இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதரம் டீசர் அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK021 Published on 21-02-2024

Total Views: 34637

இதரம் டீசர் 


"ஏன் இப்படி செஞ்ச மல்லி. உனக்கு நல்லது செஞ்ச எனக்கு ஏன் இப்படி ஒரு துரோகத்தை செஞ்ச.? சொல்லு மல்லி "என அவளை உலுக்கிக் கொண்டிருக்க 

"டாக்டர் சார் நான் ஒங்க நல்லதுக்குத்தான்... "

"நல்லது, மை ஃபூட். இடியட் எனக்கு நல்லதா இதுவா நல்லது. மனசாட்சினு ஒண்ணு இருந்தா நீ இப்படி சொல்லி இருப்பியா...?"அவனால் ஏற்கவே இயலவில்லை அவளின் கூற்றை. 

"நெசத்துக்குமே உங்க நல்லதை நினைச்சுத் தான் சொன்னேன் சார்"அழுது விடும் நிலையில் நின்றாள் மல்லி. 

"எது ?அத்தனை பேர் முன்னாடியும் என் வயிற்றில் வளர்ற குழந்தைக்கு அப்பா இவர் தான்னு கைகாட்டினதா எனக்கு நீ செஞ்ச நல்லது?" என்று ஆக்ரோஷத்துடன் கேட்க 
 மல்லி அமைதிகாத்தாள். 

"பேசுடி இடியட். என் நிலை தடுமாறி நிற்க வச்சுட்டில்ல எல்லாத்துக்கும் காரணம் என் பணமும் வசதியும் தானே...?!அது தானே உன்னை இப்படி கேவலமா நடந்துக்க வச்சது. டாக்டர் என் கிட்டவே ஏமாத்தி இருக்கல்ல, அதுக்கான பலனை நல்லா அனுபவிப்படி நீ. வயித்துல புள்ளையா... ஹான்" என்றான் நக்கல் தொனியில். 

அவள் அப்போதும் அமைதி காக்கவே அவளது கையை இறுக்கமாகப் பற்றியவன்," உனக்கு ஏன் தாலி கட்டினேன்னு தெரியுமா?" என்றான் அவளை உறுத்து விழித்து பார்த்தபடி. 

வலியோடு," ம்ஹூம் "என்று முனகியவள் கண்ணீரை மட்டும் வெளியே விடவில்லை. 

"நீ ஆசைப்பட்டது இந்த பணம் வாழ்க்கை தானே...? அது உனக்கு கிடைக்கணும், ஆனா நீ அதை அனுபவிக்கவேக் கூடாது. என்ன நினைச்ச நீ... எல்லாரும் உன்னை இப்போ பரிதாபத்துடன் பார்த்து எனக்கு கட்டி வச்சாங்களே அவங்க எல்லாரும் இதே மனநிலையில் இருப்பாங்கன்னா.... நீ அப்படியா நினைக்கிற?" என்று கேட்கவும் மல்லி இன்னும் அதிர்வாய் பார்த்தாள். 

"காசு உள்ள கழுகு கூட்டம் இது. சாதாரண கழுகு இல்லை பினந்தின்னி கழுகுகள் அத்தனையும். உன்னை குத்தி கிழிக்கிறதைப் பார்க்க தான்டி கட்டினேன். "என்றான். 

மல்லி அப்போதும் அமைதி காத்தாள். 

ஒரு மருத்துவனுக்குத் தெரியாதா கர்ப்பிணி என்றால் எப்படி சோதனை செய்து நிரூபிக்க வேண்டும் என்று. இருந்தும் தாலி கட்டினான் என்றால் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று அவளுக்குப் புரிந்தது. 

கதவு தட்டப்படவும் அவளை விலக்கியவன்," . இந்த டாக்டரோட இன்னொரு பக்கத்தைப் பார்க்க ரெடியா இருங்க தேவமல்லி" என்று கூறி விட்டு சென்றான். 

'இந்த கொடுமை எல்லாம் எனக்கு புதுசா என்ன டாக்டர் சார். 'என்று நினைத்தவள் அவசரமாய் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். 

************

"அவளைத் தொட்டீங்க இந்த ஒலக்கையை எடுத்து என் வயித்துல அடிச்சு ஒங்க புள்ளையை உருத் தெரியாம அழிச்சுடுவேன் "ஆங்காரியாய் தலைவிரிகோலத்துடன் கையில் இருந்த உலக்கையை தன் வயிற்றுக்கு அருகில் வைத்தபடி நின்றிருந்தாள் அவள். 

"சத்தியமேட்டுக்கு நா அப்படி செய்ய மாட்டேன்டி. ஒலக்கையை கீழ போடுடி."பதற்றமாய் கத்தினான் அவன். 

"போ வெளியே அப்புறம் எதுக்கு இங்க வந்த.? அவ உன்னை மயக்குறாளா, சொல்லு .அவளை இப்படியே கொளுத்தி விடுறேன். அநாதைச் சிறுக்கிக்கு என் புருஷனை பங்கு போடணுமோ ஏன்டி ***** "என கத்திட 

"அவ உன் கூடப் பொறந்தவடி இப்படி பேசாதடி" பக்கத்து வீட்டு பெண் மன்றாடினாள். 

"இவளா... இந்த சனியனை பெத்ததால தான் எங்கப்பனாத்தா செத்தாங்க .ஏதோ எடுபிடிக்கு ஆவறாளேனு வச்சிருந்தா என் குடும்பத்தை கெடுக்க வர்றா நாசமா போறவ. நீ எல்லாம் ஏன்டி உசுரோட இருக்க சாவுடி" என்று படார் படாரென அவளின் முதுகிலேயே அடித்தாள்.

மல்லி நிமிர்ந்து கலைந்து கிடந்த கூந்தலை சரி செய்து கொண்டை போட்டவள்," வெளியே போடி" என்றாள் அழுத்தமாக. 

"நான் ஏன்டி போகணும்?" என்று கேட்க

"இது என் வீடு. கொடக்கூலிக்கு நாந்தேன் இருக்கேன். இனி ஓ ஒறவும் வேணாம், ஒண்ணும் வேணாம் இந்தா உன் புருஷன் கட்டின தாலி" என்று வெடுக்கென்று பிய்த்து அவள் முகத்திலேயே விட்டெறிந்தாள் மல்லி. 

அவனோ திகைத்துப் பார்க்க," நீயி என்னை பொறுத்தவரைக்கும் செத்துப் போயிட்ட. அக்காளை நம்பல நானு ,ஆனா ஒன்னைய நம்புனேன் மனசார நம்புனேன். என் தலையில கல்லைப் போட்டுட்டல்ல. நல்லா இரு நல்லா இரு... புள்ள பொண்டாட்டினு நல்லா இரு. ஏ மூஞ்சியில முழிச்சுடாதீங்க இனிமே" என்று கத்திட மணியக்காரர் வந்தார் வேகமாக. 

"ஏத்தா அந்த புள்ளைய நிம்மதியா இருக்க விட மாட்டீகளா... ஏ வீட்டுல என்னத்துக்கு கரைச்ச பண்றீக கெளம்புங்க மொதோ. ஏ வெண்ணிலா மல்லியை கூட்டிக்கிட்டு போம்மா" என்று சத்தமிடவும் நிறை மாத வயிற்றுடன் சென்றாள் அவள். 

*********


"தேவா...!"

"சார்...?"

"என்ன முழிக்குற சாப்பிடு. சாப்பாடு வேஸ்ட் பண்ணக் கூடாது தேவா."

"நா ஒங்களுக்குனு செஞ்சேன் சார்."என்றாள் தயக்கமாக. 

"அதனால என்ன...?என் ஃப்ரெண்ட் வருவான்னு நினைச்சேன் வரலை. சூடா தானே இருக்கு சாப்பிடு தேவா" என்றவன்," ஏன் மிச்ச மீதியை தர்றேன்னு நினைக்கிறியா?" என்று கேட்க 

"அய்யோ சார். எச்சி சோறு சாப்புட்டவளுக்கு இது அமிர்தம். நீங்க வேற" என்று உளறியவள்,"நீங்களே சாப்பிடாம எனக்கு தரவும் சங்கட்டமா இருக்கு சார்" என்றாள். 

"நான் தான் எனக்கு தேவையானதை எடுத்துக்கிட்டேனே?" என்றவன்," சாப்பிடு தேவா" என்றான் மெல்லிய குரலில். 

"சரிங்க டாக்டர் சார் சாப்பிடுறேன்" என்று ஓரமாய் சென்று அமர்ந்தாள். 

ஆதுரமாக அவளைப் பார்த்தவன் உணவருந்தத் துவங்கினான். 

இந்த ஆதூரமும் அக்கறையும் காணாமல் போனது ஏன் வருகிறது இதரம் 

*********


Leave a comment


Comments


Related Post