இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...3 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 20-02-2024

Total Views: 43687

தன் மாமனை காணும் ஆவலில் “முனி மாமா…” என்று சத்தமிட்டபடியே ஆசையாக உள்ளே ஓடினாள் பூச்செண்டு. சற்றுமுன் வாசலில் நின்று அவள் போட்ட கூச்சலில் அடித்துப் பிடித்து எழுந்து சென்ற பாட்டியின் நடை வேகத்தில் தண்ணீர் குவளையில் கால் பட்டு தண்ணீர் அனைத்தும் தரையில் கொட்டி இருந்தது. அதனை துடைப்பதற்காக துணியை எடுத்து வர செண்பகம் சமையலறைக்குள் நுழைந்திருக்க இதனை கவனிக்காது வேகமாய் ஓடி வந்த பூச்செண்டு தண்ணீரில் காலை வைத்த வேகத்தில் வழுக்கி பனிச்சறுக்கில் செல்பவள்போல் சைங் என்று வேகமாய் வழுக்கி வந்து கூடத்தின் மையத்தில் நின்று முகிலனுடன் பேசியபடி வாசலை பார்த்திருந்த தரணியின் மீது மோதி அதே வேகத்தில் அவனையும் இழுத்துக்கொண்டு சோபாவில் சென்று விழுந்திருந்தாள்.

சடுதியில் சமாளித்துக் கொண்ட தரணி சோபாவில் விழாமல் பொத்தென அமர்ந்திருக்க அவனது மடியில் தெளிவாய் விழுந்த நிலையில் அமர்ந்திருந்தாள் பூச்செண்டு. அனைத்தும் சில நொடிகளில்… தன்னிச்சையாய் அவன் அவள் இடுப்பை வளைத்திருக்க அவள் அவனது சட்டைக் கலரை இறுக்கிப் பிடித்திருந்தாள். இருவருமே மிரண்டு விழித்தபடி ஒருவரை ஒருவர் பார்த்திருந்தனர். பயத்திலும் அதிர்ச்சியிலும் விரிந்திருந்த அவளது கண்களைத்தான் அழுத்தமாய் பார்த்திருந்தான் தரணி. அளவான கண்கள்தான்… ஆனால் அந்த இமை…?? 

விரித்துவிட்ட மயிலிறகு போல் இரு கண்களிலும் அடர்ந்து அழகாய் வளைந்து விரிந்து தனித்தனியாய் பிரிந்து அந்த விழிகளுக்கு தனி அழகை கொடுத்திருந்தன. அந்த விழிகளையும் இமைகளையும்தான் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். கலகலவென்று முகிலனின் சிரிப்பொலியும் அவனது கைத்தட்டலும் பட்டென இருவரையும் கலைக்க ஸ்பிரிங்போல் அவன் மடியில் இருந்து வேகமாய் எழுந்து நின்றாள் பூச்செண்டு. தரணியும் தர்மசங்கடமாய் எழுந்து நின்றிருந்தான்.

“செம சீன்… ஏன்டி நரிச்சின்னக்கா… அலம்பிக்கிட்டு வந்து அவன் மடியில உக்காந்துட்ட… நீ தரையில ஸ்கேட்டிங் பண்ணிக்கிட்டே வந்த அழகு இருக்கே…” சொன்னவன் பேச்சை நிறுத்தி மீண்டும் வெடித்து சிரித்தான்.

“அய்யோ… அந்த அழகை எல்லாம் வீடியோ எடுக்காம விட்டுட்டேனே…” வயிற்றை பிடித்தபடி அவன் சிரித்துக் கொண்டிருக்க ஒரு அந்நிய ஆணின் மடியில் அமர்ந்திருந்ததையும் அனைவரின் முன்னிலையிலும் தர்மசங்கடமான நிலைமை தோன்றியதிலும் முகத்தை சுளித்தபடி அமைதியாக நின்றிருந்தாள் பூச்செண்டு. தரணிக்கோ அதைவிட தர்மசங்கடம்… தன் பிடரி முடியை அழுந்த கோதியபடி சிரிக்கும் தன் நண்பனை முறைக்கத் தொடங்கினான்.

“எப்படிடா தரணி…? என் அத்தை பொண்ணோட என்ட்ரி செமல்ல… இதை நீ மறப்ப…?” மீண்டும் அவனிடம் சத்தமிட்ட சிரிப்பு.

“ஏய் முனி… போதும் நிறுத்து… இப்போ எதுக்கு கெக்கே பிக்கேன்னு இளிக்கிற…? தெரியாமத்தானே வந்து விழுந்தேன்…” எரிச்சலுடன் முகிலனின் மேல் பாய்ந்தாள் பூச்செண்டு.

“வந்து விழுந்தியா…? ஜம்முனு என் ஃபிரண்டு மடியில ஏறி உட்கார்ந்திருந்த… பாவம் பேயை பக்கத்துல பார்த்து பயந்துட்டான்… சாயந்தரம் கருப்பசாமி கோவிலுக்கு கூட்டிட்டுப் போய் மந்திரிக்கணும்…” சொன்னவனின் தலையை பிடித்து ஆட்டி அவனை அடிக்கத் தொடங்கினாள்.

“விடுடி… நரிச்சின்னக்கா… எரும…” சிரித்தபடியே அவளிடம் இருந்து விலகி ஓடியவனை துரத்திக் கொண்டு ஓடினாள் பூச்செண்டு. அவர்களின் சண்டையையும் சிரிப்பையும் அடிதடியையும் அனைவரும் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருக்க தரணியும்கூட  சங்கடத்தில் இருந்து விடுபட்டு இதழில் புன்னகையுடன் அவர்களை பார்த்திருந்தான்.

“மாமா… இந்த முனி இனிமே என்னை நரிச்சின்னக்கான்னு கூப்பிட்டா பாதி மண்டையை மொட்டை அடிச்சு பாதி மீசையை எடுத்து விட்ருவேன்... சொல்லி வைங்க…” மூச்சு வாங்க தன் தாய்மாமனிடம் ஓடி வந்து நின்றாள் பூச்செண்டு.

“நீ மட்டும் என்னை முனின்னு கூப்பிடுற… அது மட்டும் சரியா…” கலைந்திருந்த தனது தலையையும் சட்டையையும் சரி செய்தபடியே அவர்களிடம் நெருங்கி வந்தான் முகிலன்‌.

“உன் பேரைரைத்தான் நான் சுருக்கி கூப்பிடுறேன்… அப்படித்தான் எப்பவும் கூப்பிடுவேன்… நீ முனி மாமாதான்…” முறுக்கியபடி பதில் அளித்தாள்.

“உன் பேரை நான் சுருக்கி கூப்பிட்டா இன்னும் காமெடியா இருக்கும்டி… அதுக்கு நான் வச்ச பேரே பெஸ்ட்தான்… எனக்கு நீ எப்பவும் நரிச்சின்னக்காதான்… நரிச்சின்னக்கா… நரிச்சின்னக்கா…” 

இரு கைகளையும் மடக்கி தோளை மட்டும் ஆட்டியபடி ராகமாய் சொன்னவனை “உன் தலையை அரை மொட்டை ஆக்குறேன் பாரு முனி…” என்று பல்லை கடித்துக் கூறியபடி அவனை மீண்டும் துரத்தத் தொடங்கினாள் பூச்செண்டு.

பெரியவர்கள் அனைவரும் சிறியவர்களின் அட்டகாசத்தை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருக்க தரணியின் கண்களில் புதிதாய் ஒரு ஏக்கம்… புலப்படாத ஒரு உணர்வு… இழுத்து பெருமூச்சுவிட்டவன் அவர்களின் மகிழ்ச்சியை அவர்கள் அனுபவிக்கட்டும் என்று எண்ணியவனாய் மெல்ல நகர்ந்து மாடியில் அவனுக்கென்று ஒதுக்கப்பட்டு இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான். சற்றுமுன் தன் மடியில் அவள் அமர்ந்திருந்த கோலம் மனக்கண்ணில் விரிய அந்த மயில் தோகை இமைகளும் கூடுதலாய் கவனத்தில் வந்து போனது. கண்களை மூடி தலையை சிலுப்பி தன்னை நிதானித்து நீண்ட சாளரத்தின் அருகே வந்து நின்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை நிற போர்வையை போர்த்தியது போல் இருந்த இயற்கை அழகை ரசிக்கத் தொடங்கினான்.

நண்பர்கள் இருவரும் டீ சர்ட் ட்ராக் பேண்ட் சகிதம் ஊரையே வலம் வந்தனர். தவசிபுரத்தின் இயற்கை எழில் கொஞ்சம் அழகில் மொத்தமாய் வீழ்ந்து போனான் தரணி.

“என் மனசுல ஒரு ஆசை இருக்குடா…அம்பது வயசை கடக்கும்போது இப்படி ஒரு கிராமத்துல தோட்டம் வாங்கி நடுவுல அளவா ஒரு வீட்டை கட்டி பேசாம வந்து உட்கார்ந்துடணும்… கார்ப்பரேட் லைஃப் ஒரு கட்டத்தில பழகிப் போனாலும் மனசோட மூலையில ஒருவித சலிப்பு தங்கிடும்… பீஸ்ஃபுல்லா கடைசி காலத்தை கழிக்கணும்னா இந்த மாதிரி கிராமங்கள்லதான் அது சாத்தியம்… இது இன்னிக்கு உன்னோட ஊரை பார்த்ததுனால வந்து ஆசையில்ல… ரொம்ப நாளா என் மனசுல இப்படி ஒரு ஆசைதான் இருக்கு…” முகிலனின் தென்னந்தோப்பில் அமர்ந்து வேலையாள் வெட்டிக் கொடுத்த இளநீரை அனுபவித்து பருகியபடியே கூறினான் தரணி.

“பேசாம இந்த ஊரிலேயே ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ… எங்க ஊர்க்காரங்க பொண்ணை கொடுக்கும்போது அவங்க மண்ணையும் சேர்த்து சீதனமா பொண்ணுக்கு கொடுப்பாங்க… அப்போ நீ ஆசைப்பட்ட மாதிரி நடக்கும்… அதுக்கு அம்பது வயசு வரைக்கும் கூட வெயிட் பண்ண வேண்டியதில்ல… உடனே கூட அம்சமா இதே ஊர்ல வந்து உட்கார்ந்துடலாம்…” சிரித்தப்படியே கூறிய முகிலன் இருவரும் குடித்து முடித்த இளநீர் மட்டையை ஓரமாய் குவியலாய் போடப்பட்டிருந்த மட்டைகளின் மத்தியில் வீசினான்.

இரவு இடியாப்பம் தேங்காய்ப்பால் குருமா என்று மீண்டும் மூக்கு வியர்க்க உண்டு முடித்து சொதசொதவென தண்ணீர் தெளிக்கப்பட்டு குளுகுளுவென இருந்த வெளிவாசலில் வந்து அமர்ந்தனர் அனைவரும்.

“அத்த… எங்கே நீங்க பெத்த அலப்பி… சாயந்திரத்துல இருந்து ஆளையே காணோம்…” பாட்டியின் வெற்றிலை இடிக்கும் உரலை வாங்கி கொட்டைப்பாக்கை உள்ளே போட்டு இடித்தபடியே கேட்டான் முகிலன்.

‘நம்ம வீட்ல இருந்து மூனூ வீடு தள்ளி இருக்கிறாரே பால்பாண்டி அண்ணே… அவர் மகளுக்கு நாளைக்கு கல்யாணம் இன்னிக்கு வரவேற்பு… அவளுக்கு அலங்காரம் பண்ண பூச்செண்டைத்தான் கூப்பிட்டு இருக்காங்க… அங்கே போய்ட்டா…”

“புக் பண்ற அளவுக்கு உங்க புள்ள பெரிய ஆளா ஆயிட்டாளா…? இவ மேக்கப் பண்ணி அந்த லட்சணத்தை மாப்பிள்ளை பார்த்து பொண்ணு கழுத்துல தாலி கட்டுவானோ இல்ல எகிறி குதிச்சு ஓடிடுவானோ… யாருக்கு தெரியும்…?” பாட்டி மடித்துக் கொடுத்த வெற்றிலையையும் உரலில் போட்டு இடித்துக் கொண்டே வம்பளந்தான் முகிலன்.

“ரொம்பத்தேன் என் புள்ளைய நக்கல் விடுற முகிலு… அவ எம்புட்டு அழகா அலங்காரம் பண்ணுவா தெரியுமா…? கிராமமா போச்சு… அதுக்கு தக்கனதான் அலங்காரம் பண்ண முடியும்… இதுவே டவுனா இருந்தா பெருசா சாதிச்சுடுவாளாக்கும்…” மருமகனிடம் நொடித்துக் கொண்டார் மல்லிகா. சிறிது நேரம் இன்னும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்து மாணிக்கவேலும் மல்லிகாவும் தங்கள் வீட்டிற்கு கிளம்பி இருந்தனர்.

“மதினி… பூச்செண்டு ரவைக்கு இங்கே வாராளா…? அங்கே வந்துருவாளா…?” வண்டியில் ஏறி அமர்ந்திருந்த மல்லிகாவிடம் சத்தமாக கேட்டார் செண்பகம்.

“அவ மாமே ஊருக்கு போறவரைக்கும் அவே கூட வம்பு இழுத்துக்கிட்டு இங்கனதேன் கிடப்பா… ரவைக்கு அங்கேயே சாப்பிட்டுதான் வருவா மதினி…” திரும்பி பதில் அளித்தவர் தன் கணவருடன் கிளம்பி இருந்தார்.

“அப்பா… காலையில எத்தனை மணிக்கு மதுரைக்கு கிளம்பணும்…?” உறக்கம் கண்களை தழுவ கொட்டாவி விட்டபடி எழுந்து கொண்ட மணிவாசகத்திடம் கேட்டான் முகிலன்.

“ஒம்போது மணிக்கெல்லாம் பத்திர ஆபீஸ்க்கு வரச் சொல்லி இருக்காங்க… நீ நான் அம்மா அப்பத்தா எல்லாரும் போகணும்… மல்லிகாவும் கையெழுத்து போட வேண்டி இருக்கு… அவளையும் கூட்டிட்டு போகணும்… உங்க கார்லயே போய்க்கலாமா… இல்ல வேற வண்டிக்கு சொல்லட்டுமா…?”

“வேணாம்ப்பா… நாம அஞ்சு பேர்தானே… கார்லயே போய்க்கலாம்…” என்றவன் தானும் எழுந்து கொண்டான்.

“தரணி மட்டும் தனியா இருக்குமா…?”

“அவன் இந்த ஊரை சுத்தணும்னு ஆசையோட அலையுறான்… கூப்பிட்டாலும் வரமாட்டான்… அவனுக்கு அங்கே வேலையும் இல்ல… அதெல்லாம் அவன் இங்கேயே இருந்துக்குவான்…”

இவர்கள் அனைவரும் பேசிக்கொண்டே உள்ளே செல்ல தன் தாயிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்று பேசியபடி முன்னரே மாடிக்குச் சென்றிருந்தான் தரணி. வீட்டிற்குள் வந்த அனைவரும் அவரவர் அறைக்குச் சென்று படுத்துக் கொண்டனர். முகிலனும் படுத்தவுடன் உறங்கிப் போயிருந்தான்… தரணிக்கு ஏனோ உறக்கமே வரவில்லை… மாடியில் இருந்து இறங்கி கீழே வந்தான். 

முற்றத்தில் மங்கிய விளக்கொளியில் அங்கிருந்த தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த பாட்டி தென்பட “அப்பத்தா… நீங்க இன்னும் தூங்கலையா…? ஏன் முழிச்சிட்டு உட்கார்ந்து இருக்கீங்க…?” அக்கறையாய் கேட்டபடியே அருகில் வந்து அமர்ந்தான்.

“எங்கய்யா தூக்கம் வருது…? இந்த கிருச கெட்ட கழுத வேற இன்னும் வரல… ஊரே ஙொய்யின்னு அடங்கிருச்சு… இன்னும் என்னதேன் பண்றான்னு தெரியல…? என்னதேன் சொந்த ஊரா இருந்தாலும் பயமா இருக்குல்ல…” வாசலை பார்த்தபடியே சங்கடமாய் பேசியவரை புரியாமல் பார்த்தான் தரணி.

“நீங்க யாரை அப்பத்தா சொல்றீங்க…?”

“என் பேத்தியத்தேன்… இம்புட்டு நேரம் ஆகியும் ஒரு வயசுப்புள்ள வீட்டுக்கு வரலேன்டா அடி வயித்துல பக்குனு இருக்குதே…”

“மணி பத்து ஆயிடுச்சே அப்பத்தா… எங்கே போயிருக்காங்க…?”

“ஊருல ஒரு விசேஷம் வந்துரக்கூடாது… அலங்காரப் பொட்டியை தூக்கிக்கிட்டு ஓடிர வேண்டியது… பகல்ல போனா யாரு என்ன சொல்லப்போறோம்…? அவ அப்பன் ஆத்தாளுக்கும் அறிவே கிடையாது.?. கூட யாராச்சும் இருந்தாவது கூட்டிட்டு வரணும்… கேட்டா என் பிள்ளைக்கு பயம்னா என்னன்னே தெரியாதுன்டு பீத்திக்கும் ரெண்டும்… காலம் கெட்டு கெடக்கு… நாம சொன்னா யாரு காதுல வாங்குறா…?” ஆற்றாமையுடன் பேசினார் பாட்டி.

“விசேஷ வீடு எங்கேன்னு சொல்லுங்க… நான் வேணா போய் பிக்கப் பண்ணிட்டு வரேன்…”

“இந்த ஊரே ஒனக்கு புதுசு… நீ எங்குட்டு போவ…? முகிலு தூங்கிட்டானா…?”

“அவன் அப்பவே தூங்கிட்டான்… நான் வேணா எழுப்பி கூட்டிட்டு வரட்டுமா…”

“வேணாம்யா… பாவம் புள்ள அசந்து தூங்குவியான்…”

“அவங்க போன் நம்பர் தெரியுமா…? சொல்லுங்க… கூப்பிட்டு பார்க்கலாம்…”

“அந்த எலவெல்லாம் எனக்கு தெரியாது… அவளாவது ஒரு போனை போட்டு வீட்ல சொல்ல வேண்டாமா…?” ஆதங்கமாய் அவர் பேசிக் கொண்டிருக்க வாசலில் ஸ்கூட்டி வந்து நிற்கும் சத்தம்.

“வந்துட்டா கோணக்காலு சிறுக்கி… ஊருக்கு போகும்போது பேசாம இவ கழுத்துல தாலிய கட்டி இழுத்துட்டு போயிருங்கய்யா… இனியும் தாமசப்படுத்த கூடாது…” பேச்சு வாக்கில் பாட்டி கூற அதிர்ந்து விழித்தவன் “அப்பத்தா…” என்று சத்தமிட்டிருந்தான் தன்னிச்சையாய்.

“முகில தாலி கட்ட வச்சு கூட கூட்டிட்டு போயிருங்கன்னு சொல்ல வந்தேன்… என்னைக்கா இருந்தாலும் அவேந்தானே இவ கழுத்துல தாலிய கட்டணும்… நாளைக்கு பத்திர ஆபீஸ் போயிட்டு வந்த உடனே இது விஷயமாதான் பேசப் போறேன்… அதது கால நேரத்துல நடந்திரணும்…” பாட்டியின் பேச்சில் தெரிந்த அழுத்தத்தில் ஏதோ யோசனையுடன் நெற்றி சுருக்கியவன் வண்டி சாவியை சுழற்றியபடியே உள்ளே நுழைந்த பூச்செண்டை ஆழமாய் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

(தொடரும்)


Leave a comment


Comments


Related Post