேகத்தை சொன்னேன். என்னை எதுக்கு இன்னைக்கு இப்படி வருத்தெடுக்கிற?” என்று அலுத்துக் கொண்ட அக்சயா கழுவ போட்டிருந்த பாத்திரங்களை கழுவ துவங்க சமையலுக்கு தேவையான காய்கறிகளை கழுவி எடுத்து வந்த பார்வதி


“ஏன் அச்சு… அப்படியே உங்கண்ணன் காதலிச்சாலும் நம்மகிட்ட சொன்னா நான் என்ன மறுக்கவா போறேன். சந்தோஷமா கல்யாணம் பண்ணி வைக்க தானே போறேன்… ஒரு அண்ணனா தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி அதுக்கப்புறம் தன் வாழ்க்கையை பார்க்கனும்னு நினைக்கிறான் நல்ல எண்ணம் தான்.. ஆனா உனக்கு முடிஞ்சு அவனுக்கு பார்க்க நாள் ரொம்ப தள்ளிபோய்டும். அது ஏன்டி அவனுக்கு புரியவே மாட்டேங்குது.” என்று மீண்டும் பார்வதி புலம்பலை துவங்க


“அம்மா நான் சின்ன பொண்ணு தான் ஆனா குடும்ப சூழல் புரியனும்னு எல்லாத்தையும் ஃப்ரண்ட்லியா சொல்லி தான் வளர்த்தீங்க அதனால எனக்கும் சில விஷயங்கள் புரியும். ஆனா நான் சொன்னா நீ என்னை திட்டமாட்டேனு சொன்னா நான் சொல்றேன்.” 


“என்னனு சொல்லுடி” பார்வதி கேட்க


“அம்மா… நம்ம வீட்டை கொஞ்சம் பாரு… கிச்சன் ஹால் ஒரே ஒரு ரூம்.‌.. நீயும் நானும் ரூம்ல தூங்குவோம் அண்ணா ஹால்ல தூங்குவாரு. இரண்டு ரூம் இருக்கிற வீட்டுக்கு மாறலாம்னு அண்ணா எத்தனை தடவை கேட்டாரு. அப்பா வாழ்ந்த வீடு அவரோட நியாபகார்த்தம்னு நீ இந்த வீட்டைவிட்டு மாற சம்மதிக்கல.. 


நீயே யோசி… ஹால்ல தங்கியிருக்க அண்ணா ஒரு கல்யாணம் பண்ணி அவரோட மனைவியோட எங்க தங்குவாரு. அதான் அண்ணே தயங்குறாரு.” அக்சயா சொல்ல அதன் பின்னரே இதை பற்றி யோசித்த பார்வதி


“ம்ம் பரவாயில்ல அச்சு பாரு எனக்கு புரியாதது கூட உனக்கு புரிஞ்சிருக்கு… ஆனா நான் என்னடி பண்றது? உங்கப்பா நமக்குனு விட்டு போனது இந்த ஒரு வீடு தான்… இந்த வீட்ல இருக்கிற ஒவ்வொரு நாளும் அவரோட வாழ்ற உணர்வுல என் நாட்களை தள்ளிட்டு இருக்கேன்…” என்று பெருமூச்சு விட்டார் பார்வதி.


“இருந்தாலும் நந்தா இப்போ தான் வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்கான். கொஞ்ச நாள் அவன் கையில கொஞ்சம் பணம் தங்கட்டும் அச்சு… அப்பறம் புதுசா வீட்டுக்கு போறது பத்தி பேசலாம்…” என்று தனக்கும் மகளுக்கும் சேர்த்து சொல்லிக் கொண்டார் பார்வதி.


  • தொடரும்…

Leave a comment


Comments


Related Post