இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 5 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 21-02-2024

Total Views: 28767

ஒருவாரம் கடந்து போயிருந்தது அபிலாஷா அபிநந்தனிடம் தன் காதலை சொல்லி… நல்ல நண்பி என்ற முறையில் நெருங்கி இருந்தாள் அபிலாஷா. தினமும் ஒரு முறையாவது அழைத்து விடுவாள். 

அவன் என்ன செய்கிறான் என்று கேட்பாள். “வேலையில் இருக்கிறேன்” என்றால் “ரெஸ்ட் ல இருக்கும் போது கால் பண்ணுங்க நந்தன்.” ‌என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து விடுவாள். பின்னர் அவளே சற்று நேரம் கழித்து அவளே மீண்டும் அழைப்பாள்.

அவன் நலத்தில் துவங்கி தாய் தமக்கை குறித்து அனைத்தும் கேட்பாள். காலையில் அம்மாவின் சமையல் துவங்கி அதற்கு விளையாட்டாக அக்சயா அலுத்து சலித்துக் கொள்வது அதற்கு தாயிடம் நன்கு வாங்கி கட்டிக் கொள்வது என்று அனைத்தையும் கூறி விடுவான் அபிநந்தன். 

அவளும் அதனை எல்லாம் சுவாரஸ்யமாக கேட்டு கொண்டு இருப்பாள். அதனாலே அவளோடு சகஜமாக உரையாட துவங்கி விட்டான் அபிநந்தன். 

இவர்களின் மொத்த உரையாடலும் குடும்பத்தை சுற்றியே இருப்பதால் அபிநந்தன் அவளோடு பேச அதிக ஆர்வம் காட்டினான். ஆரம்பத்தில் அவள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்லிக் கொண்டு இருந்தவன் இப்போதெல்லாம் இவனே அவள் கேட்காத கேள்விகளுக்கும் பதில் சொல்லி மனதளவில் நெருங்கி இருந்தான் அபிநந்தன்.

அன்றும் அப்படி தான் வீட்டில் அம்மா சாம்பார் வைத்திருக்க “அம்மா நீ பெரிய ஜீனியஸ் ம்மா… ஒரு நாள் பருப்பும் வெண்டைக்காயும் போட்டு வெண்டைக்காய் சாம்பார் மறுநாள் அதே பருப்போட முள்ளங்கி போட்டு முள்ளங்கி சாம்பார் அடுத்த நாள் எந்த காயும் போடாம உப்பு பருப்பு அதுக்கு அடுத்த நாள் எல்லா காய்கறிகளையும் போட்டு கதம்ப சாம்பார்… வாரத்துல நாலு நாள் லஞ்ச் இந்த சாம்பரை வைச்சே ஓட்டிடு இன்னும் மிச்சம் இருக்கிற ஒரு நாள் லெமன் ரைஸ் தக்காளி சாதம் னு வெரைட்டி ரைஸ்… 

ஏன் மா இப்படி எப்போ பாரு ஒரே மெனு பண்ற… சமையல்ல கொஞ்சம் வெரைட்டி காட்டேன்…” என்று தாயை வம்புக்கு இழுத்தாள் அக்சயா.

இடுப்பில் கை ஊன்றி முறைத்த பார்வதி “ஏன்டி பொம்பளை பிள்ளை சீக்கிரம் எழுந்து அம்மாக்கு சமையல்ல உதவியா இருக்கனும் னு என்னைக்காவது யோசிச்சிருக்கியா? படுத்த படுக்கையை கூட எடுத்து வைக்கிற பழக்கம் இல்ல… இதுல என் சமையல இப்படியே பேசிட்டு இரு… போற வீட்ல மாமியார் உன் குடுமியை பிடிச்சு ஆட்றதோட என்ன புள்ளை வளர்த்தீங்க னு என் தலையையும் உருட்டுவாங்க…” என்று வைதபடியே மகனுக்கும் மகளுக்கும் மதிய உணவு கட்டிக் கொண்டு இருக்க

வழக்கமான புன்னகையோடு அதை கவனித்து கொண்டே தயாராகி வந்த அபிநந்தன் “அச்சு… அம்மா நமக்காக பார்த்து பார்த்து எல்லாம் பண்றாங்க… உனக்கு தெரியுமா ஒவ்வொரு நாளும் நமக்கு ஒவ்வொரு வேளையும் சமைக்கவே என்ன பண்ணலாம் ஏது பண்ணலாம் னு யோசிக்கிறதே அம்மாக்களுக்கு எவ்வளவு கஷ்டமான விஷயம்… இதை போய் கிண்டலா பேசுற…” அன்பாக அறிவுரை சொன்ன அண்ணனை கையெடுத்து கும்பிட்டாள் அக்சயா.

“ஐயா தாயை காத்த தனயனே… நீங்க இருக்கிறது தெரியாம அம்மாவை கேலி பேசிட்டேன். மன்னிச்சிடுங்க என்று அதையும் கேலியாக சொல்லி விட்டு அண்ணா எனக்கும் அதெல்லாம் தெரியும் அண்ணா இன்னைக்கு ஒரு டெஸ்ட் இருக்கு. அதுக்கு ப்ரிப்பேர் ஆக நைட் முழுக்க படிச்சு மூளை ஸ்ட்ரெஸா இருந்தது. அதுக்காக தான் அம்மாவை வம்பிளுத்து கொஞ்சம் ரிலாக்ஸாக நினைச்சேன்” என்று விளக்கம் சொல்ல சிரித்த அபிநந்தன் தங்கைக்கு பரிட்சைக்காக வாழ்த்திவிட்டு வீட்டில் இருந்து கிளம்பினான்.

தங்கையின் குறும்பையும் அவளின் பக்குவத்தையும் அபிலாஷாவிடம் பகிர வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்ட தான் தனக்கே மிகவும் புதிதாக தெரிய பைக் கண்ணாடியில் தன் முகத்தை வித்தியாசமாக பார்த்துக் கொண்டான். 

‘நான் ஏன் அவளிடம் தன் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்’ என்று தன்னை தானே கேட்டுக் கொள்ள

‘அவள் உன் நண்பி தானே… அந்த எண்ணத்தில் தான்…’ என்று போலியாக ஒரு பதிலை தூக்கிக் கொண்டு வந்த மனசாட்சியை கேவலமாக பார்த்துக் கொண்டான். 

‘இன்னும் எத்தனை நாளுக்கு ஃப்ரண்ட்னு உன்னை நீயே ஏமாத்திட்டு இருப்ப?’ என்று அவனின் ஒரு மனம் கேட்க 

‘அவ ஃப்ரண்ட் இல்லாம வேற யாரு?’ என்று இன்னொரு மனம் கேள்வி எழுப்ப

‘ஒரு பொண்ணு அவளே தன்னோட காதலை வெளிப்படையா சொல்லிட்டா… நீ ஏன் இன்னும் தயங்கி தத்தளிக்கிற’ என்று மீண்டும் கேட்ட மனதை

‘நீ சும்மா கிட அவளோட தகுதிக்கும் என் தகுதிக்கும் காதல் கல்யாணம் இதெல்லாம் செட்டே ஆகாது.’ என்று அமைதி படுத்த முயல

‘அப்போ ஸ்டேட்டஸ் மட்டும் தான் உனக்கு பிரச்சினையா?’ என்று மீண்டும் கேள்வி கேட்ட மனதை :ஆஃபிஸ் வந்திடுச்சு அடங்கி கிட இனிமேல் எனக்கு மட்டும் தான் வேலை’ என்று அடக்கியது மூளை… சிந்தனையில் உழன்றபடியே அலுவலகம் வந்து சேர்ந்த அபிநந்தன்

‘இனிமேல் அபிலாஷா கால் பண்ணினா அட்டென்ட் பண்ண கூடாது. அப்படியே அட்டென்ட் பண்ணினாலும் க்ளோஸா எதுவும் பேசவே கூடாது.’ என்று தனக்கு தானே நிபந்தனை விதித்து கொண்டு உள்ளே சென்றான்.

ஆனால் வழக்கமாக அவள் அழைக்கும் நேரத்திற்கு தன்னை அறியாமல் ஃபோனை எடுத்து பார்த்தவன் மணியை மீண்டும் பார்த்துவிட்டு “என்னாச்சு ஃபோன்ல எதுவும் ப்ராப்ளமா சிக்னல் இல்லையா?” என்று சோதித்தவன்

“என்ன பண்ற அபிநந்தா? அவ கால் பண்ணினா என்ன பண்ணாட்டி என்ன? உன் வேலையை மட்டும் பாரு.” என்று தன்னை தானே கடிந்து கொண்டு மீண்டும் வேலையில் மூழ்கினான். 

ஆனால் ஒரு வேலையும் ஓடவில்லை… “ஏன் என்னாச்சு தினமும் இன்னேரம் தனக்கு அழைத்து பேசி இருப்பாளே… ஒருவேளை அவளுக்கு உடம்புக்கு ஏதாவது???” என்று யோசித்தவன் “இல்ல ல்ல ஏதாவது மீட்டிங்ல இருப்பா முடிஞ்சதும் கூப்பிடுவா…” என்று தானே சமாதானம் சொல்லிக் கொண்டு வேலையை கவனித்தான். 

அப்படி இப்படி என்று மதிய உணவு இடைவேளை வந்திருக்க லஞ்ச் பாக்ஸ் திறந்து பார்த்தவனுக்கு காலையில் தாய்க்கும் தங்கைக்கும் நடந்த உரையாடல் நினைவு வர சிரித்து கொண்டவனுக்கு அதை அபிலாஷாவிடம் பகிர நினைத்ததும் காலையில் இருந்து அவள் தனக்கு அழைக்காமல் இருப்பதும் மீண்டும் நினைவு வர

“என்ன ஆகிருக்கும்” என்று மனம் அவளைப் பற்றியே சிந்திக்க “பேசாம நாமளே கால் பண்ணி பார்ப்போம்…” என்று அவள் எண்ணிற்கு  அழைப்பை தொடுத்தான். அவளின் எண்ணிற்கு இவனே அழைப்பது இது இரண்டாம் முறை… முதல் முறை அவளை நேரில் பார்க்க வேண்டி அழைத்தான். அதன் பின்னர் தினமும் அவள் தான் அழைத்து பேசுவாள்.

இன்று அவளின் அழைப்பை காணாது இவனே அழைக்க முழு ரிங் போய் கட்டானது… “என்னாச்சு உடம்பு சரியில்லாம இருக்குமோ?” என்று யோசித்தவன் “இல்ல சைலண்ட் ல போட்டிருப்பாங்க…” என்று சொல்லி விட்டு மீண்டும் அழைத்தான்.

இம்முறை கடைசி ரிங்கில் அழைப்பை ஏற்று இருந்தாள் அபிலாஷா. “ஹலோ..‌ சொல்லுங்க நந்தன்…” அவளின் அழைப்பே ஏதோ சோர்வாக தெரிய

“அபி அபிலாஷா என்னாச்சு? எதுவும் உடம்பு சரியில்லையா உங்களுக்கு” அக்கறை கூடிய பதட்டமான குரலில் அபிநந்தன் கேட்க அவன் குரலில் நெகிழ்ந்து போனாள் அபிலாஷா.

“அப்படி… அப்படி ஒன்னும் இல்ல நந்தன் நான் நல்லா தான் இருக்கேன் என்னாச்சு நந்தன் திடீர்னு கேட்குறீங்க?” அபிலாஷா கேட்க

“இல்ல காலையில இருந்து கால் பண்ணவே இல்ல… இப்போ உங்க குரலும் ஒருமாதிரி இருந்தது அதான்…” என்று அபிநந்தன் கேட்க

“என்னை மிஸ் பண்ணிணீங்களா நந்தன்?” என்றவள் குரலில் சிறு ஆர்வம்…

“அப்படி எல்லாம் இல்லைங்க… அது வந்து தினமும் ஃபோன் பண்ணுவீங்க இன்னைக்கு காணோமே அதான்…” அவன் என்ன நிலையில் இருக்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை..

“ஓ… அப்படியாங்க…” என்றாள் சுரத்தையே இல்லாமல்… “ஒன்னும் இல்ல நந்தன் காலையில இருந்து கொஞ்சம் மைன்ட் அப்செட் அதான்… சரி சொல்லுங்க என்னை மிஸ் பண்ணிணீங்களா?” மீண்டும் கேட்க 

“ஆமா… இல்லை…” என்று மாற்றி மாற்றி கூறியவன் “இல்ல இன்னைக்கு அச்சு ரொம்ப குறும்பு பண்ணினா தினமும் அவளோட சேட்டையை ரசித்து கேட்பீங்கல்ல அதான் உங்ககிட்ட சொல்ல நினைச்சேன்.” என்று அபிநந்தன் சொல்ல

“அப்படியா என்ன அது?” ஆர்வமானாள் அபிலாஷா. காலையில் வீட்டில் நடந்த எல்லாம் சொல்ல வாய் விட்டு சிரித்திருந்தாள் அபிலாஷா. 

“நந்தன் அச்சு ரொம்ப குறும்புக்காரி மட்டும் இல்ல ரொம்ப பொறுப்பாவும் இருக்கா… இதுக்கு கண்டிப்பா உங்க வளர்ப்பு தான் காரணம்.” என்றிட

“ம்ம் இப்போ உங்க மனசு ரிலாக்ஸா ஆகிடுச்சா?” அபிநந்தன் கேட்க

“என்ன? ஓ… அதுவா ரொம்பவே ரிலாக்ஸா மாத்திட்டீங்க நந்தன்…” என்று சொல்ல

“ம்ம்… இப்போ சொல்லுங்க என்ன மைண்ட் அப்செட்?” என்று நந்தன் கேட்க சற்றே மௌனித்தாள் அபிலாஷா. 

“சாரிங்க ஷேர் பண்ணினா உங்க ஸ்ட்ரெஸ் கொஞ்சம் குறையுமேனு கேட்டேன். சொல்ல விருப்பம் இல்லைன்னா வேண்டாம்.” என்று சொல்ல

“ச்ச் அப்படி எதுவும் இல்லை நந்தன்… ஏற்கனவே சொல்லிருக்கேனே ப்ராப்பர்ட்டிஸ்க்காக சித்தப்பா அவர் சார்பா ஒரு மாப்பிள்ளைய கொண்டு வந்து நிறுத்தினா அத்தை அவங்க பையனை மேரேஜ் பண்ணிக்க சொல்லி ஃபோர்ஸ் பண்றாங்க… நேத்து நைட்ல இருந்து அவங்களை சமாளிக்க போராடிட்டு இருக்கேன்.” என்று சலிப்பாக சொல்ல

“ஏன்ங்க எல்லாத்துலயும் போல்டா இருக்கீங்க இந்த விஷயத்திலும் உங்க விருப்பப்படி தான் நடப்பேன்னு சொல்லலாமே?” அபிநந்தன் கேட்க

“என்னங்க பண்றது… ஒருவேளை அப்பா அம்மா இருந்திருந்தா உங்ககிட்ட சொல்லும் முன்னவே என் காதலை அவங்ககிட்ட சொல்லிருப்பேனே…” என்று பெருமூச்சு விட்டாள் அபிலாஷா.

இம்முறை அபிநந்தன் மௌனம் காக்க “இட்ஸ் ஓகே நந்தன் நான் உங்களை ஃபோர்ஸ் பண்ண சொல்லலை ஜஸ்ட் நீங்க கேட்டதும் சொன்னேன். சரி… உங்க அம்மா தங்கச்சி எல்லாம் பார்க்கனும் போல இருக்கு என்னை உங்க வீட்டுக்கு இன்வைட் பண்ண மாட்டீங்களா நந்தன்?” என்று பேச்சை மாற்ற

“ஒய் நாட்… ஆக்சுவலா அம்மாவே உங்களை வீட்டுக்கு இன்வைட் பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தாங்க… ஓகே உங்களுக்கு ஃப்ரீயா இருக்கும் போது சொல்லுங்க கண்டிப்பா நீங்க வீட்டுக்கு வரனும் அம்மா ரொம்ப சந்தோஷப் படுவாங்க…” என்று அவனும் பேச்சில் கலந்தான்.

தொடரும்….


Leave a comment


Comments


Related Post