இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வலி தரும நேசம் - 7 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK019 Published on 20-02-2024

Total Views: 18108

பகுதி 7 

வீட்டில் அடுத்தடுத்து விசேஷங்கள் இருந்ததால் வேலையும் நிறைய இருந்தது. மீனா பம்பரமாக சுழன்றாள்.

காசிநாதன் எதற்கும் அவளையே முன்னிறுத்தி செய்ய பார்த்தார். ஒரு கட்டத்தில் மீனாவே அவரிடம் பேசிவிட்டாள்.

"மாமா அத்தை இருக்கும் போது எல்லாத்துக்கும் நீங்க என்னையே கூப்பிடுறது நல்லா இல்லை. அத்தை மனசு கஷ்டப்படாது? அன்னைக்கு கூட தேவை இல்லாம நீங்க பேசுனீங்க. ஏதோ அத்தையா இருக்கவே பொறுத்துகிட்டு போறாங்க."

"என்னமா செய்யறது? உன்னை கூப்பிட்டா உடனே வர்ற. உங்க அத்தை எழுந்து நடந்து வர்றதுக்குள்ள கல்யாணமே முடிஞ்சிடும்." அபிராமிக்கு சிறிது மூட்டு வலி. அதை தான் கிண்டலாக சொன்னார் காசிநாதன்.

மீனா இதற்கு பதில் சொல்லும் முன் "ஆமாம் இவரு பெரிய இளவட்டம். காலையில படுக்கையில இருந்து எழுந்திருக்கவே நான் கை குடுக்கணும். இதுல இவரு பேசுறாரு." என்று அங்கே வந்திருந்த அபிராமி நொடித்தார்.

"இங்க தான் இருக்கியா நீ. அது.. நான் சும்மா சொன்னேன்." என்று மீனாவை கண் காட்டினார் காசிநாதன்.

"தெரிஞ்சி தான் சொன்னேன். என்னை மட்டும் மாட்டிவிட்டீங்கள்ள?"

"இப்போ உங்க ரெண்டு பேருக்குமே மூட்டு வலி அதிகமா இருந்தா நான் கொடுத்த எண்ணெய்யை தடவுறீங்களா இல்லையா?" மீனா இருவரையும் முறைத்தாள்.

"அது... வந்து.. மீனா..." என்று இருவரும் வழிந்தனர். 

"எப்படியோ போங்க." என்று அலுத்தபடி வெளியேற ஆரம்பித்த மீனா திரும்பி "இப்படி தெம்பில்லாத ஆளுங்க கிட்ட நான் பாப்பாவை கொடுக்கமாட்டேன். அப்புறம் பேரனை தூக்க முடியலை பேத்தியை கொஞ்ச முடியலைன்னு புலம்ப கூடாது. மூச்." என்று விளையாட்டு போல வாய் மீது விரல் வைத்து காண்பித்துவிட்டு சென்றாள்.

இருவரும் பரிதாபமாக ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றனர்.

மீனாவின் அன்பு ராஜ்ஜியம் அந்த வீட்டில் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருந்தது என்னவோ உண்மை தான். ஆனால் அதில் அடங்க வேண்டிய முக்கியமான ஜீவன் இது வரை அவளை திரும்பி பார்த்தது கூட இல்லை என்பதே நிதர்சனம். 

*******************

மீனாவின் தாய் கோமதி காசிநாதனின் செல்ல தங்கை. அந்த வீட்டில் மிகவும் செல்லமாகவே வளர்ந்தவருக்கு காசிநாதனை மணந்து வந்த அபிராமியை கண்டால் பிடிக்காது. தன் அண்ணனின் அன்பில் பங்கு போட வந்தவள் என்றே அவரை பார்த்தாள். அதனாலேயே எதாவது குறை சொல்லியோ புலம்பியோ அபிராமிக்கும் காசிநாதனுக்கும் சண்டை மூட்டி விடுவதை ஒரு பொழுது போக்காக வைத்திருந்தார்.

ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அபிராமிக்கு நாளாக நாளாக கோமதி மீது வெறுப்பு வர ஆரம்பித்தது. ஆனால் அதை காண்பிக்க வடிகால் தான் இல்லை. ஒண்ணுமே செய்யாத போதே கணவன் தங்கைக்கு பரிந்து கொண்டு வரும் போது தான் எதாவது செய்ய போய் அது மொத்தமாக தன் தலையில் வந்து விழும் என்று உள்ளுக்குள் கோபம் இருந்தாலும் வெளியில் அமைதியாகவே காண்பித்துக் கொண்டார். இதே நிலை அமரநாதன் பிறக்கும் வரை நீடித்தது. அவன் பிறந்த சில மாதங்களிலேயே காசிநாதனின் தாய் இறந்துவிட இது தான் சாக்கு என்று கோமதி அமரநாதனின் ராசியை குறை சொல்ல ஆரம்பித்தார். எந்த தாய்க்கு தான் பிள்ளையை சொன்னால் தாங்கும். அபிராமியும் பொறுமை இழந்து பேச ஆரம்பித்தார். வீட்டில் பிரச்சனைகள் பெரிதாக ஆரம்பித்தன.

இப்படி நாட்கள் சென்ற போது திடீரென்று ஒரு நாள் கோமதி திருமணம் செய்து கொண்டு வந்து நின்றார். வீட்டினர் அனைவருக்குமே பயங்கர அதிர்ச்சி. அவர் காதலித்தது கூட யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. கோமதி திருமணம் செய்து கொண்ட விநாயகம் அவர்களுக்கு தூரத்து சொந்தம் தான் என்றாலும் எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் ஊர் சுற்றுபவன். அவனிடம் எதை கண்டு கோமதி மயங்கினாள் என்பது அபிராமிக்கு ஆச்சரியமே. 

கோமதியின் இந்த திடீர் செயலால் மனம் ஒடிந்த அவள் தந்தை சோமநாதன் அவளுக்கென்று கொடுக்க வேண்டிய பங்கு சொத்தை பிரித்து கொடுத்து இனி தன் கண் முன் வரவே கூடாது என்று அனுப்பிவிட்டார். காசிநாதன் தான் மனம் தாளாமல் அவ்வப்போது தங்கையை சென்று பார்த்துவருவார்.

மகளை கவனிக்க தவறிவிட்டோமே என்ற எண்ணம் சோமநாதனை உருக்குலைத்து படுத்த படுக்கையாக்கி கோமதி திருமணம் முடிந்த இரண்டே ஆண்டில் அவர் தவறியும் விட்டார்.

தந்தையின் இறப்பிற்கு வந்த கோமதி அந்த வீட்டில் மீண்டும் கோலோச்ச தொடங்கினாள். அபிராமிக்கு ஐயோ என்று இருந்தது. அவர் திருமணம் ஆகி வந்த இத்தனை ஆண்டுகளில் அவர் நிம்மதியாக இருந்ததே இந்த இரண்டு ஆண்டுகள் தான். இந்த நிம்மதி நிலைக்காமல் போய் விட்டதே என்று அவருக்கு ஆற்றாமையாக இருந்தது.

இந்நிலையில் அபிராமி மீண்டும் கருவுற்றார். இந்த முறை அவரை மசக்கை பாடாய் படுத்தியது. இந்த முறை உதவி செய்ய மாமியார் இல்லாததாலும் மேலும் சோர்வாக இருந்தார். அவருக்கு உதவி என்ற போர்வையில் வர தொடங்கிய கோமதி மீண்டும் எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைக்க ஆரம்பித்தாள். தாய்க்கு கோமதியை பிடிக்கவில்லை என்பதை எப்படியோ உணர்ந்து கொண்ட 4 வயது அமரநாதனுக்கு அத்தையை பிடிக்கவில்லை. அவர் வரும் போதெல்லாம் ஏதாவது குறும்பு தனம் செய்து கோமதியை வெறுப்பேற்றுவான். கோமதியும் சின்ன குழந்தை தானே என்று இல்லாமல் காசிநாதனிடம் அவனை பற்றி சொல்லி திட்டோ அடியோ எதையாவது வாங்கிக் கொடுத்துவிட்டு தான் போவார்.

கோமதியும் சில மாதங்களில் கருவுற்றாள். அதிகம் மசக்கை இல்லாமல் சுலபமாக அவருக்கு இருக்கவே அண்ணி வேண்டும் என்றே அலட்டிக் கொள்வது போல பேசுவாள். எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி இருக்காது இல்லையா? ஆனால் அதெல்லாம் புரிந்து நடந்து கொண்டால் அது கோமதி இல்லையே. 

இந்த அமைதியற்ற சூழலில் தான் பிறந்தான் தேவநாதன். அவன் பிறந்த போது தாய் வீட்டுக்கு சென்று சில மாதங்கள் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் இங்கே வந்தார் அபிராமி. நாத்தனாரின் தலைச்சன் பிரசவத்தை பார்க்க வேண்டுமே. சில மாதங்கள் கழித்து பிறந்தவள் மீனாட்சி. இயல்பிலேயே மீனாட்சி அமைதியான குழந்தையாக இருந்தாள். குண்டு கன்னமும் குழந்தை சிரிப்புமாக பார்ப்பவரை தூக்க ஈர்க்கும் குழந்தை அவள். அதிகம் அழாமல் தொந்தரவும்  கொடுக்காமல் இருந்தாள். அதற்கு நேர்மாறாக இருந்தான் தேவநாதன். இரவு முழுக்க தூங்காமல் அழுது கொண்டே இருந்தான். தூக்கமின்மையால் மறுநாள் வேலைகளை பார்க்க முடியாமல் கஷ்டப்பட்டார் அபிராமி. இதில் கோமதி வேறு. உதவி எதுவும் செய்யாவிட்டாலும் அண்ணியை வேலை வாங்குவதிலும் நக்கல் செய்வதிலும் கில்லாடியாக இருந்தாள்.

காசிநாதனுக்கு எப்போதுமே அழுது கொண்டு இருக்கும் தன் மகனை விட சிரித்து விளையாடும் தங்கை மகளை கொஞ்சுவது சுலபமாக இருந்தது. அமரநாதனுக்கும் அந்த பாப்பாவை பார்க்க ஆசையாக இருந்ததால் ஒரு நாள் சென்று தொட்டுவிட்டான்.

அவ்வளவு தான். என்னவோ அவன் மீனாட்சியை நசுக்கி கொல்ல பார்த்தது போல் காச்சு மூச்சு என்று சத்தம் போட்டு பிரச்சனை செய்துவிட்டாள் கோமதி. காசிநாதனும் என்ன ஏது என்று விசாரிக்காமல் அடித்து விட்டார். இயல்பில் தொட்டாசிணுங்கியான அமரநாதனுக்கு அந்த நிமிடமே மீனாட்சியின் மீது ஒரு வெறுப்பு உண்டானது. இவள் பெரிய இவள்... இவளை தொடக் கூடாதாமா... இனி இவள் அருகில் நான் சென்றேன் என்றால் பார் என்று ஒரு குட்டி சபதமே எடுத்துக் கொண்டான் அமரன்.




Leave a comment


Comments


Related Post